தூக்கிய திருவடி

This entry is part 18 of 19 in the series 15 ஏப்ரல் 2018

கே.எஸ்.சுதாகர்

ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள்.

“காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்”

சில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள் நடக்கின்றன. நம்பர்பிளேற் திருட்டு, காருக்கு கல்லுகளை அடுக்கிவிட்டு நான்கு ரயர்களையும் கழட்டிக் கொண்டு போதல், பெற்றோலை உறுஞ்சி எடுத்தல் போலப் பல வகை.

“பதறாதையப்பா. முதலிலை வேலை செய்யிற இடத்துக்கு இண்டைக்கு வேலைக்கு வரேலாது எண்டு சொல்லும். பிறகு பொலிசுக்கு அடிப்பம்” என்றான் கணவன் குமரேசன்.

பிள்ளைகள் வீட்டில் இடி விழுந்தாலும் எழும்ப மாட்டார்கள்.

பொலிசுக்குச் சொன்னார்கள். அவர்கள் விபரங்களைக் கேட்டுப் பதிந்து கொண்டார்கள். கிடைத்தால் அறிவிப்போம் என்றார்கள். அவர்களுக்கு இவற்றைவிட நாட்டில் வேறு எக்கச்சகமான சங்கதிகள் இருக்கு.

“ஆரோ தறுதலையள் விளையாட்டுக்குச் செய்திருக்குதுகள். உந்தக் காரைக் கொண்டுபோய் என்ன செய்யப் போறான்கள். பெற்றோல் முடிய எங்கையேன் விட்டிட்டுப் போவான்கள். காரும் புதுசில்லைத்தேனே!” என்றான் குமரேசன்.

“புதுக்கார் இல்லையெண்டாலும் என்ரை ராசியான கார். ஒருநாளும் எனக்குப் பிரச்சினை தந்தது கிடையாது. இஞ்சை வந்து என்ரை உழைப்பிலை வாங்கின முதல் கார்” பெருமிதம் பேசினாள் ஜெயந்தி.

இன்சூரன்ஸ் கொம்பனிக்கு ரெலிபோன் செய்து விபரத்தை அறிவித்தார்கள்.
“இரண்டு கிழமைகள் பொறுத்திருங்கள். அதன் பின்னர்தான் ஏதாவது செய்ய முடியும்” அவர்கள் சொன்னார்கள்.

காரை ஜெயந்தி ஃபுல் இன்சூரன்ஸ் செய்திருந்தாள். ஏறக்குறைய ஒரு இலட்சம் கிலோமீற்றர்கள் ஓடிவிட்டது. கார் கிடைக்காவிட்டால் பத்தாயிரம் டொலர்கள் கிடைக்கும். குமரேசன் கார் கிடைக்கக் கூடாது என விரும்பினான். ஜெயந்தி கார் வேண்டும் என தினமும் கடவுளைப் பிரார்த்தித்தாள்.

பலன் கிட்டவில்லை. இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில் பத்தாயிரம் டொலர்கள் கிடைத்தன. அத்துடன் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் அந்தக் காரின் கணக்கை மூடிவிட்டார்கள்.

கணக்கை மூடி மூன்றாம் நாள், கன்பரா நகரத்தில் கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தகவல் சொன்னார்கள்.

அது அவர்களுக்கு புதிய தலையிடியைக் கொடுத்தது. இனி என்ன செய்யலாம்? மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டார்கள்.

”காரின் பெறுமதி உண்மையிலை இப்ப பத்தாயிரம் வராதப்பா! உனக்கு லக். இத்தோடை உந்தக் காரைக் கை கழுவி விடு ஜெயந்தி” என்றான் குமரேசன்.

“முடியாது. எனக்கு அந்தக் கார் தான் வேண்டும்” பிடிவாதம் கொண்டாள் ஜெயந்தி.

இன்சூரன்ஸ் கொம்பனியுடன் தொடர்பு கொண்டபோது, ”கணக்கை மூடியாகிவிட்டது இனி ஒன்றும் செய்யமுடியாது. அக்‌ஷிடென்ற் கார்கள் ஏலம் விடப்படும் கொம்பனிக்கு நாங்கள் உங்கள் காரையும் அனுப்புவோம். விருப்பமானால் அவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்” என்று சொல்லி அவர்களின் முகவரி தொலைபேசி எண்களைக் கொடுத்தார்கள்.

ஏலம் விடும் கொம்பனியுடன் தொடர்பு கொண்டாள் ஜெயந்தி.

“எனக்கு என்னுடைய கார் வேண்டும். அது என் ராசியான கார்
எவ்வளவு என்றாலும் பரவாயில்லை” ஜெயந்தி சொல்ல அவர்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.

“அப்படி ஒன்றும் செய்யமுடியாது. உங்களுடைய காரும் அக்‌ஷிடென்ற் பட்ட கார்களுடன் ஒன்றாக ஏலத்திற்கு வரும். ஏலம் போட்டு எடுங்கள். பொதுவாக ஆயிரம் இரண்டாயிரம் டொலர்களுக்குள்தான் வரும்.”

ஆயிரம் இரண்டாயிரம் டொலர்களுக்குள் தான் வரும் என்ற செய்தி ஜெயந்திக்குப் பாலை வார்த்தது. ஏற்கனவே பத்தாயிரம் பெற்றுவிட்டாள். உஷாரானாள். சொந்தக் காரையே ஏலத்தில் எடுக்க வேண்டிய தலைவிதி.

குமரேசன் எது சொன்னாலும் பிரச்சனை தலைவிரித்தாடும் எனப் பயந்து ஜெயந்தியின் செயல்கள் எல்லாத்துக்கும் ஆமாப் போட்டான்.

ஏலம் நடைபெறும் நாள் வந்தது. காரை எப்படியாயினும் வாங்கியே ஆக வேண்டும் என்ற தோரணையில் குமரேசனும் ஜெயந்தியும் புகையிரதம் மூலம் வந்திருந்தார்கள். ஏலத்தில் விடப்படும் வாகனங்களைப் பார்வையிட ஒரு மணி நேரம் ஒதுக்கியிருந்தார்கள். ஜெயந்தியின் காரின் முன்புறம் சிறிது சேதமடைந்திருந்தது.

எத்தனையாவது காராக இவர்கள் கார் வரும் என்பது தெரியாததால் ஆரம்பம் முதலே காத்திருந்தார்கள். கார்கள் ஒவ்வொன்றாக ஏலத்திற்கு வரத் தொடங்கின. ஒவ்வொரு வாகனமும் குற்றியிரும் குலையுயிருமாக இன்னொரு வாகனத்தில் ஏறி வந்து கொண்டிருந்தன. வாகனங்களைப் பார்க்கப் பார்க்க பகீரென்று இருந்தது ஜெயந்திக்கு. குமரேசன் கண்ணை மூடி ஒண்றரைக் கண்ணால் பார்த்தான். எந்தக் காரும் 1500 டொலர்களுக்கு மேல் விலை போகவில்லை.

ஜெயந்தியின் கார் வந்ததும், “ஃபைவ் ஹன்றட் டொலர்ஸ்” என்று கத்தியபடியே கையைத் தூக்கினாள் ஜெயந்தி. ஏலம் தொடங்கி இரண்டு மணித்தியாலங்கள் அப்படியொரு பெண்மணி அங்கே நிற்கின்றாள் என்பதை அறிந்திராத எல்லோரும் அவளை வினோதமாகப் பார்த்தார்கள். அதன்பின்னர் தூக்கிய கையைக் கீழ் இறக்கவில்லை ஜெயந்தி. ஒரு சீனாக்காரன் 2000 டொலர் வரையும் ஏற்றிவிட்டு நாக்கைத் தொங்கப் போட்டான். ஜெயந்திக்கும் குமரேசனுக்கும் ஒரே சந்தோசம்.

“டேவிட்… நாலாயிரம் டொலர்கள். டேவிட் நாலாயிரம் டொலர்கள்” எனச் சத்தமிட்டான் ஏலம் கூறுபவன். ஜெயந்தி, யார் அந்த டேவிட் என நாலாபுறமும் தேடினாள். அப்படி ஒருவரையும் அங்கு காணவில்லை. எல்லாரும் அங்கே ஒரு மூலையில், இதுவரையும் தேடுவாரற்றுக் கிடந்த கொம்பியூட்டர் ஒன்றின் ஸ்கிரீனைப் பார்த்தபடி இருந்தார்கள்.

அப்போதுதான் இன்ரனெற் மூலமும் ஏலம் கேட்கலாம் என்பதை ஜெயந்தியும் குமரேசனும் அறிந்து கொண்டார்கள். ஜெயந்தி விடவில்லை. அவனுடன் போட்டி போட்டாள். எல்லோரும் ஜெயந்தியைப் பார்த்தபடி இருந்தார்கள். அந்தப் பார்வை அவளுக்கு நட்டுக் கழன்றுவிட்டது என்பதான பார்வை.

கடைசியில் ஆறாயிரம் டொலர்கள் வரை ஏற்றிவிட்டு டேவிட் ஒழிந்து கொண்டான். ஜெயந்தி ஆறாயிரத்து நூறு டொலர்கள் கொடுத்து காரைப் பெற்றுக் கொண்டாள்.

”நீர் அண்டைக்கு ஒக்சன் நடத்துறவனோடை கதைக்கேக்கை, எவ்வளவு எண்டாலும் பரவாயில்லை. எனக்குக் கார்தான் வேணும் எண்டு சொன்னீர். அதுதான் அவன் விளையாடி இருக்கிறான். தன்ரை நண்பர் ஒருத்தனைக் கொண்டு இன்ரனெற் மூலம் ஏலத்தைக் கூட்டிவிச்சிருக்கிறான்.”

“அவன் கூட்டட்டும். எனக்குத்தானே தெரியும் என்ரை காரின்ரை பெறுமதி. இன்சூரன்ஸ்காரன் எவ்வளவு தந்தவன் எண்டதை மறந்திட்டியளே! ஒருநாளும் என்ரை கார் பிரச்சினை தந்ததில்லை. தெரியும் தானே!”

“தூக்கிய திருவடி என்று கேள்விப்பட்டிருக்கிறன். இண்டைக்குத்தான் தூக்கிய திருக்கையைப் பார்த்திருக்கிறன்” என்று நக்கலடித்தான் குமரேசன்.

Series Navigationகடலூர் முதல் காசி வரைஎதிர்காலம்…

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *