தொடுவானம் 212. ஆலய சுற்றுலா

This entry is part 9 of 10 in the series 11 மார்ச் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

212. ஆலய சுற்றுலா

நண்பன் என்னுடன் தங்கியிருந்த மூன்று நாட்களும் நான் விடுப்பு எடுத்துக்கொண்டேன். அவனை மீண்டும் எப்போது பார்ப்பேன் என்பது தெரியாது. அவன் சிங்கப்பூர் திரும்பிவிட்டால் அவ்வளவுதான். கடிதமும் எழுதிக்கொள்ளமாட்டோம். மீண்டும் சந்திக்க பல வருடங்கள் ஆகலாம்.
அவன் தங்கும் சில நாட்கள் அவனுடன் கழிக்கலாம். இந்தப் பகுதியிலுள்ள சில இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். திருப்பத்தூருக்கு மிகவும் அருகில் இருப்பது குன்றக்குடி முருகன் கோவிலும் பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலும்தான். பின்பு காரைக்குடியும் மதுரையும் செல்லலாம். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவில் பார்க்கலாம். நான்கூட அதை சரியாகப் பார்த்ததில்லை. நான் அங்கே வழிபட செல்லவில்லையென்றாலும் அதன் கலையழகைக் கண்டு இரசிக்கச் செல்லலாம். தமிழகத்தின் கோவில்கள் நம்முடைய வரலாற்றையும், கட்டிடக் கலையையும், சிற்பக் கலையையும் கூறும் சின்னங்களாகத் திகழ்கின்றன.
மறுநாள் மாலையில் நாங்கள் இருவரும் வோக்ஸ் வேகன் மூலம் பிள்ளையார்பட்டி சென்றோம். அது திருப்பத்தூரிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருப்பத்தூர் குன்றக்குடி சாலையில் பிள்ளையாபட்டி பிரியும் இடத்திலிருந்து இருமருமங்கிலும் கடை வீதிகள். ஆலயம் தொடர்புடைய பலதரப்பட்ட கடைகள் அங்கு காணலாம். அந்த ஆலயத்தை கற்பக விநாயகர் கோவில் என்பார்கள்.. அங்கு அன்றாடம் வெளியூரிலிருந்து பக்தர்கள் வந்து வழிபடுவதைக் காணலாம். ஏராளமான கார்களும் , பேருந்துகளும் கோவிலுக்கு வெளியில் நிற்பதைக் காணலாம்.
அந்த ஆலயத்தின் சிறப்பு என்னவேனில் அது கருங்கற் குன்றிலிருந்து குடையப்பட்ட ஒரு குகைக் கோவில். கருவறைக்குள் துதிக்கையை வலது பக்கமாக வளைத்து வைத்திருக்கும் பிள்ளையார் ஆறு அடி உயரமுள்ள கருங்கற் பாறையிலிருந்து செதுக்கப்பட்டவர். தமிழ் நாட்டில் உள்ள பிள்ளையார் சிலைகளில் இதுவே மிகவும் உயரமானது. அதைச் செதுக்கிய சிற்பி தன்னுடைய பெயரையும் அன்றைய தமிழ் எழுத்தில் செதுக்கியுள்ளதும் அதன் சிறப்பு அம்சம் எனலாம். அந்த சிற்பியின் பெயர் எக்கத்தூர் கூன் பெருபரணன். அந்த பிள்ளையாரின் சிலை 4ஆம் நூற்ற்றாண்டில் செதுக்கப்பட்டிருக்கலாம் என்பது யூகிக்கப்படுகிறது. அப்போது ஆண்டுகொண்டிருந்த பாண்டிய மன்னர்களால் அந்தக் கருங்கற் குன்றில் அந்தக் கோவிலை உருவாக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தற்போது அக் கோவிலை நகரத்து செட்டியார்கள் பராமரித்தது வருகின்றனர்.
கோவிந்தசாமிக்கு கடவுள் நம்பிக்கை அவ்வளவாக இல்லை. நாங்கள் சிங்கப்பூரில் இளைஞர்களாக இருந்தபோது கடவுளை எண்ணிப்பார்த்ததே இல்லை என்பதே உண்மை! அவனுடைய அகளின் ப்பா நாராயணசாமி பழுத்த பெரியார் பக்தர். அவனுடைய வீட்டுச் சுவரில் தந்தை பெரியாரின் படம்தான் மாட்டியிருக்கும். அவர் விடுதலை பத்திரிகைதான் படிப்பார். கோவிந்தசாமியும் எந்த கோவிலுக்கும் சென்றதில்லை. நான் அப்போது அண்ணாவின் மீதும் கலைஞர் மீதும் மித மிஞ்சிய பற்றுதல் கொண்டிருந்ததால் நானும் கடவுள் பற்றி எண்ணியதில்லை. எப்போதாவது கிறிஸ்துமஸ் பெருநாளில் அப்பா என்னை டியூக் ரோட்டில் இருந்த தேவாலயத்துக்குக் கூட்டிச் செல்வார்.
நாங்கள் இருவரும் பிள்ளையார்பட்டிக்கு அதன் வரலாற்றுச் சிறப்பையும், கலை அம்சத்தையும்தான் காணச் சென்றோம். ஆனால் ஆலயத்தினுள் நுழைந்து அனைத்தையும் ரசித்தோம். கற்றூண்களில் உள்ள சிற்ப வேலைகளை கை வைத்து தடவியும் பார்த்து ரசித்தோம்.
பாண்டைய தமிழர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்களுடைய கலைத் திறனை சிற்பக் கலையில் வடித்ததால் அவற்றை இன்றும் நாம் கண்டு ரசிக்கிறோம். அந்த வகையில் தமிழகத்திலுள்ள கோவில்கள் அனைத்துமே கலைக் கூடங்களாக விளங்குவதோடு திராவிடர்களின் சிற்பக் கலை, கட்டிடக் கலைகளின் சிறப்பை பல நூற்றாண்டுகள் பகர்ந்து நிற்கின்றன. இவ்வாறு அங்கு கோவிந்தசாமியும் நானும் பெருமையாகப் பேசிக்கொண்டோம்.
அங்கிருந்த்து புறப்பட்டு குன்றக்குடிக்குச் சென்றோம். . தேவஸ்தானத்து கீழிருந்து படிக்கட்டுகளில் ஏறினோம். அதன் பெயர் சண்முகநாதர் ஆலயம்.அது முருகன் கோவில். அதை குன்றக்குடி தேவஸ்தானம் சிறப்பாக நிர்வகித்து வருகிறது. அதன் தலைவராக தவத்திரு குன்றக்குடி அடிகளார் உள்ளார். அவரை ஒரு ஹை டெக் துறவி என்றும் கூறுவார்கள். காரணம் அவர் ஆன்மிகத்துடன் நவீன அறிவியலையும் விரும்பி பேசியும் எழுதியும் வந்தார்.அதோடு அவர் ஒரு சிறப்புமிக்க தமிழ் அறிஞர். பட்டிமன்றங்களுக்கு தலைமை வகித்து அவர் கூறும் தீர்ப்புகள் சுவைமிக்கதாகும். தமிழகத்தில் பட்டிமன்றங்களில் கலந்து கொள்வதில் அலாதி ஆர்வம் கொண்டவர். அந்தக் கலைக்கு புத்துயிர் தந்தவர் அடிகளார் எனலாம்.
படிக்கட்டுகளில் ஏறி மலை உச்சியில் இருந்த முருகன் கோவிலை அடைந்தோம். அங்கிருந்து பார்த்தபோது சுற்று வட்டார கிராமங்கள் பசுமையுடன் கண்கவரும் வகையில் அமைந்திருந்தது. அவற்றினூடே ஆங்காங்கே செம்மண் வீதிகளும் அழகூட்டின.குன்றக்குடியைச் சுற்றிலும் கல் வீடுகளே நிறைந்திருந்தன. குடிசைகள் குறைவு.
இந்தக் கோவிலில் ஆறு முகங்கள் கொண்ட முருகன் சிலையை வழிபடுகிறார்கள்.முருகன் அருகில் அவருடைய இரு மனைவிகளான வள்ளியும் தெய்வானையும் மயில் மீது அமர்ந்திருப்பர்.
ஆனால் எங்களைக் கவர்ந்தது கோயில் கருவறைக்கு வெளி வாயிலில் இருபக்கமும் நின்ற இரண்டு சிற்பங்கள். அவர்கள் முறுக்கிய மீசையுடன் காணப்பட்ட்னர். அவர்கள் திடகாத்திர உடல் அமைப்புடன் செதுக்கப்பட்டிருந்தனர்.. அவர்கள் சிறு கடவுள்கள் போன்று தெரியவில்லை. அங்குள்ளோரிடம் அவர்கள் யார் என்று கேட்டேன். அவர்கள்தான் மருது பாண்டியர் சகோதரர்கள் என்று அங்குள்ள சிலர் சொன்னது கேட்டு வியந்தேன்!
இந்தக் கோவிலையும் நிச்சயமாக பாண்டிய மன்னர்கள் தான் கட்டியிருப்பார்கள். குன்றக்குடி கோவிலின் மேற்கு புறத்தில் சிவனுக்காக குடையப்பட்டுள்ள மூன்று குகைக் கோவில்களும் உள்ளன.அவை பல்லவர்களின் பாணியில் இல்லாமல் திராவிடரின் குகைக் கலையின் அடையாளமாக விளங்குகின்றன. அவற்றையும் பாண்டிய மன்னர்கள்தான் அமைத்திருக்கவேண்டும்.
இருட்டியபின்பு காரைக்குடிக்குச் சென்றோம். அங்குள்ள உணவகத்தில் கோழி பிரியாணி சுவைத்தோம்.சில புத்தகக் கடைகளுக்குச் சென்றோம். ஓரிரு நாவல்கள் வாங்கினோம் இரவு திருப்பத்தூர் திரும்பினோம்.
மறுநாள் காலையிலேயே மதுரைக்குப் புறப்பட்டோம். அங்கு மீனாட்சியம்மன் கோவில் சென்று பார்த்தோம் . அதன் வளாகம் பெரியது. சுமார் 14 ஏக்கர்கள் பரப்பளவு. வானளாவிய கோபுரங்கள் பிரமிப்பை ஊட்டும் வகையில் அவ்வளவு அழகாக உயர்ந்து நிற்கின்றன.படையெடுப்புகளைத் தவிர்க்க உயர்ந்த சுற்றுச் சுவர்கள் பாதுகாப்புக்கு உள்ளன. .இந்தக் கோவில் இந்தியாவின் மிகப் பெரிய கோவில்களில் ஒன்றாகும். திராவிடர் சிற்பக்கலையின் பெருமை கூறும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலைக் கட்டியவர் குலசேகரர் பாண்டியர் என்னும் மன்னர். இதை அவர் முதலாம் நூற்றாண்டில் கட்டியதாக நம்புகின்றனர். கோவிலிலுக்கு வெளியில் நான்கு புறமும் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள கடைத்தெருக்கள் உள்ளன. கோவிலைக் காண நாட்டின் பல பகுதிகளிலிருந்து தனி பேருந்துகளில் வந்து குவியும் பக்தர்களைக் . சுற்றுலாத் தலமாக ஆகிவிட்ட மதுரையில் வெளிநாட்டவர்களையும் வீதிகளில் அதிகம் காணமுடிந்தது.
இந்தக் கோவிலுக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. முன்பு மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள் கூடிய இடத்தில் இது அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. முதலாம் நூற்றாண்டில் குலசேகரர் பாண்டியர் கட்டிய கோவில் இந்த அளவு பிரம்மாண்டமாக இல்லை. 14 ஆம் நூற்றாண்டில் மாலிக் கபூரின் முகலாயப் படையெடுப்பின்போது மதுரையின் பெரும்பகுதி அழிக்கப்பட்டபோது , இந்தக் கோவிலும் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டது. அதனுள் இருந்த விலைமதிப்பில்லாத தங்கமும், வெள்ளியும் முத்துக்களும் சூறையாடப்பட்டு கோவிலும் சின்னாபின்னமானது.அதன்பின்பு கோவிலை சீர் செய்து மீண்டும் கட்டியவர்கள் மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள். 16 ஆம் நூற்றாண்டில் விஸ்வநாத நாயக்கரும் 17 ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரும் மேலும் கோவிலை விஸ்தீரப்படுத்தி பல மண்டபங்களும் கட்டி சிறப்பு செய்துள்ளனர்.அவற்றில் ஆயிரம் கால் மண்டபம் பிரபலமானது.
கோவிலினுள் சில கலை அம்சங்களைப் படம் பிடிக்கலாம் என்றால் நுழைவாயிலிலேயே புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்றஅறிவிப்பு பலகை இருந்தது.
கோவில் முழுதும் நடந்து சென்று பார்க்க நேரம் ஆனது. அதன்பின்பு வெளியேறி தாஜ் உணவகம் சென்றோம். அங்கு சூடான சுவையான கோழி பிரியாணி உண்டோம். அதுபோன்ற உணவகங்களில் பிரியாணிதான் பிரசித்தம்பெற்றிருந்தது. அதே வீதியிலிருந்து கொஞ்ச தூரத்தில் புத்தகக் கடைகள் இருந்தன. அவற்றில் சில நூல்களை வாங்கிக்கொண்டோம். கலைமகளுக்கு திருநெல்வேலி அல்வா வாங்கிக்கொண்டு திருப்பத்தூர் புறப்பட்டோம்.
மறுநாள் மாலை கோவிந்தசாமி சென்னைக்குப் புறப்பட்டான். அங்கு அவனின் அக்காள் வீடு உள்ளது. அங்கு ஓரிரு நாட்கள் தங்கிவிட்டு சிங்கப்பூர் சென்றுவிடுவான்.
திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் அவனை வழியனுப்பியபோது கவலையாக இருந்தது. அவன் எனக்கு பால்ய நண்பன்தான். அனால் இப்போது பிரிந்து வாழும் சூழலில் உள்ளோம். இனி மீண்டும் எப்போது சந்திப்போம் என்பது தெரியாது.
அவன் கை குலுக்கி விடைபெற்றபோது, ” கவலைப் படாதே. கூடிய விரைவில் நாம் சந்திப்போம். ” என்றான்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஎன் வீட்டுத் தோட்டத்தில்மலேசியா எழுத்தாளர்கள் வருகையும் , 3 நூல்கள் வெளியீடும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம். திருப்பூர் மாவட்டம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *