தொடுவானம் 216. துரித பயண ஏற்பாடு

This entry is part 12 of 19 in the series 8 ஏப்ரல் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

216. துரித பயண ஏற்பாடு

கடற்கரை வீதியில் பேருந்து விரைந்து சென்றது. சீர்காழி, பூம்புகார், தாண்டி தரங்கம்பாடி சென்றடைந்தது. குளுகுளுவென்று கடற்காற்று வீசியது. கிராமங்கள் அனைத்தும் பசுமையாகக் காட்சி தந்தன. ஆங்காங்கே காவிரி ஆற்றின் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் நிரம்பிய நிலையில் கடலை நோக்கி ஓடிக்கொண்டிருந்தன.வயல்வெளிகளிலெல்லாம் வரப்புகளை மறைத்து உயர்ந்துவளர்ந்துவிட்ட பச்சைப்பசேல் நிறத்து நாற்றுகள் காற்றில் சலசலத்து அழகூட்டின.
வார இறுதி என்பதால் அண்ணனும் அண்ணியும் வீட்டில்தான் இருந்தனர். என்னை மலர்ந்த முகத்துடன் வரவேற்றனர். முன்பே அண்ணி மீன், இறால் வாங்கியிருந்தார். இரவு உணவு சமைக்கலானார்.
உணவு உண்ணும்போது வந்த நோக்கத்தைச் சொன்னேன். அண்ணியின் முகம் வாடியது. அண்ணன் வழக்கம்போல் யோசனையில் ஆழ்ந்தார். எதற்கு இப்படி தங்கைகளுக்கு அவசரத் திருமணம் என்று எண்ணினாரோ.நான் ஒரு முடிவுடன் வந்திருப்பதால் அவரால் வேறு ஏதும் கூறமுடியவில்லை. உணவு உண்டபின்பும் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம். கலைசுந்தரியின் திருமணத்திற்கு தெம்மூர் வருவதாகக் கூறினார்கள்.
மாலையில் வெயில் தாழ்ந்தபோது கடற்கரை சென்று கடல் அலைகளின் இரைச்சல் கேட்டு மகிழ்ந்தவண்ணம் தொலைவில் தெரிந்த தொடுவானத்தைப் பார்த்து ரசித்தேன். தரங்கம்பாடி என்பதற்கு பொருள் பாடும் அலைகள். அந்த அலைகளின் இரைச்சலிலும் ஒரு புராதன இசை இருக்கவே செய்கிறது.
மறுநாள் காலையிலேயே நான் புறப்பட்டுவிட்டேன்.பொறையாரிலிருந்து மயிலாடுதுறைவரை செல்லும் சக்தி விலாஸ் பேருந்தில் ஏறினேன். ஒரு மணி நேரத்தில் மயிலாடுதுறை சேர்ந்துவிட்டது,அங்கு மதுரைக்குச் செல்லும் திருவள்ளுவர் துரித பேருந்தில் ஏறி தஞ்சாவூர், புதுக்கோடடை வழியாக திருப்புத்தூர் வந்தடைந்தேன்.
நடந்தவற்றை கலைமகளிடம் கூறினேன். கலைசுந்தரிக்கும் செல்வராஜுவுக்கும் திருமணம் செய்யப்போவதைக் கேட்டு மகிழ்ந்தாள். கலைமகளுக்கு பாஸ்போர்ட் எடுத்ததாக வேண்டும். அதை சென்னையில்தான் நேரில் சென்று எடுக்கவேண்டும். அதன் வழி முறை தெரியவில்லை.
டாக்டர் செல்லப்பாவிடம் அது பற்றி கேட்டேன். அவர் என்னை நகரத் தந்தை திரு. நாகராஜனைப் பார்த்தால் அவர் உதவுவார் என்றார். நான் அவரை பஞ்சாயத்து போர்டு கட்டிடத்தில் இருந்த அவருடைய அலுவலகத்தில் சென்று பார்த்தேன். அவர் சற்று பருமனான உருவத்தில் நல்ல நிறத்துடன் காணப்பட்டார். அவர்தான் மலேசியா வள்ளல் அருள்மாமணி ஆறுமுகம் பிள்ளையின் மூத்த மகன். என்னை அன்புடன் வரவேற்றார். என்னை அறிமுகம் செய்துகொண்டேன்.தங்கைக்கு ஒரு இந்திய பாஸ்போர்ட் எடுக்கவேண்டும் என்றேன். அவளின் புகைப்படங்களுடன் பிறந்த சான்றிதழ் எடுத்துக்கொண்டு சென்னையில் தம்மடைய அலுவலகம் சென்று பார்க்கச் சொன்னார். என்னை இரண்டொரு நாட்களில் அங்கு செல்லச் சொன்னார். நான் நன்றி சொல்லிவிட்டு திரும்பினேன். எனக்கு வியப்பாகவே இருந்தது. டாக்டர் செல்லப்பாவிடம் கூறினேன். அவர் சென்னையில் உள்ள அவருடைய அலுவலகத்தில் பாஸ்போர்ட் அலுவலக தொடர்பு உள்ளது என்றும், ஒரே நாளில் அதை அவர்கள் மூலம் வாங்கிவிடலாம் என்று கூறினார்.
இரண்டு நாட்களில் கலைமகளுடன் நான் சென்னை சென்றேன். தாம்பரத்தில் அத்தை வீட்டில் தங்கினோம். மறுநாள் காலையில் தேனாம்பேட்டையில் இருந்த அந்த அலுவலகம் சென்றோம். நாங்கள் வருவது அங்கு தெரிந்திருந்தது.அங்கிருந்த ஒருவர் உடன் எங்களைக் கூட்டிக்கொண்டு ஒரு வாகனத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் சென்றார்.அங்கு நடந்தது ஆச்சரியமாக இருந்தது. பலர் காத்திருந்தபோதிலும் எங்களை நேராக தலைமை அதிகாரிடம் இட்டுச் சென்றார். அங்கு ஓர் இந்திய பாஸ்போர்ட் எடுத்து அதில் தங்கையின் பெயரையும் இதர தகவல்களையும் எழுதினார்.அதை அந்த தலைமை அதிகாரியிடம் தந்தார். அவரிடம் அதற்கான தொகையைத் தந்தேன். அவரும் அதில் கையொப்பமிட்டு என்னிடம் தந்தார்! அதை என்னால் நம்பமுடியாமல் பிரமித்துப்போனேன். பின்பு எங்களை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டார். நான் அவருக்கு நன்றி சொன்னேன். மின்சார தொடர் வண்டி ஏறி தாம்பரம் திரும்பினோம்.
கலைசுந்தரியின் திருமணம் வரை கலைமகள் தங்கையுடன் இருப்பது நல்லது. கலைமகளும் சிங்கப்பூர் செல்லுமுன் ஊரில் அம்மா அப்பா தங்கையுடனும் இருக்க விரும்பினாள். அன்று இரவே சிதம்பரம் புறப்பட்டோம். தெம்மூர் சென்று கலைமகளை வீட்டில் விட்டுவிட்டு திருப்பத்தூருக்கு புறப்பட்டேன்.
நண்பர்களைச் சந்தித்தேன். என்னுடைய திட்டத்தைக் கேட்டு கவலை கொண்டனர். நான் இங்கேயே இருந்து மருத்துவமனையிலும், ஆலயத்திலும் மாற்றங்கள் கொண்டு வருவேன் என்று அவர்கள் ஆவலுடன் இருந்தனர். இப்போது திடுதிப்பென்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு சிங்கப்பூர் செல்வது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே! பால்ராஜ் என்னை திரும்பி வந்துவிடச் சொன்னார். கிறிஸ்டோபார் கலைமகள் திருமணம் முக்கியம்தான் என்றார்.நான் அங்கு தேர்வு எழுதுவது பற்றி அவர் மெளனம் காத்தார். அவருக்கு கடவுள் பக்தி அதிகம். கடவுளின் அழைப்பு பற்றி நிறைய நம்புவார். அதனால்தான் நான் திருப்பத்தூருக்கு கடவுளால் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பதில் தீரிக்கமான நபிக்கைக் கொண்டிருந்தார்.. இதுவும் கடவுளின் செயல்தானா என்பதில் அவருக்கு குழப்பம் நிலவியிருக்கலாம்.
மருத்துவமனையையும் ஆலயத்தையும் நினைக்கும்போது எனக்கும் உள்ளூர விசனமாகத்தான் இருந்தது. வேலையும் ஊதியமும் ஒருபுறம் இருந்தாலும் ஏழை எளியோருக்கும், தொழுநோயாளிகளுக்கும், விழியிழந்தோர்க்கும் சேவை செய்யம் வாய்ப்பு உள்ளது. சிங்கப்பூரில் அல்லது மலேசியாவில் இத்தகைய வாய்ப்பு இல்லாமல் போகலாம். அங்கே சொகுசான வாழ்க்கைதான். இங்குபோல் கடுமையான வெயிலில் வாடவேண்டியதில்லை. வானத்தைப் பார்த்து பருவ மழைக்காக ஏங்க வேண்டியதில்லை. வருடந்தோறும் வெயிலும் மழையும் மாறிமாறி வரும் பருவநிலை கொண்ட நாடுகள் அவை. சுற்றிலும் கடலால் சூழப்பட்டுள்ள சிங்கப்பூரில் “கான்கிரீட் காடுகள் ” வானளாவி வளர்ந்து நின்றாலும் அங்கு குளுமைதான் நிலவியது. இரவில் சிங்கப்பூர் சிங்காரபுரிதான்.மலேசியா முழுதும் பசுமையான செம்பனைக் காடுகள் நிறைந்து மழைக்குப் பஞ்சம் இல்லாத பசுமையான நாடு. இவ்விரு நாடுகளையும் தமிழகத்துக்கு ஒப்பிட்டால் தாழ்ந்த தமிழகம் என்றே கூறவேண்டும்.
நான் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஃப்ரடரிக் ஜான் அவர்களிடம் சிங்கப்பூர் செல்வதைக் கூறி ஒரு மாதம் விடுப்பு கேட்டேன். அவர் சரியென்றார். போகும் போது விடுப்பு எடுக்கச் சம்மதித்தார். அவரிடம் அங்கு நான் தேர்வு எழுதப் போவது பற்றி சொல்லவில்லை. வீட்டை காலி செய்யும் எண்ணம் இல்லை. தேர்வு முடிவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அங்கு வேலை கிடைத்துவிட்டால் திரும்ப வந்து முறைப்படி வீட்டை காலி செய்யலாம். இல்லையேல் மீண்டும் இங்கேயே வேலையைத் தொடரலாம். பின்பு வேலூரில் நிபுணத்துவ மருத்துவம் பயில முயற்சி செய்யலாம்.
மருத்துவமனையில் வழக்கம்போல் வேலை சீராக நடந்துகொண்டிருந்தது. இன்னும் பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். ஏறக்குறைய அனைத்து ஊழியர்களும் என்மீது அன்பாகவே பழகினார். தலைமை மருத்துவருக்கு வேண்டிய ஒரு சிலர் எனக்கு எதிரிகள் போன்றே செயல்பட்டனர். அவர்களில் தேவசகாயம், ஜான் ரத்தினம், பாலசுந்தரம், பிச்சை, மைக்கல், கண்ணுசாமி, ஞானப்பிரகாசம், ஜெயபால், செல்லையா, குழந்தைசாமி, சின்னக்கருப்பன், பகீரதி, மங்களராஜ், லவணலீலா, சாந்தா, ஜெயக்கொடி, சந்திரா விக்லீஸ், தங்கராஜ், கணேசன், சின்னக்கருப்பன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். நான் கூடுமானவரை அவர்களிடம் அன்பாகவே இருக்கலானேன். தலைமை மருத்துவ அதிகாரியிடம் அவர்கள் விசுவாசமாக இருப்பதை நான் தடை செய்ய இயலாது. அவர் மூலம் அவர்கள் பல சலுகைகள் பெற்றிருக்கலாம். அதற்கான நன்றிக்கடன் அவர்கள் பாராட்டலாம். அவருக்கு ஆதரவாக இருப்பதால் என்னை அவர்கள் பகைத்துக்கொள்ள தேவை இல்லைதான். ஆனால் என்ன செய்வது. மருத்துவமனை ஊழியர்களிடையே இரண்டு பிரிவிவுகள் உண்டாகிவிட்ட்து.இதற்கெல்லாம் காரணம் மனமகிழ் மன்ற தேர்தல்தான். முறையாக வென்ற என்னை செயலராக இயங்க விடாமல் போனது என் பக்கம் பெரும்பான்மையான ஊழியர்களைக் கொண்டுவந்து விட்டது.
என் பக்கம் பால்ராஜ், கிறிஸ்ட்டோபர், தேவையிரக்கம் போன்ற முக்கிய சிலருடன் ஏராளமான கடைநிலை ஊழியர்கள் இருந்தனர். ஆனால் அவர்கள் என் ஆதரவாளர்கள் என்பதை வெளியில் காட்டிக்கொள்ளத் தயங்கினர். அப்படி காட்டிக்கொண்டால் வேலைக்கு ஆபத்து வரும் எனவும் அஞ்சினர்.
இந்தச் சூழலில் நான் திடீனென்று சிங்கப்பூர் சென்றுவிட்டால் இவர்களின் நிலை என்ன ஆகும் என்று நினைத்தபோது எனக்கு அச்சம் உண்டானது. பாவம் அவர்கள். என்னை நம்பி தலைமை மருத்துவ அதிகாரியை எதிர்த்து எனக்கு வாக்களித்தவர்கள்.நான் இங்கு இல்லாதபோது நிச்சயமாக அவர்கள் பழிவாங்கப்படலாம்!
நான் சிங்கப்பூர் செல்லும்வரை திருப்பத்தூரில் இருந்த நாட்களில் இத்தகைய குற்ற உணர்வால் தடுமாறினேன். அப்போதெல்லாம் எனக்கு உற்ற துணையாக இருந்து ஆறுதல் சொன்னார் நண்பர் பால்ராஜ். நான் தனியாக வீட்டிலிருந்ததால் இரவில் வெகு நேரம் என்னுடன் இருந்துவிட்டுச் செல்வார்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationமருத்துவக் கட்டுரை பக்க வாதம்பூங்காவனம் இதழ் 29 இதழ் பற்றிய கண்ணோட்டம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *