தான் எடுத்துக்கொண்ட நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் மனப் போக்கே ‘வெறி’ என்று சொல்லப்படும். தங்களால் தீர்க்க முடியாத வாழ்க்கைச் சிக்கல்கள் ஏற்படும்போது குறிஞ்சி நில மக்கள் தங்கள் நிலத் தெய்வமான முருகனுக்குப் படையலிட்டு வழிபடுவர். தெய்வமானது பூசாரியின் வாயினால் அருள்வதை வெறியாட்டு என்பர். ‘வெறி’ என்பதற்கு மணம் என்றும் தன்னை மறந்த நிலை என்றும் பொருள் உண்டு. வெறியாட்டில் இவை இரண்டும் கலந்து காணப்படும். இப்பகுதியின் பாடல்களில் முருகனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்த மூத்தோர்கள் ஏற்பாடு செய்தலும், அதன் தொடர்பான கருத்துகளும் காணப்படுவதால் இப்பகுதிக்கு’வெறியாட்டுப் பத்து’ என்று பெயர் வந்தது.
=====================================================================================
வெறியாட்டுப் பத்து—1
நாம்உறு துயரம் நோக்கி, அன்னை
வேலன் தந்தனன் ஆயின்,அவ் வேலன்
வெறிகமழ் நாடன் கேண்மை
அறியுமோ தில்ல? செறிஎயிற் றோயே!
[வெறி=மணம்; கேண்மை=உறவு; எயிறு=பகல்]
அவனும் அவளும் தெனமும் சந்திக்கறதால அவ ஒடம்புல மாற்றம் ஏற்படறத அவ அம்மா கவனிச்சுட்டா; ஊர்ல எல்லாரும் பேசறதையும் அம்மா கேட்டா; அதால் அவளுக்குக் காவல் போட்டா. இப்ப அவனைப் பாக்க முடியததால அவ ஒடம்புக்கு நோய் வந்திடிடுச்சு; மெலிஞ்சு போயிட்டா. அதால அவ அம்மா வெறியாட்டு வச்சுக் குறி கேக்கறா. அப்ப தோழி அவளுக்கு, அவ அம்மாவும் கேக்கற மாதிரி சொல்ற பாட்டு இது.
”அழகான செறிவான பற்கள் இருக்கறவளே! நாம படற வேதனையைப் பாத்து, நம்ம அம்மா வெறியாடற வேலனை அழைக்கறா. ஒருவேளை அந்த வேலன் அவனோட நாம் வச்சிருக்கற ஒறவைச் சொல்லிடுவானா?”
=====================================================================================
வெறியாட்டுப் பத்து—2
அறியா மையின், வெறிஎன மயங்கி
அன்னையும் அருந்துயர் உழந்தனள்; அதனால்
எய்யாது விடுதலோ கொடிதே நிரைஇதழ்
ஆய்மலர் உண்கண் பசப்ப
சேய்மலை நாடன் செய்த நோயே!
[வெறிஎன=தெய்வக் குற்றம் என; அருந்துயர்=பெரிய துயரம்;
ஆய்மலர்=ஆராய்ந்தெடுத்த மலர்; உண்கண்=மையுண்ட கண்;
நிரையிதழ்=வரிசையா அமைந்துள்ள இதழ்; சேய்=தொலைவு]
அவ அவனோட வச்சிருக்கற ஒறவை வெளியே சொல்லாம மறைச்சு வச்சு, அதால வாடி வருந்தறா. அப்ப தோழி சொல்ற பாட்டு இது
”வரிசையா அழகா இதழெல்லாம் இருக்கற, ஆராய்ஞ்சி எடுத்த பூவைப் போல மை வச்சிருக்கற ஒன் கண்ணெல்லாம் பசலை வரும்படி, செஞ்சது தூரத்துல இருக்கற மலைநாட்டைச் சேந்தவன்னு தெரியாம, இதைத் தெய்வக் குத்தம்னு நெனச்சு அம்மா வருந்தறா. அதால அவளுக்கு இன்னும் உண்மையைச் சொல்லாமல் இருப்பது ரொம்பக் கொடுமையாகும்”.
அம்மாவுக்கு உண்மையான காரணத்தைச் சொல்லி கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யலாம்றது மறை பொருளாம்.
===================================================================================
வெறியாட்டுப் பத்து—3
கறிவளர் சிலம்பில் கடவுள் பேணி
அறியா வேலன், வெறிஎனக் கூறும்
அதுமனம் கொள்குவை அனை!இவள்
புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே
[கறி=மிளகுக் கொடி; சிலம்பு=பக்கமலை; வெறி=தெய்வக் குற்றம்;
மழைக்கண்=குளிர்ந்தகண்]
அவ ஒடம்புல ஏதோ மாற்றத்தை அவளோட தாய் பாக்கறா. அதை ஏதோ தெயவக் குத்தம்னு நெனச்சு வெறியாட்டத்துக்கு ஏற்பாடு செய்யறா. அப்ப தோழி சொல்ற பாட்டு இது.
”அன்னையே! குளிர்ச்சியான புதுப் பூப்போல இருக்கற இவளோட கன்ணெல்லாம் அழுது வருந்தும் நோய்க்குக் காரணம் என்னன்னு மிளகுக்கொடி வளர்ற மலையில வசிக்கிற முருகனைக் கும்பிட்டு வேலன் தெய்வக்குத்தம்னு சொல்வான். அதையே நீயும் மெய்யின்னு நம்புவாய்”
மிளகுக்கொடி எப்படி தானே வளர்ந்து மலையைப் பற்றிச் செழிக்குதோ அதே போல இவளும் அவனை விரும்பறா; இது அம்மாவுக்குத் தெரியலயேன்னு தோழி மறைவா சொல்றா.
====================================================================================
வெறியாட்டுப் பத்து—4
அம்ம, வாழி! தோழி! பன்மலர்
நறுந்தண் சோலை நாடுகெழு நெடுந்தகை
குன்றம் பாடான் ஆயின்
என்பயம் செய்யுமோ வேலற்கு அவ்வெறியே!
[பன்மலர்=பலவித வாசனையும், அழகும் கொண்ட மலர்; நறுந்தண் சோலை=மணம் உள்ல குளிர்ச்சியான சோலை; குன்றம்=மலை]
அவளோட ஒடம்புல மாற்றம் வந்துட்டதுன்னு தெரிஞ்சிகிட்ட அம்மா வெறியாட்டத்துக்கு ஏற்பாடு செய்யறா. அப்ப செவிலித்தாய்க்கும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.
அன்னையே! அவனோட மலையில இருக்கற சோலையில பலவித வாசனைப் பூக்கள் இருக்கு; அந்த மலையைப் பத்தி இந்த வேலன் பாடாட்டா இந்த ஆட்டத்தால என்னா பயன் இருக்கு?”
அவனோட மலையைப் பத்திப் பாடினா அவளுக்கும் மனசில இருக்கற வருத்தம் தீரும்; அவளோட தாயும் அவனை அவ நெனச்சுக்கிட்டு இருக்கறதைத் தெரிஞ்சுக்குவான்றது மறைபொருளாம்.
====================================================================================
வெறியாட்டுப் பத்து—5
பொய்யா மரபின் ஊர்முது வேலன்
கழங்குமெய் படுத்துக் கன்னம் தூக்கி
முருகென மொழியு மாயின்
அருவரை நாடன் மெய்கொலோ, அதுவே?
[பொய்யா மரபின் வேலன்=பொய்யே சொல்லாத ஒழுக்கம் பேணி வெறியாட்டுச் செய்யும் வேலன்; ஊர்முது வேலன்=ஊரில் வயது முதிர்ந்த வேலன்; கழங்கு மெய்ப்படுத்தல்=கழற்சிக்காயை முறைப்படுத்தல்; கன்னம் தூக்கல்=மந்திரத் தகடு வைத்த தாயத்தைக் கையில் கட்டி விடுதல்; முருகு=முருகன்]
அவளும் தோழியும், அவனைப் பாக்கறதுக்கு வழக்கமான எடத்துல வந்து காத்துக்கிட்டு இருக்காங்க; அவனும் வந்து மறைவா நிக்கறான். அப்ப அவனுக்கும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.
”வெறியாட்டைச் செய்ய இருக்கற வேலன் பொய்யே சொல்லாதவன்; அத்தோட வயது அதிகமானவன்; அவன் கழங்குக்காயை எல்லாம் முறையா வச்சு, மந்திரத் தகடுவச்ச தாயத்தைக் கயில கட்டிக்கிட்டு இவளுக்கு வந்திருக்கற நோயிக்கு முருகன்தான் காரணம்னு சொல்லிட்டா இவளுக்கும் அவ மனசில இருக்கறவனுக்கும் பொருத்தமா இருக்குமோ?”
அவன் பொய்யே சொல்லாதவன். குறிப்பா முருகன்தான் காரணம்னு சொல்லிட்டா அது அவ மனசில இருக்கறவனுக்கும்தான பொருந்தும்னு மறைவா சொல்றா.
=====================================================================================
வெறியாட்டுப் பத்து—6
வெறிச்செறித் தனனே, வேலன் கறிய
கல்முகை வயப்புலி கழங்குமெய்ப் படூஉம்
புன்புலம் வித்திய புனவர் புணர்த்த
மெய்ம்மை அன்ன பெண்பாற் புணர்ந்து
மன்றில் பையுள் தீரும்
குன்ற நாடன் உறீஇய நோயே!
[வெறிச்செறித்தல்=வெறியாட்டத்துக்கான ஏற்பாடுகளைச் செய்தல்; கறிய=மிளகுக் கொடியை உடைய; கல்முகை=மலைக்குகை; வயம்=வலிமை; கழங்கு=கழற்சிக்காய்; புன்புலம்=புன்செய்; வித்திய=விதைத்த; புனவர்=குறவர்; பையுள்=துயரம்; உறீஇய=பொருந்திய; நோய்=காம நோய்]
அவ ஒடம்புல ஏற்படும் மாற்றத்தை எல்லாம் பாத்த அவ அம்மா காரணத்தைத் தெரிஞ்சிக்க வெறியாட்டத்துக்கு ஏற்பாடு செய்யறா. அப்ப வந்து மறைவா நிக்கற அவனும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.
”மலையில புஞ்சை நெலத்துல கொறவங்க தெனைப் பயிரை வெதைப்பாங்க; பறவைகளும் வெலங்குகளும் பயிரை அழிக்காம இருக்கக் கழற்சிக் காயைக் கண்ணா வச்சு பெண்புலி போல ஒரு பொம்மை செஞ்சு வைப்பாங்க; மிளகுக் கொடி படர்ற மலைக்குகையில் வாழற ஆண்புலி ஒண்ணு அந்தப் பொம்மையை உண்மையான பெண்புலின்னு நெனச்சு அதைப் போய்க் கூடித் தன் வருத்தத்தைப் போக்கிக்கிட்டு களைப்பா கெடக்கற மலையைச் சேந்தவன் அவன். அவனால ஏற்பட்ட காம நோயைத் தீர்க்க வேலன் வெறியாட்ட
த்துக்கு ஏற்பாடு செய்யறான்”
பொம்மைப் புலியைப் போயி இணைஞ்சு தன் மன அரிப்பை ஆண்புலி தீத்துக்கிடுச்சு; அதேபோல அவனும் வந்து வந்து ஒறவு வச்சுக்கறானே தவிர கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யல. சீக்கிரம் அவன் ஏற்பாடு செய்ய வேணும்றது மறைபொருளாம்.
====================================================================================
வெறியாட்டுப் பத்து—7
அன்னை தந்தது ஆகுவது அறிவென்;
பொன்நகர் வரைப்பில் கன்னம் தூக்கி
முருகென மொழியு மாயின்
அருவரை நாடன் பெயர்கொலோ. அதுவே?
[அறிவன்=வேலன்; பொன்நகர்=அழகிய மனை; கன்னம்=தாயத்து; அருவரை=அரிதான மலைப்பக்கம்]
அவனும் அவளும் தெனம் சந்திச்சுப் பேசறது தோழிக்குத் தெரியும்; அம்மா வெறியாட்டத்துக்கு ஏற்பாடு செய்யறா. அதைத் தடுத்து அவளுக்கும் அவனுக்கும் கல்யாணம் செஞ்சு வைக்கணும்னு நெனக்கற தோழி சொல்ற பாட்டு இது.
”வெறியாடறதுக்காக அம்மா வேலனைக் கூப்பிட்டு வர்றது எனக்குத் தெரியும்; அந்த வெறியாடற வேலன் நம்ம மனைக்கு வந்து வெறியாட்டம் ஆடி தாயத்தை இவள் கையிலக் கட்டி, இவ நோயிக்குக் காரணம் முருகன்தான்னு சொல்லிட்டா அது அவன் பேராகுமா?
ஒன் பொண்ணு மொதல்லயே அவனை நெனச்சுக்கிட்டிருக்கான்னு மறைமுகமா அவன் பேராகுமான்னு அம்மாகிட்ட சொல்றா.
=====================================================================================
வெறியாட்டுப் பத்து—8
பெய்ம்மணல் முற்றம் கவின்பெற இயற்றி
மலைவான் கொண்ட சினைஇய வேலன்
கழங்கினான் அறிகுவது என்றால்
நன்றால் அம்ம, நின்றஇவள் நலனே!
[பெய்மணல் முற்றம்=புதுமணல் பெய்த வீட்டின் முற்றம்; கவின்=அழகு; சினைஇய=சிதைந்த; கழங்கு=கழற்சிக்காய்]
அவளோட ஒடம்புல மாற்றத்தைப் பார்த்த அம்மா இது ஏதோ தெய்வக் குத்தம்னு வெறியாட்டத்துக்கு ஏற்பாடு செய்யறா. ஆட வந்த கழங்கு போட்டா உண்மை தெரியும்னு சொல்றான் அப்ப அது பொய்யின்னு தோழி சொல்ற பாட்டு இது.
”புதுசா மணல் போட்டு வச்சிருக்கற வீட்டு முற்றத்தில வெறியாடற எடம் ஏற்படுத்திட்டு, அங்கே மலையையும், ஆகாயத்தையும் சினத்தால வெற்றி கொண்ட வேலை வச்சிருக்கற முருகனை வேண்டி, அப்பறம் கழங்கால இவ நோயிக்கான காரணம் தெரியும்னு இந்த வேலன் சொல்றான் அது உண்மைன்னா அவ கொண்ட கற்பு ரொம்ப நல்லது”
அவ மனசு போலவே நடந்து அவ நெனச்சவனையே வேலனும் சொல்வான்னு தோழி சொல்றா.
====================================================================================
வெறியாட்டுப் பத்து—9
பெய்ம்மணல் வரைப்பில் கழங்கு படுத்து, அன்னைக்கு
முருகுஎன மொழியும் வேலன்; மற்றவன்
வாழிய இலங்கும் அருவிச்
சூர்மலை நாடனை அறியா தோனே
[பெய்ம்மணல்=புதுமணல்; கழங்கு படுத்தல்=கழங்கால் உண்மை அறிதல்; சூர்=அச்சம்]
வெறியாட்டு வச்சு அதுல வேலன் சொன்னதையே அம்மா உண்மைன்னு நம்பிட்டா. அதால தோழிக்கு வருத்தம் வந்திடுச்சு; அப்ப தோழி அம்மாவும் கேக்கற மாதிரி அவகிட்டச் சொல்ற பாட்டு இது.
”புதுசா மணல் போட்ட முற்றத்துல வந்து வெறியாட்டம் நடத்திய வேலன் கழங்கு பாத்து, அவ நோயிக்குக் காரணம் சாமி முருகன்தான்னு சொல்றான். அதை அம்மாவும் ஏத்துக்கிட்டா; ஆனா அதைச் சொன்ன அந்த வேலனுக்கு அருவியெல்லாம் விழற மலைக்குச் சொந்தக்காரனான ஒன் மனசிலிருக்கற அவனைப் பத்தி ஒண்ணும் தெரியாது. அவன் வாழ்க!”
=================================================================================
வெறியாட்டுப் பத்து—10
பொய்படு பறியாக் கழங்கே! மெய்யே
மணிவரைக் கட்சி மடமயில் ஆலும்நம்
மலர்ந்த வள்ளியங் கானங் கிழவோன்;
ஆண்டகை விறல்வேள் அல்லன் இவன்
பூண்தாங்கு இளமுலை அணங்கியோளே!
[பொய்படு அறியா=பொய் சொல்லாத; மணிவரை=நீலமலை; கட்சி=காடு; ஆலும்=அடும்; விறல்=வெற்றி; வேள்=முருகன்; பூண்=கச்சு]
வெறியாட்டத்துக்கு ஏற்பாடு செஞ்சாச்சு. அதுல வேலன் இவ ஒடம்பு மாற்றத்துக்குத் தெய்வக் குத்தந்தான் காரணம்னு கழங்குக் காயைப் பாத்துச் சொல்றான். அது தெரிஞ்ச தோழி அந்தக் கழங்குக் காயைப் பாத்துச் செவிலித் தாய் கேக்கற மாதிரி சொல்ற பாட்டு இது.
”பொய்யே சொல்லாத கழங்குக் காயே! இவளோட கச்சு போட்டிருக்கற முலையெல்லாம் தழுவறவன் யார் தெரியுமா? எளமையான மயில் எல்லாம் ஆடற நீலமணி போல மலை இருக்கற காட்டுக்கு சொந்தக்காரனான அவன்தான். நீ சொல்ற மாதிரி ஆண்தன்மையிலச் சிறந்த வெற்றி வேலை வச்சிருக்கற முருகன் இல்ல”
========================================நிறைவு=========
- தொடுவானம் 225. திருச்சபையில் காண்டிராக்ட்
- வெறிப்பத்து
- இடிந்த வீடு எழுப்பப்படும்
- 2022 ஆண்டுக்குள் 100,000 மெகாவாட் சூரியக்கதிர் மின்சக்தி நிலையங்கள் நிறுவ இந்திய மத்திய அரசு திட்டமிடுகிறது
- பிறந்துள்ளது கறுப்புக் குழந்தை !
- மருத்துவக் கட்டுரை – ஹெர்ப்பீஸ் வைரஸ் ( Herpes Virus )
- சபரிமலை – நவீனத்துவம் விழுங்கும் இந்திய பாரம்பரியங்கள்