முகலாயர்களும் கிறிஸ்தவமும் – 2

This entry is part 3 of 9 in the series 16 செப்டம்பர் 2018

பி எஸ் நரேந்திரன்

அக்பரின் மகனான சலீம் என்கிற ஜஹாங்கிரின் அன்னை ஒரு ராஜபுத்திர ஹிந்துப் பெண்மணி எனினும் ஜஹாங்கிர் முற்றிலும் ஒரு இஸ்லாமிய பாதுஷாவாக மட்டுமே நடந்து கொண்டவர். அக்பரையும் மிஞ்சுமளவிற்கும் அளவுக்கு அதிகமான குடிப்பழக்கமும், அபின் போன்ற போதை வஸ்துக்களை உபயோகிப்பதிலும், அடுத்தவன் மனைவியைக் கவரத் தயங்காத (நூர்ஜஹான்) பெண் பித்தராகவும் வாழ்ந்தவர். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஹிந்துக்களைக் கொல்வதிலும், ஹிந்துக் கோவில்களை இடிப்பதிலும் அவர் ஆர்வம் காட்டத் தயங்கியதில்லை.
ஏற்கனவே சொன்னபடி, போர்த்துக்கீசிய கிறிஸ்தவ பாதிரிகள் கோவாவில் நிலை கொண்டிருந்தார்கள். தொடர்ந்து முகலாய அரசர்களை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றுவதற்கான முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தன. 1598-ஆன் வருடம் சர் தாமஸ் ரோ (Thomas Roe) இங்கிலாந்தின் தூதுவராக இங்கிலாந்தின் அரசரால் அனுப்பி வைக்கப்பட்டார். மிகுந்த சிரமத்திற்குப் பிறகு ஜஹாங்கிரைச் சந்திக்கும் தாமஸ் ரோ, முகலாய அரசின் பகுதிகளில் தொழிற்சாலைகளையும், சர்ச்சுகளையும் அமைக்க உரிமை கோருகிறார். இங்கிலாந்து அரசர் அனுப்பி வைத்த பரிசுப் பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிக் கொள்ளும் ஜஹாங்கிர் அந்தக் கோரிக்கைகளைக் குறித்து அதிக ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். கோவாவில் கிறிஸ்தவர்கள் பிற மதத்தவர்களின் மேல் நடத்திய வெறியாட்டங்கள் அவரின் காதுகளுக்கு எட்டியிருந்ததால் ஜஹாங்கிர் தயக்கமடைந்திருக்கலாம்.
அதேசமயம், லாகூரில் கவர்னராக இருந்த ஜஹாங்கிரின் மூத்த மகனான குஸ்ரூவை தொடர்ந்து சந்திக்கும் போர்ச்சுக்கீசிய பாதிரிகள் அவரை குடும்பத்துடன் கிறிஸ்தவராக மதம் மாற்றுவதில் வெற்றியடைகிறார்கள். அதுகுறித்து ஜஹாங்கிரின் கருத்து என்னவென்று தெரியவில்லை. ஜஹாங்கிருக்குப் பின்னர் பட்டத்திற்கு வரவேண்டியவரான குஸ்ரூ எதிர்பாராமல் ஜஹாங்கிரை எதிர்த்துப் புரட்சி செய்கிறார். ஓயாத குடியினாலும், அபின் உபயோகத்தாலும் உடல்நலம் கெட்டுக் கிடந்த ஜஹாங்கிர் சிறிது காலத்திற்குள் அவராகவே இறந்திருப்பார். அதையும் விட, ஜஹாங்கிர் அவரது இன்னொரு மகனான ஷாஜஹானை மனதார வெறுத்தவர். இந்தச் சூழ்நிலையில் கொஞ்சம் பொறுமையுடன் காத்திருந்தால் குஸ்ரூ மிக எளிதாக ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகியிருப்பார். ஆனால் விதி வலியது. அனேகமாக அந்தப் புரட்சியின் பின்னே கிறிஸ்தவ பாதிரிகளின் தூண்டுதலும் இருக்க வாய்ப்பிருக்கிறது.
குஸ்ரூ தனக்கெதிராக புரட்சி செய்வதாகக் கேள்விப்படும் ஜஹாங்கிர் படையெடுத்து வந்து குஸ்ரூவைத் தோற்கடித்துச் சிறை பிடிக்கிறார். குஸ்ரூவுக்கு உதவியதாகக் கூறப்பட்ட 700 படைத்தலைவர்களும் கைது செய்யப்படுகிறார்கள். குஸ்ரூவின் கண் முன்னே அந்தப் படைத்தலைவர்களில் இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள் கட்டித் தொங்கவிடப்பட்டு உயிருடன் அவர்களின் தோலை உரிக்க உத்தரவிடுகிறார் ஜஹாங்கிர். மீதமிருந்தவர்களை யானைகளைக் கொண்டு நசுக்கிக் கொல்கிறார்கள். அப்படியும் கோபம் தீராத ஜஹாங்கிர் குஸ்ரூவின் இரண்டு கண்களையும் சூடான இரும்புக் கம்பிகளால் சுட்டுப் பொசுக்கிக் குருடாக்குகிறார்.
பின்னர் அந்தத் தவறை எண்ணி வருந்தும் ஜஹாங்கிர் குஸ்ரூவைத் தன்னுடன் அழைத்துச் சென்று அருகில் வைத்துக் கொள்கிறார். குஸ்ரூ இருக்கும் வரையில் தனக்கு பாதுஷாவாகும் வாய்ப்புக் கிட்டாது என நினைக்கும் ஷாஜஹான், அவரைத் தன்னுடன் அழைத்துச் சென்று தக்காணத்தில் வைத்து நன்கு கவனித்துக் கொள்வதாக ஜஹாங்கிரிடம் கூறி குஸ்ரூவை அழைத்துச் செல்லும் ஷாஜஹான் அவரை நயவஞ்சகமாக விஷம் வைத்துக் கொன்றுவிட்டார். ஷாஜஹானின் மீது படையெடுத்துச் செல்லும் அளவிற்கு உடல் நலம் சரியில்லாத ஜஹாங்கிர் மரணப்படுக்கையில் தனக்குப் பிறகு குஸ்ரூவின் மகனான தானியேலை பாதுஷாவாக ஆக்குமாறு அவரது படைத்தலைவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார். அப்படியே செய்வதாக சத்தியம் செய்யும் படைத்தலைவர்கள் ஜஹாங்கிரின் மரணத்திற்குப் பின்னர் தானியேலை பாதுஷாவாக முடிசூட்டுகிறார்கள்.
தானியேல் ஒரு கிறிஸ்தவர் என்பது நினைவிருக்கட்டும். பதவியேற்பதற்கு முன்னால் அவர் மீண்டும் இஸ்லாமிய மதத்திற்குத் திரும்பிவிட்டதாக சொல்லப்படுவது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அப்படி அவர் மதம் மாறாதிருந்தால் இந்தியாவை ஆண்ட முதல் கிறிஸ்தவ பாதுஷா தானியேல்தான். ஜஹாங்கிரிடம் சத்தியம் செய்தவர்களில் முக்கியமானவர் ஷாஜஹானின் மாமனார் (மும்தாஜின் தந்தை). அவர் உடனடியாக தக்காணத்திலிருக்கும் ஷாஜஹானை தில்லி பாதுஷாவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஏறக்குறைய சினிமாக்கதை போன்றதொரு திட்டத்துடன் ஆக்ராவுக்கு வரும் ஷாஜஹானை முகலாயப்படைகள் வரவேற்கின்றன. கட்டிய துணியுடன் அங்கிருந்து தப்பிச் செல்லும் தானியேல் இந்தியாவெங்கும் பிச்சைக்காரனைப் போலத் திரிந்து பின்னர் பாரசீகத்திற்குத் தப்பிச் செல்கிறார்.
References :
The first Christian mission to the Great Mogul, or, The story of Blessed Rudolf Acquaviva : and of his four companions in martyrdom of the Society of Jesus
by Goldie, Francis, 1836-1912

Series Navigationமனுஷங்கடா – டிரயிலர்தொடுவானம் 240. புதிய ஆலோசனைச் சங்கம்
narendran

பி எஸ் நரேந்திரன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    இந்தப் பகுதி படிக்க சுவையாகவும் புதுமையாகவும் உள்ளது. முகலாயர்கள் கிறிஸ்துவ மதத்தைமீது இவ்வளவு ஆர்வம் கொண்டிருந்தது நம்ப முடியவில்லை. இதற்கு ஆதாரம் எங்குள்ளது என்பதை இதன் ஆசிரியர் திரு.நரேந்திரன் சொன்னால் அதன் மூலத்தைப் படிக்கும் வாய்ப்பும் கிட்டும்…..அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *