தொடுவானம் 196. மனிதாபிமான தொழுநோய் சேவை

This entry is part 11 of 14 in the series 19 நவம்பர் 2017

 SMH Old

          டாக்டர் ராமசாமியின் பக்கத்துக்கு வீடு எனக்கு தரப்பட்டது. அது ஒரே கட்டிடத்தில் அமைந்துள்ள இரட்டை வீடுகளில் ஒன்றாகும். காலையிலேயே பணியாளர்கள் வீட்டைக் கழுவி சுத்தம் செய்தனர். அவர்களுடைய பெயரைக் கேட்டேன். அவர்கள் ஆமோஸ் என்னும் இளைஞனும் அவனுடைய மனைவி எலிசபெத் என்பவரும் ஆவார்கள்..நான் வேலைக்குச் சென்று மதியம் திரும்பியபோது வீட்டுச் சாவியை என்னிடம் தந்துவிட்டனர். நான் அவர்களுக்கு ஐந்து ருபாய் தந்தேன். அதை அவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். மாலை வேலை முடிந்ததும் நான் அதில் குடியேறிவிடலாம். அதோடு பால்ராஜை அழைத்துக்கொண்டு திருப்பத்தூர் டவுனுக்குச் சென்று தேவையான சில பொருட்களை வாங்கி வரலாம்.
          அன்று காலையில் வழக்கம்போல் சிற்றாலயத்தில் தியானம், எக்ஸ்ரே ரிவியூ, வார்டுகள் ரவுண்ட்ஸ், தொழுநோய்ப் பிரிவு , வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை என முடிய பனிரெண்டரை ஆகிவிட்டது. மதிய உணவுக்கு டாக்டர் செல்லப்பா இல்லம் சென்றேன்.அதன்பின்பு புதிய வீடு சென்று திறந்து பார்த்தேன். ஒரு வரவேற்பறை,  ஒரு படுக்கை அறை , குளியல் அறை, உணவுக்  கூடம், சமையல் அறை ஆகியவை கீழ் தளத்தில் இருந்தன. மாடியில் நீண்ட கூடம் மட்டும் இருந்தது. அதன் வெளியில்  ஒரு நீண்ட வராந்தாவும் இருந்தது. அதன் அருகில் நெடிது வளர்ந்த வெப்பமரங்களும் நின்றன.. நல்ல நிழலும், காற்றும் கிடைத்தது. அந்த வராந்தா எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அங்கு அமர்ந்து எழுதினால் கற்பனை ஊற்றெடுக்கும்.
          படுக்கை அறையில் இரண்டு கட்டில்களில் மெத்தைகள் போடப்பட்டிருந்தன. தலையணைகளும் இருந்தன. இரண்டு போர்வைகளும் வைக்கப்பட்டிருந்தன. கூடத்தில் நாற்காலிகள் இருந்தன. உணவு உண்ண பெரிய மேசையும் நாற்காலிகளும் இருந்தன.சமையல் அறையில் அதிக `சாமான்கள் இல்லை. அடுப்பு, சமையல் பாத்திரங்கள், வாளி போன்ற இதர சாமான்களை மனைவியுடன் சென்று வாங்கலாம். அவள் இங்கு வந்தவுடன் சமையல் ஆரம்பிக்கலாம். அதுவரை செல்லப்பா வீட்டிலேயே சாப்பிடலாம். அங்கு ராணி இருப்பதால் சமைப்பதற்கு சிரமம் இருக்காது. ஒரு அடுக்குச் சட்டி வாங்கிவிட்டால் கேண்டீனிலிருந்து உணவு வாங்கிக்கொள்ளலாம். டாக்டர் ராமசாமிக்கு அப்படிதான் உணவு வருகிறது.
          அன்று மாலையில் நான் தொழுநோய் பிரிவில் வெளிநோயாளிகளைப் பார்த்தேன். அது ஃபிசியோதெராப்பி கட்டிடத்தில் ஒரு ஓரத்தில் இருந்தது. சுமார் முப்பது தொழுநோயாளிகள் அங்கு இரண்டு மணிக்கு வந்து காத்திருந்தனர். அவர்களில் பலருக்கு முகம், கை, கால்களில்  அங்ககீனம் காணப்பட்டது. சிலர் விகாரமாகத் தோன்றினார். எனக்கு உதவியவர் குழந்தைசாமி. அவர் குள்ளமாக சிறிய உருவம் கொண்டவர். மூக்குக்கண்ணாடி அணிந்திருந்தார். அவர் ஒவ்வொருவராக பெயர் சொல்லி அழைத்தார். நான் நோயாளியைப் பார்த்தபின்பு ஒரு மாதத்திற்கு டேப்சோன் மாத்திரை எழுதித் தந்தேன். காலில் மோசமான புண் இருந்தால் அவர்களை வார்டில் சேர்க்கவேண்டும். ஆனால் அங்கு அவர்களுக்கு படுக்கை காலியாக இருக்கவேண்டும். பெரும்பாலும் புண்கள் ஆறி வீடு திரும்ப பல நாட்கள் ஆகும். அதனால் வார்டில் படுக்கை கிடைப்பது சற்று சிரமம்.
          இங்கு தொழுநோய் சிகிச்சை முறையாக நடக்கிறது. இதை மத்திய அரசின் SET  திட்டம் என்றனர். S என்பது Survey. E என்பது Education. T என்பது Treatment. இதைக் கள ஆய்வு, கல்வி, சிகிச்சை என்று கூறலாம். இத் திட்டத்தைச் செயற்படுத்த ஒரு மருத்துவர், ஒரு வாகனம், ஓட்டுநர்,  நான்கு கலப்பணியாளர்கள் உள்ளனர். இவர்களை Leprosy Paramedical Workers என்கிறோம். இவர்கள் வேலூரை அடுத்த கரிகிரியில் தொழுநோய் பயிற்சி பெற்றவர்கள். அந்த பயிற்சி மத்திய அரசால்  அங்கீகரிக்கப்பட்டது  ஞானப்பிரகாசம்,  ஜெயபாலன், குழந்தைசாமி, கிறிஸ்டினாள் சாரதாஆகியோர் அந்த நால்வர்.  கண்ணுசாமி, மைக்கல்  என்பவர்கள்  ஃசியோதெராப்பிஸ்ட் .இவர்களை உடல் பிடிப்புப்  பண்டுவர்  எனலாம்.அவர்கள்  உள்நோயாளிகளுக்கு அந்த கட்டிடத்தில் பயிற்சிகள் தருபவர்கள். டேனியேல் Occupational Therapist. இதை தொழில் வாய்ப்புப் பண்டுவர் என்று கூறலாம். இவர்கள்  தவிர தொழுநோயாளிகளுக்கு நுண் செல் (  Microcellullar Rubber ) காலணிகள் தயாரிக்க ஒரு செருப்பு தைக்கும் கட்டிடமும் உள்ளது. அங்கு முருகானந்தம் என்பவரும் கோவில்பிள்ளை என்பவரும் பணிபுரிகின்றனர். இந்த மத்திய அரசின் திட்டத்துக்கு மானியம் கிடைக்கிறது. அது ஒரு கணிசமான தொகைதான்.
         தமிழகத்தில் சில மாவட்ட்ங்களில் தொழுநோயாளிகள் அதிகம் இருந்தனர். அதில் குறிப்பாக வட  ஆற்காடு, தென் ஆற்காடு, பசும்பொன் மாவட்டங்களில் மிகவும் அதிகம். இங்கே ஒவ்வொரு ஆயிரம் பேர்களிலும் பதினேழு தொழுநோயாளிகள் இருந்தனர். இதை ஓரிட நோய் ( Endemic ) என்போம். எங்களின் குறிக்கோள் இதை ஆயிரம் பேர்களில் ஐந்து பேர்களாக அல்லது அதற்குக் குறைவாகக் கொண்டுவருவதாகும்.  இதற்கு போர்க்கால முறையில் அதிரடி திட்டம் செயல்படவேண்டும். அதுவே இந்த SET திட்டம். திருப்பத்தூரைச் சுற்றியுள்ள சிங்கம்புணரி, வி.புதூர் , பொன்னமராவதி , குன்றக்குடி, கல்லல் , திருக்கோஷ்டியூர் , எரியூர், சிறுகூடல்பட்டி, எஸ்.எஸ்,கோட்டை, முறையூர், எஸ்.வி.மங்களம்.ஆகிய கிராமங்களைப் ஜனத்தொகை அடிப்படையில் பிரித்து ஒவ்வொரு களப்பணியாளரிடமும் தரப்படும். அவர்கள் அந்தப் பகுதியில் வாழும் மக்களின் வீடுகளுக்குச்  சென்று அங்கேயே பரிசோதனை செய்யவேண்டும். தொழுநோய் அறிகுறிகள் உள்ளவர்களை உடன் மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும். அங்கு மருத்துவர் பரிசோதித்து அது தொழுநோய்த்தான் என்று நிச்சயம் செய்தபின்பு அவர்களுக்கு மாதந்தோறும் கூட்டு மாத்திரை சிகிச்சை  இரண்டு வருடங்கள் தரப்படும். அவர்கள் ஒழுங்காக  மாத்திரை சாப்பிடுகிறீர்களா என்பதைக் கண்காணிப்பது அந்த களப்பணியாளரின் கடமை. இந்த இரண்டு வருட சிகிச்சை தொற்றாத வகை தொழுநோயாளிகளுக்குத் தரப்படும். ஒருசிலருக்கு தொற்றும் வகை உள்ளதென்று மருத்துவர் நிர்ணயம் செய்தால் அவர்களுக்கு கூட்டு மாத்திரை சிகிச்சை மூலம் மூன்று வருடங்கள் மாத்திரைகள்  உட்கொள்ள வேண்டும்.
          தொழுநோயால் பாதிக்கப்படடவர்கள் பெரும்பாலும் ஏழை எளிய கிராம மக்கள். சிலருக்கு கை கால்களில் முடக்கம், கால்களில்  ஆறாத ஆழமான புண்கள் உள்ளதால் அங்கயீனம் உள்ளவர்களாகக் காணப்படுவார்கள். சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப்பட்டவர்களாகவும் இருப்பார்கள். வேலை செய்ய இயலாதவர்கள். இவர்கள் மருத்துவமனை தேடி திருப்பத்தூருக்கு வருவது சிரமம். அதனால் நாங்களே அவர்களின் ஊர்களுக்குச்  சென்று இலவசமாக மாத்திரைகள் விநியோகிக்கிறோம்.
         இதற்கு வீதியோர மருத்துவ சிகிச்சை  ( Road Side Clinic ) என்று பெயர். குறிப்பிட்ட  நாட்களில் அந்தந்த ஊர்களில் மருத்துவ வாகனம் ஒரு மரத்தடியில் அரை மணி நேரம் நிற்கும். அப்போது அந்த ஊரிலுள்ள தொழுநோயாளிகள் அங்கு காத்திருப்பார்கள். அவர்களுக்கு ஒரு மாத மருந்துகள் தரப்படும். அதன்பின் அடுத்த ஊருக்குச் செல்வார்கள்.அதுபோன்று சுமார் பத்து பதினைந்து இடங்களில் நின்று மருந்து தந்துவிட்டு திரும்புவாகள். அப்படி வராதவர்களை அடுத்த சில நாட்களில் அவர்களின் இல்லம் தேடித் சென்று மறுத்து தரவேண்டும். இப்படி செய்து திருப்பத்தூரின் சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திலும் உள்ள தொழுநோயாளிகள் பராமரிக்கப்படுவார்கள். இதுபோன்று இரண்டு வருடங்கள் தொடர்ந்து மருந்து தந்தால் அந்த நோயாளிகள் நோயிலிருந்து விடுபடுவார்கள்.தொற்றும் வகையினருக்கு மூன்று வருடம் மருந்து தருவோம்.
          தொழுநோய்ப் பிரிவில் பணிபுரிவது எனக்கு மிகவும் பிடித்தது. இதுவே உண்மையான மனிதாபிமானச் சேவை என்பதை நான் திண்ணமாக நம்பினேன்.
          அன்று மாலையில் நான் பால்ராஜை அழைத்துக்கொண்டு திருப்பத்தூர் டவுனுக்குச் சென்றேன். அது சிறிய ஊர்தான். நாங்கள் மருத்துவமனை வாயிலிருந்து வெளியேறி இடது பக்கம் இருந்த ஒரு சந்து வழியாக சிறிது தூரம் நடந்தோம்..  எதிரில்  மெயின் பசார் வீதி தெரிந்தது. அதில் திரும்பி நடந்தோம். அங்கு சிவப்பு தலைப்பா பலசரக்கு கடை இருந்தது. அதுதான் அங்கு பிரபலமாம். அங்கு சில சாமான்கள் வாங்கினோம். தலையில் சிவப்பு தலைப்பாகை அணிந்திருந்த அதன் உரிமையாளரிடம் என்னை அறிமுகம் செய்தார் பால்ராஜ். அதையடுத்து மாதவன் உணவகம் உள்ளது. அங்கு சுவையான உணவு கிடைக்குமாம். அந்த பிரதான வீதியின்  இருமருங்கிலும் பல்வேறு கடைகள் இருந்தன. வேறு சில சாமான்களும் வாங்கினோம். அந்த வீதியின் முச்சந்தியில் ஒரு மருந்து கடை இருந்தது. அதில் ” முத்து மெடிக்கல்ஸ் ” என்ற பெயர்ப்பலகை இருந்தது. அதன் உரிமையாளர் ஓர் இளைஞர். அவரை அத்தா என்று அறிமுகம் செய்தார் பால்ராஜ். அது என்ன அத்தா என்று கேட்டேன்.அந்த இளைஞர் முத்து முகம்மது என்றார். . அத்தா என்பது செல்லப் பெயராம்.அவரிடமிருந்து மருத்துவமனைக்கு சில மருந்துகள் வாங்குவார்களாம். பாலராஜுக்கு நல்ல நண்பராம். எங்களை அங்கு அமரச் சொல்லி குளிர் பானம் வரவழைத்துத் தந்தார். என்னுடைய முழுப் பெயரையும் அப்போது எழுதிக்கொண்டார். என் பெயரில் மருத்து எழுதும் சீட்டுகள் அச்சடித்துத் தருவாராம்.
          அந்த முச்சந்தி எதிரில் ராஜாக்கிளி  அசைவ உணவகம் இருந்தது. அங்கு கொத்து பரோட்டா சுவையுமாக இருக்குமாம்.  அங்குதான் பேருந்து நிலையமும் உள்ளது. அந்தப் பகுதியில் ஒரு  பெரிய பழக்கடை  இருந்தது. அதன் உரிமையாளரையும் பால்ராஜ் எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவரும் இஸ்லாமியர்தான்.பெயர் கனி சாகிப். அவர் திருப்பத்தூரில் புகழ்பெற்ற பாபா சாகிப் என்பவரின் பேரனாம். சில பூக்கடைகளும் வேறு சில ஓட்டுக்கடைகளும் இருந்தன. பாலராஜுக்கு அனைவரும் பழக்கம்போல் தெரிந்தது. மருத்துவமனை ஊழியர்களை அங்குள்ள  கடைகளில் தெரிந்திருந்தது. அங்குதான் திருப்பத்தூர் மார்க்கெட்டும் உள்ளது. அங்கு காய்கறிகள், மீன், கோழி முதலியவை கிடைக்கும்.
          மதுரை செல்லும் திருவள்ளுவர் துரித பேருந்து நின்றுகொண்டிருந்தது. பேருந்தின் எதிரிலேயே திருப்பத்தூர் காவல் நிலையம். அதன் அருகிலிருந்த புளிய மரத்தில்தான் மருதுபாண்டிய சகோதரர்களை வெள்ளையர்கள் தூக்கிலிட்டார்களாம்.
          காவல் நிலையம்  எதிரில் சில ஆட்டோ ரிக்க்ஷாக்களும் ஒருசில வாடகை ஊர்திகளும் நின்றன.
          ராஜாக்கிளி  உணவகத்தில் கொத்து பரோட்டா உண்டோம். கடை முதலாளியிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார் பால்ராஜ். சாமான்களை ஒரு வாடகை ஊர்தியில் வைத்துக்கொண்டு மருத்துவமனை திரும்பினோம். என்னுடைய புதிய வீட்டைத் திறந்து சாமான்களைப்  பத்திரப்படுத்தினோம். வார இறுதியில் தெம்மூர் சென்று மனைவியை அழைத்து வந்துவிடலாம்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigation“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்புஉங்கள் எண் என்ன? – தமிழில் முதல் கணிதப்புனைவு நாவல்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *