சு. இராமகோபால்
அம்மா சொன்னதும் கண்ணான், அதாவது சின்னக்கண்ணு சாமி, ஒரே குசியாகி விட்டான். அவன் பெரிய மாமா இன்று அவர் ஊருக்குப் போகும்போது அவனும் போகப் போகிறான். பெரிய மாமாவும் வேறு உறவினர்களும் ஏதோ விசேசத்திற்கு வந்து மூன்று நாட்களாக அவன் வீட்டில் தங்கியிருந்தனர். வந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள், வயதானவர்கள். அவர்களோடு அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
கண்ணான் அவன் பெற்றோர்க்கு ஒரே பிள்ளை. பள்ளி விடுமுறையில் இருந்தான். அவனுக்கு இரண்டு மூன்று நண்பர்கள் இருந்தாலும், எவ்வளவு நேரம் அவன் வெளியே விளையாட முடியும்? அப்படி அவர்களுடன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்ததும் மறுபடியும் தனியாகத்தானே இருக்கவேண்டும்? அவன் நண்பர்களைப்போல இன்னும் அவனுக்கு ஒரு அண்ணனோ தம்பியோ அல்லது ஒரு அக்காவோ தங்கையோ இல்லையே!
பெரிய மாமா அவன் அம்மாவின் அண்ணன். அவருக்கு நிறைய குழந்தைகளிருந்தனர். கோபு, அதாவது கோதண்டராமன், அவருடைய கடைசிப் பையன். கோபுவும் ஏறக்குறைய கண்ணான் வயதுதான். அவன் சகோதர சகோதரிகளெல்லாம் அவனைவிட மூத்தவர்கள். ஏழெட்டு வயது பெரியவர்கள். அதனால் அவர்களும் கோபுவோடு அதிகமாக ஒன்றும் விளையாடுவதில்லை. கோபுவும் கண்ணானும் விடுமுறை முடியும் முன்னர் கொஞ்ச நாள் ஒன்றாக இருக்கட்டும் என்று பெரிய மாமா தங்கையைச் சமாதானம் செய்து அவள் ஒரே மகனை அவருடன் அழைத்துப் போகிறார்.
மாமாவின் குதிரை வண்டியில்தான் அம்மாபட்டிக்கு வந்து சேர்ந்தனர். கண்ணான் அங்கே பல தடவை போயிருக்கிறான். அவன் பிறந்ததே அம்மாபட்டியில்தான். போனதும் மாமாவின் வீட்டில் ஒரு திண்ணையைக் காட்டி எல்லோரும் அவனைக் கேலி செய்வார்களென்று அவனுக்குத் தெரியும். அவன் பிறந்தபோது அவன் அம்மாவை அந்தத் திண்ணையில்தான் வைத்திருந்தார்களாம். அந்த ஊருக்கு முதல் முதலாக ஒரு வெள்ளைக்கார டாக்டர் ‘மோட்டார் காரில்’ அவன் அம்மாவின் பிரசவத்திற்கு வந்தாராம்! இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அவனும் அந்த வெள்ளைக்காரன் தேசம் சென்று ஒரு டாக்டர் ஆவானென்று இப்போது எப்படி அறிவான்? அனைவரும் ஊருக்கு அவன் வந்ததும் ‘பண்ணையார் வீட்டுக்கு டாக்டர் கண்ணு வந்திருக்கான்’ என்பார்கள்! கண்ணான் எதையும் பொருட்படுத்தாமல் சிரித்துக் கொண்டே போய்விடுவான்! அவன் இப்போது அந்த வயதில் இல்லை.
வண்டி வாசலில் நின்றதும் அங்கே கோபு ஓடிவந்தான்! அவனுக்கு முன்பே அவன் அப்பா கண்ணானை அழைத்து வருவதாக உறுதியளித்திருந்தார். பழங்கள், பலகாரங்கள், மாங்காய் ஊறுகாய், வத்தல் போன்றவை இருந்த பிரம்புக் கூடைகளை வண்டியிலிருந்து வீட்டிற்குள் எடுத்துச் செல்ல உதவியபின், கோபு கண்ணானை இழுத்துக் கொண்டு அவன் அறைக்குள் ஓடினான்.
கோபுவின் அறையில் ஒரு விட்டத்திலிருந்து தொங்கிக்கொண்டிருந்த கூண்டில் பச்சைக் கிளியொன்று அதன் பக்கத்தில் இருந்த கிண்ணத்தில் எதையோ கொரித்துக் கொண்டிருந்தது. “கண்ணா, பாத்தியா! இதா எங்கிளிப்பிள்ளை! பார், எவ்வளவு அழகா இருக்கு! நான் சும்மானாச்சிக்கும் சொல்லலெ… இது எங்கோட பேசும்டோய்!” என்று உற்சாகத்துடன் கோபு சொன்னான்.
கண்ணானுக்கு கிளி பச்சையாய் இருக்குமென்று தெரியும். படத்தில் பார்த்திருக்கிறான். இவ்வளவு அருகிலிருந்து, அதுவும் நிஜக்கிளியை, இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறான். அது மரக்கிளையின் மேலல்லவா இருக்கவேண்டும், ஏன் இப்படி ஒரு கூண்டிற்குள் உட்கார்ந்திருக்கிறது என்று அவனுக்குப் புரியவில்லை.
அவன் கோபுவைக் கேட்டான். அவன், “சும்மாடா… அதெல்லாம் எனக்குத் தெரியாது! டேய், இதை எங்கோட பேசறதைப் பார்க்கிறயா?” என்று கூறிவிட்டு, “ஏய், கிளிப்பிள்ளெ! கண்ணானுக்கு வணக்கம் சொல்லு!” என்று கூண்டின் அருகில் சென்று கிளியோடு கொஞ்சினான். கிளி அவனைப் பொருட்படுத்தாமல் கொரித்துக் கொண்டே இருந்தது. “ஏன் பேசாமெ இருக்கிறெ? சும்மா சொல்லு, வணக்கம்! சொல்லு, வணக்கம்! வணக்கம்… வணக்கம்… சும்மா சும்மா பேசு, சும்மா பேசு!” என்று கோபு கோபத்தோடு கூண்டைத் தட்டினான்.
கண்ணான், “டேய், கோபு! கிளி எப்படிடா பேசும்? நீ சும்மாதானே சொல்றெ, இல்லெ?” என்றான்.
திடீரென்று கிளி கொரிப்பதை நிறுத்திவிட்டு, ஒரு தடவை இறக்கையைப் பிரித்து எழுந்து, “சும்மா… சும்மா… சும்மா” என்று கத்திவிட்டு, மேலும் கீழும் தன் தலையை அசைத்தது!
கோபு உடனே, “நான் சும்மா சொல்லலே! கண்ணா, கிளி எப்படிப் பேசிச்சு பாத்தியா!” என்று குதித்தான்.
கண்ணானுக்கு வியப்பாக இருந்தது. அவனுக்கு அது என்ன கத்தியது என்று முதலில் நன்றாக விளங்கவில்லை. பிறகு எதோ அது அம்மா, அம்மா என்று கத்தியதாக அவனுக்குக் கேட்டதுபோல் இருந்தது. கண்ணான் அவன் அம்மா பிள்ளை. அவளைவிட்டு வெகுநேரம் அவனால் பிரிந்திருக்க முடியாது. மாமா ஊருக்கு வந்த சிறிது நேரத்திலேயே அம்மா ஞாபகம் வந்துவிட்டது. கண்ணானுக்கு அந்தக் கிளிக்கும் அப்படித்தானே இருக்குமென்று தோன்றியது.
“போடா, கிளி எப்படிப் பேசும்? நீ என்னமோ பேசச் சொல்றே, அது என்னமோ சொல்லுது? அது அதனோட அம்மாவைக் கூப்பிடுது! சரி, வா வெளியே போகலாம்!”
“இல்லெடா, அது நல்லாப் பேசும்! இன்னிக்கி அதுக்கு எதோ ஆயிடுச்சு… சரி, போலாம்! அப்புறம் காட்றேன்!”
கோபுவுக்குக் கிளியின் மேல் கோபம் கோபமாக வந்தது. நேற்றுவரைக்கும் நன்றாகப் பேசிக்கொண்டிருந்த கிளிக்கு இன்று என்னாயிற்று என்று அவனுக்குத் தெரியவில்லை. கண்ணானுக்குக் காட்டி எவ்வளவு பெருமைப்படலாமென்று எண்ணிக்கொண்டிருந்தான்! கிளி இப்படி ஏமாற்றிவிட்டதே! ஆனால் கண்ணான்மேல் அவனுக்கு எந்தக் கோபமும் வரவில்லை.
அவர்கள் அறையிலிருந்து வெளியே வருமுன், கோபுவின் அம்மா அவர்களைத் தேடி அங்கே வந்துவிட்டாள். “கண்ணா! கோபு! எங்கேடா போனீங்க? உங்களெ எங்கெல்லாம் தேடறது?”
“அத்தை, கோபு இந்தக் கிளி நம்மைப்போலப் பேசுங்கிறா? நிஜமா, அத்தெ?” என்று கண்ணான் அவளிடம் கேட்டான்.
“அதான் அவன் உன்னை வந்ததும் வராமெ இங்கே இழுத்துட்டு வந்திருக்கான்! ஆமா, கண்ணா! அது என்னவோ பேசும்… கிளிப்பிள்ளெ மாதிரி சொல்றதெச் சொல்றான்னு சொல்வாங்கல்ல, அதான்… இப்ப சாப்பிட வாங்க!”
“ம்… இப்ப நாங்க வெளியே விளையாடப் போகணும்!” என்று கோபு ஆட்சேபித்தான்.
“டேய், கோபு! அவன் இப்ப தாண்டா ஊரிலிருந்து வந்திருக்கான்! கொஞ்சம் அவனைச் சும்மா விடேன்! பசியாய் இருப்பான்… எப்ப சாப்பிட்டானோ? பொழுதும் சாய்ஞ்சாச்சு… வந்து மொதல்லெ சாப்பிடுங்க! எல்லாரும் சாப்பிட்டாச்சு! நானும் நீங்க ரெண்டு பேரும்தான் பாக்கி… வாங்க, தூங்கிட்டு நாளைக்கு வெளையாடப் போகலாம்!”
*
மேற்குப் புறத்து வீட்டின் சேவல் மூன்றாவது தடவை கொக்கரெக்கொ என்று கூவிவிட்டது. தூரத்தில் இன்னொன்று அதை இருமுறை ஆமோதித்துவிட்டது. சமையலறையில் பாத்திரங்களின் சத்தத்துடன் கோபுவின் சின்ன அக்கா பொன்னி அத்தையுடன் என்னமோ பேசிக்கொண்டிருந்தது கண்ணான் காதில் விழுந்தது. அவனுக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. நன்றாக விழித்துக் கொண்டான். ஆனால் பக்கத்தில் கோபு இன்னும் தூங்கினான்.
அறையில் சன்னலும் கதவும் மூடியிருந்ததால் கொஞ்சம் இருட்டாகவே இருந்தது. திடீரென்று அறைக்குள்ளே யாரோ பேசும் குரல் கேட்கத் தொடங்கியது. “வநக்கம்… சும்மா… சும்மா… வநக்கம்… எந்திர்… வநக்கம், எந்திர்…” கூடவே படபடவென்று வேறொரு சத்தமும் வந்தது. கண்ணானுக்கு சரியாக ஒன்றும் புரியாமல் பதற்றமேற்பட, கோபுவைத் தட்டி எழுப்பினான்.
“கோபு, டேய்! உள்ளே யாரோ இருக்காங்கடா! பயமாயிருக்கு! எழுந்து பாருடா, டேய்!”
கோபு கண்விழித்ததும் கிளி முன்போல் பேசிக்கொண்டிருப்பதை அறிந்து படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான்!
“டேய், கண்ணா! சும்மா இரு… அது என் கிளிடா! நான் சும்மா சொல்லலே, அது பேசும்னு… இப்ப பார்! நான் சொன்னமாதிரி சும்மா பேசிட்டிருக்கு! அது எனக்கு காலை வணக்கம் சொல்லி எந்திரிக்கச் சொல்லுது! அதான் அதுக்கு நான் சொல்லித் தந்தெ, அது சொல்லுது பாரு!”
கோபு உற்சாகத்துடன் எழுந்து ஓடிப்போய்ச் சன்னலைத் திறந்தான். கண்ணானும் எழுந்தான். இருவரும் கூண்டின் அருகில் சென்று நின்றனர். கிளி கம்பி வளையத்தில் உட்கார்ந்துகொண்டு முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டிருந்தது. கோபு அருகில் போனதும், “வணக்கம்! கிளிப்பிள்ளெ!” என்றான். “சும்மா சும்மா வநெக்கம் வநெக்கம் எந்திர் சும்மா எந்திர் வந்…” என்று கிளி கீச்கீச்சென்று கத்திவிட்டு, வளையத்தை விட்டுக் கூண்டில் அங்குமிங்கும் பறந்துவிட்டு, மறுபடியும் வளையத்தில் போய் அமர்ந்துகொண்டது!
கிளி செய்ததெல்லாம் கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருந்த கண்ணானுக்கு எல்லாம் பெரிய அதிசயமாக இருந்தது. அது கத்தியதெல்லாம் கீச்கீச்சென்று அவனுக்குப் பட்டாலும், கோபு சொன்னபிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது கோபு சொன்னதைத் தான் திரும்பிச் சொன்னது புரிய ஆரம்பித்தது. என்றாலும், கிளி அப்படிப் பதற்றமாக, இறகைக் கூண்டுக் கம்பிகளோடு அடித்துக்கொண்டு அலைமோதியதைப் பார்த்தபோது அவனுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது. இறக்கைகள் ஒடிந்துவிட்டால் கிளி எப்படிப் பறக்குமென்று கண்ணான் கவலைப்பட்டான்.
கோபு எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவனுக்கு நேற்றிருந்த கோபம் அடியோடு மறந்துவிட்டது. மூலையிலிருந்த தகரடப்பாவிலிருந்து கை நிறைய தானியத்தை அள்ளி, கூண்டின் சிறிய கதவைத் திறந்து கிளியின் முன்னிருந்த கிண்ணத்தை நிரப்பிய பின், மறுபடியும் அந்தக் கதவை முன்போல் விரைந்து மூடினான்.
இரவு தூங்குவதற்குமுன்பே அடுத்த நாள் என்ன செய்யலாமென்று திட்டமிட்டிருந்தனர். காலை உணவு முடிந்ததும் அதற்கு இருவரும் ஆயத்தமாயினர்.
பிள்ளையார் கோவில் கோபுவின் வீட்டிற்கு அருகில் இருந்தது. கோவில் முன் பெரிய காலியிடமொன்று உண்டு. ஊர்ப்பையன்கள் மாலை நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் அங்கே கூடி விளையாடுவது வழக்கம். சென்ற மாதம் மாரியம்மன் திருவிழாவில் கோபுவின் சித்தப்பா அவனுக்கு இரண்டு சிவப்பு ரப்பர் பந்துகள் வாங்கித் தந்திருந்தார். அவற்றில் ஒன்றை எங்கோ தொலைத்துவிட்டதால், இருந்ததை எடுத்துக் கொண்டு கோபுவும் கண்ணானும் அங்கே கிளம்பினர்.
கோவிலுக்குள் பண்டாரம் சாமிக்குப் பூசை பண்ணும் மணியோசை வந்து கொண்டிருந்தது. அதைக் கேட்டுக்கொண்டே கொஞ்ச நேரம் இருவரும் பந்தை ஒருவர் வீச மற்றவர் பிடித்து விளையாடினர். பின் அதைத் தரையில் ஓங்கியடித்து மேலே சென்று கீழ்வரும்போது இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பிடித்தனர். கோபு கொழுகொழுவென்று குண்டாக இருப்பான். உடம்பை அதிகமாக அலட்டிக்கொள்ள மாட்டான். கண்ணான் ஒல்லி. மிகவும் சுறுசுறுப்பானவன். எனவே அவன் வேகமாக ஓடி வெகு சுலபமாகக் குதிதது முதலில் பந்தைப் பிடித்துக் கொண்டிருந்தது கோபுக்கு ஏமாற்றம் கொடுத்தது. பந்து விளையாட்டில் அவன் நாட்டம் குன்றியது.
கோவிலிற்கு அண்மையிலிருந்த தோட்டத்தில் ஒரு பெரிய புளியமரம் இருந்தது. அதன் கிளையிலிருந்து ஊஞ்சலாடக் கட்டிவிடப்பட்ட கயிறு கோபுவின் கண்ணில் பட்டது. கண்ணானுக்கு அதில் ஆர்வமூட்டி, பந்தாட்டத்தை நிறுத்திவிட்டு, இருவரும் அங்கே ஓடினர்.
ஒரு ஊஞ்சல்தான் இருந்தது. யாரோ உட்கார்வதற்குப் போட்ட ஒரு துண்டு இன்னும் அதில் இருந்தது. ஒருவர் தள்ளிவிட மற்றவர், மாறி மாறி, ஆடினர். கண்ணான் கோபுவை உயரத்திற்குத் தள்ளினால், “ஐயோ! வேணாம், வேணாம்!” என்று கோபு கெஞ்சினான். கண்ணான் உரக்க சிரித்துக்கொண்டு, வேண்டுமென்றே தூரத் தள்ளிவிட்டான்! கோபுக்கு எப்படியோ அந்த ஆட்டம் மிகவும் பிடித்துவிட்டது. அவனும் விழுந்து விழுந்து சிரித்தான். ஆனால் அடிக்கடி ஊஞ்சலிருந்து நழுவி விழுந்தான். கோபு கண்ணானையும் அவன் தள்ளிவிடும்போது கயிற்றைக் குலுக்கிக்குலுக்கி கீழே தள்ளிவிட்டான்! மரத்தினடியில் இருந்தது சமீபத்தில் உழுதிருந்த ஈர மண்! உடலும் ஆடையும் செம்மண் புழுதியோடு இருவரும் வீடு திரும்பினர்!
கண்ணானும் கோபுவும் இப்படி ஏதோவொன்று விளையாடிவிட்டு வர தினமும் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுவிடுவார்கள். கிளி, “சும்மா சும்மா வநக்கம் எந்திர் எந்திர்” என்று இருவரையும் காலையில் எழுப்பிவிட்டது!
ஊருக்கு வடக்கேயும் கிழக்கேயும் உப்பாறு இருந்தது. முன்பெல்லாம் எப்போதும் அதில் நிறைய தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இப்போது மழைக்காலத்தில் மட்டும் அதில் தண்ணீர் வெள்ளமாக ஓடும். மற்ற நேரத்தில் அது பொதுவாக வரண்டுதான் இருக்கும். ஓர் சில இடங்களில் அவ்வப்போது பாதங்கள் நனைக்குமளவு ஆற்றில் நீரோடும்.
கண்ணான் சொந்த ஊரான வீதம்பட்டியில் ஒரு சிறிய பள்ளத்தாக்கைத்தவிர எந்த ஆறும் அவன் பார்த்ததில்லை. அதனால் அதைப் பார்க்க அவனுக்கு ஆர்வமாக இருந்தது. கோபு ஓரிரு முறை அங்கே ஆற்று மணலில் அவன் அண்ணாவோடு விளயாடியிருக்கிறான். இன்று அவர்கள் அங்கே வந்திருந்தனர்.
கரையோரத்தில் மூன்று நான்கடி அகலத்தில் கொஞ்சம் ஆறு வெள்ளை, மஞ்சள், சிவப்பு, கருப்பு நிறங்களில் குண்டு குண்டாக வழுவழுவென்று இருந்த கற்களின்மேல் கண்ணாடிபோல் பாய்ந்துகொண்டிருந்தது.
கை நிறைய கூழாங்கற்களை எடுத்துக் கொண்டு இருவரும் அருகிலிருந்த பாறையின்மேல் உட்கார்ந்தனர். கால்களை ஆற்றுநீரில் அலசிக் கொண்டே, கற்களை நீரிலும் கரையிலிருந்த ஒரு புற்றை நோக்கியும் வீசி மகிழ்ந்தனர். கொஞ்ச நேரம் ஏதாவது மீன் வருமா என்றும் பார்த்தார்கள். எல்லா மீன்களும் தூரத்தில் கரையிலிருந்த மரத்திலிருந்து விழும் இலைகள் அழுகிப்போகும் ஆழமான இடத்தில் ஒளிந்திருந்தன. ஒன்றும் அவர்களிருந்த இடத்திற்கு வருவதாகத் தோன்றவில்லை. எனவே ஆற்றில் இறங்கி சிறிது நேரம் நடந்தும் குதித்து உடலெல்லாம் நனைந்த பின்னர், மணல் பரவியிருந்த வேறொரு பகுதிக்குச் சென்றனர். சீனிச்சக்கரைபோல் வெள்ளைவெளாரென்று இருந்த மணல்மேல் ஓடி விளையாடினார்கள். கால்கள் மணலில் புதைந்ததால் அவற்றை மேலிழுத்து ஓடுவது தொடக்கத்தில் கடினமாக இருந்தாலும் ஒருவகையில் இருவருக்கும் ஓடவோடப் பரவசமும் அளித்தது. விழுந்து விழுந்து எழுந்து ஓடிக் களித்தார்கள்.
அப்படி ஓடி அயர்ந்ததும், அங்கேயே அமர்ந்து கொஞ்ச நேரம் இளைப்பாறினார்கள். பிறகு இருவரும் மணலைக் கையில் வாரி வாரி ஒரு கோட்டையும் அதைச்சுற்றி மதிலும் கட்டினார்கள். சூரியன் உச்சி சென்று வெயில் சூடு பிடித்திருந்தது. மணல் ஈரமாக இருந்தது. கோபுவிற்கு ஒரு யோசனை வந்தது. அவன் கண்ணானை மணல்மேல் படுக்கவைத்தான். அவன் மேல் மணலைக் குவித்து உடலைப் புதைத்தான்! அவன் இப்படி செய்துவிட்டுச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே கண்ணான் சடக்கென்று எழுந்து அவன் மேலிருந்த எல்லா மணலையும் கோபுவின் மேல் தூவிக் குவித்தான்! கோபு எப்படியோ கண்ணிற்குள் மணல் போகாமல் தப்பித்துக் கொண்டான். அப்படியே ஒட்டிய ஆற்று மணலோடு, கட்டிய கோட்டையை இருவரும் சேர்ந்து மிதித்து மட்டம் தட்டிவிட்டு, வீடு வந்து சேர்ந்தார்கள்!
இன்னொரு நாள் கண்ணானும் கோபுவும் வீட்டு வாசலில் கோலிக்குண்டு விளையாடிக் கொண்டிருந்த போது, கோபுவின் நண்பன் சீனி, அதாவது சீனிவாசராகவன், வந்து அவர்களுடன் அவனும் ஆட்டத்தில் கலந்துகொண்டான்.
கோலி விலையாடுவதில் கோபு பெயர்பெற்றவன். சீனிக்கு இது நன்றாகத் தெரியும். அவன் வரும்வரை கண்ணான் தோற்றுக் கொண்டிருந்தான். கோபு நீலமும் வெள்ளையும் கலந்த கண்ணாடிக் குண்டுகளும் ஒரு எலும்புக் குண்டும் வைத்திருந்தான். இந்த ஆட்டத்தில் அந்த எலும்புக் குண்டை அடித்து அதைக் குழியில் தள்ளவேண்டும். கண்ணான் எலும்புக் குண்டை குழிக்கு அருகில் கொண்டுபோய் அதை மறுபடியும் அவன் முறைவரும்போது குழிக்குள் அடிக்கும் முன்னர், கோபு கண்ணான் குண்டைக் குறிவைத்து அதை வெகு தூரத்திற்கு அடித்துவிடுவான்! கோபு அவன் குண்டை அருகில் கொண்டுவந்து முதலில் எலும்புக் குண்டை குழிக்குள் போட்டுவிடுவான்!
இப்போது சீனியும் கண்ணானும் ஒன்று சேர்ந்து கொண்டனர். எப்போதெல்லாம் கோபுவின் குண்டு எலும்புக் குண்டின் அருகே வந்தாலும், சீனியோ கண்ணானோ அதைக் குறிவைத்துத் தொலைவில் அடித்துவிட்டனர்! கோபுவின் குண்டு எலும்புக் குண்டின் பக்கம் வருவதைத் தடுத்து, கண்ணானும் சீனியும் ஜெயிக்க ஆரம்பித்தனர்! கோபுக்கு தாங்க முடியாத கோபம் வந்துவிட்டது. “போங்கடா!” என்று அவன் குண்டை வீசியெறிந்துவிட்டு உம்ம்மென்று உட்கார்ந்துகொண்டான்! கண்ணானும் சீனியும் தொடர்ந்து இரண்டு ஆட்டம் முடித்தபிறகும் கோபு சேர மறுத்துவிட்டான்.
சீனியின் வீட்டுக் கொல்லைப் புறத்தில் கொடுக்காப்புளி மரம் இந்த ஆண்டு நன்றாகக் காய்த்திருந்தது. கோபுவுக்கு அதைச் சாப்பிட மிகுந்த ஆசை உண்டு. சீனி கோபுவைச் சமாதானப்படுத்தி, அவனையும் கண்ணானையும் அழைத்துப் போனான்.
சீனியின் வீடு ஊர்ச்சாவடிக்கு அடுத்து பெருமாள் கோவிலருகில் இருந்தது. போகும் வழியில் சிறுவர்கள் பம்பரமாடிக் கொண்டிருந்ததைப் பார்த்த சீனி கோபுவை, “கோபு, பம்பரப் போட்டி போடலாமடா?” என்று கேட்டுவிட்டுச் சிரித்தான். சீனி அதில் மகா கெட்டிக்காரன். ஒரு தடவை அவன் கோபுவின் ஆடும் பம்பரத்தைக் குறிவைத்து தன் பம்பரம் அடித்த வேகத்தில் இரண்டாகப் பிளந்துவிட்டான்! “போடா, சீனி! உனக்கென்ன வேலை!” என்று கோபு முகத்தைச் சுளித்திக் கொண்டான்.
கொல்லைப்புறம் போவதற்குமுன், சீனி கண்ணானுக்கு அவன் வீட்டில் ரகசியமாக வைத்திருந்த தீப்பெட்டியொன்றை எடுத்துவந்து காட்டினான். “அடெ, கண்ணா! நீ பொன்வண்டு பாத்திருக்கியா?” என்று கேட்டுவிட்டுப் பெட்டியைத் திறந்தான். அதில் பச்சைப்பசேலென்று மின்னும் இறக்கைகளோடு ஒரு பெரிய வண்டு கருவேல் இலைகளுக்கு மத்தியில் படுத்திருந்தது. “தொடு! தொட்டுப் பாக்கலாம்!” என்று பெட்டியை நீட்டினான். கண்ணான் அத்தனை பெரிய வண்டைப் பார்த்ததில்லை. “கடிக்காதா?” என்று தயங்கினான். அதற்குள் கோபு சீனியிடமிருந்து பெட்டியைப் பிடுங்கிக் கொண்டு, “சீனி! இது இன்னும் குட்டி போடலையாடா? எப்பப் போடும்? நீ சொன்னமாதிரி மறக்காம எனக்கு ஒண்ணு குடுப்பியல்ல?” என்றான். “உம்… மறக்கலெ! குடுக்கிறென்!” என்று கோபுவிடமிருந்து பெட்டியை வாங்கி மூடி வீட்டில் வைத்துவிட்டு, எல்லோரும் கொல்லைக்குக் கிளம்பினர்.
கண்ணானுக்கு அப்படிப் பட்ட காய்களை அவன் ஊர்ப்பக்கம் இதுவரை எங்கும் பார்த்த ஞாபகமே இல்லை. புளியங்காய்களைத்தான் பார்த்திருக்கிறான். அவை தடிப்பாக நீளமாக இருக்கும். கொடுக்காப்புளி அப்படியில்லை. வளையம் வளையமாகச் சுருண்டு சுருண்டு சிறிதாக, மொச்சைக் காய்கள் போலிருந்தன இவை. சில காய்கள் பச்சையாகவும், ஆனால் நிறைய காய்கள் செக்கச்செவேலென்று பழுத்து, வெடித்த வண்ணம், கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருந்தன.
மரம் உயரமாக வளர்ந்திருந்தது. குருவிகள் கடித்த சில காய்கள் கீழே விழுந்திருந்தன. பழுத்த காய்களெல்லாம் சிறுவர்கள் கைகளுக்கு எட்டாத உயரத்தில் குவிந்திருந்தன. சீனி அவற்றை அறுத்து வீழ்த்த நீளமான மூங்கில் கொக்கியொன்றை எடுத்து வந்திருந்தான். சில நாட்களுக்குமுன் அதை எப்படிப் பயன்படுத்துவதென்று சீனிக்கு அவன் தந்தை சொல்லிக் கொடுத்திருந்தார். முதலில் சீனி ஓரிரு கொத்துக்களை வீழ்த்தியபின், கண்ணானும் கோபுவும் எல்லோரும் சேர்ந்து நிறையப் பழங்களை உதிர்த்தனர்.
எல்லாப் பழங்களையும் அள்ளிக்கொண்டு முற்றத்திலிருந்த ஒரு கயிற்றுக் கட்டிலின் மேல் உட்கார்ந்துகொண்டு சாப்பிட்டனர். கண்ணான், கோபுவும் சீனியும் சாப்பிடுவதைப் பார்த்து அந்தப் பழத்தில் எதை உண்பதென்று கற்றுக் கொண்டான். வெடித்த காய்களிலும் வெடிக்காதவற்றிலும் தோலுக்குள்ளே பல விதைகள், கருப்பாக, தனித்தனியாக இருந்தன. ஒவ்வொரு விதையும் வெண்மையும் குங்கும நிறமும் கலந்த தசைக்குள் மறைந்திருந்தது. அந்தத் தசையைத்தான் சாப்பிடுவதற்கு எடுத்துக் கொண்டார்கள். கோபு அதை ரசித்து ரசித்து சாப்பிட்டான். கண்ணானுக்கு அது உவர்ப்பும் இனிப்பும் கூடிய ஒருவகையான சுவையைக் கொடுத்தது. தசையில் வெண்மை அதிகமாக இருந்தால் உவர்ப்பாகவும், குங்குமநிறமயமானது இனிப்பாகவும் சுவை தந்தது. கண்ணான் அந்த இனிப்பு சுவையைத்தான் விரும்பினான்.
அவர்கள் அவ்வாறு வெவ்வேறு சுவைகளைச் சோதித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று, சீனி, “கோபு, டேய்! அதோ பார், அந்தக் கருப்பு பிசாசுப்பூச்சி மறுபடியும் வந்துட்டுது! வா, பிடிக்கலாம்!” என்று கத்திக் கொண்டு கட்டிலிருந்து எழுந்து ஓடினான்!
அவர்கள் முன்னால், சுவரோரத்தில் இருந்த செடிகளில் மஞ்சளும், சிவப்பும், நீலமுமாகப் பூக்கள் மலர்ந்திருந்தன. கரு நிறத்தில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி மஞ்சள் மலரொன்றில் அமைதியாகத் தேனருந்திக் கொண்டிருந்தது. கோபுவும் சீனியும் அடித்துக் கொண்டு அங்கே போய் அதைத் தொட்டும் தொடுமுன் அது காற்றாக மேலே பறந்து மறைந்துவிட்டது! விரித்த அதன் இறக்கைகளிலிருந்த பயங்கரமான பிசாசுக் கண்கள் எல்லோரையும் ஒரு கணம் நடுங்க வைத்தன!
பெருமாள் கோவில் பக்கத்திலிருந்து ஆரவாரக்குரல் கேட்டது. மூவரும் எழுந்து அங்கே என்ன நடக்கிறதென்று காண ஓடினர். மாலை நேரத்தில் இளைஞர்கள் அங்கே சடுகுடு விளையாடக் கூடுவார்கள். இப்போது அங்கே ஒரு சடுகுடுப் போட்டிதான் மும்முரமாகப் போய்க்கொண்டிருந்தது. ஊர்மக்கள் சூழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
கண்ணானும் கோபுவும் சடுகுடு பார்த்துவிட்டு வீடு வந்தபோது, கண்ணானின் அம்மாவும் கோபுவின் அம்மாவும் திண்ணையில் பேசிக்கொண்டிருந்தனர். பள்ளி திறக்கும் நாள் நெருங்கிவிட்டதால் கண்ணானின் பெற்றோர் அவனை அழைத்துப் போக வந்திருந்தனர். இருவரும் அங்கே தட்டிலிருந்த முறுக்குகளை எடுத்துக்கொண்டு கிளியோடு பேச கோபுவின் அறைக்கு விரைந்தனர்.
அடுத்த நாள் காலை, கண்ணானின் பெற்றோர் கோபுவின் பெற்றோரும் மற்ற எல்லா உறவினர்களுடனும் உப்பாற்றின் கரையிலிருந்த சுப்பிரமணிய தண்டாயுதபாணி கோவில் சென்று பூசை செய்து சுவாமியை வணங்கி வந்தபின், பின் பகலில் வீதம்பட்டி புறப்பட்டனர்.
காளைமாட்டுச் சவாரி வண்டிதான். கண்ணானின் அப்பாவிடம் குதிரை இல்லை. ஆனால் சவாரி வண்டிக்காகவே அவர் இரண்டு இளம் காங்கயம் காளைகளை வாங்கியிருந்தார். கண்ணான் ஏறியபோது வண்டியில் அவை பூட்டப்பட்டு தூள்கிளப்பிக் கொண்டு, சலங்கையொலி நாதத்துடன், ஓடத் தயாராக நின்றிருந்தன.
*
மூவரும் எப்போது வகுப்பு முடியுமென்று காத்திருந்தனர். வீட்டிற்குப் போய்விட்டுப் போனால் நேரமாகிவிடுமென்று பள்ளியிலிருந்து வெளியேறியதும் உடனே நேரே தோட்டம் வந்துசேர்ந்தனர். துணைக்கு அவன் நண்பர்கள் கொளந்தையும், அதாவது குழந்தைவேலும், சங்கியும், அதாவது சாரங்கபாணியும், கண்ணான்கூட வந்திருந்தனர்.
கோபுவின் கிளியைப் பார்த்ததிலிருந்து அவனுக்கும் அப்படி ஒரு கிளி வேண்டுமென்று கண்ணானுக்கு ஆசை வந்துவிட்டது. அங்கே இருந்தபோது ஒரு நாள் கண்ணான், “கோபு, இந்தக் கிளியை எனக்குக் கொடுப்பியா?” என்று கேட்டான். கோபு மறுத்துவிட்டான். “இது என் கிளிடா! உன்னோடு பேசாது! இதெ அப்பா தான் எனக்குக் கொண்டுவந்து கொடுத்தார். வா, அவரைக் கேட்கலாம்… உனக்கும் ஒன்னு வேணும்னு,” என்று இருவரும் அவரிடம் சென்றனர். கண்ணானின் மாமாவும், “கண்ணா! நீயும் கிளி வளர்க்கணுமா? ஆமா, கோபு கிளி அவனோட நல்லாப் பழகிக்போச்சு… உனக்கு அது வேணாம்! அதெ நான் உங்க ஊர்லெ, உங்க மாந்தோப்பில தான் புடிச்சிவந்து அவனுக்குக் கொடுத்தெ! நீயும் அங்கேபோய் ஒரு நல்ல புதுக்கிளியைப் புடிச்சிக்க, என்ன?” என்று அவனுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
ஊருக்குத் திரும்பியதிலிருந்து கண்ணான் இரண்டு வாரமாக அதையே நினைத்துக் கொண்டிருந்தான். இப்போது அவனுடன் கொளந்தையும் சங்கியும் மாந்தோப்பில் கிளியைத் தேடி ஓடிக்கொண்டிருந்தனர்.
மாந்தோப்பு அவன் தோட்டத்திலிருந்த தெற்குக் கிணற்றிற்குக் கிழக்குப் பகுதியிலிருந்தது. அதில் மாமரங்கள் மிகுந்திருந்தாலும் மற்றும் சில கொய்யா மாதுளம் போன்ற மரங்களும் இருந்தன. மாமரங்களில் இப்போது நிறையப் பூக்களும் கொஞ்சம் பிஞ்சுக் காய்களும் தாம் இருந்தன. கொய்யாவில் நல்ல பழுத்த பழங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றை அணில்களும் சிட்டுக் குருவிகளும் கொத்திக்கொண்டிருந்தன.
சிறுவர்கள் முதலில் மஞ்சள் நிறத்திலிருந்த பெரிய கொய்யாப் பழங்களைப் பறித்துக் கொண்டனர். பழத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே, மூவரும் ஒன்றாக, எல்லா மரங்களிலும் பச்சைக் கிளிகளைத் தேடத் தொடங்கினர். ஒவ்வொரு மரமாகத் தேடினார்கள். சங்கியும் கண்ணானும் மரங்களின் மேல் ஏறியும் பார்த்தார்கள். மாமரங்களில் நீண்ட பச்சை இலைகள் அதன் கிளைகளில் அடுக்கடுக்காக அடர்த்தியாக இருந்தன. பயந்தாங்கொள்ளி கொளந்தை மரத்தின் கீழேயிருந்து, “டேய்! இலைக்குள்ளே பச்சோந்திகள் ஒளிந்திருக்கும் டோய்! கிளின்னி நெனச்சிப் பிடிச்சிடாதிங்கடா!” என்று கிண்டல் செய்தான். எங்கும் ஒரு கிளிகூட காணோம்!
மறுபடியும் இன்னொரு கொய்யாப் பழத்தைப் பறித்துக்கொண்டு, இப்போது, தனித்தனியாக ஒவ்வொரு மரத்தையும் ஒடியோடிச் சோதித்தார்கள். “கிளி! கிளி! கண்ணான் கிளி! எங்கே போனாய்? வா, வா! நேரமாச்சு!”என்று பாடிப் பாடி அழைத்தார்கள்! பையன்கள் செய்த ஆர்ப்பாட்டத்தில் அங்கிருந்த குருவிகளும் மறைந்துவிட்டன.
சங்கி, “கண்ணா! இனி என்னால் ஓட முடியாதுடா!” என்றான். “உனக்குக் கிளி யோகமில்லடா, கண்ணா! என்னாலும் முடியாதுடா!” என்றான் கொளந்தை.
“சரி, வாங்கடா!” என்று கண்ணான் தோப்பிற்கருகிலிருந்த நாவல் மரத்தடியில் சிறிது ஓய்வெடுக்க அழைத்துச் சென்றான். கீழே நாவல் பழங்கள் உதிர்ந்திருந்தன. பழங்களை ருசித்துக் கொண்டே புற்தரையில் படுத்துக் கொண்டார்கள்.
கண்ணான் மேலே ஒரு கிளி பறப்பதைப் பார்க்கிறான்! அதன் பின் ஓடுகிறான். அது மாந்தோப்பிற்குள் பறக்கிறது. கண்ணானும் தொடர்கிறான்.
கிளி ஒரு மரத்தின் மேல் கிளையில் போய் உட்கார்கிறது. கண்ணான் மரத்தில் தொத்தி அந்தக் கிளையை நெருங்கும்போது கிளி எழுந்து அடுத்த மரத்திற்குப் பறக்கிறது. கீழே குதித்து கண்ணான் அந்த மரத்திற்கு ஓடுகிறான். அதன்மேல் அவன் ஏற முயலும்போது கிளி மறுபடியும் பறக்கிறது. கண்ணான் அதை விடாமல் ஓடுகிறான்.
கிளி எங்கும் நிற்காமல் ஆனால் அவன் முன்னால் பறந்து கொண்டிருக்கிறது. கண்ணான் ஓடியோடி இப்போது கிளி அவன் கை எட்டுமளவில் வந்துவிடுகிறான். தாவி இருகைகளையும் நீட்டி அதைப் பிடிக்கப்பார்க்கிறான்! கிளி காற்றாக உயர்ந்து வானத்தில் பறக்க ஆரம்பிக்கிறது.
கண்ணான் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிலத்தில் கிளி பறக்கும் திசையெல்லாம் அதனோடு ஓடுகிறான். கிளி இன்னொரு தோப்பினுள் நுழைந்தது. கூ… கூ… என்று மகிழ்ச்சியோடு கூவிக்கொண்டு ஒரு உயரமான மரத்தின்மேல் அமர்ந்தது.
ஓடியோடி அயர்ந்துவிட்ட கண்ணான் ஒரு மரத்தைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டான். ஆனால் கண்கொட்டாமல் கிளி பறக்கும் இடத்தை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தான்.
கிளி மர உச்சியிலிருந்து கீழே பறந்துவந்து ஒரு பொந்தில் நுழைந்து கொண்டிருந்தது. மூச்சைப் பிடித்துக் கொண்டு கண்ணான் உடனே அங்கே வேகமாக ஓடினான். பொந்தில் கை விட்டான். சுரீரென்று ஏதோ கையைக் கடிக்க. விசுக்கென்று கையை வெளியே இழுத்தான். யாரோ முதுகைத் தொட்டதை உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.
கண்ணான் பின்னால் அழகே உருவான பெண்ணொருத்தி ஜெகஜோதியாய் நின்றிருந்தாள்! அவளைப்போல் ஒரு பெண்ணை அவன் இதுவரை எங்கேயும் பார்த்ததில்லை. சாதாரணப் பெண்ணாகத் தெரியவில்லை. உள்ளத்தில் அவனுக்க அச்சமேற்பட்டது. எனினும், கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “யார் நீ ? நீ என்ன தேவதையா?” என்று கேட்டான்.
“ஆம், நான் ஒரு வனதேவதை! என் பெயர் எல்லம்மாதேவி. அதோ பார், அந்த மலை! அங்கிருந்துதான் வருகிறேன். இந்த வனம் காடு மலை நிலம் வானம் இங்கிருக்கும் அனைத்தையும் காலம் பிறப்பதற்கு முன்னிருந்து காத்து வருகிறேன். நீ யாரென்பது எனக்குத் தெரியும். அது மட்டுமல்ல. உன் அம்மா அப்பா பாட்டன் பூட்டன் பாட்டி பூட்டி பூட்டியின் பூட்டி எல்லாம் எனக்குத் தெரியும்! எனக்கு ஆதியந்தமும் புரியும்! தெரியுமா? நீ எங்கிருந்து வருகிறாய், யார் யாருடன் வந்தாய், எப்போது வந்தாய், என்னென்ன செய்தாய், நீ எதற்கு இங்கே வந்தாய், ஆமாம், எனக்கு எல்லாம் நன்றாகத் தெரியும்! என்ன அப்படிப் பார்க்கிறாய்?” என்று தேவதை சொல்லும்போது கண்ணான் காதுகளில் பல பறைகள் முழங்குவது போலிருந்தது.
பேசிவிட்டு தேவதை கடகடகடவென்று சிரித்தாள்! அவள் வாயிலிருந்து வெண்முத்துக்களும் மாணிக்கங்களும் வைடூரியங்களும் வகை வகையான என்னென்னவோ ஏராளமான பொருட்கள் கண்ணான் மேல் கொட்டிக்கொண்டே இருந்தன!
அவள் சிரித்துக்கொண்டே இருந்தாள்! வண்ண வண்ணப் பொருட்கள் அவன் முன்னர் ஒரு குன்றாகக் குவிந்தது! அந்த விநோதமான குன்றின் பிரகாசத்தில் கண்ணான் கண்கள் கூசின!
கண்ணான் இருகைகளாலும் அதைத் தாவி அணைக்கப் போனான். உடனே கொல்லென்று எழுந்த பச்சைக் கிளிகளும் வெண் புறாக்களும் மைனாக்களும் பஞ்சவர்ணக் கிளிகளும் வித விதமான விசித்திரமான அதிசயப் பறவைகளும் அவனைச் சூழ்ந்து பறக்கத்தொடங்கின!
கண்ணான் சுற்றிச்சுற்றி ஓடுகிறான்! இரண்டு கைகளையும் நீட்டி நீட்டி ஒன்றையாவது பிடிக்கப்பார்க்கிறான்! அவன் கையில் பிடிபட்ட ஒவ்வொன்றும் பஞ்சவர்ணக் குண்டாக மாறி உடனே கரும் புகையாகி மறைகிறது! அவனால் ஒரு கிளியையும் பிடிக்க முடியவில்லை, ஒரு கிளியும் கிளியாக அவன் கையில் சிக்கவில்லை!
ஏமாற்றத்தால் பெருமூச்சுவிட்ட கண்ணான் களைத்து சோர்ந்து உட்கார்ந்தான். இப்போது அங்கே ஒரு குருவியும் இல்லை. எந்தக் குன்றும் இல்லை. அவனால் அங்கு நடந்தது எதையும் நம்பமுடியவில்லை. வனதேவதை இன்னும் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தச் சிரிப்பு இப்போது பயங்கரமான பேரிரைச்சலாக அவன் காதுகளில் ஒலித்தது! கண்ணான் நடுங்கினான்.
“பெண்ணே! நீ யார்? என்னென்னவோ மாயாஜாலம் செய்கிறாய்! போ, போ! இங்கிருந்து போய்விடு! இது என் தோப்பு!” என்று அவளை அதட்டினான்.
“அப்படியா? இது உன் தோப்பா? நன்றாகக் கண் திறந்து பார்!” என்றாள் வனதேவதை.
கண்ணான் சுற்றியும் ஒரு முறை பார்த்தான். அவன் இப்போது அவர்கள் தோப்பில் இல்லை! கிளியோடு ஓடிவந்தபோது வேறு யாரோ ஒருவர் தோப்பில் நுழைந்திருந்தான்! அவன் உடல் கிடுகிடுவென்று நடுங்கியது! அவன் தலை குனிந்து கைகள் குவித்து வணங்கி நின்றான்.
நின்றுகொண்டே இருந்தான். தலை நிமிரவில்லை. அவன் நடுக்கம் நிற்கவில்லை…
“சின்னக்கண்ணு! பயப்படாதே!”
கண்ணான் இடது பக்கமிருந்து ஏதோ குரல் வந்தது. மறுபடியும் அதே குரல். அவன் நிமிர்ந்து திரும்பினான். அவன் தோளில் அழகான பஞ்சவர்ணக்கிளியொன்று அமர்ந்திருந்தது!
பளிச்சென்று கண்ணான் முகம் மலர்ந்தது! பையப்பைய, பொறுமையாக, எச்சரிக்கையுடன் வலது கையை நகர்த்தி கிளியைத் தொட்டான். கிளி பறந்தது. அவன் தலைமேல் ஒரு முறை சுற்றிப் பறந்து வலது தோளில் அமர்ந்தது! இந்தக் கிளி வண்ணக்குண்டாகவில்லை கரும் புகையாகவில்லை மறையவும் இல்லை! முன்போல எச்சரிக்கையுடன் அதைப் பிடிக்க கண்ணான் கையை நீட்டினான். கிளி பறந்துவந்து அவன் வலது கையில் உட்கார்ந்துகொண்டது!
கண்ணானால் நம்பமுடியவில்லை! கிளி அமைதியாக அப்படியே அவன் கையில் அமர்ந்துகொண்டு அவன் முகத்தைப் பார்த்துச் சிரித்தது! அவனும் சிரித்துவிட்டான்!
“என்னைத் தெரியவில்லை? நான் தான் சோழன்! கூண்டில் கூட இருந்தோமே!”
“சோழா! நீயா? இத்தனை நாள் எங்கே போனாய்?”
“சரி, புறப்படு! போகலாம்!”
என்ன விந்தை! கண்ணான் கிளியுடன் பேசிக்கொண்டிருந்தான்! கிளி அவனுடன் பேசிக்கொண்டிருந்தது! என்ன அழகான, அற்புதமான உரையாடல்!
“எங்கே சோழா?”
“நான் இருக்கும் இடத்தைப் பார்க்கத்தான்! நீ பார்த்ததில்லையே! புறப்படு, புறப்படு!”
கிளி அலகை நீட்டி கண்ணான் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்துவிட்டு மேலே எழுந்து கீழே அவனைப் பார்த்துக் கொண்டே பறக்கத்தொடங்கியது.
கண்ணானுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. அண்ணாந்து கிளியைப் பார்த்துக் கொண்டு அவனும் கீழே நிலத்தில் ஓடினான். கிளி அவனைப் பார்த்தது. “நீ அப்படி வந்தால் என்னிடம் எப்போது போய்ச் சேர்வது? மேலே, இங்கே வா!”
“நானெப்படி அங்கே வருவேன்? எனக்குப் பறக்கத் தெரியாதே!”
“என்னடா சின்னக்கண்ணு? என் சகோதரா, எப்படி அதை மறந்தாய்? உம்… சொல்கிறேன்… உந்திக்குதி! அகல விரித்து நீட்டி உன் கைகளை உயர்த்து! அசை, மேலும் கீழும்… என் இறக்கைகளைப் போல் அசை, விசிறிபோல் வீசு! வீசு! அவ்வளவுதான்! சீக்கிரம், வா!”
கிளி நிலத்தில் இறங்கி ஒருமுறை பறந்து காட்டிவிட்டு மறுபடியும் அவனைக் கவனித்துக் கொண்டே மேலே சென்றது.
கண்ணான் ஒரு கணம் தயங்கினான். சடாரென்று அவன் உடல் மின்சாரம் பாய்ந்ததுபோல் அதிர்ந்தது. அவன் பாதங்கள் மிதந்தன. கரங்கள் விசிறின.
“அவ்வளவுதான! ஆகா! வா… என் பக்கம், என் பக்கம், வா!”
வானத்தின் உச்சியில் கண்ணானும் கிளியும் பேசிக்கொண்டும், சொல்லற்ற ஆனந்தத்தில் சிரித்துக்கொண்டும், அந்தரத்திலிருந்த வைர வைடூரியங்களாலும் நவரத்தினங்களாலும் படைக்கப்பட்ட கிளியின் பிரமாண்ட கண்ணாடி மாளிகையை நோக்கி, அசையாத இறகுடனும் ஆடாத கையுடனும், அமைதியாகப் பறந்து கொண்டிருந்தார்கள்!
சங்கியும் கொளந்தையும் மேலே வியந்து, வியந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்!
கும்பல் கும்பலாக கிளிகள் திடீரென்று வந்து தோப்பு முழுவதும் குவிந்தன. கும்பல் கும்பலாக ஜிவ்வென்று எழுந்து ஒரு மாமரத்திலிருந்து இன்னொன்றிற்குத் தாவி அமர்ந்தன. மரத்திலிருந்து ஒன்றாகக் கூவிக்கொண்டு புற்தரையில் இறங்கி கிச்சுக்கிச்சு என்று உரையாடிக்கொண்டு அங்குமிங்கும் நளினமாக நடனமாடி மறுபடியும் கும்பல் பிரிந்து மேலே ஜிவ்வென்று எழுந்து வானில் சுழன்று வெவ்வேறு மரங்களிலும் தரையிலும் அமர்ந்தன.
கொளந்தைக்கும் சங்கிக்கும் வந்த ஆனந்தத்தை அடக்கமுடியவில்லை! “டேய், கண்ணா! பாருடா இங்கே! எத்தனை பச்சைக் கிளிகள்! வாடா, பிடிக்கலாம்! சீக்கிரம்… சீக்கிரம்… உனக்கு எதுடா வேணும்? வா, வா! பிடிச்சுத் தாரோம்!” என்று இருவரும் கத்தினார்கள்.
கண்ணானுக்கு ஒன்றும் கேட்கவில்லை.
அவனுக்குக் கொளந்தையும் தெரியாது, சங்கியும் தெரியாது.
அவன் சோழனோடு விளையாடிவிட்டு உள்ளே போய்க்கொண்டிருந்தான். கண்ணானின் தம்பிப்பாப்பாவைப் பார்க்க அம்மாபட்டியிலிருந்து மாமாவின் குடும்பம் வந்திருந்தது. கூட பொன்னியும், கோபுவும், பாண்டியனும் வந்திருந்தார்கள்.
பொன்னி பாப்பாவைத் தன் மடியில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்தாள்.
கோபு, “கண்ணா, எங்கெடா போனெ? அதென்னடா கையிலே?” என்று கேட்டான்.
“இதா? அதாண்டா நீ கொடுத்த ரப்பர் பந்து!”
“அடெ, அதை இன்னுமா இப்படி பத்தரமா வெச்சிருக்க!”
“சரி, கோபு! நீ உன் கிளியோட இன்னும் பேசறையடா?”
“கிளியா? நான் கிளியோட பேசறனா? என்னடா சொல்றெ?”
“கோபு! அது தண்டா அந்தக் கிளி… உன் அறையில், கூண்டிலெ, வெச்சிருந்தியெ?”
“கூண்டாவது கிளியாவது? நான் கிளியோட பேசறதாவது? கண்ணா, என்னடா பிதற்றே?”
“அப்ப … நான் பார்த்ததெல்லாம்…”
“அங்கே பார்!”
முற்றத்தில் சோழனும் பாண்டியனும் சுற்றிச் சுற்றி முன்னங்கால்களால் ஒன்றையொன்று தாவித் தழுவிக்கொண்டு வாலை குசியாக ஆட்டிக்கொண்டு வலம் வந்துகொண்டிருந்தனர். இருவரும் கண்பட்ட கணத்திலேயே பிரியாத நண்பர்களாகிவிட்டனர். இனி அவர்களுக்குத் தீராத விளையாட்டுதான்!
***
- கதுவா: ஒரு குரூரமான குற்றம் எவ்வாறு அரசியல் மற்றும் மத சாயம் பூசப்பட்டு ஒற்றை பரிமாணமாக்கப்பட்டது
- 8 கவிதைகள்
- எனக்குள் தோன்றும் உலகம்
- பின்தொடரும் சுவடுகள்
- முன்பதிவில்லா தொடா் பயணம்
- இந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு
- நாசா விண்ணுளவி ஜூனோ பூதக்கோள் வியாழனின் வடதுருவ உட்சிவப்பு முப்புறக் காட்சியை முதன்முறைப் படம் எடுத்துள்ளது.
- தொடுவானம் 217. தங்கையின் திருமணம்
- சோழன்
- தமிழ்ச்செம்மல் விருதுக்குப் பாராட்டு விழா
- விருது நகருக்கு ஷார்ட் கட்
- மருத்துவக் கட்டுரை தொடர் எளிய மூக்கு அழற்சி
- முரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்
- பர்ணசாலையில் இராவணன்..
- கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா
- கடலூர் முதல் காசி வரை
- தூக்கிய திருவடி
- எதிர்காலம்…