மொழிவது சுகம் டிசம்பர் 25 2017 ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’

This entry is part 10 of 10 in the series 24 டிசம்பர் 2017

நாகரத்தினம் கிருஷ்ணா

நண்பர்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

அ. ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ :ஆர்கே நகர் தேர்தல் முடிவும் கவிஞர் இன்குலாப் குடும்பமும்

இரண்டு நாட்களுக்கு முன்பு சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு மறைந்த கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு வழங்கிய சாகித்ய அகாதெமி விருதை அன்னாரது குடும்பம் வேண்டாமென மறுத்திருக்கிறது. இப்புதிய விருதினால் அவருடைய பெருமைக்கு ஐந்துகிலோ உபரியாக க் கிடைக்கப் போவதில்லை. ஒரு பக்கம் பகலில் முன்வாசல் வழியாகக் கதவைத் தட்டிய விருதையும், அதனோடு வந்த பணத்தையும் சுயமரியாதைக் காத்திட மறுக்கும் ஒரு தமிழ்க் குடும்பம் ; மற்றொரு பக்கம், அர்த்த ராத்திரியில் பின்வாசல் கதவைத் தட்டும் மனிதருக்குத் தங்கள் வாக்குரிமை ஆடையைக் களையைச் சம்மதிக்கும் தமிழ்க் குடும்பங்கள்.
ஆர்கே நகரிலும் இன்குலாப் குடும்பங்கள் இல்லாமலில்லை. அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். பாலூட்ட சோரம்போனாளென்று இன்றைக்குத் திரைப்படத்தில் காட்டுவதுகூட அபத்தமாகவே இருக்கும். விக்டர்யுகோவின் ழான் வால்ழான் நிலமையில் ஆர்கே நகர் தொகுதி மக்களுமில்லை, இந்தியா, பிரான்சு நாட்டைப்போல 19ம் நூற்றாண்டின் இறுதியிலுமில்லை. வறுமை காரணமாக விலைபோனார்கள், என்பதை நம்பத் தயாரில்லை. ஊழலுக்கும், வாங்கும் இலஞ்சத்திற்கும் வறுமையா காரணம் ?. அப்படியொரு மன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். மனித உரிமை, பொதுவுடமை, அறம் என மேடையிலும், எழுத்திலும் வாதிடுபவர்கள் கூட வாய்ப்புக் கிடைத்தால் ஆர்கே நகர் பெருவாரியான மக்கள்தான். நம்முடைய அசல் முகம் வேறு, முகநூல் முகம் வேறு.
மீண்டும் இன்குலாப் குடும்பத்திற்கு நன்றி. இன்குலாப் பெயருக்குள்ள சுயமரியாதையைக் காப்பாற்றி உள்ளீர்கள். ‘பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ என்ற வரிக்குப் பெருமைச் சேர்த்து, ஆர்கே நகர் பாவத்திற்க்குப் புண்ணியம் சேர்த்துள்ளீர்கள். இந்த ஒரு சதவீதம் குறைந்தப்பட்சம் 51 சதவீதமாக மாறினால் தமிழர்க்கு விடிவு உண்டு.

ஆ. குவிகம் இணைய இதழ்
இன்றைக்கு மின்ஞ்சலில் முதன் முறையாக குவிகம் இணைய இதழ் பற்றிய தகவலை அறிந்தேன்.சில மரணச் செய்திகள் உண்மையில் அதிர்ச்சிக்குரிய ஒன்று. பாக்கியம் ராமசாமி என்கிற ஜாரா. சுந்தரேசன் டிசம்பர் 7 அன்று இறந்த செய்தி. நான் எழுபதுகளில் விரும்பிப் படித்த தொடர்கள் அப்புசாமியும் சீதாபாட்டியும்.
நகைச்சுவையுடன் எழுதத் தனித் திறமைவேண்டும், அதிலும் ஆபாசமின்றி எதார்த்தமென்று குப்பையைக் கிளறாமல் எழுதம் ஆற்றல் இன்று அறவே இல்லை. ஜாரா சுந்தரேசன் பெயரில் எழுதியவையும் அன்று பெருவாரியான வாசகர்களை மகிழ்வித்தவைகளே. எழுத்தில் எள்ளலை, நகைச்சுவையை வலியச் சேர்க்காமல் இயல்பாகக் கொண்டுவரத் தனித்திறமை வேண்டும். சுரா, கிரா, கடுகு, கல்கி அகஸ்தியன், தேவன் சாவி என்ற பட்டியல் இன்று சுத்தமாகத் துடைக்கபட்டுவிட்டது.
குவிகம் இதழில் வைத்தீஸ்வரன் எழுதியுள்ள ‘இப்படி ஒரு தகவல்’ என்ற சிறுகதை அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை. எழுதியவர் கவிஞர் வைத்தீஸ்வரனா அல்லது வேறு யாரேனுமா என்று தெரியவில்லை. இருந்தாலும் சென்னை வாசி ஒருவரின் அன்றாடப் பிரச்சினைகளிலொன்றை மிக அழகாக, வார்த்தைகளைச் சிதற அடிக்காமல் கி மாப்பசான் மொழியில் நச்சென்று சொல்லியிருக்கிறார்.
வாசிக்க : (https://kuvikam.com/)

Series Navigationஉன்னை ஊடுருவி நோக்குகிறேன்! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
author

நாகரத்தினம் கிருஷ்ணா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *