தொடுவானம் 193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை

This entry is part 1 of 9 in the series 29 அக்டோபர் 2017

டாக்டர் ஜி. ஜான்சன்

193. சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை

Swedish Mission Hospital Corridor திருப்பத்தூரில் முதல் காலை. வீட்டு முற்றம் வந்து நின்றேன். குளிர்ந்த காற்று சிலுசிலுவென்று வீசியது. அப் பகுதியில் ஏராளமான சவுக்கு மரங்கள், கற்பூரத்தைலமரங்கள், .தென்னை மரங்கள் காணப்பட்டன. இடது பக்கத்தில் ஒரு மாடி வீடு இருந்தது. எதிரே வலது பக்கத்தில் இரண்டு வீடுகள் ஒன்றாக சேர்ந்திருந்தன. வீடுகளின் முன் நேர்த்தியான பூந்தோட்டங்கள் காணப்பட்டன.
மரங்களில் குருவிகள் கீச்சிட்டன. . குயில்கள் கூவின. பச்சைக் கிளிகள் பறந்து மகிழ்ந்தன. அங்கு நின்றது எனக்கு பரவசமாக இருந்தது. ஏகாந்த நிலை அது!
கையில் காப்பியுடன் செல்லப்பா வீட்டு வேலைக்காரி ராணி என்னிடம் வந்தாள்.அவள் ஒல்லியாக உயரமாக இருந்தாள். சூடான காப்பியை சுவைத்தவாறு அந்த இயற்கைக் காட்சியை ரசித்தேன். இந்த மருத்துவமனையின் வளாகம் ஒரு நந்தவனத்தில் இருப்பது போன்ற உணர்வை உண்டுபண்ணுகிறது. . இந்த இயற்கைச் சூழல் எனக்கு சென்னை கிறிஸ்துவக் கல்லூரியையும் நினைவூட்டியது.
டாக்டர் செல்லப்பா கையில் காப்பி கோப்பையுடன் வெளியே வந்தார்.
” எப்படி? இடம் பிடித்துள்ளதா? ” என்று கேட்டார்.
” அருமையாக உள்ளது. மிகவும் அமைதியாக அழகாக உள்ளது. ” என்றேன்.
” இது பெரிய வளாகம். 204 படுக்கைகளை கொண்ட மருத்துவமனை. நாங்கள் ஒன்பது டாக்டர்கள் உள்ளோம். எல்லாரும் உள்ளேதான் உள்ளனர். டாக்டர் டேவிட் ஜான் மலேசியா சென்றுவிடுவார். சுமார் 150 பேர்கள் இங்கே வேலை செய்கிறார்கள். அனைவருக்கும் இங்கேயே வீடு தரப்பட்டுள்ளது. இன்று நீ சுற்றிப் பார்த்தபின் தெரிந்துகொள்வாய். உனக்கு இந்த இடம் பிடிக்கும். ”
” ஆமாம். எனக்கும் மிக ஆவலாக உள்ளது. வேலை முடிந்ததும் இந்த வளாகம் முழுதும் சென்று பார்ப்பேன். ” நான் ஆவல் பொங்க கூறினேன்.
” நீ சீக்கிரம் குளித்துவிட்டு வா. பசியாறிவிட்டு புறப்படுவோம். எட்டு மணிக்கு வேலை. ” என்று என்னைத் துரிதப்படுத்தினார்.
நான் மாடிக்குச் சென்றேன். அங்கு குளியல் அறை உள்ளது.
காலையிலேயே தோசை, இட்டிலி, வடை தயாராகிவிட்டது. ராணியின் சமையல். நாங்கள் மூவரும் பசியாறிவிட்டு புறப்பட்டோம்.. பக்கத்து வீட்டிலிருந்து டாக்டர் பிரெடரிக் ஜான் வெளிவந்தார். அவரைத் தொடர்ந்து அவருடைய மனைவி இந்திரா ஜான் வந்தார். அங்கிருந்து ,” ஹலோ ஜான்சன். குட் மார்னிங் . ” என்று அவர் உரக்க அழைத்தார்.
நானும் பதிலுக்கு , ” குட் மார்னிங். ” என்றேன். அவர் மருத்துவக் கல்லூரியில் எனக்கு மூன்று வருடம் சீனியர்.
அவர்களுக்காக காத்து நின்றோம். ” மீட் இந்திரா. ” என்று மனைவியை அறிமுகம் செய்தார். அவர் நல்ல நிறத்தில் அழகாக இருந்தார். அவர் மலையாளப் பெண் என்பதைப் பின்பு தெரிந்துகொண்டேன்.
எதிரே வலதுபுற இரு வீடுகளின் முதல் வீட்டிலிருந்து ஒரு வாலிபர் வந்தார். அவர் டாக்டர் ராமசாமி என்று அறிமுகம் செய்துவைத்தனர். அவர் ஒல்லியாக இருந்தார். கை குலுக்கிக்கொண்டோம்.
நாங்கள் அறுவரும் மருத்துவமனை நோக்கி நடந்தோம். அது மண் பாதைதான்.போகும்போது பிரெடரிக் ஜான் என்னைப்பற்றி விசாரித்தார்.
முதலில் மருத்துவமனை அலுவலகம் தாண்டி இடது பக்க வராந்தாவில் நடந்தோம். அங்கு ஒரு சிற்றாலயம் இருந்தது. காலணிகளைக் கழற்றிவிட்டு நுழைந்தோம். டாக்டர் செல்லையாவும் காந்தமணியும் அமர்ந்திருந்தனர். ஏராளமான தாதியர்களும், தாதியர் பயிற்சி மாணவிகளும் மொசைக் தரையில் அமர்ந்திருந்தனர். சிறிய பீடத்தில் சிலுவை இருந்தது. அதன் இரு பக்கத்திலும் மலர்க் கொத்துகள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருநதன.
ஒரு முதியவர் ஆராதனையை வழி நடத்தினார். அவர் ஜான் ரத்தினம் எனபதை பின்பு தெரிந்துகொண்டேன். அவர் அறுவைக் கூடத்தில் மயக்கம் தருபவர். ஞானப்பாட்டுகள் பாடியபின்பு வேத வசனம் வாசித்து சுருக்கமாக நற்செய்தி கூறி, ஜெபம் செய்தார். அதன் பின்பு நாங்கள் கலைந்து பணிக்குச் சென்றோம். இந்த காலை தியானம் தினசரி காலையில் நடைபெறுமாம். இங்கு ஊழியர் அனைவரும் காலையிலேயே கூடிவிடுவார்களாம். அனால் தியானம் முடிந்ததும் நின்று பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள். அவரவர் பணியிடம் சென்றுவிடுவார்களாம். இங்கு கடவுள் வழிபாட்டுடன் அன்றாட வேலையை துவங்குவது ஆசிர்வாதமானது என்று எண்ணினேன்.
என்னுடன் வந்திருந்த டாக்டர்கள் பிரிந்து சென்றனர். நான் டாக்டர் செல்லையாவின் அறைக்குச் சென்றேன் தலைமை மருத்துவ அதிகாரியின் அறை. ஒருபெரிய மேசையும் நான்கு நாற்காலிகளும்தான் இருந்தன.அதோடு இணைந்து பின்பக்கத்தில் பெரிய அலுவலகம் இருந்தது. அங்கு ஆறு பேர்கள் பணியில் இருந்தனர். அலுவலகத்தின் வெளியில் கருத்த நிறத்தில் பருமனான ஒருவர் காக்கி உடையில் நின்றுகொண்டிருந்தார். அவர் ஆபீஸ் பியூன் ஈஸ்டர் ராஜ் என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்.
தலைமை மருத்துவரின் இருக்கையில் டாக்டர் செல்லையா அமர்ந்துகொண்டார்.நான் ஒரு இருக்கையில் அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் ஒரு முதியவரும் ஒரு நடு வயதுடைய ஸ்டாஃப் நர்ஸும் வந்து அமர்ந்தனர். அவர்களை தேவசகாயம் என்றும் பகீரதி என்றும் அறிமுகம் செய்தார் செல்லையா. தேவசகாயம் நர்சிங் சூப்பரின்டென்டண்ட். பகீரதி தாதியர் பயிற்சிப் பள்ளியின் முதல்வர். என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்தபின்பு அவர்கள் இருவரும் வெளியேறினர். அப்போது எங்கிருந்தோ ஒரு வெள்ளைக்காரர் அறைக்குள் நுழைந்தார். அவர் வட்டச்சாட்டமாக உயரமாக இருந்தார். வெள்ளை நிறத்தில் டாக்டரின் கோட் அணிந்திருந்தார்.
” மீட் டாக்டர் பார்த். ” செல்லையா அவரை எனக்கு அறிமுகம் செய்தார். நான் எழுந்து அவருடன் கை குலுக்கினேன்.
” நீ இவருடன்தான் வேலை செய்யவேண்டும். இவர் மருத்துவ நிபுணர். சுவீடன் தேசத்தவர். ” என்றார் செல்லையா ஆங்கிலத்தில். அதைப் புரிந்துகொண்ட டாக்டர் பார்த் , ” யூ ஆர் வெல்கம் டு ஜாய்ன் மி. ” ( என்னுடன் சேர்ந்துகொள்ள உங்களை வரவேற்கிறேன். ) என்றார். அவருடன் மருத்துவப் பிரிவில் பணியாற்றுவது பயனுள்ளதாக இருக்கும் என்று நான் மனதில் எண்ணிக்கொண்டேன்.
” யூ கேன் கோ வித் ஹிம் டு த வார்ட் . ” ( நீ இவருடன் வார்டுக்குச் செல்லலாம் . ) என்றார் செல்லையா. நாங்கள் இருவரும் வெளியேறினோம்.
முதலில் நாங்கள் சென்றது டீ வார்டு.அது ஆண்கள் மருத்துவ வார்டு. அதன் நேர் எதிரில் பீ வார்டு.அது ஆண்கள் அறுவை மருத்துவ வார்டு.நடுவில் திறந்த வெளி. அங்கு சுமார் பத்து தென்னை மரங்கள் குலை குலையாய் காய்த்து நின்றன. ஒரு ஓரத்தில் ஒரு கிணறு இருந்தது.
வார்டுக்குள் நுழைந்ததும் தாயியாரின் பகுதி காணப்பட்டது. அங்கு சிஸ்டர் பாலின் எங்களை வரவேற்றார். அவர் சுமார் முப்பது வயதுடையவர். கரு நிறத்தில் சற்று பருமனுடன் காணப்பட்டார். சரளாமாக ஆங்கிலம் பேசினார். அவருடன் வேறு சில ஜுனியர் தாதியரும், சில தாதியர் பயிற்சி மாணவிகளும் இருந்தனர். தாதியர் வெள்ளை நிற சேலை அணிந்திருந்தனர். பயிற்சி மாணவிகள் நீல நிற சேலை அணிந்திருந்தனர். அனைவரும் தாதியர் தொப்பி அணிந்திருந்தனர். அதில் சீனியர் தாதியான சிஸ்டர் பாலினுக்கு இரண்டு கோடுகள் இருந்தன. ஜுனியர்களுக்கு ஒரு கோடு மட்டும் இருந்தது. பயிற்சி மாணவிகளுக்கு கோடுகள் இல்லை.
வார்டின் இடது பக்கத்தில் பதினைந்து படுக்கைகள் வரிசையாக இருந்தன. அனைத்திலும் நோயாளிகள் படுத்திருந்தனர். வலது பக்கத்தில் பத்து படுக்கைகளில் நோயாளிகள் படுத்திருந்தனர். டாக்டர் பார்த் ஒவ்வொரு நோயாளியாகப் பார்த்தார். அவர் அருகில் நான் சென்றேன். எங்களைச் சுற்றி தாதியர் அனைவரும் புடைசூழ்ந்து வந்தனர். அவர்களின் நோய் பற்றி என்னிடம் விவரித்தார். அவர்களுக்கு தரவேண்டிய சிகிச்சை பற்றி கூறிவிட்டு குறிப்பேட்டில் எழுதினார். சிஸ்டர் பாலின் அவற்றை தன்னுடைய குறிப்பேட்டில் எழுதிக்கொண்டார். மாணவிகள் தங்களுடைய நோட்டு புத்தகத்தில் எழுதிக்கொண்டனர்.
நோயாளிகள் பரிதாபமாகக் காணப்பட்டனர். சிலர் மிகவும் மோசமான நிலையில் இருந்தனர். அனைவருமே பாமர மக்கள். சுற்றுவடடார கிராமவாசிகள். ஏழை எளியோர். மருத்துவ சிகிச்சைக்கு பணம் கட்ட முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. டாக்டர் பார்த் அவர்கள் அனைவரிடமும் ஒரே மாதிரியாகத்தான் பேசி பரிசோதனை செய்தார். அவர்களிடையே ஏற்றத்தாழ்வு காட்டவில்லை.
பெரும்பாலானோருக்கு காய்ச்சல். சிலருக்கு டைபாய்டு காய்சசல். சிலருக்கு ஃபைலேரியா காய்ச்சல். சிலருக்கு வைரஸ் காய்ச்சல். காசநோய், கல்லீரல் நோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் புண், சிறுநீரகப் பிரச்னை, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, இருதய செயலிழப்பு, நீரிழிவு நோய், பக்க வாதம் என பலதரப்பட்ட மருத்துவ நோயாளிகள் அங்கே படுத்திருந்தனர். பயிற்சி தாதியருக்கு மிகவும் ஏற்ற மருத்துவமனை இது. எனக்கும்கூட பலதரப்பட்ட நோயாளிகளைப்பற்றிய நல்ல அனுபவம் இங்கு கிடைக்கும். இங்கு பணி புரிவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
எல்லா நோயாளிகளையும் பார்த்து முடிந்தபின்பு நாங்கள் ஜி வார்டுக்குச் சென்றோம். டீ வார்டிலுருந்து வலது பக்கம் சென்று திரும்பி வராந்தாவில் நடந்து சென்றால் எதிரே ஜி. வார்டு தெரியும். அங்கு செல்லும்போது வலது பக்கத்தில் எஃப் வார்டு தெரியும். அது பெண்கள் அறுவை மருத்துவ வார்டு. ஜி. வார்டு பெண்கள் மருத்துவ வார்டு. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பகுதியில் பெண்களும் இன்னொரு பகுதியில் குழந்தைகளும் இருந்தனர். நாங்கள் பெண்களை மட்டும் பார்த்தோம். மொத்தம் பதினைந்து படுக்கைகள் இருந்தன. அங்கு சிஸ்டர் சந்திரா விக்லீஸ் இருந்தார். அவர் கருப்பாக உயரமாக காணப்பட்டார். அவர் ஆங்கிலத்திலும் தமிழிலும் சரளமாகப் பேசினார். அங்கும் ஜுனியர் தாதியரும், பயிற்சி மாணவிகளும் இருந்தனர்.அவர்களுக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தார் டாக்டர் பார்த். அவர்கள் புன்முறுவல் பூத்தனர். அங்குள்ள பெண் நோயாளிகளை ஒவ்வொருவராகப் பார்த்தோம். வார்டை விட்டு வெளியேறினோம்.
வராந்தாவில் நடந்து அந்த வார்டின் பின்புறம் சென்றோம். செல்லும் வழியில் இடது பக்கத்தில் பிசியோதெராப்பி கூடம் இருந்தது. அதைத் தாண்டிச் சென்றதும் எல் வார்டு. அதன் வலது பக்கத்தில் ஆண்களும் இடது பக்கத்தில் பெண்களும் காணப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் தொழுநோய். இந்த வட்டாரத்தில் தொழுநோய் மிகவும் அதிகம் என்றார் டாக்டர் பார்த்.சிவகங்கை மாவட்டத்து ஜனத்தொகையில் ஆயிரம் பேரில் பதினைந்து பேருக்கு தொழுநோயாம். இது மிகவும் அதிகம். இதனால் இந்த மருத்துவமனையில் தொழுநோயாளிகளுக்கு சிறப்பான சேவை செய்கிறார்களாம். இதற்கு சுவீடன் தேசத்திலிருந்து பணம் வருகிறதாம். அதை வைத்து நோயாளிகளுக்கு இலவசமாக மருந்து மாத்திரை ஊசி, புண்கள் ஆற்ற சிகிச்சை, அறுவை மருத்துவம், இலவச உணவு போன்றவை தரப்படுகிறது. சிலருக்கு மறுவாழ்வு தரும் வகையில் மருத்துவமனையில் வேலையும் தரப்பட்டுள்ளதாம். இது பற்றி போகப்போகத் தெரிந்துகொள்வேன் என்றார்.
இங்கேயும் ஒவ்வொருவராகப் பார்த்தோம். இந்த வார்டில் சிஸ்டர் ஜெசிக்காவும், ஜுனியர் தாதியரும், பயிற்சி மாணவிகளும் இருந்தனர். என்னை அறிமுகம் செய்தார் டாக்டர் பார்த். அதன்பின்பு ஆண்கள் பகுதியில் ஒரு ஓரமாக காலில் பெரிய புண்கள் உள்ளவர்கள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு டாக்டர் பார்த் புண்களை சுத்தப்படுத்தி கட்டுப் போட்டார். அவர் கைகளில் உறை அணியாமலேயே அவர்களைத் தொட்டு சிகிச்சை அளித்தார். பாராமெடிக்கல் பணியாளர்களான கண்ணுசாமி, மைக்கல், ஜெயபாலன், டேனியல் ஆகியோர் உதவினார்கள். சிலரின் கால் புண்களில் புழுக்கள் நெளிந்தன. அவற்றையெல்லாம் அப்புறப்படுத்தி கட்டு போட்டனர்.இந்தப் பணி புனிதமானது. இதுபோன்ற மனிதாபிமான பணியில் மிஷன் மருத்துவமனகள் ஈடுபடுவது பாராட்டுதற்குரியது.
பார்த் கைகளைக் தழுவிக்கொண்டார். என்னை அழைத்துக்கொண்டு மருத்துவமனையின் உணவுக்கூடத்திற்கு சென்றார். அங்கு நோயாளிகளுக்கு உணவு தயாரித்துக்கொண்டிருந்தனர். நாங்கள் அமர்ந்து காப்பி அருந்தினோம்.
இறுதியாக வெளி நோயாளிப் பிரிவுக்குச் சென்றோம். அது பீ வார்டு பக்கத்தில் இருந்தது. அந்த அறையின் என் 12. அங்கு சுமார் இருபது பேர்கள் வரிசையாக வராந்தாவில் பெஞ்சுகளில் அமர்ந்திருந்தனர். நான் அறைக்குள் டாக்டர் பார்த் எதிரில் அமர்ந்துகொண்டேன். அட்டண்டர் மாணிக்கம் வயதானவர். அவர் ஒவ்வொரு நோயாளியாக உள்ளெ அனுப்பினார். எனக்கு வந்த நோயாளிகளை நான் சுதந்திரமாகப் பார்த்தேன். அதில் டாக்டர் பார்த் தலையிடவில்லை. அனைவரையும் பார்த்து முடித்ததும் அன்றைய வேலை முடிந்தது. மணியும் பனிரெண்டரை ஆகிவிட்டது. ஒரு மணிக்கு செல்லப்பா வீடு செல்லலாம். அதுவரை மருத்துவமனையின் முகப்பிலிருந்து சுற்றிப் பார்க்கலாம்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஇருபது கப்பல் அணு மின்சக்தி உற்பத்தி நிலையங்களைக் கட்ட சைனா திட்டமிட்டுள்ளது.
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *