சிங்கப்பூர் சென்றேன். கவலைகளை ஒரு புறம் வைத்துவிட்டு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். கோவிந்தசாமி வீட்டில்தான் தங்க வேண்டும். அங்கு பன்னீர் நிச்சயம் வந்துவிடுவான். கோவிந்தசாமியே அவனைக் கூப்பிடுவான். என்னுடன் தனியாக இருக்க அவனுக்கு பயம்!
என் வரவை எதிர்பார்த்தபடியே கோவிந்தசாமி காணப்பட்டான். நான் நடு அறையில் மருத்துவ நூல்களுடன் தஞ்சம் கொண்டேன். காலையில் சிங்கப்பூர் பொது மருத்துவமனை செல்வேன். அப்போது வெள்ளை நிற கிளினிக்கில் கோட் அணிந்திருப்பேன். அங்கு மருத்துவ, சர்ஜிக்கல் வார்டுகளில் நோயாளிகளைப் பார்த்தேன்.என்னுடன் சுமார் ஐந்து பேர்கள் வெளிநாடுகளில் படித்தவர்கள் இருந்தனர். அவைகளில் ஒரு தமிழரும் இருந்தார். அவர் இந்தத் தேர்வு வெறும் கண் துடைப்பு என்றார். முயன்றுதான் பார்ப்போமே என்று அவரிடம் சொன்னேன். தைவான் படிப்பை ஏற்கும் போது இந்தியப் படிப்பை வேண்டாம் என்கிறார்களே என்று அங்கலாய்த்தார்.
தமிழகம் போன்று இங்கு பரவலான நோய்கள் இல்லை. இருதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லிரல், நரம்பியல், இரைப்பை,குடல்,தொடர்புடைய நோயாளிகளை மீண்டும் பார்ப்பது சுலபமாகவே இருந்தது. நோயியல் பகுதிக்குச் சென்று நுண்ணோக்கியில் நோய்க் கிருமிகளை மீண்டும் பார்த்து மூன்று வருடங்களுக்கு முன்பு கற்றவற்றை நினைவில் கொண்டு வந்தேன். எங்களை கண்காணிக்க யாரும் வரவில்லை. சொந்தமாகவே வார்டுகளில் நடமாடி அங்குள்ள நோயாளிகளைப் பார்த்தேன். அவர்களின் குறிப்பேடுகளையும் நோட்டமிட்டேன்.
ஒரு வாரம் அங்கு சென்று வார்டுகளில் நோயாளிகளைப் பார்த்தபின்பு கண்டாங் கிருபோ மருத்துவமனை சென்று பிரசவ வார்டிலும் மகளிர் நோய் இயல் பிரிவிலும் நோயாளிகளை மூன்று நாட்கள் பார்த்தேன். அங்கும் எனக்கு சுலபமாகவே இருந்தது. புதிதாக ஏதும் இல்லை.
மருத்துவமனைகளில் எங்களுக்குத் தரப்பட்ட அனுமதி முடிந்துவிட்ட்து. இனி தேர்வுதான். எழுத்துத் தேர்வு மூன்று நாட்கள் நடந்தது. பொது மருத்துவம், அறுவை மருத்துவம், மகப்பேறும் மகளிர் நோய் இயல் ஆகிய மூன்று பாடங்களில் தேர்வுகள் நடந்தன. நான் இவற்றில் நன்றாககச் செய்தேன். அதைத் தொடர்ந்து கிளினிக்கல் தேர்வுகள் வார்டுகளில் நடந்தன. அதில் லாங் கேஸ், ஷார்ட் கேஸ் என்று உள்ளன. லாங் கேஸ் என்பது நீண்ட நோயாளி. அதில் ஒரு நோயாளி தரப்படுவார். அவரிடம் நோய் பற்றி விசாரித்து பரிசோதனை செய்து தேர்வாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டும். நோயாளியைப் பரிசோதிக்க ஒரு மணி நேரம் தரப்படும். ஷார்ட் கேஸ் என்பது குறுகிய நோயாளி. இதில் ஐந்து நோயாளிகள் வரிசையாக அமர்ந்திருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் பதினைந்து நிமிடங்களில் பரிசோதனை செய்துவிட்டு அவர்களுக்கு என்ன நோய் என்பதைச் சொல்லிவிடவேண்டும். பொது மருத்துவத்திலும் அறுவை மருத்துவத்திலும் இவ்வாறு தேர்வுகள் நடந்தன.
மகப்பேறும் மகளிர் நோய் இயலிலும் இதுபோன்றே தேர்வுகள் நடத்தப்படும்.
முதல் நாள் தேர்வு பொது மருத்துவம். அது எனக்கு மிகவும் பிடித்த பாடம். அதில் நன்றாக தயார் செய்திருந்தேன். அதோடு எனக்கு திருப்பத்தூரிலும் நல்ல அனுபவம் இருந்தது. ஆனால் தேர்வுக்குச் சென்றபோது எனக்கு பெருத்த ஏமாற்றம் காத்திருந்தது! எனக்கு தரப்பட்டிருந்த நோயாளி ஒரு சீன இளைஞன். அவனுக்கு வயது பதினாறு. ஒல்லியாக வெளிறிய நிலையில் காணப்பட்டான். அவனிடம் கேள்விகள் கேட்டபோது தனக்கு அடிக்கடி மயக்கம் வரும் என்றான். அவனுக்கு வலிப்பு நோய் இல்லை. இனிப்பு நோய் கிடையாது. அவை இரண்டும் இல்லையேல் அவனுக்கு இரத்தச் சோகை இருக்கலாம். பரிசோதனையின்போது இரத்தத் சோகை உள்ளது தெரிந்தது. வேறு எந்த நோயும் என் மனதில் தோன்றவில்லை. அவனுக்கு இரத்தச் சோகையே உள்ளது என்று முடிவு செய்துவிட்டேன். ஆனால் மனதுக்குள் ஓர் உறுத்தல். இவ்வளவு எளிதாக ஒரு நோயை தேர்வுக்கு வைத்திருப்பார்களா என்பதே அந்த அச்சம்!
ஒரு மணி நேரத்தில் அந்த நோயாளியிடம் தகவல்களைச் சேர்த்துக்கொண்டபிறகு அவனைப் பரிசோதனை செய்து முடித்தேன். பரிசோதனையில் அவனிடம் அதிக கண்டுபிடிப்புகள் இல்லை. அவன் ஆரோக்கியமாக உள்ளதுபோல்தான் தெரிந்தது. பெரும்பாலும் இரத்தச் சோகையில் அதிகம் உடல் மாற்றங்கள் இருக்காது. இவ்வளவு சுலபமாக நிச்சயம் தேர்வுக்கு வைக்க மாட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தேர்வாளருக்குக் காத்திருந்தேன்.அவர்கள் இருவர் வந்தனர். இருவரும் சீன இனத்தவர்.
அவர்கள் நோயாளியை பற்றி கேட்டனர். அவனைப் பற்றி அறிந்தவற்றை அவர்களிடம் விவரித்தேன். . அவனுக்கு என்ன நோய் உள்ளது என்று கேட்டனர். நான் அவனுக்கு இரத்தத் சோகை உள்ளது என்றேன். அது சரிதான் என்று சொன்னவர்கள் வேறு என்ன நோய் என்று கேட்டனர். நான் விழித்தேன்! அவர்கள்வேறு நோய் ஏதும் இல்லையா என்று மீண்டும் கேட்டனர். நான் பதில் சொல்லவில்லை. அவர்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. உடன் அவனுக்கு தேலசேமியா என்றனர். அது கேட்டு என் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்றுபோனது!
தேலசேமியா ( Thalassaemia ) என்பது மிகவும் அசாதாரண நோய். இது மரபணு கோளாறினால் உண்டாகும் நோய். இந்நோய் கண்டவர்களுக்கு உடலில் போதிய செங்குருதியணு உற்பத்தியாகாமல் சிவப்பு அணுப் பற்றாக்குறை ஏற்படும். இந்நோயாளிகளுக்கு மாதந்தோறும் இரத்தம் செலுத்த வேண்டும். ஆனால் இவ்வாறு தொடர்ந்து இரத்தம் செலுத்துவதால் உடலில் இரும்புச் சத்தின் அளவு அளவுக்கு அதிகமாக உயர்ந்து மண்ணீரல் வீங்கி, இரத்தக் கசிவு உண்டாகும். சுமார் பத்து வருடங்களில் கல்லிரல், இருதயம் பாதிப்புக்கு உள்ளாகி மரணம் நேரிடும். இந்த நோய் சீன இனத்தவரிடமும் மலாய் இனத்தவரிடமும் அதிகம் காணப்படுகிறது. இந்த நோயை நான் அதுவரை தமிழகத்தில் பார்த்ததில்லை! அதனால் அது பற்றி உன்னிப்பாகப் படிக்கவில்லை. அதை அறிந்துகொண்ட அவர்கள் அது பற்றி ஆழமான கேள்விகள் கேட்டனர். நான் தடுமாறினேன்! அப்போதே எனக்குத் தெரிந்துவிட்டது. இந்தத் தேர்வில் நான் தோல்விதான்! மூன்று பாடங்களில் ஒன்றில் தோற்றாலும் முழுத் தேர்விலும் தோற்க நேரிடும்! மனம் உடைந்துபோன நிலையில் ஷார்ட் கேசஸ் ஐந்தையும் பரிசோதனை செய்து நோய்கள் பற்றி கூறினேன். அவற்றைச் சரியாகச் சொன்னாலும் லாங் கேசில் தோல்வியுற்றதால் அதனால் நன்மையேதும் இல்லை. பொது மருத்துவத்தில் நான் தோல்விதான். இனி அடுத்த இரண்டு பாடங்களில் வெற்றி பெற்றாலும் முழுத் தேர்விலும் தோல்வி என்ற நிலைதான்.
அன்று தேர்வுகள் முடிந்து சோர்வுடன் திரும்பினேன். கோவிந்தசாமியும் பன்னீரும் ஆறுதல் சொன்னார்கள்.அடுத்த நாள் அறுவை மருத்துவம் நேர்முகத் தேர்விலும் அதன் மறுநாள் மேகப்பேறும் மகளிர் நோய் இயல் தேர்வுகளிலும் பங்கு பெற்றேன். அவற்றில் சிறப்பாகச் செய்தாலும் அதனால் பயன் ஏதும் இல்லை என்பது எனக்குத் தெரியும்.
இந்தத் தேர்வில் நான் வெற்றி பெறவில்லை! தங்கையின் திருமணமும் நடந்தேறவில்லை! இரட்டைத் தோல்விகள் எனக்கு!!
( தொடுவானம் தொடரும் )
- ”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை
- குழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம்
- உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்
- ஈரமனம் !
- கவிதைகள்
- கொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்
- சிறுபாணாற்றுப்படையில் பாணர்களின் வறுமைநிலை
- புரட்சி எழ வேண்டும் !
- தொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்
- மருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று
- அய்யிரூட்டம்மா
- வேரா விதையா
- மரணத்தின் வாசலில்