கௌசல்யா ரங்கநாதன்
——
-1-
சுந்தரத்தை நான் கடைசியாய் பார்த்தது அவன் புதிதாக கட்டி குடியேறிய வீட்டின் “புது மனை புகு விழாவின்” போதுதான். அவன் இளைத்து, கறுத்திருந்தான்..முகத்தில் சோர்வும், ஒரு இனம் புரியாத கவலையுடனும் அவன் இருப்பதுபோல் எனக்கு தோன்றியது..
பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருட இடை வேளைக்கு பிறகு, ஒரு நாள், அவன் என்னை தேடி வந்தான், அதாவது நானே அவனை பார்க்க போக வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கையில்.
“வா, வாப்பா சுந்தரம்” என்ற போது அவன் சுரத்தின்றி காணப்பட்டான்.
“ஏன் ஒரு மாதிரியா டல்லாயிருக்கே?” என்ற போது “எல்லாம் என் தலையெழுத்து அண்ணே ” என்றான். நான் வேலை பார்த்த மைய அரசு அலுவலகத்திலேயே அவன் கார் ஓட்டும் பணியில்,
அதாவது “ஸ்டாப் கார் டிரைவராய்” இருந்தான். நான் தான் அவனுக்கு மேலதிகாரி என்றாலும் எனக்கு அவனிடமும் , அவனுக்கு என்னிடமும் மிகுந்த அன்பு இருந்தது. அலுவலகத்தில் மட்டுமே
அவன் என்னை சார் என்று விளிப்பான். என்னிடமும், என் குழந்தைகளிடமும் அவனுக்கு தேவதா விசுவாசம். என் மனைவியை பார்க்கும்போது “அண்ணி” என்றே விளிப்பான். என் குழந்தைகள் எது கேட்டாலும் வாங்கி கொடுப்பான்..நாங்கள் அவன் வீட்டுக்கு ஒரு நாள், கிழமை, பண்டிகையின் போது போவதும், அதே போல அவன் குடும்பத்துடன் எங்கள் வீட்டுக்கு வருகை புரிவதும் உண்டு..
அவன் ஒரு கடை நிலை ஊழியராய் பணியில் சேர்ந்த நாள் இன்றைக்கும் என் நினைவில் பசுமையாய் இருக்கிறது. கைகட்டி, வாய் புதைத்து மிக பவ்வியமாய் நின்றான் அன்று.”சிரிப்புத்தான் வருகுதையா” என்ற பாடல் வரிகளே என் நினைவுக்கு வந்தது..அவன் வளர்ந்த சூழல், குடும்பம்
அப்படித்தான் போலும் என்றே தோன்றியது..ஆனாலும் அவன்மீது ஒரு கழிவிரக்கமே எனக்கு முதல் பார்வையிலேயே தோன்றியது..அவனிடம்,
“த பாரப்பா சுந்தரம் , ஏன் பதற்றமாய் இருக்கே? ஒரு ஆபீஸ்ன்றது சிங்கமும், புலிகளும் வாழற இடமில்லை. நாங்களும் உன்னை போல மனுஷ பிறவிங்கதான். உன் வேலையை நீ எப்படி
செய்யறியோ,அப்படி எங்களுக்கான வேலையை நாங்கள் செய்யறோம். தட்டீஸால்” என்றேன்.(நான் வேலையில் சேர்ந்த முதல் நாள் நானும்
இப்படித்தான் இருந்தேன் நெர்வஸாய்..ஆனால் என் மேலதிகாரி அன்று OFFICE MANUAL என்ற வேத புத்தகத்தை என்னிடம் காட்டி அதன் முதல்
பக்கத்தில் இருந்த சில வரிகளை படிக்கச்சொன்னார்..அதில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது..ஒருவன் வேலையில் சேரும் முதல்
நாளன்று, அதாவது “On the first day of his joining duty, make him feel at Home” என்று இருந்தது.. ஊம்.. இப்போது ஏன் பழம்கதை).
“சரி சார்” என்றவன் தொடர்ந்தும் இறுக்கமாகவே இருந்தான். நாளடைவில் அவன் இறுக்கம் குறையாதா என்றிருந்தேன். எனக்கென்னவோ அவனை ஒரு கடை நிலை ஊழியனாய் பார்க்க முடியவில்லை. சில கடை நிலை ஊழியர்கள் போல் துவைக்காத பான்ட்,ஷர்ட் எண்ணை காணாத தலை, மழிக்கப்படாத முகம்.. வியர்வை வாடையுடன், என்று அவன் இருந்ததில்லை ஒரு போதும்.
பணிவு, பணிவென்றால் அப்படியொரு பணிவு, மரியாதை, நேரம் தவறாமை, சின்ஸியாரிடி.. இது என் வேலை இல்லை இல்லை என்று சொல்லாமல் யார், எந்த வேலை சொன்னாலும், அது அலுவலக நேரத்துக்கு
அப்பால் என்றாலும் கூட முகம் சுழிக்காமல் செய்வான். பீடி, சிகரட், வெத்திலை, பாக்கு, புகையிலை என்று எந்த கெட்ட பழக்கங்களும் அவனிடம் அறவே கிடையாது..
அப்போது தான் அலுவலகத்துக்கு ஒரு கார் சாங்க்ஷன் ஆனது இலாகா மேலிடத்தால். சுந்தரம் கார் ஓட்டுனர் உரிமம் பெற்றிருந்ததாலும், ஓரிரு முறைகள் எங்கள் மேலதிகாரிகளின் கார்களை அவன் திறம்பட ஓட்டுவதாக அவர்களே சொன்னதாலும்,
அவனையே ஏன் கார் ஓட்டுனர் பணிக்கு சிபாரிசு செய்யக்கூடாது. அதுவும் ஒரு சிம்பிள் நேர்முகம் தான் அதற்கென நியமிக்கபட்ட ஒரு கமிட்டீ முன்பாக.அந்த கமிட்டியின் பா¢ந்துறைகள்
தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிய பிறகு புதிய பதவிக்கான உத்திரவு வரும். சம்பள விகிதமும் அதிகம். “கடை நிலை ஊழியன்” என்ற அந்தஸ்திலிருந்து, அதாவது குரூப் “டி” என்ற
இடத்திலிருந்து குரூப் “சி” என்ற குமாஸ்தா பதவிக்கான சம்பளமும் கணிசமான ஓவர் டைமும் வரும். “இந்த புதிய பதவி தனக்கு வேண்டாம்,
நான் இப்படியே இருந்துடறேனே” என்று சொன்னவனை நான்தான் வெகுவாய் சமாதானப்படுத்தி, புதிய
வேலையை ஏற்றுக்கொள்ளச்செய்தேன். சில நூறுகள் சம்பளத்தில் அதிகம் கிடைக்கும் என்றாலும் பெட்ரோல் கணக்கு, கார் ஓடிய கிலோ மீட்டர் தூரம், மெய்ன்டனன்ஸ்.. மற்றும் கார் எங்கே போகிறது, பயன்படுத்துவர்கள் யார், யார், கிளம்பும்போது கி,மி. காட்டும் எண் என்ன.. காரிலிருந்து இறங்கும் போது ஓடிய கி,மி. விபரம். மற்றும் “லாக் புக்” எல்லாம் பராமரித்திட அடிப்படை கல்வி ஆங்கிலம், அல்லது இந்தி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் சுந்தரம் படித்தது என்னவோ எட்டு வகுப்பு வரை மட்டுமே. பிறகு அவனை வெகுவாய் மெருகேற்ற வேண்டியிருந்தது..
கார் ஓட்டுனராய் பதவியேற்ற பின்பும் கூட வேலை இல்லாத சமயங்களில் காரை பள பளவென துடைத்துக்கொண்டிருப்பதோ அல்லது ஏதாவது படித்துக்கொண்டிருப்பதையோ அவன் வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தான்..
சினிமா செய்திகள் தான் படித்துக்கொண்டிருக்கிறான் போலும், ஏன் என்றால் இவர்களை போன்றவர்கள் அதைத்தானே விரும்பி படிப்பார்கள் என்று நினைத்திருந்த எனக்கு ஒரு நாள் சம்மட்டி அடி கிடைத்தது..
அமெரிக்க பொருளாதாரம் ..அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் உள்ளூர் கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நடக்காததுவரை எல்லாம் அறிந்து வைத்திருந்தான். எனக்கு அவனை பார்க்க பிரமிப்பாயிருந்தது.
இது போல வேலை செய்பவர்கள் பொதுவாக வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து சுடு தண்ணீரில் குளித்து உணவு உட்கொண்டு தூங்க போய் விடுவதுதான் வழக்கம்.சிலர் லேசாக, உடல் சோர்வு போக்க வேண்டி கொஞ்சம் போட்டுக்கொள்வதும் உண்டு.. அல்லது சற்று நேரம்
டி.வி பார்ப்பார்கள். பொது அறிவு லவ லேசமும் இருக்காதென்றே நினைத்திருந்தேன் நான்..என் எண்ணம் தவறென பிறகுதான் நான் உணர்ந்து
கொண்டேன்.. அவன் சோம்பி நான் பார்ததில்லை. எப்போதும் தேனி போல சுறு சுறுப்பாக காணப்படுவான் அலுவலகத்திலும்,வீட்டிலும்கூட.
தான் அதிகம் படிக்க முடியவில்லை என்ற குறை மட்டும் அவன் ஆழ் மனதில் இருந்ததை நான் அறிவேன். அவனுக்கு ஒரு மகன் மட்டுமே. சரவணன் என்று பெயர். என் இரு பெண்களும் படிக்கும் அதே
பள்ளியில் சரவணனையும் சேர்த்திருந்தான். என் பெண்களை காட்டிலும் சில வயது இளையவன் சரவணன். அக்கா, அக்கா என்று உயிரை விடுவான் என் பெண்களிடம். கொஞ்சம் மந்த
புத்தி உள்ளவன் சரவணன். படிப்பு … அவ்வளவாய் ஏறவில்லை. என் பெண்கள் தான் மாற்றி, மாற்றி அவனுக்கு கல்வி கற்பித்தார்கள். கொஞ்சம் மன்றாடத்தான் வேண்டியிருந்தது அவனுடன்.
ஒரு முறைக்கு பல முறைகள் திரும்ப திரும்ப சொல்லிக்கொடுத்தும் கூட சமயங்களில் சொதப்பி விடுவான் பா£க்க்ஷை ஹாலில். பிரசித்தி பெற்ற நகைச்சுவை
நடிகர்களான செந்தில்– கவுண்டமணி வாழைப்பழ ஜோக் தான் நினைவுக்கு வரும். அவனை தேற்ற அரும்பாடு பட வேண்டியிருந்தது.
சுந்தரத்தின் கவலையெல்லாம் மகன் சரவணனை பற்றித்தான்.
ஒவ்வொரு வகுப்பிலும் முன்பெல்லாம் இரண்டு வருடங்களுக்கு குறையாமல் படித்தவன் இப்போதெல்லாம் சுமாரான மதிப்பெண்களாவது பெற்று அடுத்த வகுப்புக்கு போய் விடுகிறான் என்பதில்
சுந்தரத்துக்கு ஓரளவுக்கு திருப்திதான். எப்படியாவது இவன் பாஸ் பண்ணி ஒரு டிகிரியும் வாங்கி ஏதாவது ஒரு ஒய்ட் காலர் ஜாபில் அமர்ந்துவிட்டால் போதும் என்றே சொல்வான் அடிக்கடி என்னிடம்.
அவனை எப்படியாவது டிகிரி முடிக்க வைத்து அவன் ஆசைப்படியே ஒரு நல்ல வேலையில் அமர்த்தி விட நானாச்சு என்றேன். அதனால் அவன் என்னையும், கற்றுகொடுக்கும் என் இரு பெண்களையும், தெய்வமாகவே பார்த்தான். குளிக்கும், உறங்கும் நேரம் போக மிச்ச நேரம் எல்லாம் அவன் என் வீட்டிலேயே தத்து பிள்ளை போலவே இருந்தான். எப்படியோ போட்டடித்து
சரவணன் +2 முடித்தான் மிக குறைவான மதிப்பெண்கள் பெற்று. அவனுக்கு ஒரு கல்லூரியில் பி.ஏ. (ஹிஸ்டரி) தான் கிடைத்தது., அதற்கே சுந்தரம் புளகாங்கிதம் அடைந்தான். எங்க
பரம்பரையில் இவன்தான் முதல் பட்டதாரி. இது போதும் ” என்றான்.ஆனால் அந்த பி.ஏ. வகுப்பிலும் ஆவரேஜ் மதிப்பெண்கள் வாங்கி பாஸ் செய்திருந்தான் சரவணன்.
வெறும் பி.ஏ.,அதுவும் ஹிஸ்டரி வச்சுக்கிட்டு என்ன பண்ண முடியும்பா.? அதனால் கம்ப்யூட்டர் கிளாஸில் அவனை சேர்த்து விடு. அப்பதான் ஏதாவது ஒரு வேலை கிடைக்கும்” என்றேன்.
ஆனாலும் அவனுக்கு கணினி படிப்பு கூட சரியாக வரவில்லை.. இன்றைக்கு, ஆரம்ப பள்ளி வகுப்பில் படிப்பவர்கள் கூட அனாயாசமாய் கம்ப்யூட்டரில் புகுந்து விளையாடும் போது ,
சரவணனுக்கு என்னவோ அதுவும் கை வரவில்லை. பி.ஏ. முடித்த பிறகும் கூட காலையில் மெதுவாய் படுக்கையை விட்டு எழுந்திருப்பான்.பல் துலக்கி, காபி குடித்த பிறகு மறுபடி படுத்து
உறங்கி விடுவான். ஒரு டிகிரி முடித்த பையனுக்கு ஏதாவது ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும், அட அப்பன் காரனுக்கு உதவ வேண்டாம். அவன் வரையிலாவது ஏதாவதொரு
வேலையில் அமர்ந்தால் தானே கலியாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலாக முடியும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமலேயே இருந்தான். அட அதுதான் போகட்டும்.
இவனையொத்தவர்களுடன் வெளியில் போவது, ஜாலியாய் ஊர் சுற்றுவது, சினிமா, ஹோட்டல் போவது என்று கூட… ஊஹூம்.
“ஏண்னே இவன் இப்படி இருக்கான்?இவன் எதிர்காலத்தை நினைச்சா பயமாயிருக்கு. இவனுக்கு எப்ப ஒரு வேலைனு கிடைச்சு, எப்ப கலியாணம் பண்றது ?இவன் கவலையே எங்களுக்கு
பொ¢ய கவலையாய் போச்சே” என்று புலம்பும் சுந்தரத்தையும் தேற்ற முடியவிலைதான் என்னால்.
“என்ன சொல்றே சுந்தரம்” என்ற போது “இவன் ஏன் அண்ணே இப்படி அப்நார்மலாய் இருக்கான்?” என்ற போது பிரமிப்பாய் இருந்தது எனக்கு. abnormal என்ற வார்த்தையை சர்வ
சாதாரணமாய் சுந்தரம் பயன் படுத்தியது பார்த்து. எது ஒன்றையும் கற்றுக்கொண்டால் குற்றம் இல்லை என்று நினைக்கும் சுந்தரம் இப்போதெல்லாம் தன் காரில் பாரதம் பூரா உள்ள எங்கள் அலுவலகங்களிலிருந்து சென்னைக்கு அலுவலக வேலையாய் வரும் வேற்று மொழி
பேசுபவர்களிடம் எல்லாம் அவர்கள் மொழியிலே பேசி அசத்தி விடுகிறான். ஆனால் சரவணன் மட்டும் ஏன் இன்னம் தத்தி ( I am sorry to use this harsh word, ) யாகவே இருக்க
வேண்டும்…பாவம் சுந்தரம் தான் என்ன செய்வான்? என் இரு பெண்களும் படிப்பு முடித்து வேலைக்கு போய் கை நிறைய சம்பாரித்துக்கொண்டு வரும் போது இவன் மட்டும் ஏன் இப்படி
பரப்பிரும்மமாய் இருக்கிறான் என்று தெரிய வில்லை. சுந்தரத்தின் மனைவி ஒரு நாள் எங்கள் வீடு தேடி வந்து சொன்ன செய்தி எங்களுக்கு சிரிப்பாய் வந்தது. அதாவது சரவணனுக்கு
பேய், பிசாசு,காத்து, கருப்பு சேஷ்டயாய் இருக்குமோ? மந்தரிச்சு கயிறு, தாழ்த்து கட்டலாமா?” என்றபோது ஒரு தாயின் மன நிலை புரிந்தது. இவனை ஏன் ஒரு கை தேர்ந்த
மன நல மருத்துவரிடம் அழைத்து போய் கவுன்சலிங் செய்யக்கூடாது என்று கூட தோன்றியது. பிறகு என் நண்பன் ஒருவன் துவக்கியிருந்த ஒரு சிறு கம்பெனியில் அவனை பற்றி சொல்லி, வேலை கற்றுக்கொள்ளட்டும் முதலில், அதுவும் வீட்டில் தூங்கி வழியாமல் என்பதால்
ஒரு டெஸ்பாச்சிங் கிளார்க் வேலை வாங்கி கொடுத்தேன். மாத சம்பளமாய் நாலாயிரம் மட்டுமே கொடுக்க முடியும். வேலையும் ஒன்றும் அதிகமாய் இருக்காது. நான் இல்லாத போது வரும் தொலை பேசி
அழைப்புகளை விசாரித்து, குறித்து வைத்து நான் வந்ததும் என்னிடம் கொடுக்க வேண்டும். மற்றபடி தபால்கள் என்று பார்த்தால் தினமும் பத்துக்கு மேல் இருக்காது. வெய்ட் போட்டு பார்த்து, தபால் தலைகள் வாங்கி ஒட்டி தபால் நிலயத்தில் சேர்க்க வேண்டும். அது கூட கொரியர் வந்த பிறகு அவர்களே கம்பெனிக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து கலக்ட் செய்து கொண்டு போய் விடுகிறார்கள்,
என்பதால். இந்த சின்ன வேலை கூட சரவணனால் சரியாய் செய்ய முடியாமல் சொதப்பினான் என்று என்னிடம் குறை பட்டு கொள்வான் நண்பன் என்னை பார்க்கும் போதெல்லாம். அவனுக்கும்
இந்த சம்பளத்தில் ஒரு விசுவாச ஊழியன் கிடைக்க மாட்டான் என்பதால் பேசாமல் இருந்தான். வேலைக்கு என்று போக ஆரம்பித்து நாலு பேர்களை பார்த்த பிறகாவது சரவணனுக்கு மற்றவர்கள் போல்
வேறு வேலை தேட வேண்டும் அதிக சம்பளத்தில் என்று தோன்றாததுதான் ஆச்சரியமாய்தான் இருந்தது எனக்கு. இப்படியே அவனுக்கும் கிட்டத்தட்ட 30 வயது ஆகி விட்டது, சுந்தரத்துக்கும்,
பணி ஓய்வு பெற வேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருக்க அவன் மனைவி சுந்தரத்தை துளைத்தெடுக்க ஆரம்பித்தாள் தங்கள் மகனுக்கு ஒரு கலியாணத்தை காலா காலத்தில் பண்ணி விட
வேண்டும் என்று. “இவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்” என்ற போது எல்லாம் வர மருமக சாமர்தியமாய் இருப்பா பாருங்களேன்” என்றாள். சுந்தரம் தன் பணிக்காலத்தில் எப்படியோ போட்டடித்து, அலுவலக கடன், மற்றும் வெளியிலும் அதிக வட்டிக்கு கடன்கள் வாங்கி,முதலில்
ஒரு வீட்டு மனை வாங்கி பிறகு எப்படியோ ஒரு வீட்டையும், மாடியில் ஒரு போர்ஷன்னும், வாடகை வரும் வண்ணம் கட்டிக்கொண்டான்..
அவன் ஓய்வு பெற்ற போது மிச்சமுள்ள வீட்டு கடன் மொத்தமும் பிடித்தம் செய்தது போக ஏதோ சில ஆயிரங்கள் மட்டுமே கையில் வரும் சேமிப்பாய்.. தவிர மாதாந்திர ஒய்வூதியம் ரூபாய் 7000/-
மட்டும் கிடைக்கும். வருடம் இரு முறை டி.ஏ உயர்வாய் ரூபாய் 300/- 400/- கிடைக்கும்.ஆனால் இதை மட்டுமே நம்பி எப்படி தன் தத்தி பிள்ளைக்கு பெண் கேட்பது?. அப்போதுதான் சுந்தரத்தின்
மனைவி சொன்னாள் அவனிடம் என்னங்க, நமக்கு சொந்த வீடு இருக்கு சென்னையில் . அதனால் நாம் வாடகை கொடுக்க வேணாம். மேல ஒரு போர்ஷன் வேற கட்டி இருக்கோம். அதை
வாடகைக்கு விட்டா, ரூபாய் மூவாயிரமாவது வரும். சரவணன் ரூபாய் 4000 கொண்டு வரான். நமக்கு ஓய்வூதியமாய் ரூபாய் 7000 வரும் மாசா மாசம். சேமிப்பு வட்டியா ரூபாய் 1000 வரும்.
நமக்குத்தான் இவ்னை விட்டா வேற யார் இருக்காங்க. திடீர்னு நாளைக்கே நமக்கு ஏதாவது ஆயிட்டா தனி மரமா, அனாதையால, நிற்ப்பான் சரவணன். படிக்க வச்சு வேலை வாங்கி
கொடுத்தாப்பல இவனுக்கு ஒரு கால் காட்டும் போட்டுட்டா, நம்ம கடமை தீர்ந்தது” என்றாள்.
“நம்ம கடமை தீரலாம். ஆனா வரப்போற பெண் என்பவள் எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடன் வருவா. இவன் வாழ்க்கையில் முன்னேறணும். கை நிறைய சம்பாரிக்கணும்ன்ற எண்ணமே இல்லாமல்
ஏதோ கடமைக்கு வேலைக்கு போறதும், மாசம் பிறந்தா ரூபாய் நாலாயிரத்தை கொடுத்துட்டு, தன் கை செலவுக்குனு 1500 ரூபாய் எடுத்துகிறதுமாயிருந்தா எப்படி? கலியாணம்னு ஆகி
குழந்தை, குட்டிகள்னு ஆயிட்டா என்ன செய்வான் இவ்வளவு குறைவான சம்பளத்தில்” ?என்றவனிடம்,
“அதுக்காக கலியாணமே செய்யாம விட்டுடச்சொல்றீங்களா நம்ம மகனுக்கு? சொல்லுங்க?அன்னாடம் காய்ச்சியா இருக்கிறவங்க கூட எதை, எதையோ சொல்லி கலியாணம் பண்ணிக்கலையா?
ஆயிரம் பொய் சொல்லி ஒரு கலியாணத்தை பண்ணலாம்னு பொ¢யவங்க சொல்லலையா என்ன? நம்ம மகன் என்ன நோயாளியா , இல்லை மன நிலை சரியில்லாதவனா? வேற கெட்ட பழக்க,
வழக்கங்கள் உடையவனா. இதே இன்னேரம் இவனிடத்தில் இன்னொரு பிள்ளையாண்டானாய் இருந்தா எவளையாச்சும் இழுத்துக்கிட்டு போயிருக்கலாம்ல ? பாவங்க நம்ம சரவணன்”என்றவளிடம் சுந்தரம் சொன்னானாம்..
“ஊகூம்… அப்படி போயிருந்தால் கூட கவலைப்பட மாட்டேன். அப்படிப் போறவங்களுக்கூட தன்னம்பிக்கை , சம்பாதிக்கணும்ன்ற வெறி எல்லாம் இருக்கும். ஆனா இது தத்தி பிள்ளை.
த பாரு, என்னை பொய் சொல்ல வச்சு பாவம் பண்ண வைக்காதே. ஒரு பாவமும் அறியாத ஒரு பெண் வாழ்க்கையை பலியாக்க நானே காரணமாயிருக்க மாட்டேன்” என்று சொன்ன சுந்தரத்திடம்,
என்ன, என்னவோ சொல்லி சம்மதிக்க வைத்து “பிள்ளையாண்டான்தான் டிகிரி முடிச்சிட்டான்ல. வேற வேலைக்கும் டிரை பண்ணிகிட்டு இருக்கான்ல. தனி வீடும், ஒரு போர்ஷன் வாடகைக்கும்
விடறாப்பல, அதுவும் யாரும் கண்ண மூடிக்கிட்டு ரூபாய் மூவாயிரம் கொடுப்பாங்க. தவிர நமக்கும் மாச பென்ஷன் கிடைக்கும். சேமிப்புக்கு வட்டியாய் 1000 கிடைக்கும்” என்றெல்லாம் மறுபடி,மறுபடி தன் நிலைப்பாட்டையே வலியுறுத்தி,அவனை ப்ரைன் வாஷ் பண்ணி,
கொழையடித்து ஒரு மருமகளை கொண்டு வந்தாள் அவன் மனைவி, பெண் வீட்டாரிடம் எதை,எதையோ நம்புவது போல சொல்லி.. சொல்லி..
பாவம்..சுந்தரம்தான் என்ன செய்ய முடியும் மனைவி பேச்சுக்கு தலையாட்டுவதைத் தவிர!
“ஊம்.. பார்ப்போம்.. வரவளாவது இவனை திருத்தி ஒரு மனுஷனாக்கறாளானு ” என்றானாம் சுந்தரம். ரொம்பவும் நொந்து போயிருந்தான் சுந்தரம் என்று தெரிந்தது ..
ஆனால் சரவணன் நடவடிக்கையில் எந்த மாற்றமும் ஒரு இம்மியளவாவது.. ஊஹூம்.. இல்லை. இதற்குள் அவன் என்னவோ இரண்டு குழந்தைகளுக்கு தந்தையானான். பற்றிக்கொண்டு வந்தது
சுந்தரத்துக்கு. எதையும் யாரிடமும் வெளிப்படையாய் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. தன் பணி ஓய்வுக்கு பிறகு மறுபடி ஒருவரிடம் கார் ஓட்டுனராய் சேர்ந்தான். நான் அவனிடம் கேட்டேன்
“ஏம்பா, வயசு 60 தாண்டியும் ஏன் இன்னமும் டென்ஷனான கார் ஓட்டுனர் வேலை? அப்படி என்ன பிரச்சினை உனக்கு மறுபடி வேலை செய்து சம்பாரித்துதான் சாப்பிடணும்னு. ” என்ற போது,
“எல்லாம் என் தலை விதி அண்ணே. இதை பத்தி டீடைலா பேச வேண்டாம்னு நினைக்கிறேன்” என்றவன் என் முக பாவம் அறிந்து “அண்ணே கோபிச்சுக்காதீங்க. வீட்டுக்கு வந்து பேசறேனே”என்றவன் சொன்னபடியே எங்கள் வீட்டுக்கு வந்தான்..
எதுவும் பேசாமல் அழுத வண்ணமே இருந்தான்..
“என்ன உன் மகனும், மருமகளும் தனிகுடித்தனம் போயிட்டாங்களா என்ன? ஏன் இப்படி சோகமாய் இருக்கே? சொல்லலாம்னா சொல்லு” என்ற போது “அட போங்கண்ணே , அப்படி அவங்க
தனி குடித்தனம் போனாக்கூட சந்தோஷப்படற முத ஆளு நான்தான். நான் வேலைக்கு போய்கிட்டிருந்த வரை பணப் பிரச்சினை அவ்வளவா தலை தூக்காமல் இருந்தது.. கணிசமான சம்பளம், ஒடினு இருந்தது.. இப்ப, என்ன செய்ய
முடியும் சொல்லுங்க. இது புரியலை பிள்ளையாண்டானுக்கு .இப்ப கூட ஒரு ஆளு மட்டுமல்ல. இரண்டு குழந்தைகள், அவங்க பராமரிப்பு செலவுகள்னு சமாளிக்க முடியலை. எப்பவும் போல
இவன் தன் சம்பளத்தில 1500 எடுத்துகிட்டு மிச்சத்தை கொடுத்துட்டு நமக்கென்னனு இருந்தா, நான் என்ன செய்யறது. அட செலவுகளை குறைக்கலாம்னு பார்த்தா, அதுக்கும் வீட்டில யாருமே ஒத்து
வர மாட்டேன்றாங்க. எவ்வளவுதான் கடன் வாங்கிறது? அப்படியே வாங்கினா எப்படி திருப்பி அடைக்கிறது? மருமகளும் டிகிரி ஹோல்டர்தான். கணினி பயிற்சியும் உண்டு. கலியாணத்துக்கு
முன்னால் வேலை பார்த்துகிட்டிருந்தா. ஆனா இப்ப வேலைக்கு போக மாட்டேன்றா. நானும் என் பெண்சாதியும் மட்டும்னா, எங்களுக்கு வர பென்ஷனும், சேமிப்புக்கான வட்டி பணமும்
போதும். வீட்டு வாடகை வேற வருது. எங்களுக்கு வாடகை கிடையாது. ஆனா, இரண்டு பேரப் பசங்களுக்கு படிப்பு செலவு, கே.ஜி. கிளாஸ்தான்னாலும், ஸ்கூல் ஃபீஸ், வான் வாடகை,
யூனிபார்ம், லொட்டு லொசுக்கு, வைத்திய செலவு, நாள் கிழமை பண்டிகைகள், வரவங்க, போறவங்கனு சமாளிக்க முடியலை. ஓண்னு, சரவணன் தன் வருமானத்தை உயர்த்திக்க பார்க்கணும்..
பார்ட்டைமா ஏதாவது வேலைக்காவது போகணும். இல்லைனா, அவன் சம்சாரத்தையாவது படிச்ச படிப்பு வீணாகாம ஏதாவதொரு வேலைக்கு அனுப்பணும். என் சம்சாரமும் டைலா¢ங் மெஷின்ல
அவளால் முடிஞ்ச வேலையை செஞ்சு கொடுத்து சம்பாதிக்கிறாதான். ஆனா இது எவ்வளவு காலத்துக்கு முடியும்? வயசானவ இல்லையா? நாளைக்கே, நானோ, இல்லை என் மனைவியோ
நோயால படுத்துட்டா, எப்படி சமாளிக்கிறது வைத்திய செலவுகளை?
பொறுத்து பொறுத்து பார்த்து ஒரு நாள் வெடிச்சிட்டேன் அண்ணே . ஏண்டா இப்படி பொறுப்பில்லாம இருக்கே? நீ, உன் சம்சாரத்தை கூட்டிகிட்டு எங்கேயாவது தனி குடித்தனம் போயிரு. நாங்க
எங்க பாட்டை பார்த்துக்கிறோம்னு. அப்ப வெடிச்சா பாரு எங்க மருமக… அப்பப்பா “என்ன மாமா நினைச்சிகிட்டிருக்கீங்க உங்க மனசில. நானும் போனாப்போகுது,போனாப்போகுதுனு எல்லாத்தையும்
பொறுத்துக்கிட்டிருந்தா, ஒரு தத்தி பிள்ளையை என் தலையில கட்டிட்டு நீங்க கழண்டுக்க பார்க்கிறீங்களா? இரண்டு பிள்ளைகள் வேற ஆச்சு. இவருக்கு கலியாணம் பேச வந்தப்ப நீங்களும், அத்தையும் என்ன சொன்னீங்க? இவர் சம்பளம் என்னவோ கம்மிதாம்மா. ஆனா வெள்ளந்திம்மா. ஒரு கெட்ட பழக்கம் கிடையாது. ஒரு பாக்கு பொட்டலம் கூட போட மாட்டான். இன்னம்
என்ன சொன்னீங்க?இவர் ரிஸ்யசிருங்க முனிவர் மாதிரி பிற பெண்களையே ஏறெடுத்து பார்க்க மாட்டார்னு. இப்ப, இப்படி பரபிரும்மமா இருந்தா நான் எப்படி மாமா குடித்தனம் பண்றது ? அகட
விகடம் பண்ணியாவது பொழப்பை நடத்தணும். அதுக்காக அடாவடியோ, வேற சட்டத்துக்கு புறம்பாகவோ சம்பாரிக்க சொல்லலை இவரை. எவ்வளவோ செய்யலாம் ஆபீஸ் நேரத்துக்கு பிறகு. இல்லைனா ஆபீஸ் நேரத்தில கூட. நேர்மையாய் சம்பாரிக்க வழியா இல்லை ? ஆனா இவர் என்னவோ காலையில சோறு கட்டி கொடுத்தா ஆபீஸ் போவேன்…சில நாட்கள் போக மாட்டேன்..அப்புறமும், மாலையிலே வீடு திரும்பி
டி.வி. பார்ப்பேன். என்ன நடக்குது நம்மை சுத்தினு பிரக்யையே இல்லாமல். நீங்க என்ன சொன்னீங்கன்றதை சொல்லலையே இங்கே, அதாவது கலியாணம் பேசவந்தப்ப. இவர் சம்பளம் கம்மியா
இருந்தாலும், இப்ப நான் கணிசமா சம்பாரிக்கிறேன். பணி ஓய்வுக்கு பிறகு எனக்கு கணிசமான பென்ஷனும் வரும். பணிக் கொடையாய் சில லட்சங்களும் வரும். அதை எஃப்,டில போட்டு
வச்சா அதிலிருந்து வட்டியும் வரும். சொந்த வீடு இருக்கு. ஒரு போர்ஷன் வாடகையும் வரும். அதனால் ஓரளவு பண கஷ்டம் இருக்காது. தவிரவும் இவன் எங்களுக்கு ஒத்த பிள்ளை. வேற
வாரிசுனு யாரும் இல்லை. அதனால் பிரச்சினை வராது. அப்புறம் இவன் கலியாணத்துக்கு பிறகு பொறுப்பும் வரும்ல. வேற வேலைக்கு முயற்சி பண்ணனும்னும் தோணும்ல, தன் குடும்பம்னும், கொளந்த,குட்டிங்கனும் ஆனவுடனேனு
சொன்னீங்கள்ள. ஆனா இவர் நடத்தையில் எந்த மாற்றமும் இன்னைய வரை இல்லை. இதெல்லாம் உணராம, அநியாயமா ஒரு பெண் வாழ்க்கையை கெடுத்துட்டோம்னுகூட நீங்க
நினைக்காம எங்களை வெளியே தனி வீடு பார்த்துகிட்டு போகச்சொல்றது என்ன மாமா நியாயம்? கூப்பிடுவோம் எங்க பக்கத்து மனுஷங்க, உங்க பக்கத்து மனுஷங்க எல்லாரையும், அதாவது அன்னைக்கு நிச்சயம் பேச வந்தவங்களை
எல்லாம். அவங்க என்ன சொல்றாங்களோ அதுக்கு நாங்க கட்டுப்படறோம் மாமா. பெண் பாவம் பொல்லாததுனு அவங்களுக்கு தெரியாதா என்ன?”
“இப்ப நீ என்னதான் செய்ய சொல்றே? நீயே இந்த வீட்டை வச்சுக்க. வாடகை கிடையாதுல்ல. அப்புறம் வீட்டு வாடகை வேற வருதுல்ல. அதை வச்சுகிட்டு உன் குடும்பத்தை கோப்பியமாய் ஓட்டுனு நான்
சொன்னப்புறமும் “அது எப்படி மாமா? உங்க காலத்துக்கு பிறகு வீடு எப்படியும் எங்களுக்குத்தானே வரப்போகுது. ஆனா எந்த சமயம் இவரை வேலையை விட்டு தூக்கிடுவாங்களோனு பயந்து, நடுங்கிக்கிட்டிருக்கேன். நீங்க தப்பிச்சுக்க பார்த்தா எப்படி மாமா? உங்களுக்கு கணிசமான ஓய்வூதியம் வருது. எஃப்.டில போட்ட பணத்துக்கு வட்டியும் வரும். அத்தையும், நீங்களும் ரெண்டே பேர்கள்தான். எனக்கு எதுவும் தெரியாது.
நீங்கதான் இந்த குடும்ப பொறுப்பை உங்க காலம் உள்ளவரை, இல்லைனா, உங்க பிள்ளைக்கு தகிரியம் வந்து என் குடும்பத்தை நானே பார்த்துக்கிறேன் பெத்தவங்க தயவு இல்லாமனு சொல்ற வரை பார்துக்கணும்..
இதையும் மீறி நீங்க எனக்கென்ன வந்ததுனு போனா நான் பிள்ளைகளோட சூயிசைட்தான் பண்ணிக்குவேன் போலீசிக்கு கடிதம் எழுதி வச்சிட்டுனு மிரட்டறா. என்னை என்ன செய்ய சொல்றீங்க, சொல்லுங்க?நாங்க
ஒரு தத்தி பிள்ளையை பெத்ததுக்கு, எங்க காலம் உள்ளவரை அனுபவிச்சுதான் ஆகணும் நாங்க போன ஜன்மாவில செஞ்ச பாவங்களை”என்று அழுதவனை என்ன சொல்லி தேற்றுவது என்று புரியவில்லை எனக்கு. “கடவுள்தான் அவன் பிள்ளை,
சரவணனுக்கு நல்ல புத்தியை கொடுக்கணும்” என்று வேண்டிக்கொள்வதை தவிர.
———