கிறிஸ்டோபர் சொன்னது கேட்டு நான் பால்ராஜைப் பார்த்தேன். அவர் ஆம் என்பது போல் தலையசைத்தார்.
” என்ன பால்ராஜ் திடீரென்று? ” அவரைப் பார்த்துக் கேட்டேன்.
” ஆமாம் டாக்டர். வீட்டில் அம்மாவின் ஏற்பாடு ” என்றார்.
” பெண் யார்? நீங்கள் இங்கே எந்தப் பெண்ணிடமும் நெருங்கிப் பழகவில்லையே. பெண் வெளியூரா? ” நான் கேட்டேன்.
” இல்லைங்க டாக்டர். பெண் இங்கேயேதான்.” கிறிஸ்டோபர் கூறினார்.
” இங்கேயா? அது யார்? ” என்று நான் கேட்டேன்.
” பெண் வேறு யாருமில்லை. நம் டிரைவர் தங்கராஜின் மூத்த மகள் சந்திரிகா. ” என்றார் பால்ராஜ்..
” அப்படியா? இது எப்படி நடந்தது? ” நான் கேட்டேன்.
” உங்களுக்குத்தான் தெரியுமே. சந்திரிகா அம்மாவும் என் அம்மாவும் நெருங்கிய தோழிகள் என்பது. அவர்கள் இருவரும் பேசி முடித்துவிட்டார்கள். நானும் சரி என்று சொல்லிவிட்டேன். ” என்றார்.
தங்கராஜ் டிரைவர் வயதில் மூத்தவர். அவரும் மனைவியும் சந்திரிகா, சரளா என்ற இரு பெண்களும் என் வீட்டின் அருகேதான் வாழ்கின்றனர். அவர் தலைமை அதிகாரியின் அம்பாசிடர் கார் ஓட்டுநர்.தலைமை மருத்துவ அதிகாரியின் விசுவாசி! நாங்கள் மூவரும் தலைமை மருத்துவ அதிகாரிக்கு எதிரிகள் ஆகிவிட்டொம். தற்போது சந்திரிகாவை பால்ராஜ் மணக்கவிருக்கிறார்.மணமுடித்த பிறகு பால்ராஜ் இதே வேகத்துடன் செயல்படுவாரா அல்லது கட்சி மாறிவிடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதை உணர்ந்து கொண்டார் பால்ராஜ்.
” என்ன டாகடர் யோசனை? தங்கராஜ் நம் எதிரியின் பக்கம் என்று யோசிக்கிறீரா? அதெல்லாம் நடக்காது டாக்டர். நீங்கள் வேண்டுமானால் பாருங்களேன். அவர்களையும் நம் பக்கம் இழுத்து காட்டுகிறேன். ” உறுதியுடன் சொன்னார் அவர்..
” ஆமாம் டாக்டர். பால்ராஜ் [பற்றி நீங்கள் கொஞ்சமும் சந்தேகப்படத் தேவையில்லை.” கிறிஸ்டோபர் சொன்னார்.
” டாக்டர், இப்போது தங்கராஜ் டிரைவர் டாக்டர் ஜானுடன் அவ்வளவு நெருக்கம் இல்லை .அவர்களுக்குள் உரசல். அவர் ஓட்டும் 3144 கார் விஷயமாக எதோ பிரச்னை உண்டாகிவிட்டது. ” என்றார் பால்ராஜ்.
” அப்போ பரவாயில்லை. அவரையும் நம் பக்கம் இழுத்துவிடுவோம். ” என்றேன் நான்.
தங்கராஜ் ஓட்டுநர் நான் இருந்த வீட்டின் அருகில்தான் இருந்தார். சந்திரிகா அமைதியான பெண். வீட்டில் இருப்பதே தெரியாது. ஆடம்பரம் இல்லாமல் அடக்க ஒடுக்கமாக இருக்கும் குடும்பப் பெண் சந்திரிகா. பால்ராஜுக்கு ஏற்ற மனைவியாக இருப்பார்.
” டாக்டர் திருமணத்தில் பெண் தோழியாகவும் மாப்பிள்ளைத் தோழனாகவும் உங்கள் மனைவியும் நீங்களும் இருக்கவேண்டும். அதை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன் . ” என்றார் பால்ராஜ்.
” மிக்க நன்றி பாலராஜ்.
கிறிஸ்துவத் திருமணங்களில் ஆலய பீடத்தின் முன் மணமக்கள் நிற்கும்[போது அவர்களின் பக்கத்தில் பெண் தோழியும் மாப்பிள்ளைத் தோழனும் இருப்பது வழக்கம். மிகவும் நெருக்கமானவர்களுக்குத்தான் அத்தகைய சிறப்பு தரப்படும்.
அதன்பின்பு சில நாட்கள் பால்ராஜ் திருமண ஏற்பாட்டில் தீவிரம் காட்டினார். அவரைப் பார்ப்பதுகூட சிரமமாக இருந்தது.
27 ஜூன் 1979 அன்று திருமணம். புதிய ஆரோக்கியநாதர் ஆலயத்தில் நடக்கும் முதல் திருமணம். கிறிஸ்டோபர் தலைமையில் இளைஞர் இயக்கத்தினர் ஆலயத்தை வெளியிலும் உள்ளேயும் அழகாக அலங்காரம் செய்திருந்தனர்.
ஆலய இருக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட்து. வெளியிலும் பலர் இருந்தனர்.
மறைதிரு எரிக்தாஸ் திருமண ஆராதனையை நடத்தினார். `பெண்ணும் மாப்பிள்ளையும் பீடத்தின் முன் அமர்ந்தனர். அவர்களின் இரண்டு பக்கத்திலும் என் மனைவியும் நானும் அமர்ந்திருந்தோம்.
மறைதிரு ஜே.டபுள்யூ டேனியல் பால்ராஜின் தாய் மாமன். அவர் அப்போது திருச்சபையின் உதவித் தலைவராக இருந்தார். அவர்தான் தாலியை எடுத்துத் தந்தார்.மறைதிரு தங்கராஜ் பாலராஜின் அண்ணன். அவர் புள்ளம்பாடி போர்டிங் மேனேஜர். அவரும் ஜெபம் செய்தார்.
பாமாலைகளும் கீர்த்தனைகளும் இனிய இசையுடன் ஒலிக்க பால்ராஜ் சந்திரிகா திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாலையில் கூகல்பர்க் நினைவு மண்டபத்தில் வரவேற்பு விழா வெகு சிறப்புடன் நடந்தது. நான் வாழ்த்துரை வழங்கினேன்.
இந்தத் திருமணத்தில் இன்னொரு சிறப்பு என்னவெனில் அவர்களின் முதல் இரவுகூட எங்கள் வீட்டு மாடி அறையில்தான்! எங்களுடைய நட்பு அவ்வளவு உயர்வானது!
திருமணத்துக்குப் பின்பு பால்ராஜ் மாலையில் வருவது சற்று குறைந்தது. ஆனால் கிறிஸ்டோபர் தவறாமல் என்னைத் தேடி வந்து விடுவார்.அவருடன் தேவையிரக்கம் வர ஆரம்பித்தார். அனால் தேவையிரக்கம் அதிகமாக ஏதும் பேசமாட்டார். இயற்கையிலேயே அவர் சாதுவானவர்.
சில மாலைகளில் மேகநாதன் கையில் விஸ்கி பாட்டிலுடன் வருவார். சிதம்பரத்தில் காம்பவுண்ட் சுவர் எழுவதாகக் கூறுவார். அதற்கு முன்பணம் கிடைத்ததாகவும் அதில் செங்கற்கள், சிமெண்ட் மூடடைகள் வாங்கிவிட்டதாகக் கூறினார். வேலை முடிந்து பணம் முழுதும் கிடைத்தபின்பு தானே எனக்கு பத்து சதவிகிதம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நான் பொறுமை காத்தேன். அவரும் மிகவும் நம்பிக்கை ஊட்டும் வகையில்தான் பேசினார்.இடையிடையே செயலர் அதிஷ்டத்தைப் பார்த்ததாகவும் கூறுவார். அவருடன் இவர் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன்.
என்னைத் தேடி வரும் கிறிஸ்டோபர் மேகநாதனின் மோட்டார் சைக்கிள் இருப்பதை பார்த்தால் திரும்பி விடுவார். மறுநாள் அவரிடம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்வார். கிறிஸ்டோபர் மிகுந்த பக்தி உள்ளவர். அவருக்கு மதுபானம் என்பது பிடிக்காது. மேகநாதனுடன் சேர்ந்தால் எனக்கும் குடிப் பழக்கம் ஏற்படும் என்று பயந்தார்.அதை என்னிடமும் கூறுவார். அது நல்லதுதான்.
” இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும். ” என்ற குறள்தான் அப்போதெல்லாம் என்னுடைய நினைவுக்கு வரும்!
மேகநாதன் எதோ ஒரு காரணத்துக்காகத்தான் இப்படி விஸ்கி பாட்டிலுடன் வருகிறார் என்பது தெரிந்தது. அவர் அதிகம் குடித்துவிட்டு நிறைய கோழிக்கறியும் முட்டையும் சாப்பிடுவார். அனால் நிதானமாக திரும்பவும் மோட்டார் சைக்கிளில் சென்று விடுவார். எனக்கு கொஞ்சம் குடித்தாலும் தலை சுற்றும். பின்பு இரவு நன்றாகத் தூங்கினாலும் காலையில் சுறுசுறுப்பாக இயங்க முடியாது. மதியம் வரை அந்த பாதிப்பு இருக்கும். உண்மையில் மது எனக்குப் பிடிக்கவில்லை. அவருக்கு துணையாக இருக்கவே அவருடன் குடித்தேன். என்னுடைய எண்ணமெல்லாம் அந்த பத்து பெர்சன்ட் மீதுதான் இருந்து.அவருடன் நெருக்கமாக இருந்தால் பணம் விரைவில் கிடைத்துவிடும் என்று நம்பினேன்.ஆனால் அவரோ நெருக்கமாக இருப்பதற்கு விஸ்கியைப் பயன்படுத்தினார்!
( தொடுவானம் தொடரும் )