ஞாபக மறதி

This entry is part 5 of 7 in the series 12 ஆகஸ்ட் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்

முன்பெல்லாம் இந்தப் பிரச்னை வயது காரணம் என்றுதான் நம்பப்பட்டது. ஆனால் இப்போது மருத்துவ ஆய்வாளர்கள் வயதானாலும் நிதானமாக இருக்க முடியும் என்று நம்புகின்றனர். ஆனால் நினைவுக்குக் கொண்டு வருவதில் சற்று தாமதம் உண்டாகலாம் என்று கூறுகின்றனர்.
ஞாபக மறதி வெவ்வேறு அளவில் இருக்கலாம். சிலருக்கு சிறிய அளவிலும் வேறு சிலருக்கு பெரிய அளவிலும் இருக்கலாம். இது ஆபத்தான அளவை எட்டினால்தான் ஒருவேளை மூளையில் பாதிப்பு உள்ளதா என்பது சந்தேகிக்கப்படும். மூளையில் ” டீமென்ட்டியா ” என்ற நோய் இருக்கலாம். இது உண்டானால் அவர்களால் தங்களது அன்றாட வேலைகளைச் செய்வதில்கூட சிரமத்தை எதிர்நோக்குவர். இதில் ” ஆல்ஜைமர் நோய் ” என்பது ஒரு வகை. இதில் தங்களையே யார் என்பதைக்கூட மறந்து போவார்கள்!
” டீமென்ட்டியா ” என்பதில் மூளையின் செயல்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுவதால், பல்வேறு அறிகுறிகள் உண்டாகும். கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பது, பழக்கமான இடத்தை தெரியாதது போன்ற நிலை, சிலவற்றைச் செய்யச் சொன்னால் அவற்றை செய்ய முடியாத நிலை, நேரம் பற்றியும், இடம் பற்றியும், ஆட்கள் பற்றியும் குழப்பம், உணவு உண்பதிலும், சுய சுகாதா ரத்திலும் கவனம் இல்லாமல் போவது, சுய பாதுகாப்பு பற்றி அக்கறையின்மை போன்றவை சில முக்கிய அறிகுறிகள்.
” டிமென்ட்டியா ” பல காரணங்களால் ஏற்படலாம். அவற்றில் சில தற்காலிகமாகவும் சில நிரந்தரமாகவும் இருக்கலாம். அதிக காய்ச்சல், உடலில் நீர் பற்றாக்குறை, சத்துக்குறைவு,, வைட்டமின் குறைபாடு, சில மருந்துகளுக்கு சரியான பலன் இல்லாமல் போவது , தைராய்டு சுரப்பி குறைபாடு போன்றவை தற்காலிக காரணங்கள். இவற்றுக்கு மருத்துவ ரீதியில் பரிகாரம் காணலாம்.
சில வேளைகளில் ” டீமென்ட்டியா ” ” ஆல்ஜைமர் ” நோய் போன்றே தோன்றலாம். ” ஆல்ஜைமர் ” நோய் என்பது தங்களையே யார் என்று தெரியாமல் மறந்துபோகும் ஆபத்தான நோய்.
சில வேளைகளில் வயதானவர்களுக்கு மன அழுத்தம் காரணமாகவும் ஞாபக மறதி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. கவலை, தனிமை, இழப்பு போன்றவற்றாலும் இதுபோன்ற மறதி உண்டாகலாம். இதற்கு குடும்பத்தினர்களும் நண்பர்களும் ஆதரவாக இருந்தாலே போதுமானது. இவர்களின் தனிமையைப் போக்குவதோடு பேச்சுத் துணையாக இருந்தாலும் பயன் கிட்டும்.

பரிசோதனைகள்

ஞாபக மறதி வயது காரணமாக இருந்தாலும், அது வேறு ஏதாவது ஆபத்தான காரணத்தால் உன்டாகியுள்ளதா என்பதைக் கண்டறிய மருத்துவர் சில பரிசோதனைகளை செய்து பார்க்கலாம். அதற்கு முன் அவர் நோயாளி பற்றிய முழு மருத்துவத் தகவல்களைக் கேட்டறிவார். அவருக்கு உள்ள இதர நோய்கள், அவர் உட்கொள்ளும் மருந்துகள், உணவு பழக்கவழக்கங்கள், போன்றவற்றைக் கேட்டு தெரிந்துகொள்வார். அதன்பின் சில பரிசோதனைகள் செய்து பார்ப்பார். அவை வருமாறு:

* இரத்த, சிறுநீர் பரிசோதனை – இதில் வேறு நோய்கள் அல்லது கிருமித் தோற்று உள்ளதா என்பது தெரியும். இனிப்பின் அளவும், கொழுப்பின் அளவும் தெரியும்.
* சி. டி. ஸ்கேன் – இதில் மூளையில் வயது காரணமான மாற்றங்கள், குணப்படுத்தக்கூடிய மாற்றங்கள் அல்லது வேறு மாற்றங்கள் கண்டறியலாம். பெரும்பாலும் மூளைக்கு இரத்தம் கொண்டுசெல்லும் தமனிகளில் அடைப்பு காரணமாக மூளைப் பகுதியில் இரத்தக் குறைவினால் உண்டாகும் மாற்றங்கள் கண்டறியப்படும்.

சிகிச்சை முறைகள்

பரிசோதனைகளின் வழியாக குணப்படுத்தக்கூடிய பிரச்னைகள் கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கேற்ப சிகிச்சை பெறலாம். அப்படி இல்லாமல் வயது காரணமாக ஞாபக மறதி உண்டானால் அதற்கு ஏற்றாற்போல் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். அதை ஒரு நோயாகக் கொள்ளாமல் வயது காரணமாக உண்டான பாதிப்பு என்று சொல்லி அதை மேற்கொள்ள உதவலாம். ஞாபக மறதியைச் சமாளிக்க நினைவூட்டும் குறிப்புகளை வைத்திருப்பது, நாள்காட்டிகள், நாட்குறிப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் பழக்கத்தை பின்பற்றுதல், நல்ல நண்பர்களை துணைக்கு வைத்துக்கொள்வது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது, மது அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது. படிப்பதும் எழுதுவதும் மூளைக்கு சுறுசுறுப்பை உண்டுபண்ணி ஓரளவு உற்சாகமாக இருக்கவும் உதவும். குடும்ப உறுப்பினர்கள் அவர்களுக்கு உண்டாகியுள்ள பிரச்னையை உணர்ந்து உறுதுணையாக இருப்பது மிகவும் அவசியமாகும்.
” டீமென்டியா ” அல்லது ” ஆல்ஜைமர் ” நோய்தான் என்று முடிவானால் மூளை நரம்பு சிறப்பு நிபுணர் , மனோவியல் மருத்துவர்களின் உதவியும் தேவைப்படும். இவற்றுக்கான மருந்துகள் சில இருந்தாலும், இன்னும் சிறப்பான மருந்துகள் கண்டுபிடிக்க ஆராய்சிகள் நடந்துவருகின்றன.

( முடிந்தது )

Series Navigation2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது !நீண்டு நெளிந்த பாதை ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *