தொடுவானம் 206. மனமகிழ் மன்றத் தேர்தல்.

This entry is part 10 of 13 in the series 28 ஜனவரி 2018
          தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது. அதன் அறிக்கை அலுவலக தகவல் பலகையில் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஒரு வாரத்தில் நாங்கள் ரகசியமாக ஊழியர்களைச் சந்தித்து நான் தேர்தலில் செயலர் பதவிக்கு போட்டியிடுவதைத் தெரிவித்தோம்.அதை பலர் வரவேற்றனர். மாற்றம் தேவை என்றனர். வாக்களிப்பதாக உறுதியளித்தனர். .இது மனமகிழ் மன்றத்தின் தேர்தல்தானே,. இதில் பெரிய அரசியல் இல்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இதில் யார் செயலர் ஆவார் என்பதில் தலைமை மருத்துவர் அவ்வளவு ஆர்வம் கொள்ளத் தேவையில்லை என்பதும் பெரும்பாலோரின் கருத்தாக இருந்தது.
          சிலர்  டாக்டர் ஜான் சொல்லும் பெயருக்குத்தான் வாக்களிப்பதாகத்தெரிவித்தனர். அவர்கள் டாக்டர் ஜானின் விசுவாசிகள் எனலாம். பொதுவாக மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு விசுவாசிகளாகவும், அவருக்கு  எதிரானவர்களாவும் பிளவு பட்டிருந்ததும் தெரிய வந்தது. இந்த சாதாரணத் தேர்தலில் அவருக்கு உள்ள ஆதரவு தெரிந்துவிடும். அவருக்கு எதிரானவர்கள் எனக்கு வாக்களிக்கலாம். அதோடு பாலசுந்தரம் இங்கு நீண்ட காலமாகப் பணிபுரியும் சீனியர். அவர் அனைவருக்கும் நன்கு பழக்கமானவர். நான் இங்கு வந்து சில வருடங்கள்தான் ஆகிறது. இருந்தாலும் எனக்கும் ஊழியர்களிடையே நல்ல ஆதரவு இருந்தது. ஆனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இந்தத் தேர்தல் டாக்டர் ஜானுக்கு எனக்கும் நடக்கும் பலப் பரீடசை போன்றதே. அவருக்குப் பதிலாக  பாலசுந்தரத்தை அவர் ஆதரிக்கலாம்.
          தேர்தல் நாள்.  அன்று மாலையில் கூகல்பர்க் நினைவு மண்டபத்தில் மருத்துவமனையின் ஊழியர்கள் .கூடினோம். மேடையில் டாக்டர் ஜானும் பாலசுந்தரமும் அமர்ந்திருந்தனர். அன்றோடு அவரின் பதவி காலம் முடிந்தது என்று அறிவித்தார் டாக்டர் ஜான்., உடன் பாலசுந்தரம் மேடையை விட்டு கீழே இறங்கிவிட்டார். வாக்கெடுப்பு ரகசியமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு வாக்குச் சீட்டுகள் தரப்பட்டன.பெயர்கள் வாசிக்கப்பட் டன. ஒவ்வொருவராக மேடைக்குச் சென்று சீட் டில்  ஒரு பெயர்  எழுதி பெட்டியில் சேர்ந்தனர்.
         அனைவரும் வாக்களித்தபின்பு அவை மூவரால் எண்ணப்பட்டது. அதன் முடிவை டாக்டர் ஜானிடம் தந்தனர். அதைப் பார்த்த அவருடைய முகம் மாறியது. அதில் மகிழ்ச்சி இல்லை. எனக்குத் தெரிந்துவிட்டது. நிச்சயமாக நான் வென்றுவிட்டேன். அவர் சமாளித்துக்கொண்டு சற்று தடுமாற்றத்துடன் முடிவை அறிவித்தார். அதில் நான் பாலசுந்தரத்தைவிட அதிக வாக்குகளில் வென்றுவிட்டேன்! மருத்துவமனை ஊழியர்களில் பெரும்பாலானோர் என் பக்கம் இருந்தது தெரிந்துவிட்டது. தலைமை மருத்துவ அதிகாரியாக இருந்தும்கூட அவருக்கு போதுமான ஆதரவு இல்லை என்பதும் புலனாகிவிட்ட்து!
          ஊழியர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஆரவாரம் நின்றபின்பு பாலசுந்தரம் எழுந்து நின்றார். அவர் என்ன சொல்லப்போகிறார் என்று அனைவரும் ஆவலுடன் மௌனம் காத்தனர். அவர் தோல்வியை  ஒப்புக்கொண்டு என்னை வாழ்த்துவார் என்று நான் எண்ணினேன். அவரோ ஆவேசமாக என்னைப்பற்றி அவதூறாகப் பேசலானார். அமைதியாக செயல்பட்ட மனமகிழ் மன்றத்தில் குழப்பத்தை நான் உண்டுபண்ணுவதாகக் கூறினார். நான் தலைமை மருத்துவ அதிகாரிக்கு எதிராக ஒரு கோஷ்டியை  உருவாக்குவதாகவும் குற்றம் சாட்டினார் . மருத்துவமனையில் அரசியல் உண்டாக்குவதாகவும் கூறினார். நடைபெற்றது ரகசிய வாக்கெடுப்பு. ஆனால் நான் ஊழியரிடையே வாக்கு சேகரித்ததாகவும் கூறினார். மருத்துவமனை வரலாற்றில் அவ்வாறு நடந்ததில்லை என்றும் கூறினார். இதுவரை தலைமை மருத்துவ அதிகாரி சொல்பவர்தான் மன்றத்தின் செயலாராகப் பணியாற்றியதாகச் சொன்னார். அப்போதுதான் செயலர் அவருடன் சேர்ந்து சுமுகமாக மன்றத்தின் நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என்றார். அவர் தேவையில்லாமல் மன்றம் தொடர்பில்லாதவற்றைப் பேசிக்கொண்டிருந்தார். அதை டாக்டர் ஜான் தடுக்கவில்லை.அதற்கு மாறாக அவருடைய பேச்சை ரசிப்பது போன்றிருந்தது. அதற்கு மேலும் என்னால் பொறுமை காக்க முடியவில்லை.
          நான் கையைத் தூக்கினேன். அது கண்டு பாலசுந்தரம் அமர்ந்தார். நான் எழுந்து அவருக்கு பதில் சொல்ல  முயன்றேன்.தேர்தல் ஜனநாயக முறையில்தான் நடந்தது என்றேன் வாக்குகளைச் சேகரிப்பது  என்னுடைய தனிச் சுதந்திரம் என்றும் கூறினேன். தலைமை மருத்துவர் காட்டும் ஆள்தான் செயலராக வேண்டுமெனில் தேர்தல் எதற்கு என்று கேட்டேன். பேசாமல் அவரே ஒருவரை நியமணம் செய்துவிடலாமே என்றேன்.,. பெரும்பாலானவர்களின் வாக்களிப்புக்கு கட்டுப்படவேண்டும் என்றேன்.தோல்வியை ஒப்புக்கொண்டு ஆண்மையுடன் நடக்கவேண்டும் என்றேன். அது கேட்டு அவர் மேலும் ஆவேசமானார். நான் ஆண்மை என்றது பெருந்தன்மையை. அவரோ அதற்கு வேறு விதமாக அர்த்தம் கொண்டுவிட்டார். அவருக்கு ஆண்மை இல்லை என்று நான் சொன்னதாக நினைத்துவிட்டார். அவர் உரக்க கத்திக்கொண்டு என்னை நோக்கி ஓடிவந்தார். சிலர் அவரைப் பிடித்து சமாதானம் கூறினர்.. இது டாக்டர் ஜானுக்கு சாதகமாகிவிட்டது. இதைத்தான் அவர் எதிர்பார்த்திருந்தது போன்றிருந்தது. இதற்கிடையில் ஊழியர்களிடையே கூச்சலும் குழப்பமும் உருவாகிவிட்டது. இரு கோஷ்டியினரிடையே  கைகலப்பும் தள்ளுமுள்ளும் ஏற்படும்போலிருந்தது’ அப்போது டாக்டர் ஜான் எழுந்தார். அனைவரும் அமைதியாயினர்.
          அவர் மன்றத்தின் தலைவர் என்ற முறையில் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். இந்தத் தேர்தல் குழப்பத்தில் முடிந்துள்ளதால் இதை ரத்து செய்வதாக அறிவித்தார். மீண்டும் தேர்தல் நடைபெறும்வரையில் பாலசுந்தரமே மனமகிழ் மன்றத்தின் செயலராகத் தொடர்வார் என்றும் அறிவித்தார்! அத்துடன் கூட்டத்தை முடித்துக்கொண்டார்.
          என்னுடைய ஆதரவாளர்கள் என்னைப் பின்தொடந்தனர். வீட்டில் ஒன்று கூடினோம்.
          ” நாம் வென்றுவிட்டோம் டாக்டர். இது திட்டமிட்ட சதி! ” ஆவேசமுடன் பால்ராஜ் கூறினார்.
          ” இங்கு நீதி இல்லை. ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துவிட்டனர்.இதை நாம் விடக்கூடாது.நாம் என்ன இங்கே அடிமைகளா?  எதிர்த்து துணிச்சலுடன் போராடுவோம். ” கிறிஸ்டோபர் உணர்ச்சி பொங்க கூறினார்.
          ” அவரிடம் பதவியும் அதிகாரமும் உள்ளது. நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. ” தேவஇரக்கம் உண்மையான நிலையைச் சொன்னார்.
          ” பதவி இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஜனநாயகத்திற்கு மதிப்பு அளிக்கவேண்டாமா?  “மீண்டும் கிறிஸ்டோபர்.
          ” அப்படிதானே நடக்கிறது? இனி பழிவாங்கும் படலம் தொடங்கும். அவரை ஆதரித்தவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். நமக்கு மெமோக்கள் வரும்! ” பால்ராஜ் ஆத்திரத்துடன் கூறி நெற்றியைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டார். சாதாரணமாகவே அவருக்கு நிறைய வியர்க்கும். அப்போது அவர் ஆத்திரத்தில் இருந்தார்.
          என் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையைக் கண்டு நான் வியந்தேன். மனமகிழ் மன்றம் ஒரு சாதாரண பொழுதுபோக்கு அமைப்புதான். சுவீடிஷ் மருத்துவர்கள் ஊழியர்களின் நலன் கருதி இதை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களின் விருப்பத்துக்கு மதிப்பளித்து ஒரு செயலரைத் தேர்ந்தெடுத்துள்ளனர். . அதில் கூட சுதந்திரம் இல்லாமல் சர்வாதிகார போக்கு உள்ளதை ஊழியர்கள்  விரும்பவில்லை. மாதச் சந்தா சம்பளத்தில் பிடிக்கப்படுவதால் மன்ற செயல்பாடுகளில் தங்களுக்கு முழு உரிமை உள்ளது என்பதை உணர்ந்தனர். அவர்  தலைமை மருத்துவ அதிகாரி. அவரை நேருக்கு நேர் அவர்களால் எதிர்த்து  நிற்க முடியாதுதான். அவர்களை வழிநடத்த துணிச்சலான ஒருவர் தேவை. அது நான்தான் என்பது எனக்கு அப்போதே தெரிந்து விட்ட்து!
          ” புரட்சி போராடடம் என்றால் நாம் விளைவுகளைச் சந்திக்கவும் தயாராக வேண்டும். நாம் இன்று தொடங்கும் புரட்சி வெற்றி பெற நமக்குள் ஒற்றுமை தேவை. இதை கடவுளதான்  வழிநடத்துகிறார் என்பது எனக்குத் தெரிகிறது. ” இவ்வாறு சொன்ன கிறிஸ்டோபர் உண்மையில் பக்தியானவர் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம்.
          ” நம்மை வழி நடத்த டாக்டரை கடவுள் அனுப்பியுள்ளார். . நாம் அனைவரும் ஒன்றுபட்டு டாக்டரின் கையை ஓங்கச் செய்வோம்! ” பால்ராஜ் இப்படி சொன்னபோது அனைவரும் கைகளைத் தூக்கி ஆமோதித்தனர். அப்போதே நான் அவர்களுக்கு தலைவனாகிவிட்டேன். நான் நன்றி சொன்னேன். பொறுமையாக செயல்படுவோம் என்றும் கூறினேன். ஆனாலும் அவர்களின் ஆத்திரம் தீர்ந்தபாடில்லை. முறையாக வென்ற என்னை செயல்படவிடாமல் பாலசுந்தரத்தையே தொடர்ந்து செயலராக இருக்கச் சொன்னது அப்பட்டமான அநியாயம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.
          அவர்கள் கலைந்து சென்றபின்பு நான் யோசித்தேன்.நான் மருத்துவப் பணியாற்றவே வந்துள்ளேன். இது அரசியல் போன்றுள்ளது. மருத்துவமனை ஊழியர்களில் ஒரு சாராருக்கு தலைமை மருத்துவரின் செயல்பாடுகளில் திருப்தி  இல்லை. அவர்களை  வழிநடத்த ஒருவர் தேவை. அதற்கு நான்தான் சரியான ஆள் என்பதை நம்புகின்றனர். அதனால் என் மீது அதிக நமபிக்கையும் வைத்துள்ளனர். இது தானாக வந்தது. ஒருவேளை இந்த மருத்துவமனையில் மாற்றங்கள் கொண்டுவர கடவுள் எனக்கு அழைப்பு விடுவதாகத் தோன்றியது.
          அன்றே நான் முடிவு செய்துவிட்டேன். ஊழியர்களின் தோழனாக தலைவனாக நான் இனிமேல் செயல்படுவேன். அதன் விளைவுகளையும் எதிர்கொள்ளத் தயார் ஆனேன்!
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationஅவரவர் – அடுத்தவர்திரைகள்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *