பர்ணசாலையில் இராவணன்..

author
0 minutes, 0 seconds Read
This entry is part 14 of 19 in the series 15 ஏப்ரல் 2018

மீனாட்சி சுந்தரமூர்த்தி

இளையவன் சென்றதும் அதுவரையில்  காத்திருந்த இராவணன்  ஊண் உறக்கமின்றி தவம் புரிந்த கூன் விழுந்த முதியவரின் வேடம்  தாங்கி, முத்தண்டு கையில் ஏந்தி பர்ணசாலையின் வாயிலில் வந்து,`இங்கு யாரேனும் உள்ளீரோ` என நா குழற வினவுகிறான்.சீதையும் குற்றமற்ற தவசீலர் என எண்ணி,வாருமென வரவேற்றாள். விருந்தோம்பல் என்பது நமது பண்பாட்டில் இன்றியமையாதது.சிலம்பின் நாயகி கண்ணகியும் மீண்டு வந்த கோவலன் அவளுக்குப் பெரும் துன்பம் இழைத்த தன் செயலுக்காக வருந்தியபோது ,`போற்றா ஒழுக்கம் புரிந்தீர் எனச் சொல்பவள்,`தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும்` தான் இழந்ததைப் பெரிதும் பேசுவாள்.கணவன் மனைவியின் பிணக்கும் கூட விருந்தினர் வந்தால் தீரும் என்பதை,`விருந்து கண்டு ஒளித்த ஊடல்` என்னும் இலக்கியங்கள்.வைதேகியும் அசோகவனத்தில் இராமனை எண்ணித் துயருற்றபோது,

`அருந்தும் மெல்லடகு  ஆரிட அருந்துமென் றழுங்கும்

விருந்து கண்டபோது என்னுறுமோ வென்று விம்மும்`என

விருந்தினர் வரின் எப்படி எதிர் கொள்வான் எனத் துயருற்றாள்.

அதனால்தான் தான் துன்பத்தில் இருந்த போதும் விருந்தினனாக வந்த முனிவன் இராவணனை வரவேற்கிறாள் சீதை.  அவ்வளவில் அரக்கனும்`

கற்பினுக்கு அரசியைக் கண்ணின் நோக்கினான்,`இவள் அழகைக் காண என இருபது விழிகள் போதாவே ,இமைக்காத விழிகள் ஆயிரம் இல்லையே என ஏங்கினான்.யானாளும் உலகம் மூன்றும் இவளடியில் வைத்து இவளுக்கு ஏவல் செய்து வாழ்வேன்,இவளை எனக்குச் சொன்ன தங்கைக்கு என் அரசு தருவேன்

என முறையற்ற சிந்தனை கொண்டவன் முன் கண்ணின் நீர் துடைத்த கற்பினள்  ஈண்டு எழுந்தருளும் என்றாள்.அவனும் அவளளித்த ஆசனத்தில் முத்தண்டு அயல் வைத்து இருந்தனன்.அப்போது மலைகளும், மரங்களும்,இயக்கம் மறந்தன,பறவைகளும் விலங்குகளும் அஞ்சின,படம் ஒடுக்கி பாம்புகளும் ஒதுங்கின.இராவணன்

இது யாரின் உறைவிடம்  இங்குள முனிவர் யார்? என்றிட

வைதேகி தசரத குமாரன் இராகவன் இளவலோடு வனம் புகுந்ததைச் சொல்வாள். பல நாடுகள் சென்ற நீங்கள் தசரத குமாரர்கள் பற்றி அறிந்ததிலையோ எனக் கேட்கிறாள். இராவணன்

ஆமாம் கேட்டதுண்டு கண்டதிலை

நீ யாரம்மா என்கிறான்.சீதை நான் சனகன் மகள் சானகி இராமனின் மனைவி  எனச்  சொல்லி தள்ளாமையில் யாண்டிருந்து வந்துளீர் என்கிறாள்.அவனும் சீரிய தவத்தால் உலகனைத்தும் ஆளும்  என்னைப் போன்ற

முனிவர்கள் தலைவன் என எண்ணும் பண்பினன்,காமனும் தோற்கும் அழகன்,உலகனைத்திலும் உள்ள அழகு நங்கையர் அவனருளை வேண்டியும் ஏற்காது தன் மனம் விரும்பும் மாதை எண்ணி உருகுபவனான இராவணனின்

இலங்காபுரியில் சிலநாள் இருந்து அவனைப் பிரிய மனமின்றி பிரிந்து வந்துளேன் என்றான்.

சீதையும் தீவினை புரியும், மன்னுயிர் கொன்று தின்னும்

அரக்கர் ஊரில் இருந்துளீர்.வனத்தில் மாதவம் புரிவோராடு

இராமல் பழி செய்தீர் என்றாள் அவனும் ‘பெண்ணே தேவர்களே தீயவர்கள்,எங்களுக்கு அரக்கரே நலம் புரிவார்’ என்றான்.அரக்கர் வேண்டும் உரு எடுப்பர் என அறியாத சீதை அதனை மறுத்து அரக்கரைப் பூண்டோடு அழித்திட

இராகவன் கடம் பூண்டுளான் என்றாள்,அவனும் யானைக் கூட்டத்தை முயல் கொல்லுமோ,சிங்கத்தின் கூட்டத்தை மான் கொல்லுமோ என்றான்.விராதன் மடிந்ததும்,கரன் முதலான அரக்கர் மடிந்ததும் அறியீரோ,எஞ்சினோர் இறுதியும் காண்பீர், என்றதும் இராவணன் .

சினந்து,

`மேருவைப் பறிக்க வேண்டின்

விண்ணினை இடிக்க வேண்டின்

நீரினைக் கலக்க வேண்டின்

நெருப்பினை அவிக்க வேண்டின்

பாரினை எடுக்க வேண்டின்` இராவணனுக்கு அரிதோ யாரென நினைத்தாய் என்றான்.அவளோ  இருபது தோளினானை இரண்டு தோளுடைய கார்த்தவீரியன் சிறை வைத்தான்.  கார்த்தவீரியனைப் பரசுராமன் வென்றான் அந்தப் பரசுராமனை வென்றவன் இராமன் என்றாள்.இதைக் கேட்டதும் பொங்கிய சினத்தினால் அவனது மாய வேடம் மறைய பாம்பு படமெடுத்தது போற் சினந்தான்.விண்ணவர் ஏவல் செய்ய

வென்ற என் வீரம் பாராய்,மண்ணிடைப் புழுவென வாழும் மானிடர் வலியர் என்றாய்,பெண் எனப் பிழைத்தாய் அல்லை,உன்னைப் பிசைந்து தின்ன எண்ணுவென்` ஆனால் என்னுயிரும் போகும், அதனால் மாதே எவரையும் வணங்காத என் மணிமுடி ஏற்று அரம்பையர் ஏவல் செய்ய

ஈரேழு உலகமும் ஆளுவாய் என்றான். முதிய தவமுனிவன் வேடம் கலைய இராவணனின் உண்மை உருவம் கண்ட சீதை நடுக்கம் உற்றாலும் அவனது முறை தவறிய பேச்சினால் அஞ்சாது அவனோடு வாதிடுகிறாள்.

காகுத்தன் மனையறம் பூண்ட எனை உலகவொழுக்கம் மறந்து வேள்வியில் கடவுளுக்குத் தந்த அவியை நாய் விரும்பியது போல் தீமை பகன்றாய்,என் உயிர் பிழைக்க

குலவொழுக்கம் மாறுவனோ மின்னலாய்ப் பாய்ந்து இடியாய்ச் சீறும்  என் மன்னவன் கணை பாயுமுன் உயிர் பிழைத்து ஓடு என்றாள்.

உன் கணவன் விடும் அம்பு எனக்கு  குன்றின் மேல் எறிந்த மலரேயாகும் என்று சொல்லி எனை ஏற்பாய் என்று அவளடியில் வீழ்ந்து வணங்கினான் இராவணன். வரம் பல பெற்றவன் முறை தவறிய இச்சையினால் முன் பின் அறியாத பெண்ணொருத்தியின் காலில் விழுந்து இறைஞ்சும் இழிநிலை அடைகிறான். பாவமனைத்திலும் கொடியது முறை தவறிய ஆசை. அடக்கமே உருவான

பொற்புடையாள் இளையவனே எங்குற்றாய் என ஏங்கினாள்.இராவணன் ஏற்கெனவே பெற்றதோர் சாபம் நினைந்து (எந்தப் பெண்ணையும் அவள் விரும்பாது தீண்டினால் இறந்து படுவான்)  அவளைத் தீண்டாது பர்ணசாலையோடு பெயர்த்து எடுத்துத் தேரில் வைத்து வான்வழிப் பறந்தான்.

சீதை ,கொடிபோல் புரள்வாள்,குலைவாள்,அயர்வாள்,துடித்

தெழுவாள்,துயரால் அழுவாள்,அறமோ இது என அரற்றுவாள் ,மலையே மரனே மயிலே குயிலே

கலையே பிணையே களிறே பிடியே.

மஞ்சே பொழிலே வன தேவதைகாள் `அருளீரோ, பெருங்காட்டில் மானிடரா உள்ளனர் உதவிக்கு அழைக்க,இயற்கையோடு இனிது வாழ்ந்திருந்தவள் பறவைகளையும்,விலங்குகளையும் அழைத்து என் நிலையை இராகவனிடம் சொல்லுங்களேன் எனக் கெஞ்சுகிறாள். வனத்திற்குக் காவலிருக்கும் தேவதைகளே என்னைக் காக்க வாரீரோ என்கிறாள்.

அடுத்து இராமனையும்,இலக்குவனையும் அழைக்கிறாள்.

பரதனையும்,சத்துருக்கனனையும் நினைக்கிறாள்.அறம் காக்கப் பிறந்த தசரத குமாரர்கள் எனைக் காக்க இயலாது

பழி அடைவீரோ என ஏங்குகிறாள்.

‘வரதா இளையோய் மறு ஏதுமிலாப்

பரதா இளையோய் பழி பூணுதிரோ’

இவ்வளவில் இராவணனின் தேர் கோதாவரியைக் கடந்து செல்ல,

‘கோதாவரியே குளிர்வாய் குழைவாய்

மாதா அனையாய் மன்னே தெளிவாய்

…………..ஓடினை போய்

நீதான் வினையேன் நிலை சொல்லலையோ’

அன்னையரை விட்டுப் பிரிந்திருக்கும் தனக்கு அன்னையாய்

இருந்த கோதாவரியைப் பார்த்து  `கருணை கொண்டவளே,நீயும் திகைத்துப் போனாயோ என் நிலை கண்டு, சிந்தை தெளிந்து விரைந்து ஓடிச் சென்று என் நாயகனிடம் சொல்லி வரச் செய்` என்பாள்.

.முந்தும் சுனைகாள்,முழைவாழ் அரிகாள்

இந்த நிலனோடும் எடுத்த கை

நாலைந்தும் தலை பத்தும் அலைந்து உலையச்

சிந்தும்படி கண்டு சிரித்திடுவீர்`   இன்னும் மலைப் பிளவுகளில் சிங்கங்களையும்,சுனைகளையும் பார்த்துச் சூளுரைக்கிறாள்.அடாத செயல் புரிந்தவனின் தலைகளும், தோள்களும் என் நாயகனால் துணிக்கப் படுவது கண்டு சிரித்திடுங்கள் என்கிறாள்..இராவணன்  போரில் எனைக் கொன்று உனை மீட்பரோ அம்மானிடர்

எனச் சிரித்தான்,சீதையும் உன் குலத்தோர் அழிந்தது கண்டு அஞ்சி வஞ்சனையால் கவர்ந்தாய்,நீ வீரன் என்றால்

வனத்தில் உள்ள அவரிடம் பொருது பின் உன் தேரைச் செலுத்து என்றாள்.மானே நெற்றிக் கண்ணுடையான் வெள்ளி மலை எடுத்த தோள்கள் அற்ப மானிடரிடம் பொருதல் பழிதரும் ஆதலால் வஞ்சனையே சிறந்தது என்றான்.

சீதையும் இரக்கமற்ற அரக்கருக்கு வாளெடுத்து வீரம் காப்பது பழிதான் மனையறம் பூண்ட மங்கையரை வஞ்சித்துக் கவர்வதே புகழுடையது எனச் சினந்து அரற்றினாள்.

சானகியின் இந்தத் துயரப் புலம்பல் எவருக்கும் கண்ணில் நீர்த் திரள வைக்கும் . சிலம்பில் கோவலன் இறந்த செய்தி கேட்ட கண்ணகியின்`

`காதலர்க் காண்கிலேன் கலங்கிநோய்க் கைமிகும்

ஊதுலைத் தோற்க உயிர்க்குமென் நெஞ்சன்றே

ஊதுலைத் தோற்க உயிர்க்குமென் நெஞ்சாயின்

ஏதிலார் சொன்னதெவன் வாழியோ தோழி`எனும் ஆற்றாமையை நினைவூட்டும்.

இவ்வாறு இயற்கைப் பொருட்களைப் பெருங் காப்பியங்களில் தூது விடுத்ததே பின்னாளில் `தூது`(தமிழ் விடு தூது,அழகர் கிள்ளை விடு தூது,காளிதாசரின் மேகசந்தேசம் போன்ற பல இலக்கியங்கள்.) என்னும் சிற்றிலக்கியங்கள் தோன்றக் கருவானது எனலாம்.

————-

Series Navigationமுரண் நகை – இ.புக்-அமேசான் கிண்டில் வெளியீடு-தெரிவித்தல்கவிஞர் கி பி அரவிந்தன் நினைவு இலக்கியப்பரிசு முடிவுகள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *