எஸ் .ஆல்பர்ட்
கடற்கரைக் காற்று மெய்
தொட்டுத் தடவியுட் புகுந்து
கவிராசன் பட்டத்துப் புரவியைத்
தட்டிக் கொடுக்கக் கொடுக்கத்
தரை விட்டெழும்பிப் பறந்ததம்மா.
கவிராசனும் லேசாகி லேசாகி
நிசராசன் ஆனதுடன்,
முன்பின் யோசனை யில்லாமல்,
சாசகான் பிறப்பெடுத்து;
ஆசை மனைவி மும்தாசைப் பறிகொடுத்து,
தாசுமஹாலைக் கட்டிப் பேரெடுத்தான்.
பின்னர் இன்னும் லேசாகி,
அந்தப் புரத்துக்குள் எட்டிப் பார்த்து
ஆருமில்லை யென்று அந்தரடித்து,
குளத்துக்குள் குதித்து குடைந்து விளையாடி
திணித்துக் களிககையில்
கலகலவெனச் சிரித்து வந்த
கைகொட்டக் குதித்து வந்த
சாலக்காரிகள் சுருக்கென்று நின்று
இந்திரனோ சந்திரனோ இவனென்று மயங்கி,
கணத்தில் இடைமெலிய உடைகழன்று,
செய்வதின்னதெனத் தெரியாது தயங்கித் தயங்கி,
நீரில் இறங்கி, நீரில் இறங்கியதும் மின்
சாரம் பாய சங்கடங்கள் மறைந்ததும்,
சலக்கிரீடை யானதம்மா, ஐயோ எ ன்ன சுகம் !
சொல்ல முடியாத சுகமென்று சொல்லாமல் விட்டு
மேலே போனால்
குளித்துப் பசித்த வயிற்றை எதிர்பார்த்து,
விதவிதமாக கண்ணையும் மூக்கையும் பறித்துக்
கொண்டு, நாக்கைப் பிழிந்தெடுக்கும் பட்சணங்கள்;
பேர் தெரிந்தும் தெரியாததுமாக ஏராளம் ஏராளம் ;
எதைத் தின்பது எதை விடுவது? இத்தனையும் எப்படி?
என்று தடுமாறிக் கொண்டிருந்த போது,
கொழுக்கட்டையைக் கண்டதும்,
விநாயக சதுர்த்திக்கும் வீட்டுக்கும் கட்டிய
மனைவிக்கும் சட் டென் றிரங்கி வந்தான்.
கதைத்துக் கொண்டிருந்து விட்டு தூங்கியவன்,
விடிகாலை யெழுந்து வரப்போகும் விநாயக
சதுர்த்தி பற்றி காலாகாலத்தில் நவரசங்கலந்து,
பக்திப் பாடலொன்றை ஆக்கிக் கையோடு தபாலில்
சேர்த்துவிட்டான்.
அதில் கொழுக்கட்டையும் இடம் பெற்றிருந்தது மெய்.
— எஸ் .ஆல்பர்ட்
- கடல் வந்தவன்
- ஒன்றுமில்லை
- மனிதன் என்பவன் தெய்வமாகலாம்….
- சொல்லத்தான் நினைக்கிறேன் ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- சுப்ரபாரதிமணியனின் நாவல் “ கோமணம் “ மலையாளத்தில் :
- நெஞ்சு வலி
- தொடுவானம் 213. நண்பனின் கடிதம்.
- தப்புக் கணக்கு
- கவனம் பெறுபவள்
- மறைந்த விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்
- பாலின சமத்துவம்
- அக்கா !
- “பிரபல” என்றோர் அடைமொழி
- அந்தரங்கம்
- கடலைக் கொழுக்கட்டையாக்கிய கவிராசன்