- வரலாறு
‘
சில தலைகள் எப்போதும் கைவசம் தேவை.
குட்டக் குட்டக் குனியவைக்க;
பட்டப்பகற்கொலைகொள்ளைக்
கெல்லாம் பொறுப்பேற்கச் செய்ய;
தட்டுவதாலேயே தன் கையை
மோதிரக்கையாக்கிக்கொள்ள;
தன் முதலாளித்துவத்தை சாதுர்யமாய்
மனிதநேயவிரிப்பின் கீழ் தள்ள;
சரித்திரக் குற்றவாளியாக்கி
சரேலென்று அறுத்தெறிய;
பொருத்தமற்ற பொய்யுரைத்து
புழுதிவாரியிறைக்க;
பேயரசைப் போர்த்திமறைக்க;
பிணந்தின்னும் சாத்திரங்களை
ஒருசாராருக்கே உரித்தாக்க;
அவரவர் அதிகாரவெறியை
அருவமாக்கித் திரிய;
வலியோரும் தம்மை எளியோராய்
காட்டிக்கொள்ள வாகாய்;
மலிவாகும் வாழ்வுமதிப்புகளுக்கெல்லாம்
கழுவேற்றத் தோதாய்;
பொத்தாம்பொதுவாய் போகிறபோக்கில்
குண்டாந்தடியால் ஒரு போடு போட்டு
உயிர்போக்க;
ஊருக்காயதைச் செய்ததாய்த்
தன்னைக் கொலைக்குற்றத்திலிருந்து
சுலபமாய்க் காக்க;
தத்தம் தீவினைகளையெல்லாம்
தார்மீக எதிர்வினையாக
நிலைநாட்ட….
எளிய தலைகளாய் எப்போதும்
நான்கைந்து தலைகளைத்
தயராய்க் கைக்கொள்ளத்
தெரியவேண்டும்.
போலவே, மொந்தைகளாக்கப்பட்ட
எளிய தலைகளை
மந்தைகளாக்கப்பட்ட மூளைகளில்
முதன்மை எதிரிகளாக மிகச்
சுலபமாய் சுட்டிக்காட்டவும்.
நேரங்கிடைக்கும்போதெல்லாம்
ஆள்காட்டி அடையாளங்காட்டி
உருவேற்ற மறக்கலாகாது.
பெரிதாக எதையும் செய்யத்
தேவையில்லை.
பலிகடாக்களாக வாகாய்
சில எளிய தலைகளை
எப்போதும்
வன்முறையார்ந்த சொற்களால்
எட்டித்தள்ளி
யுருட்டிக்கொண்டே போகத்
தெரிந்தால் போதும்.
ஏற்றத்தாழ்வுகளுக்
கெல்லாமான
சகலரோகத்தொற்றாகக்
காட்டத் தெரிந்துவிட்டால்
போதும்
பல்லக்குகளையும் பல்லக்குத்
தூக்கிகளையும்
உங்கள் உடைமைகளாக
பலகாலம் பத்திரப்படுத்திக்
கொண்டுவிட முடியும்.
- நம்பிக்கையின் நாற்திசைகள்…..
என்னிடம் பூனை பேசியது’
‘என்றாள் சிறுமி.
பூனை பேசாது’ என்றார் பெரியவர்.
‘பூனையின் பேச்சுக்கு தனியாக
இரண்டு காதுகள் என்னிடமிருக்கின்றன –
பாவம் உங்களுக்கு இல்லையே’
என்று இருசெவிகளின் பக்கமாக
கைகளால் சிறகடித்துக்காட்டி
மெய்யாகவே பரிதாபப்பட்டாள் சிறுமி.
”எங்கே, பூனையை பேசச்சொல்லு
பார்க்கலாம் என்றார்
மெத்தப் படித்த அந்த மனிதர்
மிக எகத்தாளமாய்.
நமக்கு வேண்டுமென்றால்
‘நாம் தான் பூனையிடம் பேசவேண்டும்
என்ற சிறுமி
மியா….வ்…. மியா…வ்…..என்று
மென்மையாக அன்பொழுக
தன்பாட்டில் அழைத்தபடியே
அவரைக் கடந்துசென்றுவிட்டாள்.
- சட்டி – அகப்பை – நாம்
எதுவும் தெரியாவிட்டாலென்ன –
பரவாயில்லை
எல்லாம் தெரிந்ததாகக் காட்டிக்கொள்வதே
(உன்) அறிவின் எல்லையான பின்….
முன்னுக்கு வந்துவிட்டால் பின்
உண்மையென்ன பொய்யென்ன அறிவில்….
என்னவொன்று
கண்ணுங்கருத்துமாய் என்னதான் நீ
மறைத்தாலும்
புரையோடிய புண்வலியாய்
பொய் கொல்லும் நின்று..