மருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு

This entry is part 13 of 15 in the series 27 மே 2018

          தசைப் பிடிப்பு என்பதை வாய்வுக் குத்து, குடைச்சல் என்று கூறுவர். ஆங்கிலத்தில் இதை  ” கிரேம்ப் ”  என்பர். உண்மையில் இதை  தசைகளில்  உண்டாகும் இறுக்கம் அல்லது பிடிப்பு.  இதற்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன. தசை நார்ச் சுரிப்பு, தசை மரத்தல், சூரை பிடித்தல், தசை இசிவு, பிடியிருக்கம் என்ற பெயர்களில்கூட இது அழைக்கப்படுகிறது. கடுங்குளிரினால் அல்லது மட்டுமீறிய தளர்ச்சியினால் உண்டாகும் தசைநார் பிடிப்பு இது எனலாம்.

தசைப் பிடிப்பு என்பது திடீரென்று கால் தசைகள் இறுக்கமுற்று கடுமையாக வலிப்பதைக் குறிக்கிறது. இது இரவில் படுத்தபின்பு உறக்கம் வரும் வேளையில் அல்லது விடிந்து எழும் வேளையிலும் உண்டாகும்.

                                                    தசைப் பிடிப்பு ஏன் உண்டாகிறது?

தசைப் பிடிப்பு எப்படி உண்டாகிறது என்பது சரிவரத் தெரியவில்லை. ஆனால் சில காரணங்களால் இது ஏற்படலாம் என்பது தெரியவந்துள்ளது. அவை பின்வருமாறு.

* கடுமையான உடற்பயிற்சி , விபத்து, பளுவான வேலை, காரணமாக தசைகளை அதிகம் பயன்படுத்துவது.

* கர்ப்ப காலம்- கர்ப்பமுற்ற பெண்களுக்கு கால்சியமும் மெக்னீசியமும் குறைவு படுவதால் தசைப் பிடிப்பு உண்டாகலாம்.

* குளிர் அல்லது குளிர்ந்த நீர் உடலில் படுவது.

* இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், தைராய்டு சுரப்பி கோளாறுகள்.

          * நீரிழிவு நோயாளிகளுக்கு காலில் உள்ள இரத்தக் குழாய்கள் சுருக்கமுற்று இரத்தக் குறைவால் இது உண்டாகிறது.

* வெகு நேரம் நிற்பது, வெகு நேரம் அமர்ந்திருப்பது, உறங்கும்போது கால்களை தவறான முறையில் வைத்திருப்பது.

* இரத்தத்தில் பொட்டாசியம்,கால்சியம் குறைவு.

* உடலில் போதுமான நீர் இல்லாதிருப்பது.

* சில மருந்துகள்  உட்கொள்ளுவது.மனநோய் மருந்துகள், இரத்தக்கொதிப்பு மாத்திரைகள்,சிறுநீர் வெளியேற்றும் மருந்துகள், கருத்தடை மருந்துகள், ஹார்மோன் மாத்திரைகள், கொழுப்பு குறைக்கும் மாத்திரைகள் சில உதாரணங்கள்.

          * டையேலிசிஸ் என்னும இரத்தம் சுத்திகரிப்பு செய்து கொள்வது.

                                           தசைப் பிடிப்பை எப்படி குணப்படுத்துவது?

தசைப் பிடிப்பு வராமல் தடுக்க மருந்துகள் இல்லையென்றாலும், சில வழிமுறைகள் மூலமாக அதை உடன் தடுத்து நிவாரணம் பெறலாம். வலி வந்ததும் இவற்றில் சிலவற்றைச் செய்து பார்க்கலாம்.

* கால்களை நீட்டி அழுத்தி நீவி விடுவது..

* சுடு நீரில் குளிப்பது அல்லது சுடுநீர் ஒத்தடம் தருவது.

* ஐஸ் ஒத்தடமும் தரலாம்.

* வலி குறைக்கும் மாத்திரைகள் உட்கொள்வது.

* நிறைய நீர் பருகுதல்.

* படுக்குமுன் காப்பி அல்லது மது அருந்துவது கூடாது.

* மல்லாக்கப்  படுத்துத்  தூங்கினால் கால் விரல்களை நேராக உயர்த்தி வைத்துக்கொள்ளவேண்டும்.

          * மருத்துவரைப் பார்த்து அவர் தரும் வலி நிவாரண மாத்திரைகள் உட்கோள்ளுதல்.

( முடிந்தது )

Series Navigationடிரைவர் மகன்மகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *