ஒரு கவிஞன் தன்னைச் சுற்றி என்ன நிகழ்கிறதோ, நிகழ்வதில் எது தன்னைப் பாதிக்கிறதோ அதனை எழுதுகிறான். எழுதித் தீர்க்கிறான்; எழுதித் தீர்கிறான்.எழுதிய பிறகு அவனுக்கு அவனளவில் ஆசுவாசம் கொள்கிறான். தீர்வு கிடைப்பதற்காகவே எழுதப்படுபவையல்லவே யாவும். தன்னளவில் சிதைவுறும் கணத்தில் இருந்து மெல்ல சுவாசம் பெற அவன் வார்த்தைகளாகிறான்.
பா. இரவிக்குமார் மொழியின் மீதும் இனத்தின் மீதும் சமூகத்தின் மீதும் தீராத பற்று மிக்கவர் என்பதை நான் அறிவேன். தொடக்க காலத்தில் அவருக்கு அப்படியானதொரு பயிற்சிப் பட்டறை வாய்த்திருக்கிறது. பாரதி புத்திரன் தொடங்கி, நடத்திய’வனம்’ அமைப்பில் கவிதைகள் வாசிக்கிற போதே கவிதை குறித்தான புரிதல் ஏற்பட்டிருப்பதை அறிய முடிகிறது. அப்போதே மொழி பெயர்ப்புக் கவிதைகளில்பரிச்சியம் ஏற்பட்டிருக்கிறது. பாடு பொருளின் அக்கறை புரிந்திருக்கிறது.
தனது முன்னுரையில்,”கடந்த இருபது வருடங்களில்நடைபெறும் உலகின் அத்தனை மாற்றங்களும் என்னைச் சிதறடித்தது;சிதறடிக்கிறது. வாழ்க்கை என்ற நாடக மேடையில், எல்லோரையும் போலவே மிகச் சிறந்த நடிகன் நான். முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த நிகழ்விற்குப் பின் வாழ்வதற்கானார்த்தம் எதுவுமேயில்லை,”என்கிறார்.
ஏறக்குறைய, ஒரு வாழுதல் நிமித்தம் இருக்க வேண்டிய குறைந்த பட்ச ஆர்வம் அற்ற மன நிலை.
முடிந்து போனது. யாவும் யாவும் முடிந்து போனது.
துக்கப்பட அருகதையில்லை
நண்ப,
மன்றாடிக் கேட்கிறேன்
மனசாட்சி இருந்தால்
சற்று நேரம் சும்மா இரு
வேண்டாம் எதுவும் பேச வேண்டாம்.உணவுர்களற்ற அல்லது உணர்வின் பால் நிகழ வேண்டிய எதுவும் அற்று இப்போது எந்த விளக்கவுரையும் வேண்டாம்.
மாவீரர்களின் உடல்களின் மீது
மௌனத்தைப் போர்த்துவதற்கான
தருணமிது
நினவுகொள்
மௌனமும் யுத்தமே
என்னும் வரிகள் காலத்தால் ஆற்ற வேண்டிய எதுவும் செய்யப்படாத வெற்றுப் பார்வையாளர்களாய் இருந்த பெருஞ்சோகத்தின் வெறுப்பின் வெளிப்பாடாக உணர முடியும்.
இதைப் போலவே,’கனவில் வரும் பிணங்கள்’, என்னும் கவிதை.நடந்தது. நம் கண் முன்னே நடந்தது.என்ன கருதியிருக்கும் மரிக்குமுன் ஒரு பிஞ்சு உயிர். அப்போது இந்த கடவுளர்கள் எங்கே செத்தொழிந்தார்கள்.
மார்பகங்கள் அறுபட்ட
அந்த மயான பூமியில்
இறந்தே பிறந்த சிசுக்கள்
என்ன நினைத்திருக்கும்.?
ஒரு பந்தைப் போல
வீசியெறியப்பட்ட போது
அந்தப் பிஞ்சுப் பிணங்கள்
இந்தக் காற்றைப் பற்றி
என்ன நினைத்திருக்கும்?
ஓலங்களுக்கு நடுவே
சிதையின் தொட்டிலில்
பற்றியெரிந்த போது
தீயைப் பற்றி
அவை என்ன நினைத்திருக்கும்?
என்னும் கேள்விகளுக்கும் அவரின் முன்னுரையில் சொன்ன மன நிலைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒரு இயலாமையின் வலி சொற்களில் வெளிப்படுவதை உணர முடிகிறது.
இந்தக் கவிதை இப்படி முடிகிறது.
கனவில் ஒரு பிணம் வந்து
நீ இந்துவா ?என
என்னைக் கேட்டால்
கடவுளே
என்ன பதில் சொல்லுவேன்?
அப்பாவைப் பற்றிய முக்கியமான கவிதை ஒன்று உண்டு.அவரின் நோய் வாய்ப் பட்ட தருணத்தை நினைவில் கொண்டு வருகிற கவிதை.வலியை மறக்க பெத்தடின் ஊசி போடுகிற அப்பா. அப்பா என்றதும் முதலில் வருவது வலிகள்.அப்பா துயருற்ற பொழுதுகளைச் சொல்லிப்போகிர கவிதை தனக்கே தனக்காகக் கொடுத்த
பார்க்கர் பேனா
தம்பிக்குத் தெரியாமல்
கூடுதலாய்த் தீபாவளிப்பட்டாசு
அம்மாவுக்குத் தெரியாமல்
திண்பண்டம் தின்ன
அவ்வப்போது அஞ்சு ரூபாய்
நண்பர்களுடன்
சென்றுவர
திரையரங்க டிக்கட்
எப்பஒழுதாவது கவிதைப் புத்தகம்
மணி ஐயர் கடையில்
மிளகாய் பஜ்ஜி
என்ற பட்டியலில் எப்போதும் நினைக்க வைக்கிற ஒர் விஷயம்
அனைத்திற்கும் மேலாக
அந்த வயதிலேயே
கொஞ்சம் சுதந்திரம்
அது மிகமுக்கியமானதில்லையா.அப்படிபட்ட அப்பாவிற்கு மாற்றாக என்ன செய்ய முடியும்.
அவருக்கென்று தருவதற்கு
என்னிடம்தான் ஏதுமிருந்ததில்லை
காலம் கடந்த பிறகு
விழியோரம்
மெல்லத் திரளும்
இந்தக் கண்ணீரைத் தவிர
என்று நெகிழ்வோடு முடிகிறது கவிதை.
இந்தத் தொகுதியினைப் பொறுத்தமட்டில் மிக முக்கியமான மைய இழை ஒன்று ஓடுகிறது. ஒரு கவிதை ஆர்வலனாய்ச் சொல்வதெனில் மேற்குறிப்பிட்ட வை போன்று சில கவிதைகள் தவிர்த்து பிற கவிதகள் பேசுவது ஒரு தனித்த உரையாடல். காதல் சார்ந்த உரையாடல். காதல் என்றாலுமதன் தொல்விகளைச் சந்திக்கிற தருணத்தில் உருவானவை. மொத்தக் கவிதைகளையும் தொகுத்து ஒற்றைக் கயிற்றில் கோத்து விட முடியும். உணர்வின் அமைதியின்மையின் கணங்கள்.
ஏதோவொன்றில் இயங்கும் மனம் நிலைகுலையும் தருணம் எதிர் நிலையில் தன் செயலினை தன்னிச்சையான ஒரு வழியில் நடத்த நினைக்கிறது. தப்பிக்க முடியாத மனத்தின் வேதனை தப்பிதலுக்கான போலி செய்கிறது.
மெல்ல மெல்ல தீவிரமடையும் கவிமனத்தின் சிந்தனையில் நெரிசலுக் குள்ளாகும் இடங்கள் முக்கியமானவை. பார்ப்போம்.
அந்த கவிதைகளை ஒவ்வொன்றாய்க் கோத்துப் பார்ப்பது ஒரு வாசகப் பரிசோதனையாக அமையக் கூடும்.
ஒருபாத்திரம். அவன் அவள் என்ற புரிதலோடு காட்சிகளை கட்டமைப்பது எளிது. அவன் ஒரு கலா ரசிகன்.
தினமும் ஒரு கவிதை
தினமும் ஒரு புத்தகம்
தினமும் ஒரு பாடல்
தினமும் ஒரு இசை
என்று மனமெல்லாம் கலாபூர்வமான வாசத்தோடு இயங்கும் அவனுக்கு இவற்றைக் கடந்த ஒன்று மையம் கொள்கிறது.
இவற்றுடன் காண
தினமும் வேண்டும்
எனக்குன் முகம்.
முகம் பார்ப்பது கட்டாயம். பார்க்கவியலாத போது மிக வேதனையாகிவிடும் மனம்.முற்றிலும் தன்னை ஒப்புவித்த அன்பு.
நீயின்றி
அனாதை ஆகி விட்டது
மழையும்.
ஒரு மழை நாளில்
முடிந்தால் வாயேன்
மழைத்துளி போல
முடிந்தால் வாயேன் என்பது கட்டாயம் வாயேன் மழையில் நனைவோம் என்னும் காதல் அழைப்புத்தான்.
வந்தால் … வந்த பிறகு தான் புரிகிறதா? இல்லை என்பதும் இல்லை யென்பதை எப்படிச் சொல்வதென்பதுமாய்த் திணறுகிற து மனசு. பின்னே எதை விளக்கவியலும். சந்தித்தபொழுது எதிர்பார்த்த இணக்கம் இல்லை அல்லது புரியவில்லை.ஒன்றும் பேசாமல்,
’வருகிறேன்’
பொதுவாய்பேசி நழுவுவாய்
அம்மெரிக்க அதிபர் தேர்தல் குறித்த்ப் பேசிவிட்டுப் போக வந்தாய். அத்ற்காக உருவானதா இந்த சந்திப்பு?.
பார்க்கப் பரிதாபமாய் உள்ளது
பொய்யாய் வருகிறாய்
பொய்யாய்ப் பேசுகிறாய்
பொய்யாய்ப் பார்க்கிராய்
பொய்யாய்ப் போகிறாய்
வருவதும் பேசுவதும் பார்ப்பதும் பொய். போவதும் பொஇ என்பதே சற்று ஆறுதலான விஷயம். சரி.அப்படி வருவதும் போவதும் இயல்பென்றிருந்த போது ஏதோ ஒருகணம் இப்படித் தோன்றுகிறது
ஈயைப்போல் அமர்ந்து விட்டு
நீ போக
வெறும் புண்ணல்ல
என் நெஞ்சம்
நீ வருவதும் விட்டேத்தியாகப் பேசிப் போவதும் காதலா? என் மனம் புண்ணாகியிருப்பதும் உண்மைதான் .அதற்காக வெறும் புண்ணல்ல என்பதை அறிவாயா .
நீ என்ன கருதுகிறாய் என்று எனக்குத் தெரியவில்லை .ஒரு புண்ணில் வந்து அமர்ந்து செல்லும் ஈ போல இருக்கிறாய்.ஆனால்,
சிறுவனின் கையில் அகப்பட்ட
பட்டாம் பூச்சியாய்
உன்னிடத்தில்
என் இதயம்
என் இதயத்தை உன்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறேன் என்பதாவது தெரியுமா? தெரிந்தால் இப்படி நீ செய்வாயா?திடீரென்று பேசக்கூடாதென்கிறாய் முறைதானா? என்ன நேர்ந்தது உனக்கு?
உன்னைக் காண்பது
குற்றமெனில்
எந்த நெருப்பினில்
இக்கண்களை எரிப்பதென்று
நீயே சொல்
போவது நிச்சயமெனில்
உயிரை வருடும்
கடைசி வார்த்தையொன்றை
உதிர்த்து விட்டுப்போ
இந்த இடைவெளி நேர்வதற்கான கவிதையை, துரோகம் என்ற தலைப்பிட்ட கவிதையில் காணமுடியும்.
துரோகங்கள் யாவும்
பழகி விட்டன உனக்கு
யாரிடம் எங்கே எப்படி
அழவேண்டும்
மௌனத்தின் அளவு
இரவு எஸ் ம் எஸ்
எல்லாவற்றையும் நேர்த்தியாகச் செய்கிறாய்
எந்தக் காட்சி காதலுக்கு ஊறு விளவிக்குமோ அந்தக் காட்சிக்குப் பின்
தற்கொலை சிந்தனை வருவது இயல்பானது.
தற்கொலையை விட
குரூரமாக இருக்கிறது
தற்கொலையைப் பற்றிய சிந்தனை
அதற்குப்பின் பிரிவென்பது மரணத்திற்கீடானது என்னும் கவிதை. ஒரு காதலின் பல்வேறு தர்ணங்களை ஒரு குறு நாவலுக்குரியதன்மையோடு விரவிக் கிடக்கும் பலகவிதைகளை ஒன்று சேர்க்கிற போது புரியும்.
உலக செம்மொழித் தமிழ் மாநாட்டில் முதல் பரிசு பெற்ற கவிதை இத்தொகுப்பில் இருக்கிறது.
பச்சியப்பன் ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார்.’பெரும் அனுபவத்தைக் கொண்ட கவிஞன் ரவிக்குமாரிடம் எவ்வளவோ சொல்ல இருக்கிறது’,என.
கவித்துவ ஆளுமையும் மொழி வீச்சும் ஒருங்கே அமைவது அரிது. அப்படியான கவிஞர் ரவிக்குமாரின் கவிதைகள் அத்திசைப் பயணிக்க வேஏடும். எப்போதும் என் அன்பும் வாழ்த்துகளும்.
——
- பீட்டில்ஸ் இசைக் கீதங்கள் இந்தியா என் இல்லம் -1
- லெனின் விருது 2017 – பெறுபவர்: ஸ்வர்ணவேல் ஈஸ்வரன்
- தொடுவானம் 180. இருமணம் கலந்தால் திருமணம்
- கவிநுகர் பொழுது-20 (கவிஞர் இளங்கவி அருள் எழுதிய நான் மூனறாம் கண் நூலினை முன்வைத்து)
- கவிநுகர் பொழுது-21 (பா.இரவிக்குமாரின்,’கைரேகைக் கொடியில் கனவுப் பூ’, நூலினை முன் வைத்து)
- இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு நீர்வெள்ளம் இருப்பதைக் காட்டியுள்ளது