கேழல் என்பது காட்டுப் பன்றியைக் குறிக்கும். அது கோரைக் கிழங்கை விரும்பி உண்ணும். அக்கிழங்கை எடுப்பதற்காக நிலத்தைக் கிளறும். அந்த நிலமானது பயிரிடப் பண்படுத்தக் குறவர்களுக்கு மிகவும் எளிதாகும். இப்பகுதியின் பாடல்களில் ஒவ்வொன்றிலும் கேழலின் செயல்கள் கூறப்படுவதால் இப்பகுதி கேழல் பத்து என்னும் பெயர் பெற்றது.
=====================================================================================
கேழல் பத்து—1
மென்தினை மேய்ந்த தறுகண் பன்றி
வன்கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன்
எந்தை அறிதல் அஞ்சிக்கொல்?
அதுவே மன்ற வாரா மையே!
[தறுகண்=அஞ்சாமை; வன்கல்=வலிய கற்கள்; அடுக்ககம்=பக்கமலை; துஞ்சும்=தூங்கும்]
மொத நாளு அவளைச் சந்திக்க அவன் வரான். ஆனா எந்த எடத்துல அவ இருக்கான்னு தெரியாம போயிடறான். அப்பறம் ஒரு நாளு எடம் தெரிஞ்சு வரான். மறைவா நிக்கறான். அவனுக்கும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.
”மெல்லிசா இருக்கற தெனைப் பயிர மேஞ்ச தைரியமான ஆண்பன்றி வலுவான கல்லெல்லாம் இருக்கற மலைப்பக்கத்துல போயித் தூங்கும். அப்படிப்பட்ட மலையில இருக்கற அவன் நேத்திக்கு ஏன் வரல? நம்ம அப்பாவுக்கு அவன் வந்து சந்திச்சுட்டுப் போறது தெரிஞ்சுப் போச்சோன்னு பயமா? அதான் வரலயா தோழி?”
இதைக் கேட்டாவது அவன் சீக்கிரம் வந்து கல்யாணம் செஞ்சுக்குவான்னு தோழி நெனக்கறா.
====================================================================================
கேழல் பத்து—2
சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி
துறுகல் அடுக்கத்துக் துணைகொண்டு வதியும்
இலங்குமலை நாடன் வரூஉம்;
மருந்தும் அறியும்கொல் தோழி! அவன் விருப்பே!
[தறுகண்=அஞ்சாமை;துறுகல்=குண்டுக்கல்;அடுக்கம்=பக்கமலை;வதியும்=தங்கியிருக்கும்;இலங்கு=ஒளிவீசக்கூடிய; விருப்பே=விரும்பிய வண்னமே]
அவன் தெனம் வரானே தவிர கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யாம இருக்கானேன்னு அவ வருந்தறா. ’அவன்தான் ஒன்னையே கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொல்லிட்டான்ல. அப்பறம் நீ ஏன் மனம் வருந்தறேன்’னு கேட்ட தோழிக்கு அவ பதில் சொல்ற பாட்டு இது.
”பயமே இல்லாத காட்டுப் பன்றி காவலை எல்லாம் மீறி சின்னதான தெனையை மேஞ்சிட்டுக் குண்டுக்கல் இருக்கற மலைப் பக்கத்துலப் போயி துணையோட தூங்கும். அப்படிப்பட்ட மலைநாட்டைச் சேந்தவன் அவன். எங்கிட்ட அவன் வச்சிருக்கற ஆசைதான் என் மனசில இருக்கற துன்பத்துக்கு மருந்துன்னு அவனுக்குத் தெரியாதா? இல்ல; அவன் மனசுப்படிதான் நடப்பானா?”
பன்றி செய்யறதக் காட்டி அது போல அவன் அப்படிச் செய்யலேயேன்னு மறைமுகமாச் சொல்றா.
===================================================================================
கேழல் பத்து—3
நன்பொன் அன்ன புனுறுதீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும்
குன்று கெழுநாடன் தானும்
வந்தனன்; வந்தன்று தோழி!என் நலனே!
[புனிறுதீர் ஏனல்=முற்றிய தினை; கட்டளை=பொன்னை உரைத்துப் பார்க்கும் கட்டளைக் கல்; மாந்தும்=தின்னும்]
கல்யாணத்துக்குப் பணம் சேர்க்கப் போன் அவன் திரும்பி வந்துட்டான். அவ ரொம்பவும் மகிழ்ச்சியா இருக்கா. அதைப் பாத்தத் தோழி கேட்டதற்கு அவ சொல்ற பாட்டு இது.
”தோழி! நல்ல பவுனைப் போல நெறத்துல இருக்கற முத்தின தெனைப்பயிர, பொன்னை ஒறைச்சுப் பாக்கறக் கட்டளைக் கல்லைப் போல கருப்பா இருக்கற பன்றி ரொம்பவும் தின்னுடும். அப்படிப்பட்ட மலைநாட்டைச் சேந்த அவனும் வந்திட்டான்; அதால என் அழகும் திரும்ப வந்திடுச்சுடி”
====================================================================================
கேழல் பத்து—4
இளம்பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்பாற் புணரும்
அயம்திகழ் சிலம்ப! கண்டிகும்
பயந்தன மாதோ, நீநயந்தோள் கண்ணே!
[கோடு=கொம்பு; களங்கனி=களாம்பழம்; சிலம்ப=மலைநாட்டானே; கண்டிகும்=காண்பாய்; பயந்தன=பசலை நிறம் எய்தின; நயந்தோள்=விரும்பியோள்]
கல்யாணம் செஞ்சுக்கற நெனப்பே இல்லாம அவன் வந்து தெனம் சந்திச்சுட்டுப் போறான். அவன்கிட்டத் தோழி சொல்ற பாட்டு இது.
”எளமையான பிறைச் சந்திரன் போல வளைஞ்சிருக்கற கொம்புள்ள காட்டுப் பன்றி களாம்பழம் போலக் கருப்பா இருக்கற பெண் பன்றியோட கூடியிருக்கற நெறைய தண்ணி இருக்கற மலை நாட்டுத் தலைவனே! நீ விரும்பிய இவளோட கண்ணெல்லாம் பசலை பூத்திருக்கு பாரு”
ஒன் மலையில ஆண் பன்றி பெண்பன்றியோட கூடுது. ஆனா நீதான் வந்து கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்ற; அதால இவளுக்குப் பசலை பூத்திடுச்சு; சீக்கிரம் வந்து கல்யாணம் செஞ்சுக்கன்றது மறைபொருளாம்.
====================================================================================
கேழல் பத்து—5
புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை
வளைவண் மருப்பின் கேழல் புரக்கும்
குன்றுகெழு நாடன் மறந்தனன்
பொன்போல் புதல்வனொடு என்நீத் தோனே
[குருளை=குட்டி; மருப்பு=கொம்பு; புரக்கும்=பாதுகாக்கும்; நீத்தோன்=பிரிந்தவன்]
அவன் அவளை உட்டுட்டு வேற ஒருத்தி ஊட்டுக்குப் போயிட்டான். அப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு அவ நெனப்பு வந்திடவே திரும்பி வரேன்னு சிலபேருகிட்டச் சொல்லி அனுப்பறான். அப்படி வந்தவங்க கிட்ட அவ சொல்ற பாட்டு இது.
”புலி கொன்ன பெண்பன்றியோட அழகான வரியெல்லாம் இருக்கற குட்டியை ஆண்பன்றி வச்சுப் பாதுகாக்கும். அப்படிப்பட்ட மலைநாட்டை ஒடையவன் பொன்னைப் போல இருக்கற அவனோட பையனயும் என்னையும் மறந்து போயிட்டானே. [இனிமே அவன் வந்து என்னா ஆகப் போகுதுன்னு மறைவா சொல்றா]
====================================================================================
கேழல் பத்து—6
சிறுகட் பன்றிப் பெருஞ்சினை ஒருத்தலொடு
குறுக்கை இரும்புலி பொரூஉம் நாட!
நனிநாண் உடையை மன்ற
பனிப்ப யந்தனநீ நயந்தோள் கண்ணே
[ஒருத்தல்=ஆண்பன்றி; குறுக்கை=குறுகிய முன்னங்கால்கள்;
பொரூஉம்=போரிடும்; நனி=மிகுதி; நாண்=வெட்கம்;
பனி=நீர்த்துளிகள்;நயந்தோள்=விரும்பியவள்]
வேற மனுசருங்க அவளப் பொண்ணு கேக்க வராங்கன்ற சேதி தோழிக்குத் தெரிஞ்சிடுத்து. அப்ப அவன்கிட்ட அவங்களுக்கு முன்னால நீ வந்து கேளுன்னு தோழி சொல்ற பாட்டு இது
”சின்னதா கண்ணு உள்ள கோபமான ஆண்பன்றி, குட்டயா முன்னங்கால்கள் உள்ள பெண்புலியோட சண்டை போடற மலைநாட்டை உடையவனே! ஒனக்கு வெக்கமா இல்ல; நீ மனசில வச்சிருக்கறவ கன்ணுலேந்து கண்ணீர் வழியுதே”
அவங்கள்ளாம் பொண்ணு கேக்க வராங்களே? ஒனக்கு வெக்கமா இல்லியான்னு கேட்டு தோழி அவனைத் தூண்டறா.
=====================================================================================
கேழல் பத்து—7
சிறுகண் பன்றி பெருஞ்சினை ஒருத்தல்
துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி
ஐவனம் கவரும் குன்ற நாடன்
வண்டுபடு கூந்தலைப் பேணிப்
பண்புஇல சொல்லும் தேறுதல் செத்தே?
[துறுகல்=குண்டுக்கல்; அடுக்கம்=பக்கமலை; வில்லோர்=வில் ஏந்திய காவலர்; ஐவனம்=வெண்ணெல்;[மலை நெல்]; பண்பில=உண்மையற்ற; தேறுதல்=தெளிதல்; செத்து=கருதி]
அவன் சீக்கிரம் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொன்னான்னு அவ மகிழ்ச்சியா தோழிகிட்டச் சொல்றா. அப்ப அவன் பொய் கூடச் சொல்வான்னு அவனும் கேக்கற மாதிரி தோழி சொல்ற பாட்டு இது.
”சின்னதான கண்களையும் ரொம்ப கோபத்தையும் உடைய ஆண்பன்றி மலைப் பக்கத்துல வில் வச்சுக்கிட்டுக் காவல் காக்கற காவக்காரங்களையும் ஏமாத்திட்டு மலைநெல்லைத் தின்னுடும்; அப்படிப்பட்ட மலைநாட்டைச் சேந்தவன் அவன். அவன் வண்டு மொய்க்கற ஒன் கூந்தலைப் பாயாப் போட்டு ஒன்னைச் சேர்றதுக்குப் பொய்யெல்லாம் சொல்லிடுவான்; நம்பிடாதே”
====================================================================================
கேழல் பத்து—8
தாஅய் இழந்த தழுவரிக் குருளையொடு
வளமலைச் சிறுதினை உணீஇ, கானவர்
வரைஓங்கு உயர்சிமைக் கேழல் உறங்கும்
நல்மலை நாடன் பிரிதல்
என்பயக் கும்மோ அம்விட்டுத் துறந்தே?
[தழுவரி=நெருங்கிய வரிகள்;குருளை=குட்டி; உணீஇ=உணடு; தழு=நெருங்கிய; சிமை=உச்சி; துறந்து=பிரிந்து]
என்னாடி அவன் வந்து என்னைக் கல்யாணம் செஞ்சுக்க மாட்டான் போலிருக்கன்னு அவ தோழிகிட்ட சொல்லிக் கவலைப் படறா. அப்ப தோழி “இல்ல, அவன் நல்லவன்’னு சொல்ற பாட்டு இது.
நெருங்கிய வரியெல்லாம் இருக்கற பன்றிக் குட்டி ஒன்னு இருக்கு, அத்தோட தாயி செத்துப் போச்சு. ஆண் பன்றி அதைக் கொண்டு போயி தெனையைத் தின்ன உட்டுட்டு மலைப் பக்கத்துல காட்டுக்காரங்க வாழற மலை உச்சியில பயமில்லாமத் தூங்கும்; அப்படிப்பட்ட மலையைச் சேந்த அவன் நம்ம உட்டுட்டுப் போனா அவனுக்கு என்ன பயனாம்?
அதால அவனுக்குப் பயனில்ல; அவனுக்கும் துன்பம்தான்; நமக்கும் துன்பம்தான்; அதால சீக்கிரம் வந்து கட்டிக்குவான்றது மறைபொருளாம்
====================================================================================
கேழல் பத்து—9
கேழல் உழுதெனக் கிளர்ந்த எருவை
விளைந்த செறுவில் தோன்றும் நாடன்
வாராது அவண்உறை நீடின் நேர்வளை
இணைஈர் ஓதி நீஅழத்
துணைநனி இழக்குவென் மடமை யானே!
[எருவை=கோரைப்புல்; கிளர்ந்த=நெருங்கி வளர்ந்த; செறு=வயல்; ஏர் வளை=அழகிய வளை; ஓதி=கூந்தல்; ஈர்=இரண்டு]
நான்தான் அவனக் குறை இல்லாதவன்னு ஒன் கூடக் கூட்டி வச்சேன்; ஆனா அவன் இப்படி செய்யறதால நீ உயிர் விட்டுட்டா நானும் ஒன்னை இழந்துட்டு என்ன செய்வேன்னு தோழி அவனும் கேக்கற மாதிரி சொல்ற பாட்டு இது
”பன்றியெல்லாம் கெழங்கு தோண்டறதுக்காக உழுது வச்ச நெலத்துல வளர்ந்த கோரையானது நெல்லு வயலைப் போல இருக்கற நாட்டைச் சேந்தவன் அவன். அவன் இங்க வராம அங்கியே இருந்திட்டா அழகிய வளையும், அழகாக் கூந்தலும் இருக்கற நீ பொலம்பி அழுதா அறியாம செஞ்ச நானும் ஒனக்குத் தொணையா இருக்கறதை எழந்திடுவேண்டி.
இதைக் கேட்டு அவன் பிரியாம இருக்கணும்றது மறைபொருளாம்.
=====================================================================================
கேழல் பத்து—10
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்
தலைவிளை கானவர் கொய்தனர் பெயரும்
புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடுவரை
காணினும் கலிழும்நோய் செத்துத்
தாம்வந் தனர்நம் காத லோரே
[சிலம்பு=பக்கமலை; தலைவிளை=முதல்விளைச்சல்; கொய்தபர்=பறித்தனர்; புல்லெபொலிவு அழிந்த; புலம்பு=தனிமை; நெடுவரை=நீண்ட மலை; செத்து=கருதி]
கல்யாணத்துக்குப் பணம் சேக்கப் போனவன் திரும்பி வந்துட்டான். அது தெரிஞ்ச தோழி மகிழ்ச்சியோட அவகிட்டச் சொல்ற பாட்டு இது
”கெழங்குக்காக நெலத்தைத் தோண்டற பன்றியெல்லாம் உழுத மலைப் பகுதியில தெனையை வெதைச்சு அதோட மொதல் வெளச்சல காட்டுக்காரங்க எடுத்துக்கிட்டுப் போவாங்க; அதக்கப்பறம் தெனை வெளஞ்ச வயலும் அழகில்லாம தனியா கெடக்கற மாதிரி இருக்கும். அதைப் பாத்த அவனுக்கு நீ அழுதுகிட்டு இருக்கறது நெனவுக்கு வந்திருக்கும் . அதான் ஒடனே வந்துட்டான்.”
============================== நிறைவு================================