மேலை நாடுகளில், மென்பொருள் துறையில், தனியார் முயற்சிகளில் இரண்டு வகையுண்டு.
- முதல் வகை, மைக்ரோசாஃப்ட், ஆரகிள் மற்றும் அடோபி போன்ற பெரு நிறுவனங்களை எதிர்த்துக் கிளம்பிய திறமூல மென்பொருள் இயக்கம் (open software initiative).
- இன்னொன்று, மென்பொருளை விற்று பணம் பண்ணுவதை அறவே விட்டு, வசீகரமான இலவச இணைய தளங்களை நுகர்வோரிடம் கொண்டு சேர்த்து, அந்த வசீகரத்தை, விளம்பரம் மூலம் பணமாக்கல். கூகிள், அமேஸான் மற்றும் ஃபேஸ்புக் இந்த வகையில் சேரும்.
இந்த முயற்சிகளுக்கெல்லாம் துணை போன இந்திய நிரலர்கள், இதில் பெரிதாகப் பயனடையவில்லை. அத்துடன், சாதாரண இந்தியர்களும் பெரிய பயனடையவில்லை. இதில் முக்கியமான விஷயம், இரண்டாம் தரத்தினர், நுகர்வோரை மிகவும் நெருங்கி விட்டனர். நுகர்வோரின் பயன்பாட்டு முறைகளை, அவர்கள் விட்டுச் செல்லும், டிஜிட்டல் தடயங்களை வைத்து, இன்னும் அவர்களது இணைய அனுபவத்தை வசீகரமாக்கினார்கள். இதற்கு, அவர்களிடம் உள்ள ஏராளமான நுகர்வோர் இணையத் தரவு (internet browsing data) உதவியது. இன்று கூகிள் மற்றும் அமேஸானிடம், அமெரிக்க அரசாங்கத்தை விட அதிகத் தரவு உள்ளது.
இந்திய அடுக்கிற்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன சம்பந்தம் என்று தோன்றலாம். இந்த இரண்டு விஷயங்களும்சேர்ந்த விஷயம்தான் இந்திய அடுக்கு என்னும் டிஜிட்டல்புரட்சி. அமெரிக்க மென்பொருள் முயற்சிகளில் திறன்பேசி ஒரு அங்கமாக இருக்கவில்லை. கணினி (மேஜை, மற்றும் லாப்டாப்) அமெரிக்க மென்பொருள் முயற்சியின் மையமாக உள்ளது. இந்திய டிஜிட்டல் முயற்சியின் மையம் திறன்பேசி. சாதாரண இந்தியர்களிடம் வியாபித்து இருக்கும் கருவி திறன்பேசி.
இந்திய அடுக்கு, ஒரு தேசிய முயற்சி என்பதால், இதனை உருவாக்கியவர்கள், எந்த ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தையும் முக்கியப்படுத்தவில்லை. உதாரணத்திற்கு, ஆதார் தரவுதளம், ஒரு திறமூல மென்பொருளையே பயன்படுத்துகிறது. அத்துடன், ஆதார் தொடர்பு யாவும் 2048 பிட் குறிமுறையாக்க, ஆனால், திறமூல மென்பொருள் நெறிமுறையையே பயன்படுத்துகிறது (2048 bit open source encryption algorithm).
ஆதார் எண்ணை ஒரு பயன்பாட்டாளர் சரியான அடையாளமா என்று கேட்கும் பொழுது, அந்தக் கேள்வி, ஒரு ஹடூப்/ ஹைவ் (Hadoop/Hive) என்ற தொழில்நுட்பம் மூலம் பதிலளிக்கப் படுகிறது. இதுவும் ஒரு திறமூல மென்பொருள். இவ்வகையில், இந்திய அடுக்கு, ஒரு திறமூல மென்பொருள் தொழில்நுட்பம் என்று சொல்லலாம்.
ஆதாரின் அடிப்படை, எந்த ஒரு சேவையும் உலகிலேயே மிக மலிவான ஒன்றாக இருக்க வேண்டும் என்பது. இதனால், உலகிலேயே மிகப் பெரிய தரவுதளம் ஆதார் மற்றும் அதன் மற்ற அடுக்குகள். இன்று இந்த தரவுதளத்தின் அளவு 10 பெடாபைட்டைத் (ஓராயிரம் டெராபைட் என்பது ஒரு பெடாபைட்- 2017/2018 -ல் வரும் சராசரி மடிக்கணினிகளில் 1 டெராபைட் என்பது சகஜம் ) தாண்டிவிட்ட்து. இந்திய அடுக்கின் முக்கிய சேவைகள் இலவசம் அல்லது, மிகக் குறைவான கட்டணம் தாங்கியது. கூகிளைப் போல, இந்தச் சேவைகளின் எதிர்காலம், நுகர்வோரின் தரவுகளில் அடங்கியுள்ளது. இந்திய அடுக்குகளின் பயன்பாட்டாளர்கள் நுகர்வோருக்கு இன்னும் வசீகரத்தை அவர்களது டிஜிட்டல் தடயங்களை (digital footprint) வைத்து அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ஊடகங்கள் ஆதார் முயற்சியை ஒரு அரசியல் நிகழ்வாகவே பாவித்து, அதிக குறை சொல்லியே வந்துள்ளது. முதலில் நாம் சொன்னபடி, இம்முயற்சியைக் குழப்பமான இந்திய அரசியல் கண்ணாடியுடன் பார்த்ததன் விளைவு இது. ஆதார் ப்ராஜக்ட் பி.ஜே.பி. -யால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. 2009 -ல் யு.பி.ஏ, அரசாங்கம் உருவாக்கிய ப்ராஜக்ட். ஏராளமாக இந்திய மென்துறை தொழிலில் சம்பாதித்து, உயர்பதவியில் இருந்தவர்கள், நாட்டிற்காக நல்லது செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு உருவாக்கிய ப்ராஜக்ட் ஆதார். இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த நந்தன் நிலேகனி இந்த ப்ராஜக்டில் முதலில் சேர்ந்தார். இவருக்கு இருந்த மிகப் பெரிய சவால், ஐ.ஏ.எஸ். படித்தவர்கள் மட்டுமே இவருக்கு உதவ முடியும் என்ற அரசாங்கக் கட்டுப்பாடு. இவர் நாடு முழுவதும் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் எவருக்கு கணினி விஞ்ஞானத்தில் ஞானம் மற்றும் ஆர்வமுள்ளது என்பதை சிலர் உதவியுடன் கண்டறிந்துள்ளார். இவர்களை நேர்கானலுக்கு அழைத்து, இதில், மிகவும் ஆர்வமும், அனுபவமும் உள்ளவர்களைச் சேர்த்துக் கொண்டார். இது நடைமுறையில் மிகப் பெரிய சவால். இவரைத் தொடர்ந்து, பல அனுபவமுள்ள இந்திய மென்பொருள் வல்லுனர்கள் இவருடன் இணைந்தனர். இவர்களில், பலர், சம்பளத்திற்காக வேலை செய்யவில்லை. இன்றும், UIDAI, NPCI, GSTN, CCA போன்ற அமைப்புகளில் பல இந்திய நிரலர்கள் சம்பளம் ஏதுமின்றி உழைத்து வருகின்றனர். (https://uidai.gov.in/about-uidai/contact-us/volunteers.html)
முதலில், ஆதாரைப் பற்றி முன்னாள் இந்திய நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜிக்கு புரியும்படி சொல்வது ஒரு பெரிய சவாலாக இருந்ததாம்.
“ப்ளாட்ஃபார்ம் என்பது வெறும் கான்க்ரீட் அமைப்பு. அதனால்பெரிதாகப் பயன் ஏதுமில்லை. ஆனால், அதன் பக்கத்தில்தண்டவாளம் அமைந்தால், அதன் மதிப்பு அதிகரிக்கிறது. அந்தப்ளாட்ஃபாரத்தில் சரக்கு மற்றும் பயணிகள் ரயில்கள் வரத்தொடங்கினால், ப்ளாட்ஃபார்மின் மதிப்பு இன்னும்பெரிதாகிறது. ஆனால், வேலையைப்ளாட்ஃபார்மிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்”
இப்படிப் புரியவைத்து, இன்றும் கடினமாக உழைத்து வரும் ஆதார் நிரலர்கள் மற்றும் நிபுணர்களுக்கு, மிகப் பெரிய சவால், 2014 -ல் அரசாங்கம் பி.ஜே.பி. -க்கு மாறியதுதான். இந்த ப்ராஜக்டை அரசாங்கம் நிறுத்திவிடுமோ என்ற அச்சத்துடன் புதிய பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளனர். புதிய பிரதமரோ, பல புதிய எண்ணங்களுடன், இந்த ப்ராஜக்ட், அரசாங்க மானிய பிசகுகளை குறைக்க வழி வகுக்க வேண்டும் என்று சொல்லிதோடு நிற்காமல், மேலும், அரசு முதலீட்டை அதிகப் படுத்தினார்.
இன்று, ஆதார் ப்ராஜக்டால், அரசாங்கம் வருடத்திற்கு 1,000 கோடி ரூபாய்களை ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் மிச்சப்படுத்தியுள்ளது – சமையல் வாயு மானியத்தில் மட்டும். ஆதார் ப்ராஜக்ட்டின் முதலீடு 750 கோடி ரூபாய்.
மத்திய அரசாங்க அமைப்புகள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வது இந்தியாவில் வழக்கமான ஒன்று. ஆனால், ஆதார் விஷயத்தில், அவை போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வந்துள்ளன. உதாரணத்திற்கு, ஆர்.பி.ஐ. ஆதார் ப்ராஜக்டிடம், இந்திய வங்கியமைப்பை விரிவுபடுத்த ஆதார் உதவ வேண்டும் என்று சொன்னதோடு நிற்காமல், NPCI -க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் கூறியது. இதன் முக்கிய பலன், இன்று eKYC மூலம் 30 கோடி இந்தியர்கள் புதிதாக வங்கிக் கணக்கு திறந்துள்ளனர். உலகில் எங்கும் 30 கோடி வங்கிக் கணக்குகள் இவ்வளவு குறைந்த காலத்தில் நிகழ்ந்ததில்லை. SEBI என்ற பங்கு சந்தைச் சீரமைக்கும் அமைப்பு, eKYC -ஐ உடனே அமல்படுத்த முன்வந்தது.
இந்த ப்ராஜக்டில், அரசாங்கம் எல்லாவற்றையும் தானே செய்கிறேன் என்று 1950 வழிகளைப் பின்பற்றவில்லை. மாறாக, ஒரு நிதிப் புரட்சியின் முக்கிய வித்தை மட்டும் மண்ணில் தூவிவிட்டு. பல தனியார் மற்றும் அரசு நிறுவனங்களை இந்த வித்தைச் சார்ந்த சேவைகளை உருவாக்க விட்டது. இது இந்திய சரித்திரத்தில் இதுவரை நடக்காத ஒன்று. அணு ஆராய்ச்சி, விண்வெளி ஆராய்ச்சி விஷயங்களில், அரசாங்கம் வரிந்து கட்டிக் கொண்டு எல்லாவற்றையும் தானே செய்து வந்துள்ளது. ஒரு 8 ஆண்டுகளில், இந்த நிதிப் புரட்சி, ஒரு பெரிய இயக்கமாக மாறியதற்கு முக்கிய காரணம், அரசாங்கம் தன்னுடைய பங்கு மாற்றத்தின் வினையூக்கி (change catalyst) என்பதைப் புரிந்து கொண்டதுதான். முழு நேர, பகுதி நேர மற்றும் தன்னார்வலர்கள் – இதெல்லாம், இந்திய அரசாங்கம் செய்யுமா என்று நினைத்து கூடப் பார்ப்பது கடினம். ஆனால், இந்த ப்ராஜக்டில் இவை எல்லாம் அடக்கம். தலைமையும், குறிக்கோளும் சரியாக இருந்தால், மேற்குலகில் நடக்கும்அதிசயங்கள், இந்தியாவிலும் நடக்கும் என்பதற்கு உதாரணம்இந்த இந்திய அடுக்கு முயற்சி.
தமிழ்ப் பரிந்துரை
எல்லோருக்கும் புரிய வேண்டும் என்று சில ஆங்கிலச் சொற்களை கட்டுரையில் பயன்படுத்தியுள்ளேன். சில புதிய சொற்களுக்கு நிகரான சில தமிழ்ச் சொற்களை இங்கு பரிசீலனைக்கென முன்வைக்கிறேன்
ஆங்கிலச் சொல் | தமிழ்ப் பரிந்துரை |
India stack | இந்திய அடுக்கு |
Open software initiative | திறமூல மென்பொருள் இயக்கம் |
Internet browsing data | நுகர்வோர் இணையத் தரவு |
Open source encryption algorithm | திறமூல மென்பொருள் நெறிமுறை |
Change catalyst | மாற்றத்தின் வினையூக்கி |