இனி இனிப்பு நீர் வியாதியால் சிறுநீரகங்கள் எவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதைப் பார்ப்போம்.
நீரிவு வியாதி உள்ளவர்களில் 20 முதல் 40 சதவிகிதத்தினருக்கு சிறுநீரக பாதிப்பு உண்டாகிறது. இதை நெப்ரோபதி ( Nephropathy ) என்று அழைப்பதுண்டு.நீரிழிவு நோயால்தான் அதிகமானோருக்கு சிறுநீரக செயலிழப்பும் ( Kidney Failure ) உண்டாகிறது.
சிறுநீரக செயலிழப்பு படிப்படியாக உண்டாகிறது. அவை வருமாறு
முதலாவதாக சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள அதிகமான இனிப்பை வெளியேற்றும் பணியை மிகவும் துரிதமாக செய்கின்றன. இது சல்லடை போட்டு வடிகட்டுவது போன்றது.இப்படி செய்யும்போது அதில் ஈடுபடும் குளமோருலஸ் என்ற பகுதியில் வீக்கம் உண்டாகி அழுத்தம் ஏற்பட்டு சிறுநீரகத்தின் செயல்முறையைக் குறைக்கிறது. அதனால் அதன் பணி சிரமமாகிறது.
* இரண்டாவது கட்டமாக ஒரு வருடத்திற்குப் பிறகு கழிவுப் பொருட்களை வெளியேற்றும் பணியும், சத்து மிக்க பொருட்களை வெளியேற்றாமல் மீட்டுக்கொள்ளும் பணியும் பாதிக்கப் படுகிறது.சிறு அளவில் அல்புமின் எனும் புரோதச் சத்து சிறுநீரில் வெளியாகிறது.
* மூன்றாவதாக, இவ்வாறு சிறுநீரகங்கள் தொடர்ந்து பாதிப்புக்கு உள்ளாவதால் அதிகமான அளவில் அல்புமின் வெளியேறுகிறது. இந்த அல்புமின்தான் இரத்தத்தில் நீரை தங்க வைக்கிறது. இது குறைந்துபோனால் நீர் உடலின் திசுக்களில் தேக்கமுறும்.இதனால்தான் முகம், கைகள், கால்கள் வீக்கமுறுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் இரத்தத்தில் அல்புமின் குறைந்து போவதால் அதை ஈடு செய்ய கல்லீரல் அதிகமான கொலஸ்ட்ராலையும் இதர கொழுப்புகளையும் வெளியேற்றுகிறது. இவை அல்புமின் உற்பத்திக்கு உதவுகின்றன. ஆனால் இவை இருதயத்துக்கு ஆபத்தை உண்டுபண்ணுகின்றன.
* இறுதியாக, சிறுநீரக செயலிழப்பு உண்டாகிறது. இதில் கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்பட முடியாமல் இரத்தத்திலேயே தேக்கமுறுகின்றன. இதையே இறுதிக்கட்ட சிறுநீரக செயலிழப்பு ( End – stage renal failure ) என்கிறோம். இது உண்டானபின்பு எவ்வளவுதான் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்தினாலும் பிரயோஜனம் இல்லை. இதற்கு டையலிசிஸ் அல்லது மாற்று சிறுநீர் பொருத்தும் அறுவைச் சிகிச்சையைத் தவிர உயிரைக் காக்க வேறு வழிகள் இல்லை.
* இரத்தத்தில் இனிப்பின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது தலையாய கடமையாகும்.இது நம் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.இருப்பினும் பல சமயங்களில் என்னதான் மருந்து உட்கொண்டாலும் அல்லது இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டாலும் இனிப்பின் அளவை கட்டுப்படுத்த முடிவதில்லை.இதற்கு உணவக் கட்டுப்பாடும் உடற்பயிற்சியும் இல்லாத காரணம் எனலாம். இனிப்பு வியாதியால் சிறுநீரக செயலிழப்பு உண்டானால் அதன் அறிகுறிகளான கை கால்கள் வீக்கம், களைப்பு, இடுப்பு வலி போன்றவை தோன்றும்போது சிறுநீரகங்கள் 80 சதவிகிதம் கேட்டுப்போயிருக்கும்! அதுவரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. துவக்கத்திலேயே சிறுநீரில் மைக்ரொஅல்புமின் உள்ளதா என்பதைப் பரிசோதனை செய்துகொள்ளலாம். இதை வருடத்தில் ஒரு முறையேனும் செய்துகொள்ளவேண்டும். தசைகளின் கழிவுப் பொருளான கிரியேட்டினின் என்பதை சிறுநீரகங்கள் வெளியேற்றும். சிறுநீரக செயலிழப்பில் இரத்தத்தில் இதன் அளவு உயர்ந்து காணப்படும்.இதை இரத்தப் பரிசோதனையில் கண்டறியலாம். இவை இரண்டும் தெரிந்துகொண்டால் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றன என்பதை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு ஆவன செய்யலாம்.
* இரத்தக் கொதிப்பைக் குறைத்தல் – இரத்தக் கொதிப்பில் சிறுநீரகத்தினுள் உள்ள நுண்ணிய இரத்தக்குழாய்களின் சுவர்கள் இறுக்கமாகிப் போவதால் அதை தளர்த்தும் மருந்துகளால் இரத்தக் கொதிப்பு குறைகிறது.இல்லையேல் சிறுநீரகப் பணியும் கெடுகிறது.இத்தகைய மருந்துகளின் பெயர் ACE தடுப்பு மருந்துகள் என்று அழைக்கப்படுகின்றன. அதோடு புகைப்பதை நிறுந்துவது கூட இரத்தக் கொதிப்பைக் குறைத்து சிறுநீரகங்களைக் காக்கிறது.
* புரோதச் சத்தைக் குறைத்தல் – உணவில் உள்ள கலோரிகளில் 10 சதவிகிதத்திற்குக் குறைவான புரோதச் சத்து இருந்தால் போதுமானது.அதற்கு அதிகமானால் அளவுக்கு அதிகமானதை வெளியேற்றும் பணியால் சிறுநீரகங்கள் பாதிப்புக்கு உள்ளாகலாம்.இனிப்பின் அளவும், இரத்தக் கொதிப்பும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், புரோதத்தின் அளவைக் குறைப்பது சிறுநீரகங்களுக்கு பாதுகாப்பைத் தருகின்றன.
* கிருமித் தொற்றிலிருந்து பாதுகாப்பு – இனிப்பு நீர் உள்ளவர்களுக்கு எளிதில் சிறுநீர் குழாய்களில் கிருமித் தொற்று ஏற்படலாம். அதோடு நரம்புகளும் பாதிப்புக்கு உள்ளாவதால் சிறுநீர்ப்பை ( Urinary Bladder ) சரிவர வேலை செய்யாமல் சிறுநீர் அதில் தேக்கமுறலாம். அதில் கிருமிகள் வளர வகை செய்துவிடுகிறது. சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது எரிச்சல், அடிக்கடி சிறுநீர் கழித்தல், கலங்கலான அல்லது இரத்தம் கலந்த சிறுநீர் போன்றவை கிருமித் தொற்றின் சில அறிகுறிகள். சிறுநீர் பரிசோதனையின் மூலம் இதை கண்டு பிடிக்கலாம். இதை உடனடியாக எண்ட்டிபையாட்டிக் மருந்து மூலம் குணப்படுத்தாவிடில் சிறுநீரகம் எளிதில் பாதிக்கப்படும்.
* மருந் துகள் பற்றிய எச்சரிக்கை – நாம் பல வேளைகளில் தேவையில்லாமல் மருந்துகளை உட்கொள்கிறோம். மருத்துவரைப் பார்க்காமலேயே பார்மசியில் மருந்து வாங்கி சாப்பிடுகிறோம்.இவற்றில் அதிகமாக வலி நிவாரணிகள் அடங்கும். இவற்றில் பல மருந்துகள், குறிப்பாக வலி குறைக்கும் மருந்துகள், வீக்கம் குறைக்கும் மருந்துகள், சில எண்டிபையாட்டிக் மருந்துகள் சிறுநீரகங்களைப் பாதிக்கக் கூடியவை.ஆதலால் நீரிழிவு நோயாளிகளும், அந்த நோய் இல்லாதவர்கள்கூட மருத்துவரின் மேற்பார்வையின்றி மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திக்கொள்வது நல்லது.
( முடிந்தது )
- காதற்காலம்- (பிரணயகாலம்)
- நாடோடிகளின் கவிதைகள்
- ‘தமிழை ஆண்டாள்’ கட்டுரையில் வைரமுத்து செய்த 18 சறுக்கல்கள்
- நெருப்பென்ன நின்ற நெடுமாலே!
- மருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் சிறுநீரகச் செயலிழப்பும்
- வெளிநாட்டு ஊழியர்கள்
- வாழ்க நீ
- வெங்காயம் — தக்காளி !
- பின்னலாடை நக்ரின் இலக்கியப் பயணம் :திருப்பூர் 15 வது புத்தகக் கண்காட்சி
- பழந்தமிழ் இலக்கியத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்கும் பாலமாக விளங்கும் பாலம் லக்ஷ்மணன் அம்மையார்
- தொடுவானம் 207. போதை
- இன்று ஒரு முகம் கண்டேன் !
- பூதப்பெருநிறைக் கருந்துளை உந்து கணைகள் பிரபஞ்சத்தின் முப்பெருஞ்சக்தி அகிலத் தூதர் எழுச்சியைத் தூண்டுகின்றன