தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்

This entry is part 6 of 15 in the series 27 மே 2018

           தேர்வுகள் முடிந்தன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை. கலைமகள் திருமணமும் நடக்கப்போவதில்லை. இனி வேறு வழியில்லை. ஊர் திரும்ப வேண்டியதுதான். அங்கு திருப்பத்தூர் வேலையையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதுவும் இல்லையெனில் அங்கும் தடுமாற வேண்டும்.

          என்னுடைய முடிவை பன்னீரிடம் சொன்னேன். அவன் கலைமகளை மட்டும் ஊருக்கு அனுப்பிவிட்டு என்னை சிங்கப்பூரிலேயே இருக்கச் சொன்னான். எனக்கு அது உகந்ததாகப் படவில்லை. திருமண ஆசை காட்டி தங்கையை அழைத்து வந்து விட்டேன். இப்போது தனியாக அவளை ஊருக்கு அனுப்புவது முறையாகாது. நாங்கள் இருவருமே திரும்பிவிட முடிவு செய்தேன்.
          கோவிந்தசாமி திருமணம் பற்றி பேசுவதைத் தவிர்த்தான். அவனுக்குக் குற்ற உணர்வு. ஆனால் காரணத்தை மட்டும் சொல்லத் தயங்குகிறான். அதை பன்னீரிடமாவது சொல்லலாம்.அதையும் அவன் செய்யவில்லை. பன்னீருக்கு அவன் மீது கோபம்தான். என்னுடைய பொறுமையைக் கண்டு வியந்து போனான்!
          எங்கள் இருவருக்கும் கப்பல் டிக்கட் எடுக்க கோவிந்தசாமியிடம் கூறிவிட்டான். அவனும் அதை உடன் செய்து முடித்தான்.பிரயாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. நான். கப்பல் எற வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு லாபீஸ் புறப்பட்டேன். அது சோகமான பஸ் பிரயாணம். அப்போது நடந்தவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தேன். எல்லாவற்றுக்கும் காரணம் கோவிந்தசாமிதான். அவனை என்ன செய்வது. எதற்காக எங்களை வரச் சொல்லிவிட்டு இப்போது திரும்ப அனுப்புகிறான். இது என்ன விளையாட்டான காரியமா. இது என்னவாக இருக்கும். நிச்சயமாக இதில் எதோ ஒன்று உள்ளது. அதுதான் என்னவென்று புரியவில்லை.
          ஒரு வேளை என்னை திருப்பத்தூர் மிஷன் மருத்துவமனையிலேயே ஏழை எளிய மக்களுக்கும் தொழுநோயாளிகளுக்கும் சேவை செய்ய கடவுள் அழைக்கிறாரா? அப்படி அழைத்தால் பரவாயில்லை. ஆனால் கலைமகளின் திருமணத்தை ஏன் தடை செய்துவிடடார்? அது நிச்சயமாக கடவுளின் செயலாக இருக்க முடியாதே?
           பெரும் குழப்பத்தோடுதான் வீடு சென்றேன். அங்குள்ளவர்கள் தேர்வு பற்றி கேட்டனர். நான் தோல்விதான் என்றேன். அவர்களும் சோகத்தில் மூழ்கினர். நான் தேர்வில் வெற்றி பெற்று சிங்கப்பூரில் வேலையில் இருப்பேன் என்று அவர்கள் கண்ட கனவு கலைந்தது. அங்குதான் முன்பு எனக்கு அந்த புதையல் கனவு கூட வந்தது. இந்த முறை நிச்சயமாக எனக்கு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வேலை இல்லை என்பதைத் தீர்க்கமாக நம்பினேன். என் முடிவை அவர்களிடம் சொன்னேன். அவர்கள் மெளனமாயினர். அவர்களுடைய மகளுக்கு இனி நிரந்தரமாக இந்திய வாழ்க்கைதானா என்ற சோகத்தில் ஆழ்ந்து போயினர். மனைவிக்கும் பெருத்த ஏமாற்றம்தான்! என் மகன் அலெக்ஸ் அப்போதுதான் நடக்க ஆரம்பித்திருந்தான். அதைக் கண்டு ரசிக்க எனக்கு இனிமேல் வாய்ப்பிருக்காது. அவனுடன் அவளை எப்போது ஊருக்கு அனுப்பி வைப்பார்கள் என்பது தெரியவில்லை.
          கலைமகள் நிலை மிகவும் பரிதாபமானது. திருமண ஆசையோடு என்னுடன் இங்கு வந்து பெருத்த ஏமாற்றத்தைச்  சந்திக்கும் நிலை. காரணத்தைச் சொல்லாமலேயே அவளை திரும்ப கூட்டிச் செல்லப் போகிறேன். அங்கு அவளுடைய தங்கைக்குத் திருமணம் ஆகிவிட்டது. இனி இவளின் திருமணத்தை நடத்தி வைப்பது என் பொறுப்பாகும். அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளையை அங்கு தேடியாகவேண்டும். அதில் அதிக பிரச்னை இருக்காது.
          மீண்டும் மனைவியையும் மகனையும் மலேசியாவிலேயே விட்டுச் செல்வது மிகுந்த கவலையைத் தந்தது. அது சொல்லொண்ணா சோகம்! எவ்வளவுதான் மனதை ஆறுதல் படுத்தினாலும் அதிலிருந்து விடுபட முடியவில்லை. ஒரு வேளை மீண்டும் திருப்பத்தூர் சென்று அங்கு மருத்துவமனை சேவையிலும் அங்குள்ள ஊழியர்களின் நலனிலும் ஈடுபட்டால் இந்த சோகம் மாறலாம்.
          அந்த சில நாட்கள் மகிழ்ச்சியின்றி கழிந்தன.பிரயாணத்துக்கு அதிக ஏற்பாடுகள் இல்லை. கலைமகளுக்கு புதுப் புடவைகள் தந்தனர். அவளும் எதிலும் ஆர்வம் காட்டவில்லை.
          பிரயாணத்துக்கு முதல் நாள் நாங்கள் சிங்கப்பூர் புறப்பட்டோம். மனைவியையும் மகனையும் பிரித்து செல்வது மனதுக்கு பாரத்தைத் தந்தது. அப்போது உண்டான சோகத்தை விவரிப்பது சிரமம்! கைக்குழந்தையான மகனுக்கு ஒரு விளையாட்டுச் சாமான்கூட வாங்கித்தர முடியாத பரிதாப நிலை எனக்கு! கைச் செலவுக்கு மட்டுமே கொஞ்சம் பணம் வைத்திருந்தேன். அப்போது இருந்த நிலையில் ஏதன் மீதும் ஆர்வம் இல்லாமல் போனது.
          இந்த அவலத்துக்குக் காரணம் கோவிந்தசாமி. அவனும் ஓர் எழுத்தாளன். மனித நேயத்தை எழுத்தில் வடிப்பவன். எழுத்தில் வடித்துவிட்டால் மட்டும் போதுமா?  எதார்த்தமான வாழ்க்கையை அறிய வேண்டாமா? எழுதுவதெல்லாம் போலிதானா?
          ஒருமுறை தெம்மூரில் நான் சிறுகதை எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது வந்த அண்ணி என்ன எழுதுகிறாய் என்றார்.நான் கதை எழுதுகிறேன் என்றேன். கதை எழுதாதே என்றார். நான் ஏன் என்று கேட்டேன். கதை எழுதுபரின் வாழ்க்கை கதை போலாகிவிடும் என்றார். அப்போது அதை நினைத்துக்கொண்டேன்.எனக்கு அவர் சொன்னதில் உடன்பாடில்லை. பின்னாட்களில் ஒரு வேளை என்னுடைய சுயசரிதையை  எழுத நேர்ந்தால் அன்று அண்ணி சொன்னதைப்  பதிவு செய்ய  வேண்டும் என்று அப்போது எண்ணிக்கொண்டேன். இதுபோன்று எல்லார் வாழ்க்கையிலும் நடக்காது. இதுவும் நல்ல அனுபவமே! இது என்னுடைய பொறுமைக்கு வந்த சவால்! நான் இதையும் எதிர்கொள்வேன்!
          கலைமகளை அழைத்துக்கொண்டு மீண்டும் கோவிந்தசாமி வீட்டிற்கு செல்லும் நிலை உண்டானதைத் தவிர்க்க இயலவில்லை. நல்ல வேளையாக பன்னீர் அங்கு இருந்தான். அவனுடன் மனம் விட்டுப் பேசலாம்.அப்போது மனச் சுமை ஓரளவு குறையும். முடிந்தால் தங்கையை ஊரில் விட்டுவிட்டு சிங்கப்பூர் திரும்பச் சொன்னான். எனக்கு அதில் ஆர்வம் இல்லாமல் போனது. சரி பாப்போம் என்று மட்டும் சொல்லி வைத்தேன்.
          ஜெயப்பிரகாசத்தையும் சார்லசையும் பார்த்து விடை பெற்றேன். அவர்கள்  இருவரும் சோகத்துடன் விடை தந்தனர். ஜெயப்பிரகாசம் என் விரலில் ஒரு தங்க மோதிரம் அணிவித்தான்!
          வாடகை ஊர்தி மூலம் துறைமுகம் புறப்பட்டோம். கோவிந்தசாமியும் பன்னீரும் உடன் வந்தனர். வழி நெடுகிலும் பன்னீர்தான் பேசிக்கொண்டிருந்தான். கோவிந்தசாமி வாய் திறக்கவில்லை. அவன் முகமும் சரியில்லை. அதில் குற்ற உணர்வு பிரதிபலித்தது.
          துறைமுகம் வந்தடைந்ததும் இரு நண்பர்களும் எனக்கு கை குலுக்கிவிட்டு விடை பெற்றனர். தங்கையும் நானும் கப்பலில் ஏறினோம்.
          ” ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் ” கப்பல் பிற்பகலில் புறப்பட்டது. அந்த உல்லாசமில்லாத ஏழு நாட்கள் கடல் பிரயாணத்தையும் நான் எதிர்கொள்ளத்  தயாரானேன்!
     ( தொடுவானம் )தொடரும் )
Series Navigation‘பங்கயம்’ இட்லி!படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *