சுயாந்தன்
“ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து” என்கிற செழியனின் எழுத்துக்களை வாசித்திருந்தேன். சகோதரப் படுகொலைகள் உச்சம் பெற்றிருந்த 1986-1987 காலத்தில் தான் உயிர்தப்பிய சம்பவங்களைச் செழியன் எழுதியுள்ளார். இது ஈழத்து இலக்கியத்தில் முக்கியமான ஆவணம் என்றுதான் சொல்லவேண்டும். இதில் செழியன், “அவர்கள்” என்று குறிப்பிட்டது விடுதலைப் புலிகளைத்தான். இதற்குக் காரணம் எண்பதுகளில் புலிகள் இயக்கம் சகோதரப் படுகொலைகளை அதிகம் நிகழ்த்தி பல ஈழப் போராட்ட இயக்கங்களைத் தடைசெய்துமிருந்தனர். இக்காலத்தில் இவர்கள் சரியான தலைமைக்கு உட்படாது குழுக்குழுவாக இயங்கினர். அல்லது அதன் தலைவர் இந்தியாவில் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.
அதுவே தொன்னூறுகளில் மாற்று இயக்கத்தவர்களில் முக்கால்வாசியினரை அழித்த பின்னர் பேரினவாத அரசுக்கு எதிராகப் போரிடும் ஒரு மக்கள் நிறுவனமாகத் தம்மை முழுமையாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். இந்தக் குறிப்பைச் செழியன் 1998 இல் எழுதியுள்ளார். அவர் வெளியேறிய காலத்துக்கும் இக்குறிப்பை எழுதிய காலத்துக்கும் இடையில் புலிகள் அமைப்பு மக்கள் செல்வாக்கு அமைப்பாக மாறியிருந்தது. அதனால்தான் தொடர்ந்து விடுதலைப் புலிகள் என்று ஒரு குற்றப் பத்திரமாக வாசிப்பவர்களிடத்தில் கூறாமல் “அவர்கள்” என்று எழுதியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் எண்பதுகளில் மாற்றியக்க உறுப்பினர்களையும் அவர்களுடன் தொடர்புடையோர் என்று கருதுவோரையும் மிகமோசமாக புலிகள் படுகொலை செய்யத் தொடங்குகின்றனர். இதில் இக்குறிப்பை எழுதிய செழியன் தான் உயிர் தப்பிய கதையை எவ்விதத் திரிபுகளும் இன்றி மிக நியாயமாகக் கூறியுள்ளார். யாழ்ப்பாணக் கிராமத்திலிருந்து தப்பித்து ஓடத் தொடங்கி, யாழ் நகரத்தில் ஒளிந்திருப்பதும், பின்னர் அங்கிருந்து வவுனியா சென்று ரயிலேறிக் கொழும்பில் கடவுச் சீட்டுப் பெற்று விமானம் மூலம் வெளிநாடு போவதுமாக நடைபெற்ற விடயங்களைப் பதிந்துள்ளார்.
தன் அரசியல் குறிப்புகள் என்றால் அதிகம் பேர் தம்மையொரு பொதுநலவாதியாக உசத்திச் சொல்வதுண்டு. இதில் தனது சுயநலத்தையும் மனிதம் மீது கொண்டிருந்த அளவற்ற நேசத்தையும் அநேக இடங்களில் எழுதியுள்ளார். நீ இப்படிச் செய்யவேண்டும் என்ற அறிவுரைக் குறிப்புகள் அல்ல. தனது சுய அனுபவ வெளிப்பாடுகள். உருக்கமான கையேந்துகைகள். ஆயுதக் குழுக்களுக்கும் மக்களுக்கும் ஆரம்பத்தில் இருந்த துருவ வேறுபாடுகள் வெளிப்படுத்தப்படுகின்றது. எந்த இடத்திலும் பக்கச் சார்பை எடுத்திராத, புலி எதிர்ப்பு, புலி ஆதரவு என்று வெறுப்புணர்வு அரசியல் செய்யாத சாமானியத் தமிழ் மகனின் குறிப்புகள் இவை. இதில் அவன் தன்னைத் தற்காத்துக் கொள்வதிலும், மனிதக் கொலைகளை வெறுத்து ஓடுவதிலும் குறியாக இருந்த நாட்கள் எழுதப்பட்டுள்ளன.
தான் உயிர் பிழைக்கக் காரணமான நான்கைந்து பேரை நினைவு கொள்கிறார். அதில் கவிஞர் சேரனையும் முக்கிய இடங்களில் ஞாபகப்படுத்துகிறார். இந்தக் காலகட்டத்தில்தான் (86-87) சஞ்சிகளையும், பத்திரிகைகளையும் படித்துச் செழியன் தனது எழுத்தார்வத்தை அதிகப்படுத்திக்கொண்டுள்ளார். அதனையும் சில இடங்களில் குறிப்பிடுகிறார். அதில் ஓவியம், கவிதைகள், தமிழ் சினிமாச் சீரழிவு பற்றிச் சில குறிப்புக்களும் இவற்றுள் எழுதியுள்ளார்.
இக் குறிப்பேட்டின் இறுதியில் தாய்நாட்டை நேசித்த ஒருவன் அந்நாட்டை விட்டு விலகும்போது எத்துணை ஆற்றாமையில் இருப்பானோ அந்த இயலாமையைக் கண்ணீருடன் எழுதியுள்ளார். அதில் தெரிந்தது காழ்ப்புணர்வோ, கயமையோ இல்லை. ஒரு மனிதத்துவப் பண்பு.
இந்தக் குறிப்பினை ஒரு பக்கச் சார்பில் நிற்பவர்கள் படிக்கவேண்டும்.
குறிப்பிலிருந்து ஒரு பகுதி……….
“”எத்தனை எத்தனை சோகங்களைக் கடந்திருப்போம். என் சொந்த தேசத்தை விட்டுப்பிரிவது சோகங்களிலெல்லாம் துயரமான ஒரு கொடுமை. இந்தத் துயரத்தை நீங்கள் சுமந்தீர்களோ என்னவோ நான் சுமந்தேன். என்ன தவறு செய்தேன்! இந்த தேசத்தின் புதல்வன் நான். என் மண்ணைவிட்டு ஏன் நான்துரத்தியடிக்கப்பட்டேன்?
இனிய தேசமே மறுபடியும் நான் வருவேன். மனிதன் எனும் இனம் எழுந்து வரும் நாளில் மறுபடி நான் வருவேன். ஒருவேளை என் முற்றாத கன்வுகளோடு முதிர்ந்த வயதில் ஏதோ ஒரு நாட்டில் ஒரு அகதியாய் அநாதைப் பிணமாய் பனிக்கட்டிகளுக்கு நடுவிலோ, இயந்திரங்களுக்கு அடியிலோ மரணித்துப் போகலாம்.
காற்றே, மரம், செடி, கொடிகளே என் தலைமுறை மறுபடி இங்குதான் வேர்விட்டு, இருதளிர்கரம் நீட்டி வளரும். என்புதல்வர்கள், அல்லாது போனால் என் பேரர்களில் ஒருவர் வருவார்கள். இத்தாய்த்திருநாட்டை முத்தமிட வருவார்கள். இனிய தேசமே தெரிந்தோ தெரியாமலோ நான் ஏதும் தவறு செய்திருந்தால் தங்கள் கண்ணிரால் என் பாவங்களை இவர்கள் கழுவுவார்கள். தேசமே என்தலைமுறையையாவது இங்கு வாழவிடு. விமானம் மேகக் கூட்டத்தினுள் புகுந்து தொலைந்து போனது.””
செழியனின் மரணத்துக்கு அவரை வாசிக்காமலே பதிவிடுவதில் உடன்பாடில்லை என்பதனால் அவரது சுயகுறிப்புகளைப் படித்துவிட்டுப் பதிவேற்றுவதில் ஒரு திருப்தி கிடைக்கிறது. மரணத்திலும் வாழ்ந்த எங்கள் மனிதன் செழியனுக்கு அஞ்சலிகள்.
000
- அழைப்பிதழ் – சமயவேல் ராஜ் கௌதமன் விளக்கு விருதளிப்பு விழா
- சில யதார்த்தக் கவிதைகளும் சில குறிப்புகளும்
- செழியனின் நாட்குறிப்பு-
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள்
- ஒழிதல்!
- 28. குறைவொன்றுமில்லாத கோவிந்தா
- சுனில் கில்நானியின் ‘இந்தியா என்கிற கருத்தாக்கம்'(The idea of India) தமிழில் தந்தவர் அக்களூர் இரவி
- தொடுவானம் 210. இன்ப அதிர்ச்சி
- நீரிழிவு நோயும் இருதய பாதிப்பும்
- விமர்சனங்களும் வாசிப்பும்
- பெண்
- மரங்கள்
- விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது.
- பிரிட்டனில் பேய்மழை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- சுப்ரபாரதிமணியனின் இரு நூல்கள் இந்தி மொழிபெயர்ப்பில்
- இட்ட அடி…..
- புனைவு என்னும் புதிர் : விமலாதித்த மாமல்லன்
- ராஜேஷ் சுப்பிரமணியனின் புது முயற்சிக்கு வரவேற்பும் வாழ்த்துகளும்!
- கடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்
- கலியுகன் கோபியின் கவிதைக்கோலங்கள்