தொடுவானம் 228. தொழுநோயாளிக்கு மறுவாழ்வு

This entry is part 6 of 9 in the series 1 ஜூலை 2018
          ஆரோக்கியநாதர் ஆலயத்தின் புதுக் கட்டிட திறப்பு விழாவின் நினைவு மலர் தயார் செய்யும் பணியில் மன மகிழ்ச்சியுடன் ஈடுபட்டேன். சபைச் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வென்று ஆலயத்தின் பொருளாளர் ஆனதால் இந்த அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்காக கடவுளுக்கு நன்றி சொன்னேன்.
          நினைவு மலரை மிகவும் சிறப்பாகச் செய்வது என்று முடிவு செய்தேன்.பால்ராஜ் நன்றாக டைப் செய்வார்..கிறிஸ்டோபர் பொதுத் தொடர்புக்கு உகந்தவர். இவர்கள் இருவருடன் சேர்ந்து துவக்கப் பணியில் ஈடுபாடுடன்.
          முதலில் யார் யாரிடமிருந்து வாழ்த்துச் செய்திகள் பெறவேண்டும் என்பதைப்  பட்டியலிட்டோம். அதில் சுவீடன் தேசத்திலிருந்தும் ஜெர்மனியிலிருந்தும் திருப்பத்தூர் தொடர்புடைய  சிலரின் வாழ்த்துச் செய்திகள் பெற்றாக வேண்டும். அவர்களுக்கு கடிதங்கள் தயார் செய்து அனுப்பினோம். பின்பு இங்குள்ள மிஷனரிகள் சிலருக்கும் கடிதங்கள் அனுப்பினோம். தமிழ் சுவிஷேச லுத்தரன் திருச்சபையின் பேராயருக்கும் ஆலோசனைச் சங்க செயலருக்கும் உறுப்பினருக்கும் கடிதங்கள் அனுப்பினோம்.அவர்களிடம் வாழ்த்துச் செய்தியுடன் புகைப்படமும் கேட்டிருந்தோம். அவர்களிடமிருந்து வரும் பதில்களை மீண்டும் பால்ராஜ் டைப் செய்யவேண்டும். அவற்றை வரிசைப்படுத்திய பின்புதான் பக்கங்கள் போட்டு அச்சகத்தில் தரவேண்டும். புகைப்படங்களை ப்லோக் செய்துதான் அச்சடிக்க முடியும். எந்த அச்சகம் என்பதைத் தேர்ந்தெடுக்கு காரைக்குடிக்குச் செல்லவேண்டும்.
           ஆயிரம் பிரதிகள் அடிக்க அதிகம் செலவாகும். அதை ஈடு கட்டும் வகையில் சில விளம்பரங்களும் வாங்க திட்டமிட்டோம். திருப்பத்தூரிலுள்ள முக்கிய நிறுவனங்களிடமிருந்தும் , பிரமுகர்களிடமிருந்தும் விளம்பரங்கள் வாங்கலாம்.
         இரண்டு வாரங்களில் வாழ்த்துச் செய்திகள் வர ஆரம்பித்தன. வெளி நாடுகளிலிருந்து வர தாமதம் ஆனது. வந்தவற்றை அழகாக டைப் செய்து தந்தார் பால்ராஜ். நான் அவற்றை வரிசைப் படுத்தி பக்கம் போட்டேன். சில கடிதங்கள் தாமதமாக வரும். அப்போது அவற்றை தகுந்த இடத்தில் செருக வேண்டும்.  சில முக்கியமானவர்கள் காலந் தாழ்த்தியதால் அவர்களுக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. சிலருக்கு நினைவூட்டியும் கடிதம் எழுதினோம்.
          ஆலயப் பணிகளை நாங்கள் மாலைக்குப் பின் இரவில் வெகு நேரம் செய்துவந்தோம்.அதனால் மருத்துவப் பணிக்கு எந்த விதத்திலும் இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டேன்.
          நான் தொழுநோய் வெளி நோயாளிகள் பிரிவில் பணியாற்றும்போது ஒரு நோயாளி மீது என் கவனம் அதிகம் சென்றது. அவன் ஓர் இளைஞன். பெயர் பொசலன். நல்ல திடகாத்திரமான உடல்.ஆனால் அவனுக்கு தொற்றும் வகையான தொழுநோய். கைகளிலும் கால்களிலும் புண்கள். கை விரல்களில் சில மடங்கிவிட்டன. அவனுக்கு இரண்டு வருடங்கள் தொடர்ந்து மருத்துவம் செய்தாக வேண்டும். மாதந்தோறும் தவறாமல் வந்துகொண்டிருந்தான்.அவனை களப்பணியாளர்கள் அவனுடைய கிராமத்தில் சந்தித்து கண்காணித்து வந்தனர். அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. ஒரு நாள் அவனைப் பார்த்தபோது தோட்ட வேலை செய்ய முடியுமா என்று கேட்டேன். அது கேட்ட மாத்திரத்தில் அவனுடைய கண்கள் பிரகாசமாயின. முகம் மலர முடியும் என்று தலையை ஆட்டினான்.
          ” தோட்ட  வேலை செய்ய மண் வெட்டி பிடித்து வெட்ட வேண்டுமே? உன் கையால் மண்வெட்டியைப் பிடிக்க முடியுமா? ” நான் அவனைப் பார்த்துக் கேட்டேன்.
          ” முடியும் ஐயா. நான் மண் வெட்டி பிடித்துதான் எங்கள் ஊரில் வயல்காட்டு வேலை செய்யுறேன். வேண்டுமானால் நான் செஞ்சி காட்டுறேன் ஐயா. ” அவனின் பேச்சில் உறுதியும் நம்பிக்கையும் இருந்தது.
          ” சரி. அதையும் பார்த்துவிடுவோம். கொஞ்சம் பொறுத்திரு. என்னை அடுத்த வாரம் வந்து பார். ” என்று சொல்லி அவனை அனுப்பினேன்.
          பொசலனுக்கு மருத்துவமனையில் தோட்ட வேலையில் என்னால் சேர்க்க முடியாது. அந்த அதிகாரம் தலைமை மருத்துவ அதிகாரியிடமே உள்ளது. ஆனால் அவனுக்கு என்னால் ஆலயத்தில் வேலை போட்டுத் தர முடியும். புதிதாக கட்டப்பட்டு நிறைவடையும் நிலையில் உள்ள ஆரோக்கியநாதர் ஆலயத்தின் பின்புறம் ஒரு காற்பந்து திடல் அளவுக்கு காலி நிலம் உள்ளது. அதில் காட்டுச் செடிகள் வளர்த்து பெரிய புதர்களாக மண்டிக் கிடந்தன. அவற்றையெல்லாம் அழித்துவிட்டு தென்னம்பிள்ளைகள் நட்டால் பின்னாளில் அது அழகிய தென்னந் தோப்பாகவும் ஆலயத்துக்கு நல்ல வருமானத்தையும் ஈட்டித்தரும் என்று எண்ணினேன். அந்த வேலைக்கு போசலனை பயன்படுத்தலாம். அதன் மூலம் அவனுக்கு மறுவாழ்வுக்கும் வழி வகுக்கலாம்.அவனுக்கு தங்க இடமும் மாதச் சம்பளமும் தந்தாலே போதுமானது.
          அந்த வார சனிக்கிழமை மாலையில் சபைச் சங்கக் கூட்டம் நடந்தது.அதில் நான் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பித்தேன். அது ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.அப்போது பொசலன் பற்றி கூறி அவனுக்கு தோட்ட வேலைக்கு பரிந்துரை .செய்தேன். அவனுக்கு மாதம் இருநூற்று ஐம்பது ரூபாய் சம்பளம் தரலாம் என்றேன். உறுப்பினர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். ஒரு தொழுநோயாளிக்கு ஆலயத்தில் மறுவாழ்வு தருவது சிறப்பானதே என்றும் கூறினார்கள்.பொசலன் மீண்டும் மருத்துவமனைக்கு வரும்போது அவனுக்கு தெரிவித்து விடலாம். முதலில் புது ஆலயத்தைச் சுற்றிலும் பூச்செடிகள் நடவேண்டும். அதற்கு மதுரை சென்றால் செடிகளை வாங்கி வரலாம்.மருத்துவமனை வாகனத்தை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம். நண்பர்களையும் உடன் கூட்டிச் செல்லலாம். அங்கு நர்சரியில் விதம் விதமான வண்ணங்களில் குரோட்டன் செடிகள், விசிறி வாழைகள்  கிடைக்கும். பூச் செடிகளை நட்டு முடித்தபின்பு ஆலயத்தின் பின்புறம் உள்ள புதர்களை அழிக்கும் பணியில் பொசலன் ஈடுபடலாம். எப்படியும் அவனுக்கு நாள் முழுதும் வேலை இருக்கும். இரவில் இரவுப் பாதுகாவலனாகவும் இருக்கலாம்.அது ஆலயம் கட்டி திறப்பு விழா நடத்திய பின்புதான் தேவைப்படும்.
          டாக்டர் செல்லப்பாவும் ஆலீசும் மேல்படிப்புக்காக வேலூர் சென்றுவிட்டனர். டாக்டர் செல்லப்பா காது மூக்கு தொண்டை சிகிச்சையில் எம்.எஸ். படிக்கச் சென்றார்.அவர்  மருத்துவமனையின்  சார்பில் அனுப்பி வைக்கப்படடார். படிக்கும்போது முழுச் சம்பளம் பெறுவார். படித்து முடித்ததும் திரும்ப வந்து இரண்டு வருடங்கள் சேவை செய்ய வேண்டும், ஆலிஸ் குழந்தை வைத்தியத்தில் டிப்ளோமா படிக்கச் சென்றார். இரண்டு வருடங்கள் படித்து முடித்தபின்பு திரும்ப வந்து இரண்டு வருடங்கள் சேவையாற்ற வேண்டும்.
           டாக்டர்.மூர்த்தியும் ரோகினியும் ராஜினாமா செய்துவிட்டனர். புதிதாக டாகடர் மனோகரன் என்பவர் பணியில் வந்து சேர்ந்தார். திருமணமாகாதவர். அவர் டாகடர் ராமசாமியின் வீட்டில் தங்கினார். அவர் என்னுடன் மருத்துவப் பிரிவில் பணியாற்றினார்.அவர் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். அமைதியானவர். அன்பாகப் பழகக் கூடியவர்.
          நான் மருத்துவ நூல்களின் உதவியோடு நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யலானேன். சிக்கலான பிரச்னைகளை மதுரைக்கு அனுப்பி வைத்தேன்.நோயாளிகளுக்கு என்னைப் பிடித்திருந்தது. அதனால் கூட்டமும் அதிகமானது.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigation2018 ஜூனில் ஜப்பான் விண்கப்பல் ஹயபுஸா -2 தளவுளவி, உயிர்மூலவி தேட முரண்கோளில் இறங்கப் போகிறது.உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 12- மில்க் (Milk)
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *