அ. அண்டை வீட்டுக் காரனும் அடுத்த வீதிக் காரனும்
எங்கோ இருந்த ஒருவர் அல்லது அடுத்த தெருவில் வாழ்ந்து வந்த ஒருவர் அண்டைவீட்டுக்காரனாகிறார். அவரோடு முதல் ஆறுமாத த்திற்குப் பிரச்சினை இல்லை. ஆனால் எழாவது மாதத்திலிருந்து பிரச்சினை ஆரம்பிக்கிறது.
« நம்மைவிட அவர் வைத்திருக்கும் டூ வீலர் விலை கூடியது »
« தெருவில் குடியிருக்கும் அரசியல்வாதி அவரிடம் நின்று பேசிவிட்டுப் போகிறான் »
« கீரை விற்கிற பொம்பிளை அவன் பொண்டாட்டிக்கிட்ட பத்துபைசா குறைச்சு கொடுத்துட்டு போவது, நம்ம வீட்டுல இருக்கிறதுக்கு அதமாதிரி பேரம்பேசி வாங்க துப்பில்ல »
இப்படி புகையும் பகை, ஒரு நாள் வீட்டைத் திருத்துகிறேன், என செங்கல்லையும், ஜல்லியையும் அண்டைவீட்டுக்காரர், இறக்குகிறபோது மனம் தாங்குவதில்லை, எங்க வீட்டுக்கு எதிர்த்தாற்போல கொட்டீட்டீங்க என ஆரம்பித்து பற்றி எரிய ஆரம்பித்து கோர்ட் கேசு போகிற கதைகள் உண்டு.
அண்டை வீட்டுக்கார ர் விபத்தில் அடிபட்டார் என்கிறபோது, பதறி ஓடி உதவும் மனம், அவர் மகன் மாநிலத்தில் முதலாவதாகத் தேறினான் என்கிறபோது பாராட்டுவதற்குப் படியேற மனைவி ஞாபகமூட்ட வேண்டியிருக்கிறது. நம்மில் ஒரு சிலர் அண்டை வீட்டுக்காரர் பிள்ளையைப் பாராட்டவும் செய்யலாம். பத்திரிகைகார ர்கள் கேமராவுடன் வந்திருப்பது அதற்குக் காரணமாக இருக்கும். சிலர் விதிவிலக்காக, உண்மையிலேயே அண்டைவீட்டுக்காரனின் வளர்ச்சியை ஏற்கும் மனம் கொண்டவர்களாகவும் இருக்கலாம், இல்லாமலில்லை
இதே அண்டை மனிதர் கள் அடுத்த தெருவில், நமக்கு அறிமுகமற்ற மனிதராக இருக்கிறபோது அடையும் வளர்ச்சி குறித்து நாம் கவலைப் படுவதில்லை . அமெரிக்கா கொண்டாடும் தமிழன் என முக நூலிலும் எழுதுவோம். ஆனால் அவர் அண்டை வீட்டுக்காரனாக வந்த பிறகு அடையும் வளர்ச்சி நம் தூக்கத்தைக் கெடுக்கிறது
இப்பிரச்சினை அலுவலக மேசையில் அடுத்தடுத்து வேலை செய்யும் சக அலுவலர்களிடை, சக ஆசிரியரிடை, சக பேராசிரியரிடை, சக எழுத்தாளரிடை, சக கவிஞர்களிடை, சகமொழிபெயர்ப்பாளரிடை. உருவாகிறது. பூமிப்பந்தில் எல்லா மனிதர்களிடையும் இப்பிரச்சினை உண்டு
திருச்சி கிளையில் எங்கோ ஊழியம் பார்க்கிறபோது பிரச்சினையில்லை, சென்னை கிளையில் பக்கத்து நாற்காலியில் அவர் வேலை செய்கிறபோது பிரச்சினை ஆரம்பம். தவிர அந்த நண்பர் மேலதிகாரியிடம் திட்டு வாங்குகிறபோது சிக்கலில்லை, மேலதிகாரியால் அவர் வேலைத்திறன் புகழப்படும்போது மனம் புழுங்குகிறது.
காரணம் ஒருவரின் பலவீனத்தைவெறுப்பதில்லை, அவரின் பலத்தையே வெறுக்கிறோம். ஒருவரின் தோல்வியை வெறுப்பதில்லை, அவரின் வெற்றியைத்தான் வெறுக்கிறோம் . நமது நாற்பது வருட சர்வீஸை நேற்றுவந்தவன் கொண்டுவந்துவிடுவானோ நமது பதவி உயர்வுக்கு போட்டியாகி விடுவானோ என்பதால் விளையும் அச்சம்.
ஆ. முகநானூறு
இரண்டு முக நூல் முகவரியை எப்படியோ தொடங்கிவிட்டேன். இன்று ஒன்று போதுமென நினைக்கிறேன். இரண்டிலும் நெருக்கமான, ஓரளவு ஒத்திசைவான நண்பர்கள், குடும்ப உறவுகள் இருக்கிறார்கள். ஒன்றை மூடலாமென நினைத்து தள்ளிக்கொண்டே போகிறது. கடந்த ஜனவரி மாதம்வரை கிட்ட த் தட்ட 4000 நண்பர்கள் தற்போது அந்த எண்ணிக்கையை இரண்டிலுமாக 300க்குக் கொண்டுவந்திருக்கிறேன்.
இந்த எண்ணிக்கைக்குக் காரணம் தேடப்போய் கண்டறிந்ததே இப்பதிவின் முதற் பகுதி பிற காரணங்கள் :
- அநேக நண்பர்கள் பிறரை விமர்சிக்கிறபோது நாகரீகமாய் விமர்சிப்பதில்லை
- அருமை, சூப்பர் என எழுதும் நண்பர்கள், லைக் போடுகிறவர்கள் இவர்களில் உண்மையில் எத்தனை பேர் நான் எழுதுவதை வாசிக்கிறார்கள் என்ற ஐயம் உருவானது.
- பல நண்பர்கள் தமிழ் வழக்கிற்கேற்ப தங்கள் சிஷ்யர்களைத் தேடி வருகிறார்கள் அவர்களின் ஆவலைப் பூர்த்திசெய்ய நானில்லை.
- ஒரு சிலர் ஒவ்வொரு நாளும் உபதேசங்களைச் சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள்.
- சில நேரங்களில் முகநூல் வரி விளம்பரங்களைப் படிப்பதுபோல ஆகிவிடுகிறது. தமிழ்நாட்டில் நெட்வொர்க் இருந்தால், உறையில் பணம் வைத்துகொடுக்க முடிந்தால் முன்வரிசையில் இடம்பிடிப்பது எளிதானது. ஊடகங்களை குறைசொல்லவும் முடியாது நெருக்கியடித்துக்கொண்டு வரிசையில் நிற்கிறபோது அவர்களை குறைசொல்ல எப்படி முடியும். அதன் எதிரொலியாக குந்தியைப் பார்த்த காந்தாரி குந்தாணியை வயிற்றில் இடித்துக்கொள்ளும் கதைகளை முக நூலில் பார்க்கிறேன்.
- ட்ரம்ப் எனக்குப்பொன்னாடைபோர்த்திய போது எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பதுபோன்ற முச்சந்திஇலக்கியத்தை வாசிக்கும் ரசனை எனக்குக் குறைவு. தவிர இங்கே 90 விழுக்காடுகள் சாதித்து வாங்குவதல்ல யாசித்து வாங்குவது.
- இறுதியாக, முகநூல் நண்பர்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக்கொண்டு என்ன ஆகப்போகிறது. தேர்தலுக்கா நிற்கப்போகிறேன்.
என் தரப்பிலும் குறைகள் இருக்கின்றன
முடிந்தவரை பிடித்தவற்றை வாசிக்கிறேன், காலை வணக்கம், மாலை வணக்கம். மில்டன் நாற்காலியில் உட்கார்ந்து தியானம் போன்ற பதிவுகளைக் காட்டிலும், மில்டனின் கவிதை ஏற்படுத்திய கிளர்ச்களை இரசனை பூர்வமாக எழுதையிருந்தால் அவசியம் வாசிப்பேன்.
பிறவற்றிர்க்கும் நேரத்தை ஒதுக்கி முக நூலிலும் நேரத்தை செலவிட பலருக்கு சாத்தியமாகலாம். எனக்குப் போதாது. பல நேரங்களில் ஒரு வாரம் கழித்து முக நூல் எட்டிப்பார்க்கிறேன். உங்கள் நல்ல பதிவை தவறவிட்டிருக்கலாம். பலனாக எனது பதிவைப் புறக்கணிக்கும் சாத்தியமும் உண்டு. எப்படியாயினும் என்னால விலக்கபட்ட நண்பர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை, போலியாக லைக் இட எனக்கும் விருப்பமுமில்லை . நான் வீ ஐபி எழுதாளனோ அல்லது குறைந்த பட்சம் வட்ட கவுன்சிலர் கூட இல்லை. பிறகென்ன கவலையை விடுங்கள்.
————————————–
- பா. வெங்கடேசன் கவிதைகள் — சில குறிப்புகள் ‘ இன்னும் சில வீடுகள் ‘ தொகுப்பை முன் வைத்து …
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- இலக்கியச்சோலை அழைப்பு
- கம்பன் கஞ்சனடி
- தொடுவானம் 179. காதல் என்பது இதுதானா?
- மாயாவதியின் ராஜினாமாவும் அரசியல் கணக்குகளும்
- பையன்கள் : சுப்ரபாரதிமணியன்
- பறப்பியல் பொறித்துவப் புரட்சி ! வானில் பறக்கும் தரைக் கார் “வாகனா” !
- கவிநுகர் பொழுது-17 ( மு.ஆனந்தனின், ‘யுகங்களின் புளிப்பு நாவுகள்’,நூலினை முன்வைத்து)
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜூலை 2017
- கவிநுகர் பொழுது-19 (கனலி விஜயலட்சுமியின் “பால்(ழ்) முரண் நூலினை முன் வைத்து)
- மொழிவது சுகம் 23 ஜூலை 2017
- கவிநுகர் பொழுது-18 (கு.நா.கவின்முருகு எழுதிய, ‘சுவரெழுத்து’, கவிதைத் தொகுப்பினை முன்வைத்து)
- இலக்கியச் சிந்தனை 2016 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள்
- சீனியர் ரிசோர்ஸ்