முதல் சபைச் சங்கக் கூட்டம். ஒன்பது உறுப்பினர்களும் ஆலயத்தில் ஒரு மாலையில் கூடினோம். சபைகுருவின் ஜெபத்துடன் கூட்டம் தொடங்கியது.
தேர்ந்தெடுக்கப்பட ஒன்பது புதிய உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஜெயராஜ் வயதில் மூத்தவர். அவர் முன்பிருந்த சபைத் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவர். மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வாட்டில் நிவாகப் பொறுப்பில் உள்ளவர். அவ்வளவு சுறுசுறுப்பு இல்லாதவர்.இருந்தாலும் பரவாயில்லை. அவரை செயலராக வைத்துக்கொண்டு நானே செயல்படலாம். ஜி..பி. முத்துவும் என்னைவிட மூத்தவர்தான். கொஞ்சம் அதிகம் பேசுபவர். திருச்சபை அரசியலில் பழக்கம் உள்ளவர். திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கலைக் கல்லூரியில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றுபவர். என்னிடம் பெரும்பாண்மை உள்ளதால் அவரால் எனக்கு ஆபத்து இல்லை. சாமுவேல் மருத்துவமனை அலுவலகத்தில் பணி புரிபவர். ஞாயிறு ஆராதனையின்போது அவர்தான் ” ஆர்கன் ” வாசிப்பார். பாடகர் குழுவில் முக்கியமானவர். அரசியல் அறியாதவர். நான் சொல்வதையெல்லாம் கேட்கக் கூடியவர். அடைக்கலதாஸ் ஒய்வு பெற்ற ஆசிரியர். பதவியில் இருந்தால் போதும் என்ற நிலையில் உள்ளவர். சர்ச்சைகளில் ஈடுபடமாட்டார். ஜான் டேவிட் விழியிழந்தோர் பள்ளியில் பணியாற்றுபவர், இதுவே அவருக்கு முதல் சபைச் சங்க உறுப்பினர் பதவி. அதனால் எனக்கு விசுவாசமாக இருப்பார். பீட்டர் மருத்துவமனை அலுவலக கிளார்க். எனக்கு கட்டுப்பட் டவர். சந்திரா ஃராங்க்ளின் தாதியராகப் பணிபுரிபவர். இதுவே அவருக்கும் முதல் தடவை. கமலம் டி..இ. எல். சி. துவக்கப்பள்ளியில் ஆசிரியை. அவருக்கும் இது முதல் தடவை.ஆகவே இந்த சபைச் சங்கம் முழுக்க முழுக்க எனக்கு எல்லா வகையிலும் ஆதரவானது. நான் வைப்பதுதான் சட்டமாகும் என்ற நிலையில் அமைந்திருந்தது. திட்டமிட்டுதான் நண்பர்களுடன் சேர்ந்து இதை உருவாக்கினேன்! அரசியலில் வெற்றி பெற நமக்குச் சாதகமானவர்கள் நம் பின்னால் இருப்பதே நல்லது.
சபைகுரு எரிக்தாஸ் எங்களை வரவேற்றுப் பேசினார். சபைச் சங்கத்துக்கு ஒரு செயலரும், பொருளரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றார். அவர் தந்த வாக்குச் சீட்டில் செயலாளர் பெயரும் பொருளாளர் பெயரும் எழுதினோம். நான் முன்பே பெயர்களை அவர்களிடம் சொல்லி வைத்திருந்தேன். அதன்படியே அனைவரும் எழுதினார்கள். சபைகுரு அவற்றைப் பார்த்துவிட்டு ஜெயராஜ் செயலாளராகவும் நான் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.அதனபின்பு புது ஆலயம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என்றும் அதற்கான விழா எடுக்க வேண்டும் என்றார். அன்று பேராயரையும் மத்திய ஆலோசனைச் சபைச் சங்க உறுப்பினர்களையும் அழைக்கவேண்டும் என்றும் முடிவு செய்தோம். அது தொடர்பாக ஒரு நினைவு மலர் வெளியிடவும் முடிவு செய்தொம். அதன் பொறுப்பாளராக நான் தேர்வு செய்யப்பட்டேன்.எனக்கு அதில் உதவி செய்ய பாலராஜும் கிறிஸ்டோபரும் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்களை நான்தான் சொன்னேன். அவர்கள் இருவரும் என்னுடன் நெருக்கமாக இருப்பதால் துரிதமாக வேலைகள் செய்யலாம். கூட்ட முடிவில் வடையும் தேநீரும் வழங்கப்பட்ட்து. அது மருத்துவமனை உணவகத்தில் தயார் செய்யப்பட்டது.அதற்கான செலவை நான் பொருளாளர் என்ற முறையில் செலுத்திவிடுவேன்.
திருப்பத்தூர் ஆரோக்கியநாதர் ஆலயத்தின் பொருளாராக அந்த ஞாயிறு காலையில் ஆலயம் சென்றேன்.அன்றைய ஆராதனையின்போது உண்டியல் எடுக்கும் நேரத்தில் சபைமக்கள் எழுந்து நின்று பாமாலை பாடினார்கள். அப்போது புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட செயலரும் நானும் இரு பெண் உறுப்பினர்களான கமலமும் சந்திரா ஃராங்க்லினும் பீடத்து முன் சென்று நின்றோம். மறைதிரு எரிக்தாஸ் அவர்கள் உண்டியல் பைகளை எங்களிடம் தந்தார். அதை வாங்கிக்கொண்டு ஒவ்வொரு வரிசையாக சென்று உண்டியலை அந்தப் பையில் பெற்றுக்கொண்டோம். பாடல் முடிந்ததும் திரும்பவும் உண்டியல் பைகளுடன் நாங்கள் நால்வரும் பீடத்தண்டை சென்று நின்றோம். சபைக்குரு அவற்றைப் பெற்றுக்கொண்டு ஜெபம் செய்தார்.
ஆராதனை முடிந்த பின்பு நான் பால்ராஜுடன் உண்டியல் பைகளில் இருந்த காணிக்கைகளை எண்ணினோம். நிறைய சில்லறைகள் இருந்தன. அவற்றையெல்லாம் எண்ணி மொத்தத் தொகையை காணிக்கை நோட்டுப் புத்தகத்தில் எழுதி கையொப்பமிட்டேன். அந்த உண்டியல் பணத்தை எடுத்துக்கொண்டு நாங்கள் வீடு திரும்பினோம்.
ஒவ்வொரு ஞாயிறும் அதுபோன்று உண்டியலை எண்ணி பதிவு செய்த பின்பு பணத்தை எடுத்து வந்து மறுநாள் வங்கியில் சேர்த்துவிட வேண்டும். ஒரு வேளை ஆலய செலவுக்குப் பணம் தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆலயத்துக்குத் தேவையான மெழுகுவர்த்திகள், திராட்சை ரசம், அப்பம் ஆகியவற்றை பொருளாளர்தான் வாங்க வேண்டும். அத்துடன் ” செக்ஸ்டன் ” என்னும் கோவில்பிள்ளைக்கு மாதச் சம்பளமும் நான்தான் தரவேண்டும்.
உண்டியல் பணம் தவிர மாதந்தோறும் சபை மக்களின் சபைச் சந்தா வரும். அதை மருத்துவமனை, விழியிழந்தோர் பள்ளி, செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றின் நிர்வாகிகள் என்னிடம் வந்து நேரில் செலுத்திவிடுவார்கள். அவற்றையும் அந்த சந்தா நோட்டில் பதிவு செய்யவேண்டும். இதையெல்லாம் செய்ய பால்ராஜ் எனக்கு உதவினார். பொருளர் ஆனபின் கைவசம் பணம் அதிகமானது. அதைச் சொந்த செலவுக்குப் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும்.
மாதம் ஒருமுறை சபைச் சங்கத் கூட்டம் நடக்கும். அப்போது நான் வரவு செலவு பற்றி அங்கு தெரிவிப்பேன்.அதை அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்வார்கள்.அது சபைச் சங்க பதிவேட்டில் எழுதப்படும்.
இனி இங்கு மருத்துவப் பணியுடன் திருச்சபை பணியிலும் நான் தீவிரமாக ஈடுபடுவேன். திருச்சபையின் தலைவர்களை நான் அதிகம் அறியவில்லை. அதற்கான வாய்ப்பு இனிமேல்தான் கிடைக்கும். முதலில் மதுரை மாவட்ட அளவிலான தலைவர்களின் அறிமுகம் வேண்டும். அதை மறை மாவட்டக் கூடங்களில் பங்கு பெறுவதில் மூலம் பெறலாம். ஜி.பி. முத்துவும் நானும் மதுரை மறை மாவடட உறுப்பினர்களாகியுள்ளோம். அவர் முன்பே திருச்சபை அரசியலில் பரிச்சயம் உள்ளவர். வயதிலும் என்னைவிட மூத்தவர். மேடைகளில் நன்றாகக் பேசுபவர். அவர் என் பக்கம் இருப்பது பக்க பலமாகும்.
இந்தத் தேர்தலில் பால்ராஜ் நிற்க அவருக்கு போதுமான வயதில்லை. அடுத்தத் தேர்தலில் அவரை நிச்சயமாக உள்ளே கொண்டு வந்துவிடலாம். அவருடைய உதவி எனக்கு மிகவும் தேவையாக இருந்தது. அவர் எனக்கு ஓர் அந்தரங்கச் செயலர் போலவே செயல்படலானார்.
ஆலய சபைச் சங்கம் ஆலய நிர்வாகத்தை கண்காணிக்கும். அதற்கு உதவும் வகையில் இன்னும் சில அங்கங்களும் இருந்தன. அவை சரிவர செயல்படாமல் இருந்தன. அவற்றையெல்லாம் சீர் செய்யும் பொறுப்பும் எனக்கு இருந்தது. ஆலயப் பாடகர் குழுவில் சாமுவேல், மங்களராஜ், டாக்டர் செல்லப்பா, இன்பராஜ், ஞானசேகரன், சிஸ்டர் பாலின், லவணலீலா, இன்னும் சிலர் இருந்தனர். அவர்களையெல்லாம் ஒன்று கூட்டி ஊக்கம் தந்தேன். ஆலய இளைஞர் இயக்கம் முக்கியமானது. வளாகத்திலேயே ஏராளமான இளைஞர்கள் இருந்தனர். அவர்களையும் ஒன்று திரட்டி அவர்களுக்குச் செயலராக கிறிஸ்டோபரை தேர்ந்தெடுத்தோம். அதுபோன்றே ஆலய மகளிர் சங்கமும் உள்ளது. அதற்கு சிஸ்டர் பாலினை செயலராகத் தேர்ந்தெடுத்தோம்.
இவ்வாறு ஆலய சீர்திருத்தப் பணியில் முழுமூச்சுடன் செயல்படலானேன்.இத்தகைய ஆன்மிகச் சேவையில் மனம் நிறைவானது!
( தொடுவானம் தொடரும் )