திருப்பத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையில் இரண்டாம் நாள். காலையிலேயே உற்சாகத்துடன் வேலைக்கு கிளம்பினேன். காலை தியானத்துக்கு ” காரம் டியோ ” சிற்றாலயம் சென்றேன். மருத்துவமனை ஊழியர்கள் , தாதியர்கள் , தாதியர் பயிற்சி மாணவிகள், மருத்துவர்கள் கூடியிருந்தனர். தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்லையா நற்செய்தி கூறி ஜெபம் செய்தார் காலையிலேயே அவ்வாறு இறைவனை வழிபடுவது மனதுக்கு எழுச்சியையும் சமாதானத்தையும் தந்தது.
அதன்பின்பு மருத்துவர்கள் அனைவரும் எக்ஸ்ரே அறையில் கூடினோம். அங்கு முன்தினம் எடுத்த எக்ஸ்ரே படங்களை கண்ணோட்டமிட்டோம். எக்ஸ்ரே பகுதியில் ஃராங்க்ளின் என்பவர் பணிபுரிந்தார். அவர் வாட்டச்சாட்டமாக ஒரு விளையாட்டு வீரர்போல் தென்பட்டார். அவர் டெனிஸ், வாலிபால் விளையாடுபவர் என்பது பின்பு தெரிந்தது. அவர் டீ வார்டில் பணிபுரியும் சிஸ்டர் பாலின் அவர்களின் தம்பி. அவர் ஒவ்வொரு படமாக எடுத்து ஒளி வீசும் பெட்டிமீது சொருகினார். அதை எடுக்கச் சொன்ன மருத்துவர் அந்த நோயாளி பற்றிய குறிப்பு தருவார். டாக்டர் செல்லையா அந்த எக்ஸ்ரே பற்றி விளக்கம் கூறுவார். அதை ஃராங்க்ளின் எழுதிக்கொள்வார்.இவ்வாறு செய்வதை ” எக்ஸ்ரே ரிப்போர்ட்டிங் ” என்கிறோம். இது அன்றாடம் சிற்றாலய வழிபாட்டுக்குப் பின் அங்கு நடைபெறும். அப்போது மருத்துவர்கள் அனைவரும் ஒன்று கூடுவோம். வேறு பிரச்னைகள் பற்றியும் அப்போது பேசலாம். அங்கு ஒரு நூலகமும் உள்ளது. அதில் மருத்துவ நூல்களும் சில வெளிநாட்டு மருத்துவ சஞ்சிகைகளும் உள்ளன.
டாகடர் பார்த்தும் நானும் ” வார்டு ரவுண்ட்ஸ் ” சென்றோம். இதை வார்டு வலம் என்று கூறலாம். டீ வார்டு, ஜி வார்டு, எல் வார்டு முடித்துக்கொண்டு தொழுநோயாளிகளுக்கு கட்டு போட்டோம். அன்று நானும் அதில் பங்கு கொண்டேன். காலில் அழுகிப்போன பகுதிகளை வெட்டி வீசிவிட்டு மருத்து தடவி கட்டு போடவேண்டும்.
வெளிநோயாளிப் பகுதியில் சுமார் இருபது பேர்களை அன்று பார்த்தேன். ஒரு சிலரை வார்டில் சேர்த்தேன். டாக்டர் பார்த் என்னை சுதந்திரமாக சிகிச்சை செய்ய விட்டுவிட்டார். அந்த வகையில் எனக்கு மகிழ்ச்சிதான். தெரியாதவற்றை மட்டும் அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். அப்படி இருந்தும் இரவில் மருத்துவ நூலை படித்து ஆராய்வது நல்லது. நூலகத்திலிருந்து நூல்களை எடுத்துக்கொள்ளலாம். தொடந்து படித்துக்கொண்டிருந்தால்தான் மருத்துவ ஞானம் வளரும்.
” தொட்டனைத் தூறு மனற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. ” என்னும் வள்ளுவரின் வாய்மொழி என்னைக் கவர்த்த குறள்.
அன்று வெளிநோயாளிகளைப் பார்த்து முடிந்தபின்பு பக்கத்தில் உள்ள ஆய்வுகூடம் ( Laboratory ) சென்றேன். அங்கு வரிசை வரிசையாக நுண்ணோக்கிகள் காணப்பட்டன. அவற்றில் ஒருசிலர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர்.. தடித்த உருவத்தில் அடைந்த மீசை கொண்ட ஒருவர் என்னை வரவேற்றார். அவர் தன்னை பிச்சை என்று அறிமுகம் செய்துகொண்டார். அவர் அங்கு மூத்த ” லேப் டெக்னீஷியன் “. என்றார். இதை மூத்த ஆய்வுகூட வல்லுநர் எனலாம். அங்கு பணிபுரிந்த மோகனதாஸ் , குமரேசன், ஜெகதீசன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் எளிமையாகவும் அன்பானவர்களாகவும் காணப்பட்டனர். பரிசோதனைக்கூடத்தின் ஒரு பகுதியில் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. அங்கு சென்று பார்த்தேன். குட்டையான ஒருவர் கருப்பு கோட்டுடன் காணப்பட்டார். அவர் ஆங்கிலத்தில் உரையாற்றிக்கொண்டிருந்தார். சுமார் பத்து மாணவர்கள் அமர்ந்து குறிப்புகள் எழுதிக்கொண்டிருந்தனர். அங்கு பரிசோதனை பயிற்சி வகுப்பு நடப்பதாக பிச்சை தெரிவித்தார். என்னைக் கண்ட அந்த விரிவுரையாளர் என்னிடம் வந்து கைகுலுக்கி தன்னை பாலசுந்தரம் என்று அறிமுகம் செய்துகொண்டார். அவர் அங்கு டியூட்டர். அங்கு நடக்கும் ஓராண்டு பயிற்சி முடிந்தபின்பு அந்த மாணவர்கள் பரிசோதனைக்கூட வல்லுநர்களாக ( Laboratory Technicians ) பணியாற்றலாம். அவர்கள் பெறும் சான்றிதழ் அகில இந்திய தகுதியுடையது. இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அவர்களுக்கு வேலை கிடைக்கும்.
அந்த ஆய்வுக்கூடத்தில் இரத்தம், சிறுநீர், மலம் சோதனைகள் செய்யப்படுமாம். அதோடு இரத்த வங்கியும் அங்கு உள்ளது. இரத்ததானம் செய்வோர் அங்கு வருவார்கள். அவர்களின் இரத்தம் சேமிக்கப்பட்டு வார்டில் உள்ள நோயாளிகளுக்கு தரப்படும். திருப்பத்தூரில் ஏராளமானவர்கள் இரத்ததானம் செய்கிறார்களாம். பிச்சைகூட தேவைப்படும்போதெல்லாம் இரத்த தானம் செய்வாராம்.
மதிய உணவை செல்லப்பா ஆலீசுடன் உண்டேன். அன்று கோழிக்கறி கமகமத்தது. ராணியின் சமையல் அபாரம்!
அன்று மாலை அலுவலகம் சென்றேன். பால்ராஜ் என்னை மலர்ந்த முகத்துடன் வரவேற்றார். அங்கு பணியில் இருந்த ரஞ்சன், தேவஇரக்கம் , எபனேசர், மார்ட்டின், விவேகானந்தன் ஆகியோரை அறிமுகம் செய்துவைத்தார். அவர்கள் இருக்கையிலிருந்து எழுந்து மரியாதை செய்தனர். அப்போது அலுவலகப் பணியாளர்களாக ஈஸ்டர் ராஜ், ஐசக் ஆகிய இருவரும் வந்து வணங்கி நின்றனர். ஈஸ்ட்டர் ராஜ் பருமனாகவும் உயரமானவராகவும் காணப்பட்டார். இவர் பிச்சையின் அண்ணன். ஐசக் வயதில் முதியவர். அவருடைய மனைவி நேசமணி வார்டு ஆயாவாக வேலை செய்கிறார்.
மாலை ஐந்து மணி ஆனதால் அலுவலகத்தைச் சாத்திவிட்டு வெளியேறினார்கள். அவர்கள் என்னிடம் விடைபெற்றனர். பால்ராஜ் மட்டும் நின்றுகொண்டிருந்தார். நாங்கள் உணவகம் சென்று காப்பி அருந்தினோம். அன்று அங்கு வாழைக்காய் பஜ்ஜியும் கிடைத்தது.
நாங்கள் ஈ வார்டு சென்றபோது செட்டி வார்டைக் கடந்தோம். அது இரண்டு பெரிய அறைகள் கொண்டது. அதில் கூடம், குளியல் அறை, சமையல் கட்டு ஆகியவை இருந்தன. செட்டியார்கள் அங்கு குடும்பத்துடன் வந்து தங்கி ஒருவருக்கு சிகிச்சைப் பார்ப்பார்களாம். அங்கு தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு கட்டணம் அதிகமாம்.
நாங்கள் இருவரும் ஈ வார்டுக்குள் சென்றோம். அந்த கட்டிடத்தின் முன்பக்கம் பெரிய பூந்தோட்டம் இருந்தது. சுற்றிலும் உயரமான கற்பூரத்தைலமரங்கள் நின்றன.. கட்டிடம் இரண்டு பெரிய அறைகள் கொண்டது. ஒவ்வொரு அறையிலும் பெரிய கூடமும், குளியல் அறையும் இருந்தன. அறைக்கு வெளியில் அகலமான வராந்தா இருந்தது. . அங்கு காற்று சிலுசிலுவென்று வீசியது. அப்போது அந்த இரண்டு அறைகளும் காலியாக இருந்தன.
மண் பாதையில் நடந்தோம். இடது பக்கம் தலைமை மருத்துவ அதிகாரியின் பங்களா. சற்று தொலைவில் இன்னொரு பங்களா. அதில் சிஸ்டர் சோஞ்சா பெர்சன் தங்கியுள்ளார் என்றார் பால்ராஜ். அவர் சுவீடன் நாட்டு மிஷனரி. அவர்தான் விழியிழந்தோர் பள்ளியின் நிர்வாகி. வலது பக்கம் இன்னொரு பங்களா இருந்தது. அது மிஷன் பங்களா. இங்கு வரும் சுவீடன் தேசத்து மிஷனரிகள் அங்கு தாங்குவார்களாம். அந்த பங்களா வழியாக மண் பாதையில் நடந்தோம். அங்கு Nursing School ( செவிலியர் பள்ளி ) என்று ஒரு கட்டிடத்தின்மேல் எழுதப்பட்.டிருந்தது. அதனுள் நுழைந்தோம். அங்கு ஒரு வகுப்பறையில் செவிலியர் மாணவிகள் அமர்ந்திருந்தனர். அப்போது அவர்கள் சீருடையில் இல்லை. அந்த இளம் பெண்கள் வண்ணவண்ண சேலைகளில் அழகாக .இருந்தனர். சிஸ்டர் லவணலீலா வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். அவர் நல்ல நிறத்தில் .இருந்தார். அவர் அங்கு டியூட்டர். வகுப்பு மனைவிகள் எழுந்து நின்று வணக்கம் சொன்னார்கள். என்னை வரவேற்ற லவணலீலா கூடிய சீக்கிரம் அந்த மாணவிகளுக்கு மருத்துவப் பாடம் எடுக்க அழைத்தார்.
அதன் பக்கத்து மாடிக் கட்டிடம் மாணவிகளின் விடுதி என்றார் பால்ராஜ். தாதியர் பயிற்சி இரண்டு வருடங்கள் கொண்டது.
இன்னொரு கட்டிடம் தனியாக இருந்தது. அதன் கீழ்ப் பகுதியில் அலுவலகமும் மேலே பள்ளியின் முதல்வர் பகீரதியின் இல்லமும் உள்ளன. பகீரதி முதிர்க் கன்னி.
தொடர்ந்து மண் பாதையில் நடந்து விழியிழந்தோர் பள்ளியை அடைந்தோம்.அது பெரிய வளாகம். பல குடியிருப்புகளைத் தாண்டி சென்றோம். அங்கே நீண்ட திறந்த வெளியின் எதிரே ஒரு நீளமான மாடிக் கட்டிடம் தெரிந்தது. அதில் ” விழியிழந்தோர் பள்ளி ” என்று எழுதப்பட்டிருந்தது.. அங்குதான் வகுப்பறைகள் இருந்தன. அந்த கட்டிடத்தின் வலப்புறத்தில் இன்னொரு நீண்ட கட்டிடம் காணப்பட்டது.அதில் வரிசையாக அறைகள் இருந்தன. அங்கு விழியிழந்த பெரியவர்கள் தங்கியிருந்தனர். அதன் எதிர்புறத்தில் இன்னொரு நீண்ட கட்டிடம் உணவுக்கூடம். அங்கு தரையில் நீண்ட வரிசையில் அமர்ந்து உணவு உண்பார்கள். அருகில் இன்னொரு கட்டிடத்தில் கைத்தறி நெசவுக்கூடம் இருந்தது. அங்கு பெரியவர்கள் படுக்கை விரிப்புகள், துவாலைகள், கைகுட்டைகள், தரை விரிப்புகள் உற்பத்தி செய்கிறார்கள். அவை சுவீடன், ஜெர்மனி நாடுகளுக்கு ஏற்றுமதி .செய்யப்படுகின்றதாம்.
அதை அடுத்து இன்னொரு தனி மாடிக்கட்டிடம் உள்ளது. அதன் பெயர் சிக்ஃபிரிட் இல்லம். அங்கு விழியிழந்த சிறுவர் சிறுமிகள் தங்கியுள்ளனர். அவர்களைப் பார்த்தபோது என் கண்கள் கலங்கின. ஒன்றும் அறியாத அந்த பிஞ்சுக் குழநதைகள் இந்த உலகைக் காணமுடியாத இருண்ட உலகில் வாழ்நாளைக் கழிக்கவேண்டும்!
அதன் எதிரே இன்னொரு கட்டிடத்தில் ஒரு சிற்றாலயம், உணவுக்கூடம், கைத்தறி விற்பனைக்கூடம் ஆகியவை உள்ளன.
அந்த பெரிய வளாகத்திலிருந்து வெளியேறி வலது பக்கமாகத் திரும்பி நடந்தோம். அங்கு ஓர் ஆலயம் இருந்தது. அதில் ” ஆரோக்கியநாதர் ஆலயம் ” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் அருகில் கல்லறைத் தோட்டமும் காணப்பட்டது. ஆலயம் பூட்டியிருந்தது. சபை குருவின் பெயர் மறைத்திரு பி.ஏ.ராஜன் என்றார் பால்ராஜ். இவ்வளவு பெரிய வளாகத்துக்கு அந்த ஆலயம் சிறியதாக எனக்குத் தோன்றியது.
இருட்டிவிட்டதால் நாங்கள் திரும்பினோம். அந்த நேர் மண் வீதியிலிருந்து பார்த்தபோது தொலைவில் மருத்துவமனையின் நுழைவாயில் மங்கலாகத் தெரிந்தது.
( தொடுவானம் தொடரும் )
- கிழக்கிலங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி ‘செங்கதிரோன்’ கோபாலகிருஸ்ணன்
- பூமியின் ஓசோன் குடைக்குப் புதிய ஆபத்து ! கடல் மட்ட உயர்வு ! கடல் வெப்ப ஏற்றம் ! சூட்டு யுகப் பிரளயம் !
- என் விழி மூலம் நீ நோக்கு !
- அவுஸ்திரேலியா மெல்பனில் இலக்கியச்சந்திப்பு – வாசிப்பு அனுபவப்பகிர்வு
- மருத்துவக் கட்டுரை வயிற்றுப்போக்கு
- திண்ணைவீடு
- நண்பன்
- நூல் வெளியீடு : சுப்ரபாரதிமணியனின் புதியநாவல் ” கடவுச்சீட்டு “
- பார்க்க முடியாத தெய்வத்தை…
- மனவானின் கரும்புள்ளிகள்
- தொடுவானம் 195. இன்ப உலா