மருத்துவக் கட்டுரை உறக்கமின்மை

This entry is part 5 of 9 in the series 22 ஜூலை 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

மருத்துவர்கள் மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் நோயாளிகளிடையே பரவலாக காணும் பிரச்னை உறக்கமின்மை. முதியோர்களில் பாதிக்கு மேலானோர் எப்போதாவது இந்த உறக்கமின்மை பிரச்னையை எதிர்நோக்கியிருப்பார்கள்..

உறக்கமின்மை பல்வேறு விளைவுகளைக் கொண்டது அவை வருமாறு:

* தூக்கம் வருவதையும் வந்தபின்பு அதை நிலைநிறுத்துவதிலும் பிரச்னை .பகலில் அதிகமான தூக்கமும், களைப்பும் உண்டாவது.

* தூங்கும்போது மனநிலையில் மாற்றமும், தூக்கத்தில் நடப்பதும், கால்கள் அசைவதும் போன்றவை.

* தூக்க நேரத்தில் உண்டான மாற்றத்தால் தூக்கமின்மை.

ஒருவர் எவ்வாறு தூங்குகிறார் என்பதை அவருடன் அருகில் படுத்திருப்பவரிடம் கேட்டு தெரிந்துகொள்வது பிரச்னையை அறிந்து கொள்ள உதவும். உதாரணமாக தூம்கும்போது குறட்டை விடுகிறாரா, வாகனம் ஓட்டும்போது தூங்கி விழுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்வதும் பயன்தரும்.அதோடு புகைத்தல், மது அருந்துதல், அதிகமாக காப்பி தேநீர் அருந்துதல் போன்ற பழக்கங்களையும் மனதில் கொள்வதும் நல்லது.இவை அனைத்தும் தூக்கமின்மையுடன் தொடர்புடையவை.

தூக்கமின்மையை ” இன்சோம்னியா ” ( Insomnia ) என்று அழைப்பதுண்டு. இது பல்வேறு தன்மை கொண்டது. அவை வருமாறு:

* தூக்கம் உண்டாவதில் சிரமம் – ( Sleep – onset Insomnia )
* அடிக்கடி விழித்துவிடும் தூக்கம் – ( Sleep – offset Insomnia )
* போதுமான தூக்கத்தின்பின்பும் தூக்கம் வருவது ( Nonrestorative sleep )
* ஓரிரு இரவுகள் கொண்ட குறுகிய உறக்கமின்மை – ( Transient Insomnia )
* ஓரிரு நாட்கள் முதல் 3 வாரங்கள் வரை தூக்கமின்மை – ( Short – Time Insomnia )
* சில மாதங்கள் முதல் சில வருடங்கள் வரையிலான உறக்கமின்மை ​ ( Long – Term Insomnia )

இவை தவிர நம்மால் சமாளிக்கக் கூடிய தற்காலிக உறக்கமின்மை என்பதும் உள்ளது . ​ (Adjustment Insomnia )
இது உறங்கும் சூழலில் மாற்றம் ஏற்படுவதால் உண்டாகும் உறக்கமின்மை.மருத்துவமனையில் படுக்கையில் படுத்திருப்பது, ஹோட்டல் அறையில் தங்குவது, சோகமான நிகழ்வுக்கு பின்பு தூங்க முயல்வது , அதிர்ச்சி, பரபரப்பு போன்ற சூழ்நிலைகள் சில உதாரணங்கள். இவை அனைத்தும் தற்காலிகமானவை. அந்தச் சூழல்கள் மாறினால் போதுமானது.
குறைவான உறங்கும் சுகாதாரம் ( Inadequate Sleep Hygiene ) என்பதாலும் தூக்கமின்மை உண்டாகலாம்.படுக்கை அறை தூங்குவதற்கு ஏதுவாக இருக்க வேண்டும். அங்கு சத்தம் இல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும். அத்துடன் படுக்குமுன் மனதில் பிரச்னைகள் இன்றி அமைதியும் முக்கியமாகும். படுக்குமுன் கடின உழைப்பும் கூடாது.படுக்கும் நேரமும் தூங்கி எழும் நேரமும் எப்போதும் ஒரே நிலையில் வைத்திருப்பதும் நல்லது.

சில மருந்துகள் உட்கொள்வதாலும் உறக்கமின்மை உண்டாகலாம். அதிகமான காப்பி, தேநீர், மது. புகைத்தல் காரணமாகவும் உறக்கமின்மை உண்டாகலாம்.

வலிப்பு நோய், ஒற்றைத் தலைவலி, ஆஸ்த்மா, தைராய்டு குறைபாடு, நெஞ்சு கரிப்பு கழுத்து வலி, மெனோபாஸ் போன்ற காரணங்களாலும் உறக்கமின்மை உண்டாக்கலாம்.

மன அழுத்தம், மனச் சோர்வு, இதர மன நோய்கள் காரணமாகவும் உறக்கமின்மை உண்டாகலாம்.

சிகிச்சை முறைகள்

தவிர்க்க முடிந்த காரணங்களைக் களைவதும், உறக்கம் வருவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதுமே சிகிச்சை முறையில் முக்கியத்தும் வகிக்கின்றன. மருத்துவரின் மேற்பார்வையில் தற்காலிகமாக தூக்க மாத்திரைகள் உட்கொள்ளலாம்.

( முடிந்தது )

Series Navigationசிலபல நேரங்களில் சிலபல மனிதர்கள்120 பீட்ஸ் பெர் மினிட் – திரைப்பட விமர்சனம்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *