ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள்

This entry is part 6 of 7 in the series 31 மார்ச் 2019

தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்று நான் கருத ஒரே காரணம் இந்த 72000 ரூபாய்.

சமீபத்தில் அகில உலகமும் அண்ணாந்து பார்த்து அதிசயித்த இந்த அறிவிப்பு, இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியால் பிரம்மாதமாக வெளியிடப்பட்டது.

சீன தேசிய நாளிதழ் “தி இந்துவின்” செய்தியின் படியே, இந்தியாவில் உள்ள சுமார் 20 சதவீதம் ஏழைகளுக்கு வருடம் தோறும் 72000 ரூபாய் தரப்போவதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்.

இந்த திட்டத்துக்கு ”நியாய்” என்று பெயர் வைத்திருக்கிறார். அதாவது இது நியாயமான ஒன்று என்ற பொருள் படும்படி திட்டத்துக்கு பெயர் அளித்திருக்கிறார். நியுந்தம் ஆய் யோஜனா (நியாய்) Nyuntam Aay Yojana (NYAY) என்று அழைக்கப்படும் இந்த எதிர்கால திட்டத்துக்கு பிரியங்கா காந்தி-வத்ரா என்ற ஜவஹர்லால் நேருவின் மகளின் பேத்தி பெயர் சூட்டியிருக்கிறார்.

வறுமையின் மீதான கடைசி தாக்குதலாக இந்தியாவில் வறுமை இதனால் சுத்தமாக துடைக்கப்பட்டுவிடும் என்று ஜவஹர்லால் நேருவின் மகளின் பேரனான ராகுல் காந்தி அறிவித்திருக்கிறார்.

இந்த திட்டத்தின் படி ஒருவரது வருமானம் மாதம் 12000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் அதனை ஈடுகட்ட 6000 ரூபாய் வரைக்கும் அவருக்கு பண உதவியாக கொடுப்பதுதான் திட்டம். அதாவது ஒருவர் வேலையே இல்லாமல் இருந்தால் அவரது வருமானம் 0 ஆக இருந்தாலும் 6000 ரூபாயே வழங்கப்படும். அவர் 6000 ரூபாய் மாதம் சம்பாதித்தாலும் அவருக்கு மாதம் 6000 ரூபாயே வழங்கப்படும். ஆனால் அவர் மாதம் 12000 ரூபாய் சம்பாதித்தால் அவருக்கு ஒரு ரூபாயும் வழங்கப்படமாட்டாது.

இது வெறும் அறிவிப்போ அல்லது பேச்சு வாக்கில் சொன்னதோ அல்லது பொதுக்கூட்ட மேடையில் பேசியதோ அல்ல. இது காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி வரைவில் வெளியாகிற விஷயம்.

இதனை எதிர்பார்த்தது போல பாஜக தலைவர்கள் விமர்சித்துள்ளார்கள். பைனாஸியல் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை ஏன் இந்த திட்டம் நடைமுறைக்கு ஒவ்வாதது என்று விலாவாரியாக எழுதியிருக்கிறது.

இது மட்டுமல்ல, காங்கிரஸ் ஆதரவு பத்திரிக்கைகள் கூட இந்த திட்டம் செயல்படுத்த தேவையான பொருளாதார ஆதாரம் இந்தியாவில் இல்லை என்று சொல்லியிருக்கின்றன. எல்லா ஏழை மக்களும் ஆதார் அட்டை வைத்திருந்து, வங்கி கணக்கு வைத்திருந்தால் மட்டுமே இது ஓரளவுக்கு பயன் தரும் என்று சொல்லியிருக்கின்றன.

(காங்கிரஸ் ஆதரவாளர்களும், மோடி எதிர்ப்பாளர்களும் அவர் சொன்ன 15 லட்சத்தை மேற்கோள் காட்டுகிறார்கள். இவ்வாறு மோடி 15 லட்சம் தருகிறேன் என்று சொன்னதாக பேசுவது மோசடித்தனமானது. வெளிநாடுகளில் இருக்கும் ஊழல் பேர்வழிகளின் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் கொடுக்கும் அளவுக்கு இருக்கும் என்று சொன்னதை அவர் என்னவோ இது போல தேர்தல் வாக்குறுதி கொடுத்த மாதிரி பேசுவது தவறானது மட்டுமல்ல, நேர்மையற்றதும் ஆகும். ராகுல் காந்தி சொல்வது அவரது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் விஷயம். இது போல பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இருந்தால் சம்பந்தப்படுத்தி விவாதிக்கலாம்.)

எனது விமர்சனம் மிகவும் அடிப்படையானது. பொருளாதாரம் சார்ந்தது அல்ல. மனோபாவம் சார்ந்தது.

தமிழகத்தில் இப்போது காட்டுத்தீயாக பரவி வரும் விஷயம் ஒன்று உண்டென்றால் அது இந்த 72000 ரூபாய் ராகுல்காந்தி தருவார் என்ற விஷயம்தான்.

நம் தமிழ் நாட்டு மக்கள் தேர்தல் வந்தாலே ரொம்ப குஷியாக யார் பணம் தருவார்கள், யார் டோக்கன் தருவார்கள், யார் குக்கர் தருவார்கள், யார் மடிக்கணினி தருவார்கள், யார் சைக்கிள் தருவார்கள், யார் கவரில் பணம் போட்டு கதவுக்கு கீழே தள்ளுவார்கள் என்று அலைய ஆரம்பித்துவிடுகிறார்கள். தற்போது டிவிட்டரில் திமுக ஆதரவு செய்தி போட்டால் 200 ரூபாய் பணம் தருகிறார்களாம். வேட்பாளர் வண்டியில் போகும்போது கூட போனால் 1000 ரூபாய் தருகிறார்கள். யாராவது வேட்பாளர் கூட்டம் போட்டால் அதில் உட்கார்ந்திருக்க தலைக்கு 200 ரூபாய் பணம் தருகிறார்களாம். எல்லாவற்றிலும் பிச்சை எடுக்க ஆலாய் பறக்கிறார்கள் தமிழர்கள்.

https://www.youtube.com/watch?v=I_PJEDnBONA

இந்த பிச்சை எடுப்பதற்கெல்லாம் மூல காரணம் என்று உண்டென்றால், அது திருமங்கலம் பார்முலா என்று பலர் சொல்லுவார்கள். அது அல்ல உண்மை காரணம்.

பூமணி வெகுகாலத்துக்கு முன்னால், ஒரு கதை எழுதியிருந்தார். அதில் இரண்டு சிறுவர்கள் பள்ளியில் கொடுக்கும் மதிய உணவை சாப்பிட்டுவிட்டு வருவார்கள். அவர்களின் பாட்டி அவர்களை விளக்குமாறு பிய்யும் வரை அடிப்பார். இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்க்கிறேன் உங்களை, நீங்கள் போய் பிச்சை எடுத்துவிட்டு வருகிறீர்களே என்று அழுவார். (கதைக்கருவை நினைவிலிருந்து சொல்லுகிறேன்)

காமராஜர் நல்ல மனதுடன் தான் அந்த மதிய உணவு திட்டத்தை துவக்கினார். ஆனால் அது அரசாங்கம் மக்களுக்கு பிச்சை போடும் என்ற உணர்வை ஆழமாக விதைத்துவிட்டது என்பது என் கருத்து.

பிறகு வந்த கருணாநிதி இன்னொரு விஷயத்தை மக்கள் மனதில் ஆழமாக விதைத்துவிட்டு சென்றிருக்கிறார். அது விவரமாக இருப்பது. அதாவது ஊரை அடித்து உலையில் போட்டு, ஊரை ஏமாற்றி, ஊழல் செய்து பணக்காரனாக இருப்பது ஒருவரது சாமர்த்தியம் என்பதை தமிழ் மக்கள் மனதில் ஆழமாக பதிய வைத்திருக்கிறார். அதனால்தான் ஊழல் என்று சொல்லி ஒருவரையும் இன்று நீங்கள் குற்றம் சொல்லமுடியாது. தமிழகத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்களும் லஞ்சம் வாங்குகிறார்கள். பெரும்பாலான அரசு ஊழியர்கள் லஞ்சம் மூலமாகவே உயர்பதவி அடைகிறார்கள். பெரும்பாலான மக்கள் எத்தி பிழைக்கிறார்கள். அடுத்தவர் சொத்துக்கு ஆலாய் பறக்கிறார்கள்.

திராவிட இயக்கம் வெறுமே கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் பரப்பவில்லை. வினை விதைத்தவன் வினை அறுப்பான். கர்ம வினை போன்ற கொள்கைகளையும் மக்கள் மனதிலிருந்து வெற்றிகரமாக நீக்கியிருக்கிறார்கள். கருணாநிதி போன்றவர்கள் எத்தனையோ ஊழல் செய்தும், எத்தனையோ சாபங்களை பெற்றும், அவர்களும் அவர் குடும்பமும் செல்வமும் செழிப்புமாக வாழும்போது, யார் ஊழல் செய்வதற்கும், ஊர் சொத்தை திருடுவதற்கும், கெட்ட காரியம் செய்வதற்கும் பயப்படுவார்கள்?

கனிமொழி கவிதை எழுதி சம்பாதித்த பணம். நம்புங்கள்.

இன்று சிறுவர் பாலியல் பலாத்காரமும், அடாவடியும், கட்டப்பஞ்சாயத்தும், பெண்களை கடத்துவதும், பிரியாணி கடையில் ஓசி பிரியாணி கொடுக்கவில்லை என்று அடிப்பதற்கும் அடிப்படை இந்த திராவிட இயக்கம் தமிழகத்துக்கு அளித்திருக்கும் மகத்தான பங்களிப்பு. அத்தோடு நீங்கள் திருமங்கலம் பார்முலாவையும் சேர்த்துகொள்ளலாம்.

இன்று இது ஆந்திராவிலும் பரவியிருக்கிறது. ஒரு ஓட்டுக்கு இவ்வளவு ரூபாய் என்று தெருத்தெருவாக கணக்கெடுத்து பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. இதற்கு மேல் அடுத்த படியாகத்தான் காங்கிரஸின் இந்த 72000 ரூபாய்.

ஏழை ஒருவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதை எப்படி கணக்கிடுவீர்கள்? இங்கேதான் ஆரம்பிக்கிறது காங்கிரஸின் ஊழல்.

இதில் மத்திய தரவர்க்கத்தினரும் அடக்கம். எல்லாரும் இந்த 72000க்கு போட்டி போடுவார்கள். உங்களுக்கு தேவையானது எல்லாமே ஒரு அரசாங்க ஊழியருக்கு கொடுக்கும் லஞ்சம் மட்டுமே. அந்த அரசாங்க ஊழியர் உங்களை ஏழை என்று பதிவு செய்து கொள்ள அவருக்கு நீங்கள் லஞ்சம் கொடுக்க வேண்டும். இந்திய அரசாங்கம் எவ்வாறு வேலை செய்கிறது என்று தெரிந்த மத்திய தர வர்க்கத்தினர் முதல் ஆளாக தங்களை பரம ஏழையாக பதிந்து கொள்வார்கள். (சில வருடங்களுக்கு முன்னால், இலவச சேலை பெறுவதற்காக கூட்டத்தில் இடிபட்டு செத்தவர்களில் கார்களில் வந்து அந்த கூட்டத்தில் இலவச சேலை பெற நின்றவர்களும் அடக்கம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த பழைய செய்தி உங்களுக்கு மறந்திருக்காது என்று நம்புகிறேன்)

இன்று பதிவு பெற்ற வேலைக்கு போகும் ஒருவருக்கு ஒரு லட்சம் கிடைக்கும் என்றால் அவர் ஏன் அந்த வேலைக்கு போய் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு லட்ச ரூபாயை பெற வேண்டும்? சும்மா வீட்டில் இருந்தால், அவருக்கு தானாக 72000 ரூபாய் கிடைக்கும் போது ஏன் வேலைக்கு போய் கஷ்டப்பட வேண்டும்?

அதாவது அவர் வேலைக்கு போகாமல் இருக்க அவருக்கு 72000 ரூபாய் ராகுல் காந்தியின் காங்கிரஸ் அரசு வழங்கும். புரிகிறதா?

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று அரசாங்க புள்ளிவிவரத்தினர் கேட்டாலும் மக்கள் “நான் ஒரு வேலையும் செய்வதில்லை. எனக்கு 72000 ரூபாய் பிச்சை போடுங்கள்” என்றுதான் சொல்லுவார்கள்.

நிலம் இருக்கும் விவசாயிகள் கஷ்டப்பட்டு உழுது பயிர் செய்து விற்பனை செய்து வருடத்துக்கு ஒரு லட்ச ரூபாய் பெறுவதற்கு பதிலாக, ”என் நிலம் பாழ்பட்ட நிலம், விவசாயத்துக்கு பயனற்ற நிலம் ஆகையால் விவசாயம் செய்யவில்லை, நான் ஏழை” என்று சொல்லி 72000 ரூபாய் பெற்று உழவு செய்யாமல் வீட்டில் உட்கார்ந்திருப்பார்கள். இதற்கு அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் பெற்றுகொண்டு சாட்சியம் அளித்துவிடுவார்கள்.

ஆகவே மக்கள் வேலை செய்யாமலிருக்க, உழைக்காமலிருக்க இந்திய அரசாங்கம் தரும் பணமே இந்த 72000 ரூபாய்.

மக்கள் உழைக்கவில்லை, விவசாயம் செய்யவில்லை என்றால் பொருட்களின் விலை கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும். தக்காளி விலை எகிறும். உற்பத்தி குறைவு என்றால் பொருளின் விலை அதிகரிக்கும் என்பது பொருளாதார பாலபாடம். ஆனால் மக்களிடம் ஏராளமாக பணம் இருக்கிறது. அதாவது ஏராளமான பணம் குறைவான பொருட்களை தேடி ஓடும்போது பண வீக்கம் ஏற்படும். பணவீக்கத்தின் விளைவு என்னவென்று தெரியாதவர்கள் சற்றே வெனிசூவெலா நாட்டின் நிலையை பார்ப்பது நல்லது.

வெனிசூவெலா Venezuela என்ற நாட்டை பற்றி சற்றே தெரிந்துகொள்வது நல்லது.

20 வருடங்களுக்கு முன்னால் வெனிசூவெலா தென் அமெரிக்காவின் பணக்கார நாடாக இருந்த நாடு வெனிசூவெலா. தென்னமெரிக்காவின் மிகவும் எண்ணெய் வளம் நிறைந்த நாடு வெனிசூவெலா.

ஹூகோ சாவேஸ் என்ற சோசலிஸ்டு ஜனாதிபதி ஏராளமான வாக்குறுதிகளை அளித்து ஜனாதிபதியாக ஆனார். உணவுக்கும், மற்ற பொருட்களுக்கும் மக்களுக்கு இலவசமாக வழங்க ஏராளமான மானியங்களை மக்களுக்கு அளித்தார். இதனால் மக்கள் உழைப்பதைவிட அதிக பணத்தை இலவசமாக பெறலாம் என்று வேலை செய்யாமல், அரசாங்க பணத்தை பெற்று வாழ்ந்தார்கள். ஹூகோ சாவெஸ் இருந்தவரை இது நன்றாகவே ஓடியது. ஏனெனில் பெட்ரோலியம் அதிக விலைக்கு வெளிநாட்டில் விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. வெனிசூவெலாவின் ஏற்றுமதியில் 96 சதவீதம் பெட்ரோலியமே.

ஆனால் 2014இல் பெட்ரோலியத்தின் விலை அகில உலக சந்தையில் குறைய ஆரம்பித்ததும், வெனிசூவெலாக்கு அடி விழ ஆரம்பித்தது. உணவுப்பொருட்களின் இறக்குமதி குறைய ஆரம்பித்தது. ஏனெனில், பெட்ரோலியத்தின் விலை குறைந்ததால், குறைந்த அளவே உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யமுடிந்தது. இறக்குமதி குறைந்ததால் பொருட்களின் விலை அதிகரிக்க ஆரம்பித்தது.

இப்போது மடத்தனமாக சோசலிஸ ஜனாதிபதி, உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்கக்கூடாது; குறிப்பிட்ட விலைக்கு மேல் உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க கூடாது(price control) என்று சட்டம் போட்டார். என்ன ஆகும்? உணவுப்பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்கப்படும். மக்கள் பிச்சை எடுக்க ஆரம்பித்தார்கள்.
லஞ்சமும் ஊழலும் மலிந்துவிட்டது. எல்லார் கையிலும் பணம் இருக்கிறது. ஆனால் யாராலும் எதையும் வாங்க முடியாது.

குப்பைவண்டியில் அள்ளிகொண்டு போகப்படும் வெனிசூவெலாவின் பொலிவர் நோட்டுகள்

ஒரு டம்ளர் காப்பியின் விலை இன்று 2,000,000 பொலிவர்கள் (வெனிசூவெலா நாட்டி பணம்). இது சென்ற வாரம் 1,400,000 பொலிவர்களாக இருந்தது. சென்ற ஏப்ரலில் ஒரு டம்ளர் காப்பியின் விலை 190,000 ஆக இருந்தது.

இதோ காப்பியின் விலை ஏற்றம்.

குப்பைக்குள் உணவு தேடும் மக்கள்

வெனிசூவெலாவில் பட்டினி கிடக்க விரும்பாத மக்கள் கால்நடையாக அடுத்த நாடான கொலம்பியாவுக்கு ஓடுகிறார்கள்.

ஏன்?

ஏன் வெனிசூவெலா இந்த நிலைக்கு ஆளானது?

பணவீக்கம் என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிட முடியாது.

வேலைக்கு போகாமலிருக்க, உழைக்காமலிருக்க 72000 ரூபாய் கொடுக்க ஆரம்பித்தால் இந்தியாவில் வெகு விரைவில் இந்த நிலை வரும். 72000 ரூபாய் கொடுப்பார்கள். குடிக்க காப்பியின் விலை ஒரு லட்சம் ரூபாயாக இருக்கும்.

உழைப்பதை மறந்த மக்கள், அப்போதும் ராகுல்காந்தி மீது கோவப்பட மாட்டார்கள். ஏனெனில் அவர் எப்போதோ இந்தியாவின் புகழ்பெற்ற முதல் குடும்பம் சகிதம் இத்தாலிக்கு பறந்து போய் செட்டில் ஆகியிருந்திருப்பார். ப சிதம்பரம் அவர் வாங்கி வைத்திருப்பதாக சொல்லப்படும் சில தீவுகளிலோ அல்லது இது போன்ற ஊழல் பெருச்சாளிகளுக்கு வசதியான வாழ்வு தருவதை உறுதி செய்யும் லண்டனிலோ பெரிய கோட்டை வீடு வாங்கி செட்டில் ஆகியிருந்திருப்பார்.

உழைப்பதை மறந்த மக்கள் அப்போது 72000 போதுமானதாக இல்லை, 72 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தெருக்களில் போராடுவார்கள்.

ஆனால் இதெல்லாம் எங்கோ இணையத்தின் மூலையில் பேசப்படும் விஷயம். இது மக்களை சென்றடையுமா? அப்படியே தமிழக மக்களிடம் சொன்னாலும் புரிந்துகொள்ளப்போகிறார்களா? நிச்சயம் கிடையாது.

தமிழக மக்கள் ஏறத்தாழ பிச்சைக்கார மனநிலைக்கு பலவருடங்களுக்கு முன்னாலேயே வந்துவிட்டார்கள். ஒன்று பிச்சைக்காரத்தனம், அல்லது அடாவடி ரவுடித்தனம். இந்த இரண்டிலும் இல்லாமல் இருப்பவர்களை ஒரு கை விரல்களில் எண்ணிவிடலாம்.

நாங்க ஊருக்கு போகணும் சார், ராகுல்காந்தி எங்களை மாதிரி ஏழைங்களுக்கெல்லாம் 72000 ரூபாய் தர்ரேன்னு சொல்லியிருக்கார் சார். அவருக்கு ஓட்டு போட ஊருக்கு போகணும் சார் என்று மக்கள் சொல்லும் வீடியோக்கள் பரவலாக இருக்கின்றன. இதனை பார்த்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் காரர்களும், திமுகவினரும் ஸ்டாலினும், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அறிவுஜீவிகளும் பரவச நிலையை எய்துகிறார்கள். அதிமுக கூட்டணியினர் மனம் வெம்புகிறார்கள். அல்லது இதனை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று திணறுகிறார்கள். இதற்கு மேல் கொடுக்க வேண்டும் என்றால் பயப்படுகிறார்கள். ஒருவேளை வெற்றிபெற்றுவிட்டால் இந்த பணத்தை கேட்பார்களே என்று அஞ்சுகிறார்கள். அந்த பயம் எதுவும் இல்லாமல், தான் வெற்றி பெற மாட்டோம் என்ற மகா தைரியத்தில் ராகுல்காந்தி அடிச்சி விடுகிறார்.

தமிழக மக்கள் எப்படி வாக்களிப்பார்கள் என்பதை நன்கு அறிந்த நான், முன் கூட்டியே திமுகவின் ஊழல் கூட்டணிக்கு என் பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்.

வெனிசூவெலா மக்கள் போல நடந்து முடிந்த பின்னால், குப்பைத்தொட்டிகளில் அரிசி பொறுக்காமல், ரொட்டி தேடாமல், அழுகிய தக்காளியை சாப்பிடாமல், வெகு விரைவிலேயே வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுவிடுங்கள் என்பதே என் நல்லெண்ண ஆலோசனை.

Series NavigationA-Sat ஏவுகணை – சிறுவர் பாலுறவு வல்லுறவுதமிழ் நுட்பம் -12- Ai in paintings/art
author

சின்னக்கருப்பன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *