உன்னத மனிதனை எதிர்நோக்கும் உலகம்

This entry is part 8 of 12 in the series 10 செப்டம்பர் 2017

 

அணுசக்தி அறிவியல், அண்டவெளிப் பயணங்கள், விஞ்ஞான மேதைகள் குறித்து கட்டுரைகளும், நூல்களும் பல எழுதி அறிவியல் தமிழுலகில் தனக்கென ஓர் தனித்த இடத்தைத் தக்கவைத்துக் கொண்ட திரு. ஜெயபாரதன் அவர்கள் இலக்கியம் படைப்பதில் பன்முகத் திறமை கொண்டவர். கதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், படக்கதைகள் என இவர் படைத்தப் படைப்புகளில் மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கும் தனியிடம் உண்டு. ரவீந்திரநாத் தாகூர், வால்ட் விட்மன், பெர்ட்ரெண்டு ரஸ்ஸல், எலிஸபெத் பிரௌனிங், கலீல் கிப்ரான், ஸர் வால்டர் ராலே, ஆஸ்கர் வைல்ட், எமிலி டிக்கின்ஸன், ரூமி, உமர் கயாம், ஷேக்ஸ்பியர், பெர்னார்ட் ஷா என இவர் மொழிபெயர்த்த இந்திய மற்றும் அயல்நாட்டு அறிஞர்களின் பட்டியல் நீளம். அவ்வாறே இவர் எழுதிய நாடகங்களின் பட்டியலும் சீதாயணம்,  ஆப்ரஹாம் லிங்கன், நெப்போலியன், சாக்ரடிஸ், ஸாலமி, ஜோன் ஆஃப் ஆர்க்,  கிளியோ பாட்ரா, ஒத்தலோ என்ற படைப்புகளை உள்ளடக்கிய மற்றுமொரு நீண்ட பட்டியலே.

 

இப்பட்டியல்களில் மேலும் ஒன்றாக இம்முறை இடம் பிடிப்பது, இவர் தமிழாக்கம் செய்துள்ள “மனிதன் & உன்னத மனிதன்” (Man & Superman) என்ற தலைப்பில், 1903 ஆம் ஆண்டில் அறிஞர் பெர்னார்ட் ஷா எழுதிய நாடகம். “உன்னத மனிதன்” என்ற இந்த நாடகம், பிரபல மேற்கத்திய கதைகளின் நாயகனாக, பெண்களை மயக்கி தனது வலையில் வீழ்த்துபவனாகக் காட்டப்படும் “டான் வான்” (Don Juan) என்ற கதாப்பாத்திரத்தினை ஜியார்ஜ் பெர்னார்ட் ஷாவும் கையாண்டு, சமூகம் பற்றிய தனது கருத்துகளை வெளிப்படுத்த எழுதிய நான்கு அங்க நாடகம். இதன் மூன்றாம் அங்கம் நரகத்தில் நடப்பதாகக் காட்டப்படுவது. இந்தப்பகுதியில் சாத்தான் வாயிலாகவும் கூட சமூகத்தைப் பற்றிய தமது கருத்தை, “மனிதன் ஒரு பெரும் படைப்பாளி கடவுள்போல்! என்ன படைத்திருக்கிறான்? உள்ளே வைத்திருப்பவை: கழுவேற்றும் முனை! கம்பத்தில் கட்டி எரிப்பது! தூக்கு மேடை! மின்னதிர்ச்சி நாற்காலி! நச்சு வாயு! ஆனால் வெளியே காது குளிர முழக்குவது: கடமை! நீதி நெறி! தேசப்பற்று! அத்தனையும் வேடம்!” என்று வெளிப்படுத்துகிறார் பெர்னார்ட் ஷா.

 

பெர்னார்ட் ஷா திருமணவாழ்க்கை குறித்து வெளியிட்ட கருத்துகள்  மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவை. திருமணத்தின் உண்மையான தேவை என்ன? திருமணம் என்ற உறவு எவ்வாறு மனித வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறது என்ற அவரது கருத்துகளை வெளியிட ‘டான் வான்’ கதாப்பாத்திரத்தை நாடகத்தின் மூன்றாம் அங்கத்தில் பயன்படுத்தினார் பெர்னார்ட் ஷா. நாடகம் வெளியான முதல் சில ஆண்டுகளில், சர்ச்சைக்குரிய கருத்துகளின் காரணமாக நாடகத்தின் நீளத்தைக் காரணம் காட்டியும்,  மேலும் இக்கனவுக் காட்சிப் பகுதி தனித்தே நாடகத்தினுள் ஒரு சிறு நாடகமாக அமைந்துவிடுவது  மூல நாடகத்தைத் தொய்வடையச் செய்யலாம் என்ற காரணத்தாலும் இந்த மூன்றாம் அங்கம் தவிர்க்கப்பட்டது.

 

இப்பகுதி, ஜெர்மானிய தத்துவமேதைகள் ‘ஆர்தர் சோஃபெனர்’ (Arthur Schopenhauer), ‘ஃபிரடெரிக் நியட்ஸே’ (Friedrich Nietzsche) ஆகியோர் இல்வாழ்வின் குறிக்கோள் குறித்துக் கூறிய கருத்துகளை விரிவாக அலசும் பகுதி. சோஃபெனர் குறிப்பிட்ட ‘யூஜினிக்ஸ்’ (Eugenics) என்றக் கோட்பாட்டை மீள்பார்வை செய்யும் விதத்தில் அமைந்த பகுதி. நரகத்தில் தான் சந்திக்கும் இளம்பெண் ஒருத்தியுடனும் அவளது தந்தையுடனும், “மனிதப் பிறப்பு மூளை விருத்தி நோக்கிச் செல்ல வேண்டும் என்று சொல்ல வருகிறேன்! வெறும் மேனி அழகும், உடற் பூரணமும் பெறுவது மட்டுமல்ல மனிதனின் உன்னதக் குறிநோக்கு! அந்த அரிய மூளைக் கருவியால் மனிதன் சுயத்தன்மை உணர்வும்  சுயத்தன்மைப் புலப்பாடும் அடைய வேண்டும்”, “தக்க பெற்றோரைத் தேர்ந்தெடுத்துப் பிறக்கும் குழந்தைப் பண்பாட்டைச் சீராக்குவது” என விரிவாக விவாதிக்கிறான் டான் வான். இவர்கள் மூவரும் 17 ஆம் நூற்றாண்டில் ஸ்பானிஷ் மொழியில் முதன் முதலில் வெளிவந்த  டான் வான் கதையின் கதைப்பாத்திரங்களே. சிற்றின்பக் களியாட்டத்தில் பல பெண்களை தன்வசமாக்கும் டான் வான், அவ்வாறு தான் அடைந்த ‘டானா ஆன்னா’ (Doña Ana) என்ற இளம்பெண்ணையும், தனது மகள் டானா ஆன்னாவைக் காப்பாற்ற டான் வானுடன் போரிட்டு, அவனது வாளால் உயிரிழந்த  அப்பெண்ணின் தந்தை ‘டான் கான்சலோ’ (Don Gonzalo) என்பவரையும் நரகத்தில் சந்தித்து உரையாடுவதாகக் காட்டப்படுகிறது.

 

நாடகத்தின் மற்ற அங்கங்களைவிட இப்பகுதியே மொழிபெயர்ப்பிற்குச் சவாலாக அமையும் பகுதி, தமிழில் பல கலைச்சொற்களைக் கையாள வைக்கும் பகுதி. இதனை மிக எளிமையாகக் கையாண்டுள்ளார் திரு. ஜெயபாரதன். மூன்றாம் அங்கம் முன்வைக்கும் கருத்தாக்கத்தை செயல்படுத்தும் விதமாக ஆன்னி வொயிட்ஃபீல்ட் (Annie Whitefield) என்ற இளம்பெண் “தெளிந்த ஞானமும், உயர்ந்த நெறியும், உறுதி உள்ளமும் கொண்டவர் ஜான் டான்னர்! அவரை நான் மணந்தால் எங்களுக்கு உன்னத குழந்தைகள் பிறக்கும் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது! இது தேர்ந்தெடுப்புத் திருமணம்! உயர்ந்த சிந்தனையை உடையவர், உறுதியான உள்ளங் கொண்டவர், ஒப்பிலா மனநோக்கு உடையவர் இல்வாழ்வில் உன்னத சிசுக்களைப் பெறுவர் என்பது என் அழுத்தமான எண்ணம்” என்று கூறி தன் மீது காதல் கொள்ளாத ஜான் டான்னரை மணந்து கொள்ள விரும்புகிறாள். தன்னை மனதார காதலிக்கும் அழகிய இளைஞன் அக்டேவியஸ் ராபின்ஸன் என்பவனின் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் ஆன்னி வொயிட் ஃபீல்ட். அழகிய இளம்பெண்ணான அவளுக்கு, அழகன்  அக்டேவியஸ் ராபின்ஸனை விட, அறிவாளியான ஜான் டான்னரே மணமுடிக்க ஏற்றவனாகத் தெரிகிறான். ஒருவகையில் காவியத்தில் காட்டப்பெற்ற, கனவுக் காட்சியில் தோன்றிய டானா ஆன்னாவையும் டான் வானையும் நாடகத்தின் ஆன்னி வொயிட் ஃபீல்ட் மற்றும் ஜான் டான்னர் படைப்புகளில் பெர்னார்ட் ஷா உருவகப்படுத்தியுள்ளதைக் காணலாம்.

 

இல்வாழ்வின் குறிக்கோள் உன்னத மனிதரை உருவாக்குவது, திருமணம் செய்து கொள்வதின் குறிக்கோள் சந்ததி விருத்திக்கு மட்டுமில்லாது, சந்ததி உயர்வுக்கும் உரியது என்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற இந்தநாடகத்தின் மையக் கருத்து சில சுவையான கதைகளையும் கொண்டது.  ‘ஷா-டன்கன் கதை’ (Shaw-Duncan tale) என்று பேசப்படும் இக்கதையில் அறிவில் சிறந்த பெர்னார்ட் ஷாவிடம் அழகிய அமெரிக்க நாட்டிய மங்கை ‘இசடோரா டன்கன்’ (Isadora Duncan) என்பவர், அறிவாளியான நீங்களும் அழகியான நானும் மணந்துகொண்டால் சிறந்த பிள்ளைகள் பிறக்க வாய்ப்புள்ளது என்று தனது விருப்பத்தை எழுதியதாகவும், அதற்கு ஷா, “ஆனால், குழந்தை உன் அறிவையும் என் அழகையும் கொண்டு பிறந்துவிட்டால் என்னாவது” (‘But what if the child turned out to have my body and your brain?’) என்று கேட்டதாகவும் கூறப்படுவதுண்டு. ஒருவர் விரும்பி எதிர்பார்த்த நோக்கத்திற்கு மாறாக, முற்றிலும் எதிர்பாராத விளைவாக,  எதிர்மறை முடிவு கிடைக்கவும் கூடும் என்பதை ‘ஷாவியன் ரிவர்சல்’ (Shavian reversal) என்றே குறிப்பிடும் முறையும் இதன் அடிப்படையில் உருவானது. இது ஒரு நாகரிகமற்ற முறையில் ஒரு பெண்ணின் புத்திசாலித்தனம் குறித்து,  நையாண்டியாகப்  பேசும் முறை என்றாலும்  நகைச்சுவை என்ற  நோக்கில் மக்களிடையே  பரவியதுமுண்டு. முதலில் இவ்வாறு தான் கூறியதில்லை என்று பெர்னார்ட் ஷா மறுத்தாலும், பின்னர் ஒரு அழகி அவரிடம் திருமண விருப்பத்தைத் தெரிவித்த பொழுது தானும் அவ்வாறு பதிலளித்ததுண்டு, ஆனால் அவர் இசடோரா டன்கன் அல்ல, அந்தப் பெண் யார் என்றும், அவர் பெயர் என்னவென்று தனக்கு நினைவில்லை என்றும் பின்னர் மற்றொருமுறை கூறியுள்ளார். இது போல இந்தச் சொற்றொடரும் நிகழ்ச்சியும் மேலும் பல பிரபலங்களை இணைத்து வழங்கப்பட்டதும் உண்டு.  அவ்வாறு குறிப்பிடப்பட்ட பெண்கள் கலைத்துறையைச் சார்ந்த அழகிகளாகவும், ஆண்கள் மேதைகள் என அறியப்பட்டவர்களாகவும் இருப்பார்கள், குறிப்பாக ஐன்ஸ்டினும், மர்லின்  மன்றோவும் வெவ்வேறு இணைகளுடன் இணைக்கப் பட்டு இவ்வாறு அவர்கள் பெயர் அடிப்பட்டதுண்டு.

 

ஒரு தேவையான சூழ்நிலை தோன்றும்பொழுது மிகத் திறமையுடன், துணிவுடன் முன்னின்று மற்றவருக்கு வழிகாட்டியாக இயங்கும் வண்ணம் செயல்படுபவரை உன்னதமானவர் என்பதற்குரிய பண்புகளைக் கொண்டவர் எனக் கூறலாம். இத்தகைய உன்னத மனிதர்களுக்கு எடுத்துக்காட்டாகத்  திரு. ஜெயபாரதனும், சாக்ரெடிஸ், கௌதம புத்தர், ஏசு நாதர், நபி நாயகம், ஜியார்ஜ் வாஷிங்டன், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், லியோ டால்ஸ்டாய், விவேகானந்தர், மகாத்மா காந்தி, மாசேத்துங், மார்டின் லூதர் கிங், நெல்ஸன் மாண்டேலா, ஆல்பர்ட் ஸ்வைஸர், அன்னை தெராஸா போன்றோரைப் பட்டியலிடுகிறார். நிர்வாக இயலில் ‘சூழ்நிலைக்கேற்ற  தலைமைப்பண்பு’ (Situational leadership) என்றக்  கோட்பாட்டை முன்வைக்கும் ‘கென் பிலான்ச்சர்ட்’ மற்றும் ‘பால் ஹெர்சி’(Ken Blanchard and Paul Hersey) ஆகியோர்  குறிப்பிடும் தலைமைப் பண்பை இதனுடன் ஒப்பிட்டு நோக்கலாம்.  “சிறந்த தலைமைப் பண்பு என்று குறிப்பிட்டுச் சொல்ல எதுவுமில்லை, சூழ்நிலைக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்ளும் திறன் பெற்று மற்றவரையும்  வழிநடத்தும் பண்பைக் கொண்டவர் சிறந்த தலைவர்” (there is no one “best” style of leadership, and that the most successful leaders are the ones who can adapt their style to a given situation) என அழைக்கத் தகுந்த பண்புகளைப் பெற்றவர் என்பது இவர்கள் தரும் விளக்கம். இந்த நாடகத்திலும், அதில் மேற்கோள்களாகக் கொடுக்கப்படும் பிற அறிஞர்களின் கருத்துகளிலும் இத்தகைய கோணங்கள் வெளிப்படுவதைக் காணலாம்.

 

“ஆக்கச் சக்தி, கூரிய யுக்தி, சுயமதிப்பு உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறம்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தி உன்னத குறிக்கோளை நோக்கி மக்களை ஒன்றுபடுத்தி வெற்றி பெறும் போது அப்புரட்சியின் தளபதி உன்னத மனிதனாக உயர்கின்றான்”. சிறந்த ஆண் பெண்ணை பெற்றோராகத் தேர்வு செய்து,  உன்னத மனிதரைப் படைக்கும் நோக்கத்தில் குழந்தை பெறச் செய்து, உயர்ந்த சிந்தனைகளைப் புகட்டி,  சிறந்த கல்விகளையும் கற்பித்து உன்னத மனிதர்களைப் படைப்பது சாத்தியமே. காதல் வயப்பட்டு மணமுடித்து குடும்ப வாழ்க்கையைத் துவக்குவதைவிட, காதலைப் புறக்கணித்து மனிதக் குல மேம்பாட்டிற்காகச்  சிறந்த மனிதர்கள் இல்வாழ்வில் இணைந்து சந்ததியரை உருவாக்குவது மேலானது. திருமணம் செய்து கொள்வதின் குறிக்கோள் சந்ததி விருத்திக்கு மட்டுமில்லாது, சந்ததி உயர்வுக்கும் உரியது என்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது போன்ற ஜெர்மானிய அறிஞர் ‘ஃபிரடெரிக் நியட்ஸே’  கூறிய பொருத்தமான  கருத்துகளையும்  அவ்வாறே, விவேகானந்தர் உன்னத மனிதராகக் கருதிய புத்தர் குறித்து அவர் சொன்ன கருத்துகளையும் தொகுத்து தகுந்த இடங்களில் காட்சிகளின் முதலில் அறிமுக உரைகளாகக் காட்டியிருப்பதும் திரு. ஜெயபாரதன் மேற்கொண்டுள்ள நல்லதொரு உத்தி.

 

திரு. ஜெயபாரதன் அவர்களின் மொழிபெயர்ப்பில், “உண்மை வாசலைத் தாண்டுவதற்குள் பொய் ஒருமுறை உலகைச் சுற்றி விடுகிறது!”, “இந்த மனித விலங்கு புதிரானது! சுயநலப் பிராணி! மண்டை ஓட்டைத் தாண்டி அண்டை வீட்டுத் தீயை அணைக்காது!” என்பது போன்ற தமிழாக்கங்கள் படித்துச் சுவைக்கத்தக்கவை. பெர்னார்ட் ஷாவின் நாடகத்தைத் தமிழில் படிக்க திரு. ஜெயபாரதன் அவர்கள் மூலம் பெற்ற வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

Series Navigationஉன்னத மனிதன் நாடக நூல் வெளியீடு அறிவிப்பு, சி. ஜெயபாரதன், கனடாஅவுஸ்திரேலியா – மெல்பனில் நூல் வெளியீடும் ஆவணப்படம் திரையிடலும்
author

தேமொழி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *