மொழிவது சுகம் டிசம்பர் 16 2017 டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை

This entry is part 2 of 20 in the series 17 டிசம்பர் 2017

நாகரத்தினம் கிருஷ்ணா

அ. டாக்டர் ஜேகில் (Dr.Jekyill) முதல் தஷ்வந்த் வரை

நீதிமன்றத்தில் காவல் துறையினர் முன் நிறுத்தமுயன்ற தஷ்வந்த் என்ற இளைஞன் மீது மாதர் சங்கம் நடத்தியதாகச் செய்தி. தாக்குதல் நடத்திய மனிதர்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் இதுபோன்ற தாக்குதல்கள் நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது.
தஷ்வந்த் பிரச்சினைக்கு வருவோம். ஆறுவயது சிறுமியைப் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றதற்குத் தண்டிக்கபட வேண்டியவன் என்ற அடிப்படையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகிறான். அவன் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தின் பிரயோகம் தவறானது எனக்கருதி குற்றவாளியை நீதிமன்றம் விடுவிக்கிறது. விடுவிக்கபட்டக் குறுகிய காலத்தில் தாயைக் கொலை செய்கிறான்.
ஆறுவயது சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்துகிறான் எனில் அவன் நிச்சயம் மனநிலைப் பாதிக்கப்பட்டவன். கைது செய்தபின்னரோ அல்லது அவனை விடுவிக்கிறபோதோ, மனநோய் மருத்துவர்களின் ஆளோசனையைக் கேட்டுப்பெற்றிருக்க வேண்டும். சாதாரணக் குற்றவாளிபோலக் கருதி அவனை ஜாமீனில் விடுவித்தது அடுத்து நேர்ந்த விபரீதத்திற்குக் காரணமாகிறது. பல கொலைகள் செய்தவர்கள், காவல் துறையினரிடம் குற்றத்தை நிரூபிக்க உரிய ஆதாரங்கள் இருப்பினும் ஜாமீனில் வெளிவருவதும், செய்த கொலைக்குப் பழிவாங்கலாக நீதிமன்ற வாசலில் அவர்களே கொலையுறுவதும் நாம் அடிக்கடி வாசிக்கும் செய்தி. இது நீதித்துறைகளில் உள்ள ஓட்டை.
அண்மையில் இவான் ழபோன்கா (Ivan Jablonka) என்ற பிரெஞ்சு எழுத்தாளர் எழுதி வெளிவந்துள்ள நாவல் ‘லெத்திசீயா அல்லது மனிதர்கள் முடிவு’ (Laettitia ou la fin des hommes) . உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் புலன் விசாரணைச் செய்து எழுதபட்ட இந்நாவலில் இளம்பெண் லெத்திசீயா பாலியல் வன்முறைக்கு ஆளாகி கொலைசெய்யப்படுகிறாள். ட்ரூமன் கப்போட் என்ற அமெரிக்க எழுத்தாளர் In Cold Blood என்ற பெயரில் எழுதிய நாவலின் பாதையைப் பின்பற்றிய எழுத்து. (திண்ணை இணைய இதழில் பல வருடங்களுக்கு முன்பு எழுதியக் கட்டுரையை வாசிக்க: http://old.thinnai.com/?p=60812041)
லெத்திசீயா அவளுடைய சகோதரி ஜெசிக்கா இருவரும் இளம்வயதில் குடிகாரத் தந்தை, மன நிலைப் பாதிக்கப்பட்ட தாய் என்ற நெருக்கடியான சூழலில் வளர்கிறார்கள். பின்னர் பிரச்சினை பிரெஞ்சு அரசின் சமூக நலத்துறை கவனத்திற்கு வருகிறது. பெற்றோர் சரியில்லை என்று கருதி இரு சிறுமிகளையும் வளர்க்கும் பொறுப்பு வேறொரு குடும்பத்திடம் ஒப்படைக்கப் படுகிறது. பிரான்சு அரசாங்கத்தின் ஆதரவற்ற பிள்ளைகளுக்கான உதவித் தொகை மற்றும் வளர்ப்புக் கட்டணம் ஆகியவற்றால் இது சாத்தியம். பத்ரோன் என்ற குடும்பத்தில் பெண்கள் இருவரும்(இரட்டையர்கள்) வளர்கிறார்கள். இப்படிப் பல குழந்தைகளைப் பருவ வயதுவரை வளர்த்து பின்னர் அரசாங்கத்தின் சம்மதத்துடன் அவர்களுடைய வாழ்க்கையைத் தொடர அனுமதிக்கும் குடும்பம். இச் சூழலில்தான் லெத்தீசியா நிரந்தரப் பாலியல் குற்றவாளி ஒருவனால் கொலைசெய்யப்படுகிறாள். பிரச்சினை அரசியல் ஆகிறது. அப்போதைய பிரான்சு அதிபர் நிக்கோலா சர்க்கோசி, லெத்திசீயாவை கொலைசெய்தவன் நிரந்தர குற்றவாளி என்கிறபோது, எப்படி நீதிபதி அவனை வெளியில் அனுமதித்தார் என்ற கேள்வியை வைக்கிறார். இனி இதுபோன்ற குற்றவாளிகள் எளிதில் வெளியில் நடமாடாதவாறு சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்போவதாக வாக்குறுதி தருகிறார். தாமதமாகத் தெரியவரும் செய்தி லெத்திசீயா அவள் சகோதரி ஜெசிக்கா ஆகியோரின் வளர்ப்புத்தந்தையும் பல பெண்களைப் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினார் என்று குற்றச்சாட்டு. குற்றம் சாட்டியவர்களில் கொலையுண்ட லெத்தீசியா சகோதரி ஜெசிகாவும் ஒருத்தி, விளைவாக அவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.
நாவல் ஆசிரியர் கொலையுண்ட லெத்தீசியா அவளுடைய பெற்றோர்கள், வளர்ப்புத் தந்தை தாய், கொலையாளியின் பூர்வீகம், கொலையாளியாக ஏன் மாறினான் ஆகியப் புலன் விசாரணைத் தகவல்கள், ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள், குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே ஊடகங்கள் சம்பந்தப்பட்டவனைக் குற்றவாளியாகச் சித்தரித்து வழங்குகின்ற நீதி என்று சமூக உளவியல் பிரச்சினைகளைத் தொட்டிருக்கிறார். இந்நாவலை பற்றி எழுகிறபோது இன்று பிரான்சு நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு வெகு சனத்தின் கவனத்தை பெற்றுள்ளதையும் சொல்லவேண்டும்.
குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் ஒரு நகரத்தின் மேயரும், அதே நகரசபையில் கலைப் பண்பாட்டுதுறை பொறுப்பைக் கவனித்த பெண்மணியும். வைக்கப்படும் குற்றச்சாட்டு, இவர்கள் கீழ் பணிபுரிந்த பெண்களைப் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தினார்கள் என்பதாகும். சில நாட்களுக்கு முன்பு இவ்வழக்கினை விசாரிக்கும் நீதிபதி, ஒரு பெண் நீதிபதியாக அமர்ந்து விசாரிக்க வேண்டிய வழக்கு என சமூக ஊடகத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார். அவ்வாறே சில ஊடகங்கள் இவ்வழக்கு பற்றிய புலன் விசாரனையில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சிலத் தகவல்களை வைத்திருந்தன. இந்நிலையில் நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் வழக்கு நடு நிலையுடன் இருக்குமா என்ற கேள்வியை எழுப்பினார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றைய தேதியில் குற்றவாளிகள் இல்லை. இரு தரப்பு வாதங்கள், சாட்சிகள் அடிப்படையில்தான் குற்றவாளியா இல்லையா எனத் தீர்மானிக்க முடியும். ஆனால் இன்று பல நேரங்களில் பல ஊடகங்கள் மக்களின் உணர்ச்சிக்குத் தீனிபோட எதையாவது வெளியிட்டு பரபரப்பூட்டவேண்டும் என்ற நோக்கில் செயல்படுவதும். நீதிமன்றத் தீர்ப்பிற்கு முன்பாகவே ஊடகங்கள் தீர்ப்பளிப்பதும் கண்கூடு.
இந்த நேரத்தில் ஆர் எல் ஸ்டீவன்சனின் டாக்டர் ஜேகில் மற்றும் திருவாளர் ஹைட் ஆகியோருக்குள்ள வினோதப் பிரச்சினை (Strange case of Dr. Jekyll and Mr Hyde) என்ற நாவலைக்குறித்து சொல்லாமல் இருக்க முடியாது. ஸ்டீவன்சனின் முக்கியமான நாவல்களில் இதுவுமொன்று. ஒவ்வொரு மனிதரிட மும் உள்ள இருவகை எதிரிப் பண்புகளைப் பற்றியது. மனிதரிடமுள்ள தீயகுணத்தை வேரறுக்க ஆசைப்படும் டாக்டர் ஜேகில் மருந்தொன்றைக் கண்டுபிடிக்கிறார். அந்த மருந்தை தம்மிடத்திலேயே சோதனை செய்து, இறுதியில் தம்மில் உள்ள தீயமிருகமான ஹைடுவிடம் தோற்றுப் பலியாகும் கதை.
லெத்திசீயாவைப் பாலியல்வன்முறைக்கு உட்படுத்தி கொலைசெய்த டோனி மெய்யோன் ; லெத்தீசியா சிறுமியாக இருந்தபோது பாலியல் தொல்லைகள் கொடுத்த வளர்ப்புத் தந்தை பத்ரோன், ஹசினியைக் கொலைசெய்த தஷ்வந்த், இன்னும் நீங்கள் அறிந்த பிறர் ஒருவகையில் டாக்டர் ஜேகிலைத் தோற்கடித்த ஹைட் வகை மிருகங்களாக இருக்கலாம். ஆனால் பல ஹைடுகள் வெளியே டாக்டர் ஜேகில் போல கௌவுரமனிதர்களாக (பிடிபடாதவரை) நடமாடிக்கொண்டிருப்பதும் உண்மை. அவர்கள் நீதிபதிகளாக அமர்ந்து ஹைடுகளைத் தண்டிக்கலாம், உயர் போலீஸ் அதிகாரியாக இருந்து குற்றவாளியை கைது செய்யலாம். உளவியல் மருத்துவராக தஷ்வந்த்தைக் குணப்படுத்த முன்வரலாம். இதுதான் நமது சமூகம்.

Series Navigationபாரதி யார்? – நாடக விமர்சனம்தொடுவானம் 200. நாடக அரங்கேற்றம்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *