மருத்துவக் கட்டுரை – மூட்டு அழற்சி நோய் ( OSTEOARTHRITIS )

This entry is part 5 of 8 in the series 15 ஜூலை 2018

  

          மூட்டு அழற்சி பெரும்பாலும் வயதானவர்களை ( 60 வயதுக்கு மேலானவர்கள் ) பாதிப்பது இயல்பு.

உலகில் இது பரவலாக காணப்படுகிறது. பெரும்பாலும் 60 வயதுக்குமேலுள்ள பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. துவக்க காலத்தில் வீக்கம் இருந்தாலும் வலி இருக்காது. போகப்போக வலி கடுமையாகும்.உடல் பருமன் அதிகமுள்ள பெண்களையும் இது தாக்கலாம்.

                                                                                                நோய் இயல்

இரண்டு எலும்புகள் கூடும் இடத்தை மூட்டு என்கிறோம். அந்த மூட்டுப் பகுதியில் உள்ள எலும்புகளைச் சுற்றி வழவழப்பான ஜவ்வு உள்ளது. இதை ” சைனோவியம் ” என்று அழைக்கிறோம். இந்த  ஜவ்வு தேய்வதால் அங்கு அழற்சி உண்டாகி எலும்பும் தேய்ந்து போகிறது.இதையே மூட்டு எலும்பு அழற்சி என்கிறோம்.

          வயது ஒரு முக்கிய காரணம் என்றாலும் எல்லா வயதானவர்களுக்கும் இது உண்டாவதில்லை. ஆனால் மூட்டுகளில்  உண்டாகும் அழற்சியால் ” கார்டிலேஜ் ” எனும் மூட்டு சவ்வு எலும்புகள் தேய்ந்து வடிவிழக்கும் வேளையில் எலும்புகள் அதை எதிர்த்து சரி செய்யும்போது அங்கு புது கரடு முரடான கூறிய எலும்புகள் உற்பத்தியாவதால்  அசையும்போது வலி உண்டாகிறது. இத்தகைய நோய் இயலில் பல்வேறு கூறுகள் பங்கு வகிக்கின்றன.அவை அனைத்துக்கும் அடிப்படையானது இந்த மூட்டு அழற்சியே காரணமாக அமைகின்றது.

                                                                                                    அறிகுறிகள்

         * மூட்டு வலிதான் முக்கிய அறிகுறி.
          இந்த வலி அசைவினால் அதிகமாகும்.ஓய்வால் வலி குறையும்.ஓய்வுக்குப் பின் மூட்டு இறுக்கமாக இருக்கும்.
         * கை விரல்களின் கடைசி மூட்டும், கையின் முதல் மூட்டும் பாதிப்புக்கு உள்ளாகும்.
         * கால்களில் நீண்ட முதல் மூட்டு எலும்புகள் பாதிப்புக்கு உள்ளாகும்.
         * முதுகுத் தண்டு எலும்புகளும், முழங்கால், முழங்கை மணிக்கட்டு, கணுக்கால் எலும்புகளின் மூட்டுக்களிலும் பாதிப்பு உண்டாகலாம்.
         * பாதிக்கப்பட்டுள்ள மூட்டுகளில் எலும்புகள் வடிவிழந்து வீங்கி காணப்படும்.
         * பாதிக்கப்பட்டுள்ள மூட்டுகளில் அசைவு குறைவாகவும், அப் பகுதியில் தசைகள் குறைந்தும் காணப்படும்.
         * பதிக்கப்பட்டுள்ள மூட்டுகளில் நீர் தேங்கியிருக்கலாம்.

         * அப் பகுதியில் உண்டான புது எலும்புகள் கட்டி போன்று தென்படலாம்.

                                                                                                பரிசோதனைகள்

          * இரத்தப் பரிசோதனைகள் – இதில் அதிகம் மாற்றங்கள் இருக்காது.
          * எக்ஸ்ரே பரிசோதனை – இதில் துவக்க காலங்களில் ஏதும் தெரியாது. மிகவும் முற்றிய நிலையில் எலும்புகளின் பாதிப்பும், மூட்டின் இரண்டு எலும்புகளுக்கு நடுவில் உள்ள இடைவெளி குறுகியும்  காணப்படும். புதிய எலும்பு கட்டிகள் தெரியும்.

          * எம்.ஆர்.ஐ. பரிசோதனை – இதில் சவ்வு எலும்பு தேய்வு தெரியும். இந்த பரிசோதனை பெரும்பாலானோருக்கு தேவைப்படாது. அறிகுறிகளையும் எக்ஸ்ரே பரிசோதனைகளையும்  வைத்தே நோயை நிர்ணயம் செய்துவிடலாம்.

                                                                                              சிகிச்சை முறைகள்

          சிகிச்சை முறைகள் பெரும்பாலும் அறிகுறிகளையும் மூட்டின் செயலிழப்பையும் சரி செய்யும்  நோக்கத்துடன்தான் அமைந்துள்ளன. நோய் பற்றி நோயாளிக்கு விளக்குவது, மருந்துகள் இல்லாத பயிற்சி முறைகள்,  மருந்துகள், அறுவை சிகிச்சை போன்றவை சிகிச்சை முறைகளில் அடங்கும்.
          முக்கியமாக உடல் பருமன் அதிகமுள்ளவர்கள் எடையைக் குறைக்க முயலவேண்டும்.
          * பயிற்சிகள் ​ –  பாதிக்கப்பட்டுள்ள மூட்டுக்கு தேவையான பயிற்சிகள் பராமரிப்பைத் தரும். சூடு அல்லது ஐஸ் ஒத்தடம் தந்தாலும் வலி குறையும். மூட்டுப் பகுதியைப் பாதுகாக்கும் சாதனங்களும் பயன்படும்.
          * மருந்துகள் – சாதாரண வலி குறைக்கும் மருந்துகள் துவக்கத்தில் போதுமானது. வலி கடுமையானால் வீரியமான மருந்துகள் பயன்படுத்தலாம். சிலருக்கு பாதிக்கப்பட்டுள்ள மூட்டுக்குள் ஊசி மூலமும் ஸ்டீராய்டு மருந்து ஏற்றலாம்.

         * மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ​-  தற்போது மூட்டு மாற்று அறுவை சிகிச்சை உள்ளது  இது பெரும்பாலும் இடுப்பு மூட்டு, முழங்கால் மூட்டு ஆகியவை மாற்றப்பட்டு செயற்கை மூட்டுகள் பொருத்தப்படுகின்றன.

         ( முடிந்தது )

Series Navigationதொடுவானம் – 230. சிறு அறுவை நடைமுறைநான் என்பது
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *