தொடுவானம் 225. திருச்சபையில் காண்டிராக்ட்

This entry is part 1 of 7 in the series 21 அக்டோபர் 2018

 

          ” சரி .அவர்கள் வந்தபின்பு நான் பேசிக்கொள்கிறேன். ” என்று சொன்ன தம்பிப்பிள்ளை மாடி நோக்கி நடந்தார். நானும் பின் தொடர்ந்தேன்.
        மீண்டும் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டோம். அவர்கள் தொடர்ந்து கிராம சபைகளின் முன்னேற்றம் பற்றிய பேச்சைத் தொடர்ந்தனர்.
          கிராம சபைகளின் வளர்ச்சிக்கு கல்விதான் முக்கியம் என்பதை நான் வலியுறுத்தினேன். இப்போது இல்லாவிடடாலும், எதிர்காலத்தில் பிள்ளைகள் கல்லூரி சென்று படித்து படம் பெற்று  நல்ல வேலையில் அமர்ந்தபின்பு அவர்களின் பொருளாதாரம் வளரும் என்பதையும் எடுத்துச் சொன்னேன். அதே குறிக்கோளைக் கொண்டதே திருச்சபையின் சமூகப் பொருளாதார முன்னேற்றக் கழகத்தின் குறிக்கோள் என்றார் தம்பிப்பிள்ளை. அவர்தான் அப்போது அதன் இயக்குநர்.
          சுமார் அரை மணி  நேரம் ஆனது. அதிஷ்டம் மீண்டும் அறைக்குள் நுழைந்தார். அவருடைய முகம் பிரகாசமாக இருந்தது. அவர் உற்சாகமாக இருப்பது தெரிந்தது. அவரையே கூர்ந்து கவனித்தார் தம்பிப்பிள்ளை. மேகநாதன் விரித்த வலையில் அதிஷ்டம் மாட்டிக்கொண்டார் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருப்பார்.
         மேகநாதன் கீழே காத்திருப்பார். நாங்கள் பிரயாணம் செய்ய வேண்டும். நான் விடைபெற்றேன்.
          ” ஜாக்கிரதையாக இரு . ” தம்பிப்பிள்ளை எச்சரித்தார். நான் தலையசைத்து விடைபெற்றேன்.
             அவர் எது பற்றி எச்சரித்தார் என்பதை அதிஷ்டம் அறிய வாய்ப்பில்லை.
          கார் அருகே மேகநாதன் நின்றுகொண்டிருந்தார்.என்னைக் கண்டதும் காரில் ஏறிக்கொண்டார். மறுபடியும் கடைத்தெருவுக்கு காரைச்  செலுத்தச் சொன்னார்.
           ” டாக்டர். சக்சஸ்! ” என்றவாறு கை  கொடுத்தார்.
          ” செயலர் என்ன சொன்னார்? ” நான் கேட்டேன்.
          ” சரி என்று சொல்லிவிட்டார். முதல் வேலையும் தந்துவிட்டார்.”
          ” பரவாயில்லையே? உடன் கிடைத்துவிட்டதே? எங்கே? “
          ” சிதம்பரம் கோவிலைச்  சுற்றிலும் காம்பவுண்ட் சுவர் எழுப்பும் வேலை. அதை முடித்ததும் வேலை திருப்தியாக இருந்தால் அடுத்த காண்டிராக்ட் தருவதாகச் சொன்னார்.இனி நமக்குக் கவலை இல்லை. “
          ” ஆமாம். அந்த வேலையை நல்லபடியாக குறித்த நேரத்தில் கட்டி முடிக்கவேண்டும்.” எதோ நானும் அவருடன் சேர்ந்து காண்டிராக்ட் வேலையில் ஈடுபடுவதாக நினைத்துச்  சொன்னேன்.
          ” ஆமாம். முதல் வேலை திருப்தியாக இருக்க வேண்டும். திங்கட்கிழமை  நான் திருச்சி சென்று அவரைப் பார்க்கவேண்டும். அங்கே  நான் பதிவு செய்ய வேண்டும். பின்பு டெண்டர் தரவேண்டும். அப்போதுதான் அவர் அதை மீட்டிங்கில் வைத்து பாஸ் பண்ணுவார். “
          ” நான் வரணுமா? “
          ” எதற்கு நீங்கள்? இனி நானே எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வேன்.” இப்படி அவர் சொன்னதும் எனக்கு என்னவோ போலிருந்தது.
          தம்பிப்பிள்ளை சொன்னது நினைவுக்கு வந்தது. என்னை இப்போதே இவர் கழற்றி விடுகிறார் எனபதை உணர்ந்தேன்!
          ” ஆமாம். நான் எதற்கு? எனக்கு வேலை உள்ளது. நீங்களே பார்த்துக்  கொள்ளுங்கள்.”
          ” கவலையை விடுங்கள் டாக்டர். இனி நான் சமாளித்துக் கொள்கிறேன். அதிஷ்டம் இனி என்னை விடமாட்டார். ” என்றார்.
          ” லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தில் ஜ. டி.எட்வர்ட் என்ற ஒருவர் முக்கிய புள்ளி. அவரும் ஒரு காண்டிராக்டர். அவருக்கும் சில வேலைகள் தருவார்கள் அல்லவா? “
          ” அதனால் என்ன? நிறைய வேலைகள் உள்ளது என்றார். அவருக்கும் கிடைக்கும். ” அது பற்றி அவர் கவலைப்படவில்லை.
          ஓர்  அசைவ உணவகத்தின் முன் வண்டியை நிறுத்தினார். இரண்டு பாட்டில் கல்யாணி பீர் கொண்டுவரச் சொன்னார். குளிர் சாதனப் பெட்டியிலிருந்து சில்லென்று கொண்டுவந்தான். கிளாசில் ஊற்றி பருகியது குளிர்ச்சியாக இருந்தது! கோழி வறுவல் கொண்டுவரச் சொன்னார். அதோடு கொத்து பரோடடாவும்  வந்தது. பசிக்கு வயிறு நிறைய உண்டேன்.
          புறப்பட்டு திருப்பத்தூர் வந்து சேர நள்ளிரவாகியது. நன்றாகத் தூங்கியதால் பிரயாண தூரமோ களைப்போ இல்லை!
          காலையில் வேலைக்கு சென்றபோது அலுவலகம் அருகே பால்ராஜைக் கண்டேன்.
          ” நேற்று எங்கே டாக்டர் காணவில்லை? ” அவர் ஆவலுடன் கேட்டார்.
          ” ” அவசரமாக மயிலாடுதுறை சென்றுவிட்டேன்.” என்றேன்.
           ” செக்ரட்டரியைப் பார்க்கவா? ” அவர் கேட்டார்.
          ” ஆம். மாலையில் பேசிக்கொள்வோம் ” என்றவாறு சிற்றாலயம் சென்றேன்.
          அவர் எதோ முக்கிய செய்தி சொல்ல என்னைத் தேடியுள்ளார் போன்றிருந்தது. நேற்று முழுதும் இல்லாததால் வார்டுகளில் நோயாளிகளிடம் கூடுதல் நேரம் செலவாகும். மாலையில்தான் ஓய்வாகப் பேசலாம்.
          ஆலய காலை வழிபாட்டுக்குப் பிறகு எக்ஸ்ரே அறைக்குச் சென்றேன். பின்பு வார்டுகளில் ரவுண்ட்ஸ் செய்தேன். நான் இல்லாததால் டாக்டர் சுலதா என் வார்டையும் கவனித்தார் என்று சிஸ்டர் பாலின் கூறினார். சில புதிய நோயாளிகள்  சேர்ந்திருந்தார்கள். .பழைய நோயாளிகள் அனைவரும் அப்படியே இருந்தனர். யாரும் இறந்துபோகவில்லை.அது மனதுக்கு ஆறுதலாக இருந்தது. எப்போதாவது ஒருவர் என்னுடைய சிகிச்சை பலனின்றி இறக்க நேரிட்டால் அன்று முழுதும் கவலையாகவே இருக்கும். எங்கே சிகிச்சையில் தவறு நடந்தது என்று யோசிப்பேன். நோயாளி என்னுடைய கையைப் பிடித்தவாறு உயிர் விடுவது, ” நான் சென்று வருகிறேன் டாக்டர். ” என்று சொல்வதுபோல் இருக்கும். இந்த நன்கு ஐந்து ஆண்டுகளில் அதுபோன்று எத்தனையோ பேர்கள் என் கையில் உயிர் விட்டுள்ளனர்! அவர்களையெல்லாம் கணக்கில் வைத்துக்கொள்ளாமல் மறந்துபோனேன்.
          பெரும்பாலானோர் கிராமவாசிகள். உறவினர் இறந்துவிடடால்  கதறிஅழுவார்கள். நோயாளி கவலைக்கிடமாக இருக்கும்போதே மதுரை பெரிய மருத்துவமனைக்குக்  கொண்டு போகச் சொன்னால் பெரும்பாலும் போகமாட்டார்கள். கூடுமானவரை முயற்சி செய்யவே சொல்வார்கள். நோயாளி பிழைப்பது சிரமம் என்று தெரிந்ததும் நான் முன்கூட்டியே அவர்களிடம் விளக்கி சொல்லிவிடுவேன். அதனால் அவர்கள் எதற்கும் தயாராக இருப்பார்கள். அந்த வேளையில் மரணம் பற்றி தெரிவித்தால் அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்திற்கு வந்து விடுவார்கள். ” என்ன செய்வது? டாக்டரும் கூடுமானவரை முயற்சிதான் செய்து பாத்தார். ” என்று அவர்கள் பேசிக்கொண்டு ஆறுதல் அடைவார்கள்.
         நோயாளி ஆபத்தான நிலையில் இருக்கும்போதே அதுபற்றி அவர்களை எச்சரித்து விடுவதே நல்லது. ஒரு வேளை நோயாளி பிழைத்துக்கொண்டால், டாக்டர் கஷ்டப்பட்டு பிழைக்க வைத்துவிட்டார் என்று நன்றி சொல்வார்கள். நான் எப்போதுமே உள்ளதை உள்ளபடியே நோயாளிகளின் உறவினர்களிடம் சொல்லிவிடுவேன்.
           வார்டில் அனுமதி என்றாலே அவர்களுக்கு ஒருவித சந்தேகம் எழுவது இயல்பே. ஆபத்தான நிலையில்தான் நோயாளி  வார்டில் தங்கி சிகிச்சைப் பெறப்போகிறார் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். நோயாளிகளின் உறவினர்களுடன் சிஸ்டர் பாலின் மிக நெருக்கமாகப் பழகி அவர்களின் அன்பைப் பெறுவார். அன்றாடம் வார்டுக்கு வருவதால் சிஸ்டர் பாலினுடன் அவர்கள் நெருக்கமாகி விடுவார்கள். அது எனக்கு மிகவும் சாதகமாக இருந்தது.
          நோயாளிகளைப்போலவே அவர்களின் உறவினர்களுடனும் அன்பாகப்  பேசிப் பழகுவதே சிறப்பான மருத்துவக் கலையாகும். அதற்கு நிறையவே பொறுமை வேண்டும்.  சில  உறவினர்கள் கேட்டதையே திரும்பத்  திரும்பக்  கேட்பார்கள். அவற்றுக்கெல்லாம் பொறுமையுடன் பதில் சொல்லியாகவேண்டும்.
          அன்று மாலை பால்ராஜ் கிறிஸ்டோபருடன் என்னைக் காண வந்தார்.
          ” என்ன டாக்டர் சொல்லாமல் கொள்ளாமல் திடீர் மயிலாடுதுறைப் பயணம்? ” பால்ராஜ் கேட்டார்.
          நான் மேகநாதனுடன் சென்று செயலரைப் பார்த்து வந்தது பற்றிச் சொன்னேன்.
          ” மேகநாதனா? அவர் சரியான பிராட் ஆயிற்றே! ” என்றார் கிறிஸ்டோபர்.
          ” ஆமாம் டாக்டர். அவர் அப்படிதான். ”  ஆமோதித்தார்  பால்ராஜ்.
          ” இதில் நிச்சயம் உங்களை ஏமாற்றிவிடுவார் டாக்டர் ” கிறிஸ்டோபர் திட்டவட்டமாகச் சொன்னார்.
          ” எதோ உங்கள் பங்கு கிடைத்தால் சரிதான். அனால் உங்களுக்கு அப்படித் தருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. ” என்றார் பால்ராஜ்.
          ” டாக்டர். ஒரு முக்கிய விஷயமாக நாங்கள் உங்களை நேற்று தேடினோம். ” என்றார் கிறிஸ்டோபர்.
          ” முக்கிய விஷயமா? அது என்ன? ” நான் கேட்டேன்.
          ” பால்ராஜுக்கு திருமணம் டாக்டர்! ” என்றார் கிறிஸ்டோபர்.
          ( தொடுவானம் தொடரும் )
Series Navigationவெறிப்பத்து
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *