நான் மீண்டும் கலைமகளை என்னுடன் திருப்பத்தூருக்கு கூட்டி வந்தேன். அவளை சிங்கப்பூர் அழைத்துச் செல்லும்போது திருமண ஏற்பாடுகளுடன் செல்லவேண்டும். கலைசுந்தரிக்கு போட்டுள்ள நகைகளின் அளவில் நகைகள் கொண்டு செல்ல வேண்டும்.நண்பன் பெரிதாக எதிர்பார்க்கமாட்டான். இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு வேண்டிய நகைகளை போட்டு கூட்டிச் செல்வதே நல்லது. அப்பாவிடம் அது பற்றி சொல்லியுள்ளேன்.அண்ணனுக்கும் அது பற்றி தெரியும்.
வழக்கம்போல் மருத்துவப் பணி தொடர்ந்தது. எந்த நேரத்திலும் சிங்கப்பூர் செல்லலாம் என்ற நிலை அது. என் நண்பர்கள் சோகத்தில் மூழ்கினர்.அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினேன். கலைமகளுக்காக நான் கட்டாயம் சென்றாக வேண்டும். இளைய தங்கைக்கு வேறு திருமணம் ஆகிவிட்டது. காலம் தாழ்ந்தால் மூத்தவளுக்கு ஏன் திருமணம் செய்யவில்லை என்று பேசுவார்கள்.நான் நிலைமையை விளக்கி கோவிந்தசாமிக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு மாதம் ஆகியும் பதில் இல்லை.! அங்கு என்ன பிரச்னையோ தெரியவில்லை.
எழுத்தாளர் அழகாபுரி அழகப்பன் தவறாமல் சனி ஞாயிறுகளில் வந்து கொண்டிருந்தார். அவரிடம் என்னுடைய சிங்கப்பூர் பயணம் பற்றி சொன்னபோது மிகவும் வருந்தினார். என்னுடைய நட்பு தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகச் சொன்னார். அது இவ்வளவு சீக்கிரத்தில் பிரிவை சந்திக்க நேரும் என்பதை தான் எதிர்பார்க்கவில்லை என்றார்.
நான் சிங்கப்பூர் செல்லுமுன் அவர் யாரை வைத்து அப்போது குமுதத்தில் தொடர் கதை எழுதிவருகிறாரோ அந்த ராமாவை அழைத்து வந்து எனக்கு அறிமுகம் செய்துவைக்க விரும்புவதாகக் கூறினார். நான் சம்மதம் தெரிவித்தேன். அதன் மறு வாரமே ராமாவுடன் வந்துவிட்டார். அந்த பெண்ணுக்கு பதினாறு வயதுதான் இருக்கும். மாநிறம்தான். ஒருவிதமான கவர்ச்சியான செட்டி நாட்டு அழகு அவளிடம் இருந்தது. அவளின் இளமையும், உடல் அமைப்பும், கவர்ச்சியும் அவரின் கற்பனையைத் தூண்டிவிட்டு அந்த நாவலை எழுதச் செய்கிறதோ என்று எண்ணிக்கொண்டேன். அதை நான் அவரிடம் கேட்கத் தேவையில்லை. அவரே என்னிடம் சொல்லிவிடுவார். எங்கள் நட்பு அவ்வளவு நெருக்கமாகிவிட்டது!
அன்று இரவு அவர்கள் இருவரும் வீட்டில் உணவு முடித்தபின்பு விடை பெற்றனர். அவர் சோகமாகவே சென்றார். முடிந்தால் திரும்பி வரச் சொன்னார். அப்படி வந்தால் உடன் தொடர்பு கொள்ளச் சொன்னார்.
நான் எதிர்பார்த்தபடியே கோவிந்தசாமியிடமிருந்து கடிதம் வந்தது. அதில் ஸ்டேட் ஆப் மெட்ராஸ் கப்பல் டிக்கட் இரண்டு இருந்தது. அவற்றை அவன் சிங்கப்பூரிலேலேயே வாங்கிவிட்டான். அதோடு மருத்துவத் தேர்வுக்கும் ஐந்நூறு வெள்ளி பணம் கட்டிவிட்டதாகவும் எழுதியிருந்தான். தேர்வுக்கு தயாராகவும் வரச் சொல்லியிருந்தான்.
தங்கையின் திருமண ஏற்பாட்டில் நான் எங்கே மருத்துவம் படிப்பது. அன்றன்று வார்டிலும் வெளிநோயாளிப் பிரிவிலும் சிகிச்சை தரும்போது இரவில் அந்தந்த வியாதிகள் பற்றி மீண்டும் ஒருமுறை மருத்துவ நூல்களைப் புரட்டிப் பார்ப்பேன். ஆனால் அறுவை சிகிச்சை, பிரசவமும் மகளிர் இயல் நோய்கள் நூல்களைப் புரடட நேரம் இல்லாமல் போனது. இறுதியாண்டில் படித்தது ஓரளவு நினைவில் இருந்தது. அந்த நூல்களை மீண்டும் ஒரு முறை படித்து முடித்தால் போதுமானது. இங்கு நான் தமிழகத்தில் உள்ள நோய்களில்தான் நல்ல அனுபவம் பெற்று வருகிறேன். சிங்கப்பூரில் எந்தெந்த நோய்கள் அதிகமாக காணப்படும் என்பதை அங்கு சென்றபின்புதான் அறிந்துகொள்ள முடியும். நான் கடடாயம் அங்கேயே இருக்கவேண்டும் என்று தங்கை சொல்வதால் கட்டாயம் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.
நான் பிரயாண ஏற்பாடுகளில் இறங்கினேன். தலைமை மருத்துவ அதிகாரியிடம் ஒரு மாத விடுப்புக்கு எழுதித் தந்து அவரின் சம்மதத்தையும் பெற்றுவிட்டேன். அவர் நான் திரும்பி வராமல் இருந்தால் நல்லது என்றுதான் நினைத்திருப்பார். நான் மீண்டும் வந்தால் இங்கே ஊழியர்களை அவருக்கு எதிராக சேர்த்துக்கொண்டு குழப்பம் விளைவிப்பேன் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
பால்ராஜுடன் வேலு புகைப்பட நிலையம் சென்றேன். அங்கு தங்கையின் பாஸ்போர்ட்டைத் தந்து சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கு விசா எடுக்க பணம் காட்டினேன். அங்கேயே போதுமான அமெரிக்கன் டாலர்கள் வாங்கிக்கொண்டேன். கப்பலில் இந்திய ரூபாய் பயன்படுத்தமுடியாது.
நண்பர் பால்ராஜ் , கிறிஸ்டோபர், தேவஇரக்கம் தவிர வேறு யாருக்கும் நான் தேர்வு எழுதப் போவது தெரியாது.
ஆனால் மனதில் ஒருவித உறுத்தல் இருக்கவே செய்தது. அது முன்பு மலேசியாவில் வேலை இன்றி தடுமாறிய நிலையில் நான் கண்ட கனவு. அதில் கடவுளே தோன்றி சர்ப்பங்கள் நிறைந்த ஒரு புதையலைக் காட்டினார். அதன் பொருளை உணர்ந்தவனாக தமிழகம் புறப்பட்டு மீண்டும் மிஷன் மருத்துவமனையில் சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறேன். இப்போது நண்பன் சொல்கிறான் என்பதற்காக மீண்டும் சிங்கப்பூர் புறப்படுகிறேன். இதுவும் கடவுளின் சித்தமா என்பது சரிவரத் தெரியவில்லை.
இப்போது அப்பா, அம்மா, அண்ணன் , அண்ணி, சில்வியா, தங்கைகள் இருவர் என நாங்கள் ஒரு குடும்பமாக இங்கே உள்ளோம். இதற்கு முன் நாங்கள் அங்கும் இங்குமாகப் பல வருடங்கள் பிரிந்திருந்தோம். இப்போது இதன் மூலம் மீண்டும் பிரிய நேரலாம். இதுவும் கடவுளின் செயல்தானா என்பது தெரியவில்லை.
சில வேளைகளில் நமக்குச் சாதகமாக இருந்தால் அதைக் கடவுளின் செயலாக நம்புகிறோம். சாதகமாக இல்லையேல் கடவுள் சித்தம்தான் என்ன என்றும் தடுமாறுகிறோம். இதுவே என்னுடைய தடுமாற்றம்.
கடவுள் அழைத்துள்ள மருத்துவப் பணியை திருப்பத்தூர் மிஷன் மருத்துவமனையில் தொடராமல் சொகுசு வாழக்கைத் தேடி மீண்டும் சிங்கப்பூர் சென்றால் கடவுளின் ஆசிர்வாதம் கிட்டுமா என்ற சந்தேகமும் மனதில் எழவே செய்தது. அதே வேளையில் நான் ஆற்றவேண்டிய இரண்டு வருட மருத்துவச் சேவையையை நிறைவேற்றிவிட்டேன் என்பது ஆறுதலை அளித்தது.
இந்த பிரயானத்தின் முக்கிய நோக்கம் கலைமகளின் திருமணம். அதோடு அங்கு தேர்வு எழுதும் வாய்ப்பும் கிட்டியுள்ளது. ஆதாலால் இது பற்றி மனதை குழப்பிக்கொள்ள விரும்பவில்லை. கடவுளின் அழைப்பு எதுவோ அதன்படி நடக்கட்டும்.
தங்கைக்காக இதை செய்தே ஆகவேண்டும்.
( தொடுவானம் தொடரும் )
- தொடுவானம் 218. தங்கைக்காக
- கூறுகெட்ட நாய்கள்
- உயிரைக் கழுவ
- பாரதி யார்? (நாடகம் குறித்து சில கருத்துகள்)
- பையன் அமெரிக்கன்
- குப்பையிலா வீழ்ச்சி
- மொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018
- திசைகாட்டி
- இந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்
- வள்ளல்
- விழி
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 2 – தி இமிடேசன் கேம்
- மன்னித்துக்கொள் மானுடமே..
- அப்பா அடிச்சா அது தர்ம அடி
- சாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)
- மருத்துவக் கட்டுரை வாய்ப் புண்கள்
- நாசாவின் எதிர்கால நிலவுக் குடியிருப்புக் கூடம் 2023 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும்
- பியூர் சினிமாவில் – உலக புத்தக நாள் – கொண்டாட்டம்
- மாமனார் நட்ட மாதுளை
- உனக்குள்ளே !உனக்கு வெளியே !
- சுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து
- இருபது தோளினானும் இரண்டு சிறகினானும்