மருத்துவக் கட்டுரை வயிற்றுப்போக்கு

This entry is part 5 of 11 in the series 12 நவம்பர் 2017
           தற்போது தமிழகத்தில் தொடர் மழையும் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதும், சில பகுதிகளில் வெள்ளம் உண்டாவதையும்  காண்கிறோம். இதுபோன்ற சூழலில் குடிநீரில் கழிவு நீர் கலக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால் உண்டாகும் நோய்களில் வயிற்றுப்போக்கு முதலிடம் பெறுகிறது. வயிற்றுப்போக்கு சாதாரண நோயாகத் தோன்றினாலும் அதை முறையாக கவனிக்காவிடில் உயிருக்கே ஆபத்தாகலாம்! குறிப்பாக குழந்தைகளுக்கு இது ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற்றாகவேண்டும்.

வயிற்றிலும் குடலிலும் உண்டாகும் தொற்றில் மிகவும் அதிகமானது வயிற்றுப்போக்குதான். வளர்ந்துவரும் நாடுகளில் குழந்தைகளுக்கு ஒரு வருடத்தில் மூன்று முதல் ஆறு தடவையாவது வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்படலாம்.

உலகில் ஒரு வருடத்தில் வயிற்றுப்போக்கு வியாதியால் 2.25 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர். மேற்கத்திய நாடுகளில் இது குறைவு என்றாலும் பின்தங்கிய நாடுகளிலும், வளர்ந்துவரும் நாடுகளிலும் இது மிக முக்கியமான மருத்துவப் பிரச்னை எனலாம்.இங்கு குழந்தைகளும் வயதானவர்களும் அதிகமாக பலியாகின்றனர்.

குழந்தைகளுக்கும் சிறு பிள்ளைகளுக்கும் பெரும்பாலும் வைரஸ் கிருமிகளால் தொற்று உண்டாகிறது. முதியோருக்கு அதிகமாக் பேக்டீரியா கிருமிகளால் தொற்று உண்டாகிறது. இந்த இரண்டு வகையான கிருமித் தொற்றும் உணவின் வழியாகவும் குடிக்கும் நீரின் வழியாகவும் இரைப்பைக்குள் சென்று அங்கும் சிறுகுடலிலும் நச்சுத் தன்மையை உண்டுபண்ணுகின்றன.

பேக்டீரியா நோய்க் கிருமிகள்  3 விதமான வகையில் வயிற்றுப்போக்கை உண்டுபண்ணுகின்றன. அவை வருமாறு:

* இரைப்பைச் சுவர்களில் ஒட்டிக்கொள்வது – Mucosal  adherence

ஈ கோலி ( E..Coli ) எனும் கொடிய பேக்டீரியா இவ்வாறு செய்யும்போது வயிறு குடல் சுவர்களில் புண் உண்டாக்கலாம்.அதன் மூலமாக நீரை வெளியேற்றி கடுமையான வயிற்றுப்போக்கை உண்டுபண்ணும்து.

* இரைப்பை குடல் சுவர்களைத் தாக்குதல்- ( Mucosa lInvasion )

ஷிகல்லா ( Shigella ) போன்ற பேக்டீரியா வகைகள் சுவர்களைனுள் புகுந்து புண் உண்டாக்கி இரத்தம் கலந்த வயிற்றுப்போக்கு உண்டுபண்ணவல்லது.

*  நஞ்சு சுரத்தல் ( Toxin Production ) குடலுக்குள் புகும் பேக்டீரியா கிருமிகள் சில நச்சு வகைகளை சுரந்து அதன் மூலம் வயிற்றுப்போக்கை உண்டுபண்ணும். அவை 3 வகையானவை.

           1. உள் நஞ்சு ( Enterotoxin ) இது குடலினுள் நிறைய நீரை சுரக்கச் செய்து வெளியேற்றும்.குடல் சுவர்கள் பாதிக்கப்படுவதில்லை.
           2. நரம்பு நஞ்சு ( Neurotoxin ) இந்த வகையான நஞ்சு குடல்களின் நரம்புகளைத் தாக்குவதால் குடல்கள் நீரை வெளியேறுவதை கட்டுப்படுத்த முடியாமல் வயிற்றுப்போக்கும் வாந்தியும் உண்டாகும்.
          3. திசு நஞ்சு ( Cytotoxin ) இது குடலின் சுவர்கலினுள் புகுந்து அங்குள்ள திசுக்களைத் தாக்கி வயிற்றுப்போக்கை உண்டுபண்ணும்.
          இவ்வாறு கிருமிகளாலும் அவை வெளியேற்றும் நஞ்சாலும் உண்டாகும் வயிற்றுப்போக்கு வெறும் நீராகவும் அல்லது சீதம் இரத்தம் கலந்ததாகவும் வெளியேறலாம்.

          பல்வேறு விதமான நோய்க் கிருமிகள் இதை உண்டுபண்ணுவதால் அந்தந்த கிருமி வகைக்கு ஏற்ப அறிகுறிகள் மாறலாம். ஆனால் பொதுவாக அனைத்து கிருமித் தொற்றிலும் வயிற்றுப்போக்கு அல்லது சீதபேதி,வாந்தி, வயிற்று வலி ஏற்படும். ஒரு சிலவற்றில் காய்ச்சல்கூட வரலாம்.

                                                                                                         பரிசோதனை.

             பொதுவான மலப் பரிசோதனை போதுமானது.எந்த வகையான கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய கல்ச்சர் ( Stool Culture )பரிசோதனை செய்து பார்க்கலாம்.

                                                                                                              சிகிச்சை முறை.

          பெரும்பாலான வயிற்றுப் போக்கு தானாக நிற்க வல்லது. வயிற்றுப்போக்கில் நிறைய நீர் இழந்துபோகிறது. அந்த நீரை மீண்டும் உடலுக்குள் செலுத்துவதே சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும். இதற்கு வாய் வழியாகவோ அல்லது இரத்தக் குழாய் வழியாகவோ நீர் தரப்படும். இதை நீரை திரும்பத் தரும்  ( Rehydration Therapy ) என்று அழைக்கிறோம், குடல் துரிதமாகச் செயல்படுவதைக் குறைக்க லோமொட்டில் ( Lomotil ) மாத்திரை உட்கொள்ளலாம். வயிற்று வலிக்கு பஸ்கோபான் ( Buscopan ) மாத்திரை உட்கொள்ளலாம். தேவைபட்டால் ப்லெஜில் ( Flagyl ) எண்டிபையாட்டிக் மாத்திரை எடுக்கலாம்.

                                                                                                              தடுப்பு முறைகள்

           வயிற்றுப்போக்கு நோய்க் கிருமிகளால் உண்டாகிறது. இந்தக் கிருமிகள் உணவு வழியாகவும், பருகும் நீர்,நீர் ஆகாரங்கள் போன்றவற்றைப் பருகுவதால் இரைப்பையிலும் குடலிலும் புகுந்து பாதிப்பை உண்டாக்குகின்றன. ஆகவே நம்முடைய உணவு உண்ணும் பழக்கம் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக இதுபோன்ற மழைக் காலங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பருகவேண்டும். அப்படி இல்லையேல்  நன்றாக கொதிக்கவைத்த நீரைப் பருகலாம்.
          நாம் செல்லும் உணவகங்களும் அங்காடிகளும் சுத்தமாக சுகாதாரமான முறையில் உள்ளதா என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.சில உணவகங்களில் உணவுகள் தயாரிக்கும் இடத்திலேயே கழிவறைகளும் சுகாதார சீர்கேடான நிலையில் காணலாம். ஈக்களும், கரப்பான் பூச்சிகளும், எலிகளும் நிறைந்துள்ள உணவகங்கள்கூட  உள்ளன. சாக்கடை நாற்றச் சூழலில் உள்ள உணவகங்களும் உள்ளன. சுகாதாரம் பற்றிய உணர்வே இல்லாதவர்கள் உணவு தயாரிப்பதும் பரிமாறுவதும் பல உணவகங்களில் வாடிக்கையாகவே உள்ளன. மேசையையும் துடைத்துக்கொண்டு, கைகளைக் கழுவாமல் அதே கைகளால் பரோட்டா மாவைப் பிசைந்து ரொட்டி சுடுவதை நாம் கண்கூடாக காணலாம். உணவு தயாரிப்பவர்கள் கைகளைக் கழுவுவதில்லை. உண்ணும் தட்டுகள்,கரண்டிகள் தம்ளர்கள் முறையாக கழுவப்படுகின்றனவா  என்பதுகூட சந்தேக்கிக்க வேண்டிய உணவகங்களும் உள்ளன.

          இதுபோன்ற சுகாதார சீர்கேடான உணவகங்களில் உணவு உட்கொள்வது எப்போதுமே ஆபத்துதான். அங்கு நோய்க் கிருமிகள் எல்லா வகைகளிலும் பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே கூடுமானவரை இத்தகைய சுகாதாரமற்ற உணவகங்களைத் தவிர்ப்பதே நல்லது. சுத்தமே சுகம் தரும் என்பது வயிறுப்போக்கைப் பொருத்தவரை நூற்றுக்கு நூறு உண்மை.

          ( முடிந்தது )
Series Navigationஅவுஸ்திரேலியா மெல்பனில் இலக்கியச்சந்திப்பு – வாசிப்பு அனுபவப்பகிர்வுதிண்ணைவீடு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *