தொடுவானம் 227. ஹைட்ரோஃபோபியா

This entry is part 4 of 10 in the series 4 நவம்பர் 2018

டாக்டர் ஜி. ஜான்சன்
227. ஹைட்ரோஃபோ பியா

நண்பர் பாலராஜின் திருமணப் படங்கள் ஒரு வாரம் கழித்து வந்தன. அதில் என் மனைவியும் நானும் அவர்களுக்கு மாப்பிள்ளைத் தோழனாகவும் பெண் தோழியாகவும் அவர்களின் பக்கத்தில் இருக்கும் படம் இருந்தது. அப்போதெல்லாம் நான் பெரிய மீசையும் நீண்ட கிருதாவும் வைத்திருந்தேன். அதனால் என்னை சிலர், ” கிருதா டாக்டர் ” என்றுகூட அழைப்பதுண்டு!
சுவீடிஷ் மிஷன் மருத்துவமனையின் வளாகம் பெரியது. அனைத்து ஊழியர்களுக்கும் அங்கு வீடுகள் தரப்பட்டிருந்தது. அதுபோன்றே விழியிழந்தோர் பள்ளியில் பணிபுரிந்தோருக்கும் வீடுகள் தரப்பட்டிருந்தது. தாதியர் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்தோருக்கும் வீடுகள் தரப்பட்டிருந்தது. இதனால் வளாகம் ஒரு சிறு கிராமம் போன்றே செயல்பட்டது.வேலை நேரம் போக மற்ற நேரங்களில் ஊழியர்கள் மிகவும் நெருக்கமான அன்புடனே வாழ்ந்து வந்தனர்.
திருமணம் போன்ற மங்களகரமான காரியங்களில் அனைவரும் பங்கு கொள்வார்கள். சிலர் வீடுகளில் விருந்துகள் வைத்து அழைப்பதும் உண்டு. என்னை மேகநாதன் வீட்டிலும் சிஸ்டர் பாலின் வீட்டிலும் அடிக்கடி இரவில் விருந்துக்கு அழைப்பார்கள். மேகநாதன் பெரும்பாலான நாட்களில் வீட்டில் தங்குவதில்லை. கட்டிட வேலைக்காக வெளியூர் சென்றுவிடுவார்.அவருடைய மனைவி வசுந்தரா தாதியர் பயிற்சிப் பள்ளியில் டியூட்டர் பணிக்காக வேலூரில் பயிற்சி பெறுகிறார்.சிஸ்டர் பாலின் கணவர் இம்மானுவேல் சுங்கத்துறையில் வாகன ஓட்டுநராக நாகப்பட்டினத்தில் பணி புரிகிறார். வார இறுதியில் வீடு வருவார்.அவ்வாறு வீடு வரும் சமயத்தில் அவர்களுடைய வீட்டில் விருந்து வைத்து என்னையும் கூப்பிடுவார்கள்.அப்போது மது பரிமாறப்படும்.விருந்து இரவில் வெகு நேரம் நீடிப்பது வழக்கம்.ஞாயிறு விடுமுறை என்பதால் சனிக்கிழமைகளில் இத்தகைய விருந்துகள் நடைபெறும்.
இத்தகைய ஒரு இரவு விருந்துக்கு சிஸ்டர் பாலின் வீட்டுக்கு அழைத்தார். அப்போது அவருடைய கணவர் இம்மானுவேல், பாலின் தம்பி ஃப்ராங்க்ளின், மேகநாதன்,, மித்திரன் ஆகியோர் இருந்தனர். மித்திரன் பாலின் வீட்டின் பக்கத்துக்கு வீட்டில் வாசித்தார். அவர் சிஸ்டர் மரியம்மாள் கணவர். அறுவைச் சிகிச்சைக் கூடத்தில் மயக்கம் தரும் பணியாளர் அவர்.
நாங்கள் தரையில் வட்டமாக அமர்ந்து விஸ்கி அருந்தினோம். அதை இம்மானுவேல் நாகப்பட்டினம் சுங்க இலாக்காவிலிருந்து கொண்டு வந்திருந்தார். அப்போது என் அருகில் அமர்ந்திருந்த மித்திரன் அதில் ஆர்வம் இல்லாதது போன்று காணப்பட்டார். கிளாசில் இருந்த விஸ்கியை அவர் எடுத்துப் பார்த்துவிட்டு அதை என்னிடம் தள்ளி வைத்தார். நான் ஏன் என்று கேட்டேன்.தனக்கு அதைப் பார்க்க பிடிக்கவில்லை என்றார். அப்போது அது எனக்குப் புரியவில்லை. கண்ணாடி கிளாசைப் பார்க்க ஏன் அவருக்குப் பிடிக்கவில்லை என்பதை அப்போது நான் பெரிது படுத்தவில்லை. விஸ்கியுடன் கோழிக்கறி பரிமாறினார்கள். மித்திரன் ஒரு துண்டு கோழியைச் சாப்பிட்டார். பின்பு தனக்கு உடல் சரியில்லை என்று சொல்லிவிட்டு எழுத்து வீடு சென்றுவிட்டார்.
மறுநாள் ஞாயிறு. அன்று இரவு நான் மருத்துவ வார்டுககைக் கண்காணித்தேன். சுமார் பத்து மணிக்கு பி.வார்டிலிருந்து அழைப்பு வந்தது. அங்கு விரைந்து சென்றேன். அவசர நோயாளிகள் வரும் நேரம் அது. அங்கு மித்திரன் குளிரால் நடுங்குவதுபோல் படுத்திருந்தார். அவர் பயத்தால் மிரண்டவர்போல் காணப்பட்டார்.அவரிடம் விசாரித்தேன். நேற்றிலிருந்து காய்ச்சல் என்றார். அப்போது டி வார்டிலிருந்து சிஸ்டர் பாலின் வந்தார். அதிகம் குளிர்வதாகச் சொல்லி சுழலும் மின்விசிறியை அணைக்கச் சொன்னார் மித்திரன். எங்களுக்கெல்லாம் அப்போது உடல் வெப்பமாகவே இருந்தது. அவருக்கோ குளிர்கிறது. ஒரு வேலை அது குளிர் காய்ச்சலாக இருக்கலாம் என்ற எண்ணத்துடன் அவரைப் பரிசோதனை செய்தேன். நான் பரிசோதனை செய்வதை பார்த்துக்கொண்டிருந்தார். சிஸ்டர் பாலின். நான் தாதியர் பகுதிக்குச் சென்று மித்திரனை வார்டில் சேர்க்க குறிப்பேட்டில் எழுதி க்கொண்டிருந்தேன்.
சிஸ்டர் பாலின் என்னிடம் வந்தார். ” டாக்டர். மித்திரன் நேற்று இரவு அந்த கிளாஸை வேண்டாம் என்றார்.இப்போது ஃ ப்பேன் வேண்டாம் என்கிறார். எனக்கு இப்போது ஒரு சந்தேகம். மித்திரன் ஒரு நாய்க்குட்டியை சென்ற வாரம் வளர்த்தார்.அது அவருடைய கை விரலில் கடித்துவிட்டதாகச் சொல்லி அதை அடித்துக் கொன்றுவிடடார். அது குட்டி நாய்தானே என்று அவர் ஊசி போட்டுக்கொள்ளவில்லை. இப்போது இவருக்கு குளிர் காய்ச்சல். ஒரு வேலை அதனால்தான் காய்ச்சலோ என்று சந்தேகப்படுகிறேன்.” என்றார்.
‘ அப்படியா சிஸ்டர்? இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் பரிசோதனை செய்து பாப்போம். ” என்று அவரிடம் சொல்லிவிட்டு வார்டு சிஷ்டரிடம் ஒரு கிளாசில் தண்ணீர் கொண்டுவரச் சொன்னேன். அதை எடுத்துக்கொண்டு மித்திரனிடம் சென்றோம்.
” மித்திரன். இந்த தண்ணீரைக் குடியுங்கள். ” என்று அதை நீட்டினேன்.
அந்த கிளாஸைப் பார்த்ததும் மித்திரன் முகம் மாறியது. மிரள்வது போன்ற முகபாவம் அது!
” வேண்டாம் டாக்டர். அதைக் கொண்டுபோய் விடுங்கள். அதைப் பார்க்க எனக்கு எதோ செய்கிறது. ” என்று கத்தலானார்.
பாலின் என்னை அர்த்தத்துடன் பார்த்தார்.
நாங்கள் மீண்டும் வெளியே வந்தோம்.
” பார்த்தீர்களா டாக்டர்.” என்றார் சிஸ்டர் பாலின்.
” சிஸ்டர். உங்களின் யூகம் சரிதான். மித்திரனுக்கு ஹைட்ரோஃபோபியா! ” என்றேன்.
” இப்போ என்ன செய்வது? ” அவர் கேட்டார்.
” முதலில் அவரை வார்டில் சேர்த்து விடுவோம். அதன்பின்பு என்ன செயவது என்று யோசிப்போம். ” என்றேன்.
சிஸ்டர் பாலின் டி வார்டுக்குச் சென்றுவிட்டார்.அந்த வார்டில்தான் நான் மித்திரனை ஒரு தனி அறையில் சேர்ப்பேன்.
நான் குறிப்பேட்டில் மித்திரனுக்கு ” ரேபீஸ் “என்று எழுதினேன்.
” ரேபீஸ் ” என்பது வெறி நாயக்கடி நோய் என்பதாகும்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஇயற்கையிடம் கேட்டேன்உதவி செய்ய வா !
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *