மற்றொரு விதத்திலும் இந்தத் தழும்புகள் பாதிக்கின்றன. இவற்றால் கல்லீரலில் உள்ள இரத்தக்குழாய்கள் அழுத்தப்பட்டு இரத்தவோட்டம் தடைப்பட்டு, பின்னோக்கிச் சென்று கழுத்துப் பகுதி இரத்தக் குழாய்கள் புடைத்து வெடிக்க நேரிடும். அதனாலும் உயிர் போகலாம்!
சிறிது நேர இன்பத்துக்காக இப்படியெல்லாம் உயிர் போகவேண்டுமா? ஆனால் மதுவைக் குடிப்பவர்கள் இப்படித்தான் குடித்துவிட்டு சாக நேரிடுகிறது.
அமெரிக்காவில் வருடந்தோறும் சுமார் 30,000 பேர்கள் குடியால் கல்லீரல் கரணை நோயால் மரணமடைகின்றனர். வேறு நாடுகளில் இதன் புள்ளிவிவரம் தெரியவில்லை. இந்த வியாதி முற்றிவிட்டால் கல்லீரலை பழைய நிலைக்குக் கொண்டு வர இயலாது. ஒரு சிலருக்கு மாற்றுக் கல்லீரல் பொருத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அது இன்னும் பரவலாக இல்லை.
கல்லீரல் கரணை நோய் மிகவும் கொடியது. நமது கல்லீரல் 3 பவுண்டு எடை கொண்டது. அது ஒரு காற்பந்து அளவுமிக்கது. உடல் உறுப்புகளில் மிகவும் பெரியது கல்லீரல்தான். அதன் பயன் மிகவும் முக்கியமானது. நாம் உண்ணும் உணவை ஜீரணம் செய்யத் தேவையான பித்தம் ( Bile ) கல்லீரலில்தான் உற்பத்தியாகிறது. அந்த பித்தம் பித்தப்பையில் ( Gall Bladder ) சேமித்து வைக்கப்பட்டு, சிறு குடலுக்குள் செலுத்தப்பட்டு கொழுப்பு நிறைத்த உணவு வகைகளை ஜீரணிக்கச் செய்கிறது.
இரத்தத்தில் கலக்கும் இனிப்பு, கொழுப்பு, புரோதம் ஆகிய சத்துகளின் அளவை நிர்ணயம் செய்வதும் கல்லீரல்தான்.
இரத்தத்தில் கலந்துள்ள மது, மருத்து, இரசாயனம் போன்றவற்றின் நச்சுத்தன்மையை அகற்றும் ( Detoxify ) சல்லடையாகவும் ( Blood Filter ) கல்லீரல் செயல்படுகிறது.
மண்ணீரலுடன் ( Spleen ) சேர்ந்து பழைய பயனற்ற சிவப்பு இரத்த செல்களை ( worn out red blood cells ) சேகரித்து அகற்றும் பணியில் கல்லீரல் ஈடுபடுகிறது.
இதுபோன்றே பாக்டீரியா, வைரஸ் நோய்க்கிருமிகளையும் இரத்தத்திலிருந்து வெளியேற்ற கல்லீரல் உதவுவதால் , உடலின் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய அங்கமாக கல்லீரல் விளங்குகிறது. இதனால் கல்லீரல் சரிவர இயங்கவில்லையெனில் வெகு எளிதில் கிருமிகளின் தொற்று உண்டாகும்.
உடல் உறுப்புகளில் கல்லீரல் மிகவும் ஆற்றல்மிக்கது. அதில் 70 சதவிகிதம் இயங்காமல் போனாலும், அல்லது அகற்றப்பட்டாலும் குறைந்த சக்தியுடன் அதனால் தொடர்ந்து இயங்க முடியும்.
ஆனல் தழும்பாக மாறிவிட்ட பகுதியால் மீண்டும் இயங்க இயலாது. இதனால் கல்லீரல் கரணை நோய் உண்டானால் மீண்டும் குணமாகி பழைய நிலைக்கு திரும்பமுடியாது. ஆகவே இந்த வியாதியை துவக்கத்திலேயே கண்டுபிடித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.
சிரோசிஸ் எனும் கல்லீரல் கரளை நோய்க்கான காரணங்கள்
கல்லீரல் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்டால் கரணை நோய் உண்டாகிறது. வைரஸ் கிருமி, மரபணு குறைபாடு, பித்தம் வெளியேறுவதில் தடை, தொடர்ந்து சில மருந்துகள் உட்கொள்ளுதல் போன்றவை சில முக்கிய காரணங்கள். ஆனால் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக மது பருகுதலே முதன்மையாக விளங்குகிறது.
மதுவையும் கல்லீரலையும் வைத்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன . அளவோடு மது அருந்தினால் மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றுக்கு பாதுகாப்பு அளிப்பதாகத் தெரிய வந்தாலும், அளவுக்கு மீறிய மது நிச்சயமாக கல்லீரலைக் கெடுத்துவிடுகிறது என்பதில் ஐயமெதுமில்லை.
ஓர் உதாரணம் வருமாறு:
ஒயின் அருந்துவதில் உலகில் புகழ்பெற்ற நாடு பிரான்ஸ். அந்த நாட்டில் இருதய நோய் குறைவாகவே காணப்படுகிறது. ஆனால் கல்லீரல் கரணை நோயை மிக அதிகமாகக் காணலாம் . இருதயம் பாதுகாக்கப்பட்டவர்களைவிட, கல்லீரல் பாதிக்கப்பட்டு இறந்தோரின் எண்ணிக்கை அதிகமாகும்.
மதுவினால் வேறு சில பிரச்னைகளும் உள்ளன. அவற்றில் கல்லீரல் அழட்சி ( Alchoholic Hepatitis ) ஏற்பட்டால் கல்லீரல் வீங்கி, காய்ச்சல்,குமட்டல், பசியின்மை, மஞ்சள் காமாலை, குழப்பம் போன்றவை உண்டாகும். இது நீடித்தால் கரணை நோய் உண்டாகும்.
கொஞ்சமாகக் குடிப்பவர்களுக்குக்கூட கல்லீரலில் கொழுப்பும் நீரும் தேக்கமுற்று கொழுப்பு கல்லீரல் ( Fatty Liver ) என்பதை உண்டாக்கும். இதனால் வலியும் மஞ்சள் காமாலையும் உண்டாகும்.
மதுவை அடுத்து கல்லீரல் கரணை நோயை உண்டுபண்ணுவது ஹெப்பெட்டைட்டீஸ் ( Hepatitis ) எனும் கல்லீரல் அழற்சி .இதில் ஹெப்பெட்டைட்டீஸ் B வகையும் C வகையும் ஏற்பட்டால் கரணை நோய் உண்டாகும்.
இதுபோன்றே வில்சன் வியாதி ( Wilson’s disease ). ஹீமோகுரோமட்டோசிஸ் ( Haemochromatosis ) எனும் சில வியாதிகளும் கல்லீரல் கரணை நோயை உண்டுபண்ணும்.
கல்லீரல் கரணை நோயின் அறிகுறிகள்
நோயின் தொடக்க காலத்தில் எந்த அறிகுறியும் தென்படாது. நோய் முற்றியபின் பின்வரும் அறிகுறிகள் தோன்றும்
* குமட்டல், வாந்தி, பசியின்மை.
* அசாதாரணமான எடை
கூடுதல் அல்லது குறைதல்.
* மஞ்சள் காமாலை.
* மஞ்சள் நிற சிறுநீர்
* இரத்தம் கலந்த அல்லது கருப்பு நிறத்தில் மலம்
* இரத்த வாந்தி.
* வயிறு வீக்கம் .
* உடல் முழுதும் அரிப்பு.
* கால்கள் வீக்கம்.
* தூக்க குறைபாடு.
* குழப்பமான மனநிலை.
* களைப்பு.
* ஆணுக்கு மார்பக வளர்ச்சி ( பெண் மார்பு போல ).
* குறைவான பாலியல் உணர்வு.
* நெஞ்சுப் பகுதியிலும் தோள்பட்டையிலும் சிலந்தி வலை போன்ற இரத்தக்குழாய்கள் தோன்றுதல்.
நோய் நிர்ணயமும் பரிசோதனையும்
நோயாளியின் மதுப்பழக்கம், அறிகுறிகள், உடல் பரிசோதனை போன்றவற்றால் அது கல்லீரல் கரணை நோய்தான் என்பதை எளிதில் கூறலாம். கல்லீரலின் செயல்பாட்டை அறிந்துகொள்ள Liver Function Test எனும் இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். Liver Biopsy எனும் பரிசோதையில் ஊசி மூலம் கல்லீரலின் திசு வெளியில் எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.
கல்லீரல் கெட முதல் காரணம் மது என்பதால் அதை நிறுத்துவதே மிக முக்கியமான சிகிச்சை. வேறு காரணங்கள் இருப்பின் அவற்றையும் களையும் முயற்சி மேற்கொள்ளவேண்டும்.
ஹெப்பேட்டைட்டீஸ் இருக்க நேர்ந்தால் அதற்கான மருந்துகள் ( Interferon ) தர வேண்டும். சில வகையானவற்றை குணமாக்க இயலாது.
மாற்றுக் கல்லீரல் பொருத்தும் அறுவை சிகிச்சை முறை இருந்தாலும் அது சிக்கல் மிக்கதால் இன்னும் பரவலாக வழக்கில் இல்லை.
சத்தான உணவு உண்ணவேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், பால், போன்றவை மீதமுள்ள கல்லீரல் பகுதியைக் காக்க உதவும். புரோதச் சத்து நிறைந்த உணவை சம நிலையில் உட்கொள்ளவேண்டும். மருந்துகளின் நச்சுத் தன்மையை அகற்றும் பணியிலும் கல்லீரல் ஈடுபடுவதால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில்தான் மருந்துகளை உட்கொள்ளவேண்டும்.
( முடிந்தது )
- எனக்குரியவள் நீ !
- பி.கே. சிவகுமாரின் ”உள்ளுருகும் பனிச்சாலை” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு
- தொண்டிப் பத்து
- ஆண்டாள், அறிவீனம் வேண்டாள்…!
- மாட்டுப்பால் மூலம் எலும்புக்கு தேவையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) கிடைக்கிறதா?
- மதுவும் கல்லீரல் செயலிழப்பும்
- ஆண்டாள்
- மனித நேயம்
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- அவர்
- கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்திக்குப் போரான் – ஹைடிரஜன் புதிய எரிக்கரு பயன்படும்
- தொடுவானம் 204. மகிழ்வான மருத்துவப் பணி
- கண்காட்சி
- கோதையும் குறிசொல்லிகளும்
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் – ஜனவரி மாதக்கூட்டம்