மேலான படைப்பாளி மேலாண்மை பொன்னுச்சாமி

This entry is part 13 of 15 in the series 5 நவம்பர் 2017

melanmaiponnuswamy

தன்னிகரற்ற எழுத்தாளர் 30.10.2017 இல் மறைந்த எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி ஆவார். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே பள்ளிக்கல்வி பயின்று இந்த அளவுக்குப் பேசப்படும் ஓர் எழுத்தாளர் வேறு எவரும் தமிழ்நாட்டில் இருந்ததாய்த் தெரியவில்லை. அடித்தட்டு மக்களில் ஒருவரான இவர் அடித்தட்டு மக்களின் வாழ்வு, அவர்களின் பிரச்சினைகள், இயல்புகள் ஆகியவை பற்றியே பெரும்பாலும் எழுதினார். இவரது தமிழ்நடை வேறு எவரும் பின்பற்ற முடியாத  ஒன்றாகும். சிற்றிதழ்களில் எழுதத் தொடங்கிய இவர் ஆனந்தவிகடனில் முத்திரைக் கதைகள் எழுதுகிற அளவுக்கு உயர்ந்தவர். அவை யனைத்துமே முத்திரைக்குத் தகுதி படைத்த முத்தான கதைகளே. அதற்காக, இவர் தம் பாணியையோ, கொள்கைகளையோ சற்றும் விட்டுக்கொடுத்தவர் அல்லர். மதுரைப்பக்கத்துக் கிராமப்புறப் பேச்சுவழக்குச் சொற்களை இவர் படைப்புகளில் ஏராளமாய்க் காணலாம்.

 

பொது உடமைத் தத்துவங்களால் இள வயதிலேயே ஈர்க்கப்பட்டு, சோவியத் ஒன்றியப் படைப்பாளிகளின் தமிழாக்கங்களை நிறையப் படித்துத் தம் மொழியறிவை ஆர்வத்துடன் மேம்படுத்திக்கொண்டவர்.

 

இவரை நேரில் சந்திக்க வாய்த்தது கல்கி பொன்விழாப் போட்டியின் பரிசளிப்பு விழாவின் போதுதான். இருவருக்குமே பரிசுகள் கிடைத்திருந்தன. எனக்கு வரலாற்று நாவலுக்காகவும், அவருக்குச் சமுதாய நாவலுக்காகவும். ஒருவரை யொருவர் பாராட்டிக்கொண்டோம் என்று சொல்லத் தேவையில்லை.

 

அதற்கு முன்னால் எனக்கு அவரைப்பற்றி முழுமைமாய்த் தெரியாது.  ஆனால் ஒரு பொது உடமை நாளிதழில் – தீக்கதிரா, ஜனசக்தியா என்பது நினைவில் இல்லை – அதற்குப் பல்லாண்டுகள் முன்னர் அமரர் சாவி  அவர்கள் நடத்திக்கொண்டிருந்த மாத நாவல் மோனாவில் வெளிவந்திருந்த எனது மன்மதனைத் தேடி எனும் நாவல் பற்றிய விமரிசனத்தை மேலாண்மை பொன்னுச்சாமி எழுதியிருந்தார். அதில், (பொது உடமையோடு சற்றும் தொடர்பு இல்லாதவரான) சாவியின் பாசறையிலிருந்து இப்படி ஒரு நாவலா! எனும் பொருள்படத் தலைப்பிட்டு எனது கதையை அவர் வியப்புடன் விமர்சித்திருந்தார். ஏனெனில் அக்கதையின் நாயகன் ஒரு பொது உடமைவாதி. அக்கதையின் சேதியாகப் பொது உடமைத் தத்துவம் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்நாவலைப் பாராட்டி விமர்சித்திருந்தது எனக்குத் தெரியாது. சில நாள் கழித்து ஒரு நண்பர் வாயிலாக அந்நாளிதழின் விமரிசன நறுக்கு எனக்கு வந்து சேர்ந்தது. அதன் பின் தான் என்னால் அவருக்கு நன்றி கூற முடிந்தது. அந்தத் தாமதத்தை அவர் பொருட்படுத்தவே இல்லை. பெருந்தன்மையுடன் மவுனம் காத்தார்.

 

பிறரைப் பாராட்டும் பெருங்குணம் எல்லாருக்கும் வந்துவிடுவதில்லை. மேலாண்மை பொன்னுச்சாமி சில விதிவிலக்குகளில் ஒருவராவார். அவர் இன்னும் சில ஆண்டுகளேனும் வாழ்ந்து மேலும் சாதித்திருந்திருக்கலாம். எனினும்  சாகித்திய ஆகாதெமி விருது, தமிழக அரசின் பரிசு, ஆதித்தனார் விருது போன்ற கவுரவங்களையேனும் இவர் பெற்றது பற்றியும் இவருக்கு உரிய அங்கீகாரம் இவர் வாணாளிலேயே கிடைத்தது பற்றியும் நாம் ஆறுதல் அடைய வேண்டியதுதான். வேறு என்ன செய்வது?

 

ஜோதிர்லதா கிரிஜா

Series Navigationதொடுவானம் 194. மனத்துக்குப் பிடித்த மருத்துவமனை.நறுமுகையும் முத்தரசியும்
author

ஜோதிர்லதா கிரிஜா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *