செம்மொழித்தமிழில் அமைதி இலக்கியம்

author
1 minute, 39 seconds Read
This entry is part 6 of 8 in the series 21 ஜூலை 2019

             

                  முனைவர் எம் எஸ் ஸ்ரீ லக்ஷ்மி , சிங்கப்பூர்

முன்னுரை:

வாழ்வில் அனைவரும் அமைதியை விரும்புதல் இயற்கை. அமைதி என்னும் சொல் அகத்தோடும் புறத்தோடும் மிக நெருங்கிய தொடர்புடையது.   இன்றைய பரபரப்பான  வாழ்க்கைச்சூழல் மன அமைதியின்மையை அதிகரித்திருந்தாலும்  அதே வேளையில் அதன்  மகத்துவத்தை நமக்கு உணர்த்தியுள்ளது. ஆயின்  மிகப் பழங்காலத்தில் நம் மூதாதையர் வாழ்க்கையில்   மனஅமைதியின்மை  என்னும் சொல்லுக்கே இடமிருந்திருக்குமா என்று ஐயுறத் தோன்றுகிறது.    புறவுலகில் நிகழும் போர் போன்ற நிகழ்வுகளால் வாழ்வில் அமைதி  குலைந்திருக்க  வாய்ப்பு உண்டு என்றாலும் அதனையும் மக்கள்  இயல்பாக ஏற்றுக்கொண்டனர்  என்பதற்குப் புறநானூற்றுப் பாடலொன்று சான்றாக அமைகிறது.

      “ ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்

        புதுவது   அன்று   இவ்வுலகத்  தியற்கை”

போரும் அமைதியும்:

போரும் அமைதியும் ஒன்றுக்கு ஒன்று முரண் போலத் தோன்றினாலும்  இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. அமைதியை நிலைநாட்டப் போர் தொடுப்பது உண்டு.அமைதியைக் குலைத்து நாட்டையும் மக்களையும் அழிக்கவும் போர் தொடுப்பது உண்டு.  மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை முதலிய காரணங்களால் மூண்ட போர்கள் பலப்பல. இவற்றை  உலக வரலாறு கூறுகிறது. இவ்வாறு மூளும் போர்களைத் தவிர்க்கவும் தூது அனுப்புவது உண்டு. எனவே அமைதி இலக்கியம் என்ற கோணத்தில் சிந்தித்தால்  தூது இலக்கியம் முதலில் நம் சிந்தனையில் பளிச்சிடுகிறது.

தூதின் வகைகள்:

அகவாழ்க்கை, புறவாழ்க்கை என வாழ்க்கையைப் பகுத்துப் பார்த்தவர் தமிழர்.அகவாழ்வில் – காதல் வாழ்வில் தூது முக்கியப் பங்கு வகிப்பதாக இலக்கியங்கள் படைக்கப்பட்டிருந்தாலும் இக்கட்டுரை புறவாழ்வில் குறிப்பாக அரசியலில்  இடம்பெறும் தூதுபற்றிப்  பேசுகிறது. பொது நன்மைக்காகத் தூது போவது போல நட்பின் பொருட்டுப் பிசிராந்தையார் என்னும் புலவர்  அன்னச்சேவலைத்  தூது அனுப்பியதாகப் புறநானூற்றில் பாடல் ஒன்று இடம்பெறுகிறது. மனிதர் அல்லாது அன்னத்தைத் தூது விடுத்த செய்தி   பக்தி  இலக்கியங்களுக்கும், சிற்றிலக்கியங்களுக்கும்  களம் அமைத்து கொடுத்தது; தூதின் நோக்கங்களை விரிவுபடுத்தியது.

புறநானூறும் அமைதி இலக்கியக் கூறுகளும்:

சங்கஇலக்கியங்களில் குறிப்பாகப் புறநானூறு எவ்வாறு அமைதி இலக்கியமாக அமைகிறது என்ற வினாவுக்கும் விடை காண முயல்கிறது இக்கட்டுரை. நிலையாமை போன்ற  வாழ்க்கைத்தத்துவங்களைக் கூறி வாழ்வில் அமைதியை வலியுறுத்துகிறது.வீரம், கொடை,அரசர் கடமை, மக்கள் கடமை ,வாழ்வியல் நெறிகள், உயர்ந்த கொள்கைகள் போன்றவற்றைக் கூறும்  பாடல்களின் வழி நல்வாழ்வுக்கும், அதற்கு அடிப்படையான அமைதியைப் பெறுவதற்கும் வழிகாட்டுகின்றன. 

முறையற்ற செயல்கள் அமைதிக்குச் சவாலாக இருந்த சந்தர்ப்பத்தில் புலவர் பெருமக்கள் அத்தவறுகளை எடுத்துக்கூறி, இடித்துரைத்து, நல்வழிப்படுத்தி முறையற்ற செயல்கள் நடக்காவண்ணம் தடுத்துள்ளனர். “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இல்லானும் கெடும்” என்னும் குறள் கூறுமாப் போன்று புலவர் பெருமக்கள் அமைச்சர்களாகவே அரும்பணி ஆற்றியுள்ளனர். அமைதிக்காகத் தூது செல்வது உண்டு என்பதால் திருக்குறளில் கூறப்படும் தூது என்னும் அதிகாரக் கருத்துகளைப் புறநானூற்றுப் பாடல்களுடன் பொருத்திப் பார்த்தும் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

தொல்காப்பியம் கூறும் தூது:

தலைமகன் தலைமகளைப் பிரிவதற்குரிய காரணங்களைக் கூறும் நூற்பாக்களில் தூதின் பொருட்டுப் பிரிதலையும் ஒன்றாகக் கூறுகிறார் தொல்காப்பியர். கற்பு வாழ்க்கையில் தூதின் பொருட்டுப் பிரிவதும் ஒன்றாகும்.. “வேந்துறு தொழிலே யாண்டின தகமே” என்பதனாலும் வேந்துறு தொழிலில் தூதும் ஒன்று என்பதானாலும்  தூது செல்லும் தலைமகன்  எவ்வளவு காலம் பிரிந்திருக்கலாம் என்பதையும் தொல்காப்பியம் கூறுவதாகக் கொள்ளமுடியும்.  போர் நிகழாமல் தடுப்பதற்காகத் தூது செல்வதால் தூதினைப்  ‘பகைதணிவினை’ என்று  இறையனார் அகப்பொருள் குறிப்பிடுகிறது.

தூது செல்வோர் பண்புகள்:

தூது செல்வது எல்லோராலும் இயலும் பணியன்று. இதற்கெனத் தனித்தகுதிகள் வேண்டும். அன்புடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்து அவாவும் பண்பு ஆகியவை தூதுவனிடம் இருக்கவேண்டிய குணநலன்கள் என்கிறார் வள்ளுவர் (குறள்- 681). அன்பு, அறிவு,  ஆராய்ந்த சொல்வன்மை ஆகியவை தூது செல்பவருக்கு இன்றியமையாத பண்புகள் என்பதும் வள்ளுவர் கருத்தாகும்(( குறள் -682). மேலும் அறநூல் அறிந்தவராயும் இருப்பது அவசியம் என்கிறது வள்ளுவம். அறிவு ,உரு ,ஆராய்ந்த கல்வி இம்மூன்றுடன் , தொகச்சொல்லியும், தூவாதனவற்றை நீக்கியும், இடனறிந்தும்,காலமறிந்தும் சொல்லவேண்டும். இவ்வாறு சொன்னபின்னர் மன்னன் வெகுண்டு நோக்கினும் அஞ்சாதவனாய் இருக்கவேண்டும். தூய்மையும், துணைமையும், துணிவுடைமையும், வாய்மையும் தூதுரைப்போனிடம் இருக்கவேண்டும். வேற்றரசனால் தனக்கு வரும் இழிவுக்கு அஞ்சித் தன் அரசனுக்கு இழிவு தரும் சொற்களைச் சொல்லக்கூடாது. தன் உயிருக்குத் தீங்கு நேருமாயினும் தூதுரைப்பவன் தன் அரசன் சொல்லியவற்றைச்  சொல்லவேண்டும் எனத் தூது செல்வோரின் பண்புகள்  பத்துக் குறட்பாக்களில்  சொல்லப்பட்டுள்ளன.

தூதுரைப்போர் உயர்குலத்தவரா?

   “ அவற்றுள், ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன”

என்னும் நூற்பாவினால் அரசரும் அந்தணருமே தூது செல்லத்தக்கார் என அறிகிறோம். இந்நூற்பாவுக்கு உரையெழுதும் இளம்பூரணர் “ அந்தணர்,அரசர் ஆகிய உயர்குடியினரே தூதிற்குத் தகுதி உடையோர் என்றும் அவர் ஒழுக்கத்தாலும்,செல்வத்தாலும்  ஏனையோரினும் உய்ர்வுடையார்” என்றும் எழுதுகிறார். உரையாசிரியர் கருத்து மூலநூலாசிரியரின் உள்ளக்கருத்து அல்ல என்பதனாலும், தம் காலத்திய வழக்கங்களையும் மனத்திருத்தி உரை எழுதும் வழக்கம் கொண்டவர்கள் என்பதானாலும் இளம்பூரணரின் உரை பொருந்தவில்லை. அவ்வாறாயின்  உயர்ந்தோர் யாவர்?

வள்ளுவர்  வருணாசிரம தர்மத்தை ஏற்காதவர். “பிறப்பொக்கும் எல்லா  உயிர்க்கும் சிறப்பொவ்வா  செய்தொழில் வேற்றுமையான் “ என்னும் குறள் ஒன்றே வள்ளுவர் நெஞ்சத்தின் மேன்மை காட்டவல்லது. தொல்காப்பியர் கூறிய உயர்ந்தோர் என்னும் சொல்லின் பொருளை வள்ளுவர் கருத்தின் அடிப்படையில் சிந்தித்தால் அறிவில் உயர்ந்தோரே உயர்ந்தோர் ஆவர் என்னும் முடிவுக்கு வரலாம். இந்த முடிவும் சரியானதுதான் என்பதைப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் மன்னன் பாடிய புறநானூற்றுப்பாடல் உறுதிப்படுத்துகிறது. “ வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப்பால் ஒருவன் கற்பின், மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே” என அறிவில் உயர்ந்தவனே உயர்ந்தவன் என உரைக்கிறது. மேலும் அரசியல் துறையில் அறிவை மூலதனமாகக் கொண்டு செயல்படுவது  அவசியம் என்பதால் உயர்ந்தோர் என்பது அறிவில் உயர்ந்தோரையும், பண்பில் உயர்ந்தோ ரையும்  குறிக்கும் என்பது வள்ளுவர் கருத்து. ஒழுக்கம், உயர்ந்த எண்ணம் ஆகியவை உயர்வுக்கு அடிப்படை என்று வள்ளுவர் உறுதிபடக் கூறுகிறார். இப்படிப்ப்பட்டவர்களையே தூது செல்வோராக வள்ளுவர் கூறினார்.

தொல்காப்பியர் காலத்திலும் அதற்கு முன்னரும்  வருணப்பாகுபாடு   இருந்திருக்கவேண்டும்.புறத்திணையியல்-16, மரபியல்-73 &78  என்னும் நூற்பாக்களில்  வருணப்பாகுபாடு வெளிப்படுகிறது. இருப்பினும் மக்களில்  பிறப்பால் உயர்ந்தோர் என்று  யாரையும் யாண்டும் தொல்காப்பியர் கூறவில்லை.

தூதுவரும் அமைச்சரும்: 

தூதுவர்  அமைச்சருக்கு ஒப்பானவர் என்பதால்தான் பரிமேலழகர் தூது என்னும் அதிகாரத்தை விளக்கும்போது முன்னுரை போன்று   “ தான் வகுத்துக் கூறுவான்;  கூறியது கூறுவான் எனத் தூது இரு வகைப்படும். அவருள் முன்னோன் அமைச்சனோடு ஒப்பாகலானும்,பின்னோன் அவனின் காற்கூறு குணம் குறைந்தோனாகலானும் இஃது அமைச்சியலாயிற்று”  எனத் தோற்றுவாய் செய்கிறார்.

அரச அமைப்பினை ஒரு மனிதனாக உருவகப்படுத்தி அவனுடைய பல்வேறு அவயவங்களையும்/உறுப்புகளையும் அதிகாரிகளுக்கு   உருவகப்படுத்திச் சூளாமணி என்னும் காப்பியம் நயமாகக் கூறுவதை இவண் ஒப்பிட்டுப்பார்த்தல்  பயன் தரும்.

         “மந்திரக் கிழவர் கண்ணா மக்கள்தன் தாள்களாகச்

         சுந்தர வயிரத்  திண்தோள் தோழராச் செவிகள் ஒற்றா

         அந்தர உணர்வு நூலோ அரசெனும் உருவு கொண்ட

         எந்திரம் இதற்கு வாயாத் தூதுவர் இயற்றப் பட்டார் ”

தமிழில் அமைச்சரோடு ஒப்பவைத்து எண்ணப்படும் தூதர்களை வடநூலார் மூவகைப்படுத்தியுள்ளனர். பாரதவெண்பா என்னும் நூல் கீழ்க்காணும் வகையில் வடநூலார் கூறும் வகைப்பாடுகளை விவரிக்கிறது.

       “தான் அறிந்து கூறும் தலை; மற்றிடையது

       கோன் அறைந்தது ஈதென்று கூறுமால் –தானறியாது

       ஓலையே காட்டும் கடைஎன் றொருமூன்று

       மேலையோர் தூதுரைத்த  வாறு”

 தூதுவரும் ஒற்றரும் வேறானவர் என்பது வெளிப்படை.

புறநானூற்றுத் தூதுப்பாடல்கள் :

புறநானூற்றில் இடம்பெறும் தூதுப்பாடல்கள் அமைதி இலக்கியங்களாக அமைவதுடன், புதுமைவிருந்து நல்கும் பாடல்களாகவும்  உள்ளன. புறநானூற்றில் அரசியல் தூது குறித்த பாடல்கள் ஓரளவே காணப்படுகின்றன. அவற்றுள்ளும் சில பாடல்கள் நேரடியாகத் தூதுப்பொருண்மையில் அமையவில்லை;ஆனால் தூது அமைப்பில் பாடப்பட்டுள்ளன என்பது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தியாகும். இப்பாடல்களுக்குத் திணை துறை வகுத்தோர் செவியறிவுறூஉ , துணை வஞ்சி ,வாண்மங்கலம் எனத் துறை வகுத்துள்ளனர்.

வெள்ளைக்குடிநாகனார் – மக்களின் தூதுவர்:

புறநானூற்றில் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை வெள்ளைக்குடி நாகனார் பாடிய இப்பாடல் பாடாண் திணையில் செவியறிவுறூஉ  என்னும் துறை கொண்டதாகும்.இப்பாடலின் சிறப்பு  “பாடிப் பழஞ்செய்க்கடன் வீடு கொண்டது” என்பதாகும். மக்கள் மீது விதிக்கப்பட்ட வரிச்சுமையிலிருந்து  அவர்களை விடுவித்தது  என்னும் பொருள் கொண்டது. “நாடு கெழு செல்வத்துப்பீடு கெழு வேந்தே! “ என மன்னனை விளித்து “நீ குடிமக்களுக்குக் காட்சிக்கு  எளியனாதல் வேண்டும். நின் கொற்றக்குடை மக்களுக்கு அருள் செய்தற் பொருட்டே அன்றி வெயிலை மறைத்தற்கு அன்று.கூர்வேல் வளவ! நின் பொருபடை பெற்ற வெற்றி உழவர் உழுபடையால்  விளைந்தது  என்பதை மறவாதே!

          “மாரி  பொய்ப்பினும்  வாரி குன்றினும்

          இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்

          காவலர்ப் பழிக்கும் இக்கண்ணகன் ஞாலம்;”

என்பதை நீ நன்கு அறிந்தவனாயின் நொதுமலாளரின் பொதுமொழியைக் கருத்தில் கொள்ளாதே; உழவர்களின் துன்பத்தைப் போக்கி அவர்களை முதலில் பாதுகாத்து அதன் வழி ஏனைக் குடிமக்களையும் காக்கவேண்டும்” என அறிவுறுத்துகிறார்.மேலும் அரசன்  அறம்புரிந்து,  செங்கோல் நாட்டத்தவனாயும்  விளங்குதற்குப் புலவர் அறவுரை கூறியுள்ளார்.ஆகவே அரசியல் தூது என்று இப்பாடலை நாம் வகைப்படுத்த முடியும்.

பொதுவாக ஓர் அரசனிடமிருந்து பிறிதோர் அரசனிடம் புலவர் தூது செல்லவில்லை. மாறாக அல்லல்படும் மக்களின் பிரதிநிதியாக  அரசனைச் சந்தித்து  மக்களுக்கு நன்மை புரிகிறார். இரு சாராருக்கும் இடையில்  புலவரின் செய்கையால்  நல்லுறவு ஏற்படுகிறது. ஆகவே செவியறிவுறூஉ என்னும் துறையில் பாடப்பட்டிருந்தாலும் தூதுப் பொருண்மை கொண்டு விளங்குவதால் வெள்ளைக்குடிநாகனார் மக்களின் தூதுவர் எனவும், அவரின் பாடல் தூது  என்னும் வகைமைக்குள் அடங்கும் எனவும்  கூறுவது தவறாகாது. வள்ளுவர் கூறிய இலக்கணங்கள் அனைத்தும்  பொருந்திய தூதுவர் வெள்ளைக்குடி நாகனார்.

வரிவிதிப்பு அளவுக்கு மீறிப் போனால் மக்கள் அரசனைக் குறைகூறுவது இயல்பு என்றும், செங்கோன்மைக்கு இவ்வரிச்சுமை அடையாளமாகாது என்றும், உழவர்களைப் பேணாத அரசினால் குடிமக்களின் துயரைத் தீர்க்க முடியாது என்றும்  கூறும் வெள்ளைக்குடி நாகனாரின் பாடல் இன்றைய காலத்துக்கும் ஏற்புடையதாக விளங்குகிறது. குடியாட்சியாயினும் கோனாட்சியாயினும் மக்கள் நலனுக்கே முதலிடம் தரவேண்டும் என்னும் உலகளாவிய, எக்காலத்துக்கும் பொருந்தும் உண்மையை உரைக்கும்  இச்சங்கப்பாடல் தமிழனின் ஏற்றம் கூறும் பாடலாகும். 

கோவூர் கிழார் – சந்து செய்வித்த சான்றோர்:

சோழர் குடியில் பிறந்த இரு அரசர்கள் சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் ஆவர். இருவரும் தம்முள் பகைகொண்டு மாறி  மாறிப் போர் உடற்றுதல் நன்றன்று என்று கூறிச் சந்து செய்விக்கிறார் கோவூர் கிழார். சோழன் நெடுங்கிள்ளி ஆவூரிலிருந்து தப்பிப்போந்து  உறையூரில் கதவடைத்திருந்தான். இதனை அறிந்த நலங்கிள்ளி உறையூரை முற்றுகை இட்டான்.  மக்கள் நலம், மன்னர் நலம் ஆகியவற்றைக் கருதிய புலவர் நலங்கிள்ளியிடம் சென்று அவனை இடித்துரைக்கிறார்.

      “ இரும்பனை  வெண்தோடு மலைந்தோன் அல்லன்

        கருஞ்சினை  வேம்பின் தெரியலோன் அல்லன்

        நின்ன கண்ணியும்  ஆர்மிடைந்  தன்றே

        பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்றே! “

பொருதும் நும் இருவருள் ஒருவர் தோற்றாலும் தோற்பது  நும் சோழர் குடி ஆகும். போரில் இருவரும் வெற்றிபெறுவது இயல்பல்லவே ?அதனால் நீ  போர் தொடுப்பது நும் குடிப்பெருமைக்கு ஏற்றதன்று. உன்னுடைய இந்தச் செய்கை நும்மைப்போன்ற வேந்தர்க்கு மெய்ம்மலி  உவகை செய்யும்.ஆகவே போரைக் கைவிடுக “என்று அறிவுரை கூறித் தெளிவிக்கிறார் கோவூர்கிழார்.

புலவர் கோவூர்கிழார் நிலக்கிழார். உழுவித்து உண்ணும் உயர்ந்த பண்புடைய வேளாண் குடியினர். இவர் நலங்கிள்ளியிடம் சென்று நெடுங்கிள்ளியுடன் போரிடுவது தவறு என்றும், மலையமானின் மக்களைத் தேர்க்காலில் இட்டுக்கொல்ல எண்ணியபோது நலங்கிள்ளியை   இடித்துரைத்துத் திருத்தி அவனது செய்கையைக் கைவிடச்செய்தார். இதன் மூலம் தூதுவர்  அந்தணர்,அரசர் போன்று  உயர்குலத்தோராய்  இருத்தல்வேண்டும் என இளம்பூரணர் போன்ற உரையாசிரியர்கள் எழுதியது தவறான கருத்து என்பது நிரூபணமாகின்றது. எனவே தூதுவர் அறிவிற் சிறந்த  ஆன்றோராய், ஒழுக்கத்தில் உயர்ந்தோராய் இருந்தனர் என்பது தெளிவாகிறது.

போரினால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூறிப் போரைக் கைவிடச் செய்ததன் மூலம்  நாட்டில் அமைதி நிலவ வழிவகை செய்தார் கோவூர்கிழார். இவர் பாடல் அமைதியை நிலைநாட்டும் பணியை அழகுறச் செய்தது.ஆகலின் புறநானூறு அமைதி இலக்கியம் எனலாம்.

கோவூர் கிழார் உயிர் காத்த உத்தமர்:

மலையமான் மக்களை யானைக்காலில் இட்டுக்  கொல்ல எண்ணிய சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர்கிழார் தடுத்து அக்குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். கிள்ளிவளவனின்  மனம்மாறும்படி உளவியல் அடிப்படையில் தம் கருத்துகளை முன்வைக்கிறார் புலவர். புறாவின் துயர் களைந்த சிபிச்சக்கரவர்த்தி மரபினன் கிள்ளிவளவன்.அதுமட்டுமின்றிப் பிற இடுக்கண் பலவும் விடுத்தவன் மருகன். இக்குழந்தைகளோ கற்றோர் வறுமை அடையாதவாறு தம் விளைபொருளைப் பகுத்து உண்ணும் குளிர்நிழல் வாழும் மரபினர். யானையைக் கண்டதும் இளமை காரணமாக மகிழ்பவர்;அழுகையை மறந்து நிற்பவர்.கூடியிருப்போரைப் புதியவராகக் கண்டு வருந்தும் புதியதோர் வருத்தமும் உடையவர் என்று கூறுகிறார். “நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதைச் செய் என்னும் தொனியில்  “ கேட்டனையாயின் நீ வேட்டது  செய்ம்மே” என்று கூறுகிறார்.உளவியல் ரீதியில் இவ்வாறு சொல்லும்போது கேட்பவர்  சினம் தணிந்து மனம் மாறிவிடும். இந்த உத்தியைக் கோவூர்கிழார் கையாண்டு நலங்கிள்ளியின் மனமாற்றத்திற்குக் காரணமாகி மலையமானின்  குழந்தைகளைக் காப்பாற்றுகிறார். துணை வஞ்சித் துறைக்கு இளம்பூரணர் இப்பாடலைச் சான்று காட்ட நச்சினார்க்கினியர் பாடாண் திணைச்செய்யுளுக்கு இப்பாடலை மேற்கோள் காட்டுகிறார். மலையமானின் மக்களைக் கொல்லாத வண்ணம் சந்து செய்து காத்ததனால் இப்பாடலைத்  துணைவஞ்சித் துறையாகக் கொள்வதே பொருந்தும். “அருளும் அரசும் புலவர் உள்ளத்திலே கலக்க, அங்கே அருள் ஒன்றே அரசினும் சிறந்து எழக்காட்டுவது இப்பாடல்” எனப் போற்றுகிறார் புலியூர்க்கேசிகன்.

கோவூர்கிழார் –புலவரைக் காத்த புலவர் பெருமான்!

மற்றொரு புறநானூற்றுப்பாடல் புலவரின் உயிரைக் காத்த கோவூர்கிழாரின் செயலைப் பேசுகிறது. இப்பாடல் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளியைக் கோவூர்கிழார்  பாடியதாகும். சோழன் நலங்கிள்ளியிடமிருந்து உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை ஒற்று வந்தான் என்று கொல்லப்புகுந்த இடத்துக் கோவூர்கிழார் சந்துசெய்து உய்யக்கொண்டார்.

பழமரம் நாடிச்செல்லும் பறவை போல வள்ளல்களை நாடிச் செல்பவர்கள் புலவர்கள். இவர்களின் பரிசில் வாழ்க்கையைக் கோவூர்கிழார் உள்ளது உள்ளவாறே எடுத்துரைக்கிறார்.

        “ நெடிய என்னாது சுரம்பல கடந்து

          வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்

          பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி

          ஓம்பாது உண்டு கூம்பாது வீசி

          வரிசைக்கு வருந்தும் இப்பரிசில்  வாழ்க்கை

          பிறருக்குத் தீதறின் தன்றோ? இன்றே”

என்று பரிசிலர் நிலை கூறியதோடு புலனழுக்கற்ற அந்தணாளராம் புலவர்களின் பெருமையையும் விளக்குகிறார். கல்வியால் தம்முடன் மலைந்தவரை அவர் நாணும்படி வென்று ,செம்மாந்த நடையுடன் இனிதாக ஒழுகுபவர்கள் புலவர் பெருமக்கள். அவர்கள் ஓங்குபுகழில் மண்ணாள் செல்வம் எய்திய நும்மோர் அன்ன செம்மல்கள் “ என்று கூறிப் புலவரைக் காத்தார். புலவர்களின் வாழ்க்கையில் இரண்டு பக்கங்கள் உள்ளன. வறுமை காரணமாக வரிசைக்கு வருந்தும்  பரிசில்  வாழ்க்கையின் ஒரு பக்கத்தையும் , கல்விச்செல்வத்தால் மன்னரைப்போன்ற புகழுடையார் என மற்றொரு பக்கத்தையும்  கூறுவதன் மூலம் புலவர்கள் தீதில் வாழ்க்கை கொண்டவர்கள்; கொடுமை செய்ய அறியாதவர்கள் எனக் கூறி இளந்தத்தனைக் காப்பாற்றுகிறார்.

கோவூர் கிழாரின் தூதுத்திறம்: 

வள்ளுவர்  வகுத்த தூதுவரின் இலக்கணங்கள் அனைத்தும் வாய்க்கப்பெற்றவர்  கோவூர்கிழார் என்பதனை அவர் பாடல்கள் தெற்றெனப் புலப்படுத்தும்.  கோவூர் கிழாரின் உயர்ந்த பொது நோக்கு, மன்னனின் சீற்றம் தணிக்க அவர் கையாண்ட உபாயங்கள், மன்னனை அமைதிப்படுத்திய பாங்கு, கேட்டார்ப் பிணிக்கும் அவரின் நாவன்மை,ஆராய்ந்த சொல்வன்மை முதலியவை  அவர் சிறந்த தூதுவர் என்பதை நிறுவுகின்றன. ஓர் அரசனிடமிருந்து மற்றோர் அரசனிடம் சென்று முன்னவன் கூறிய செய்தியாகக் கோவூர்கிழார் எதையும் தெரிவிக்கவில்லை. அவர் தாமே ஒரு சாராருக்காக நின்று அந்தச்சாராரோடு முரண்பட்டிருந்த மன்னனிடம் பேசுகிறார். நல்வாழ்வு பெறச்செய்தல்,  அமைதியை நிலைநாட்டுதல் ஆகிய நோக்கங்களுக்காக அவர் தூது சென்று வெற்றியும் பெறுகிறார்.

தூதுவராய்ப் பெண்பாற்புலவர் – ஒளவையார்

பாணர் மரபினரான ஒளவையார் பெண்பாற்புலவராகத் தூது சென்று தமிழ் இலக்கிய வரலாற்றில் தனித்து நிற்பவர்.  அதியமானின் தூதுவராய்த் தொண்டைமானிடம் சென்றார் ஒளவையார். தொண்டைமான் அவரிடம் தம் படைக்கலக்கொட்டிலைக் காட்டினான்.அவரோ அதியமானின் படைக்கலங்களையும்  தொண்டமானின் படைக்கலங்களையும் ஒப்பிடுகிறார். பாடல் தொனிப்பொருள் கொண்டு சிறப்புற விளங்குகிறது.ஒளவையின் புலமைச்சிறப்பு பொதிந்து கிடக்கிறது.

புறநானூற்றில் இப்பாடல் “ அவன் (அதியமான்நெடுமான்அஞ்சி ) தூதுவிடத் தொண்டமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட அவர் பாடியது” என்னும் கொளுவுடன் அமைந்துள்ளது. எனவே ஒளவை அதியமானின் தூதுவர் என்பது வெளிப்படையாகப் புலப்படுகிறது. ஒளவையின் பேச்சில் அதியமான் தெரிவித்தாதாக எச்செய்தியும் இடம்பெறவில்லை. போரின் கொடுமை ; அதன் பாதகங்கள் ஆகியவற்றைத் தொண்டைமானிடம்  எடுத்துரைக்கவே தூதாக விடுத்திருப்பான். ஆயின் தொண்டைமானோ தன் படைப்பெருக்கத்தைக் காட்டி மகிழ்கிறான். புலமைப் பெருமாட்டியாம் ஒளவை அதியமானின் வீரத்தைப் பழிப்பதுபோலப் புகழ்ந்து கூறுகிறாள். அதியமானின் போர்க்கருவிகள் பற்பல போர்களில் பயன்படுத்தப்பட்டு வளைந்தும் நெளிந்தும் உள்ளன என்ற குறிப்பினால் அவனது   வீரச்சிறப்பைப் புலப்படுத்திவிடுகிறார் . தொண்டைமானைப் புகழ்வது போலப் பழிக்கிறாள். எனவே தூதுவர் சூழலுக்குத் தக்கவாறு பேசுதற்கு உரியவர் என்னும் உண்மையை உணர்த்துகிறாள் ஒளவை .

முடிவுரை: 

தம் புலமைத்திறத்தால் வாழ்வில் அமைதியை  நிலைநாட்டிப் போரையும், முறையற்ற செயல்களையும் தவிர்த்த புலவர் பெருமக்கள் பாடிய பாடல்களின் மூலம் புறநானூறு அமைதி இலக்கியமாகக் காலங்கடந்து வாழ்ந்து கொண்டிருக்கிறது, திருக்குறளின் எதிரொலியாகவும் அமைதிக்குக் குரல் கொடுக்கிறது,

Series Navigationகுரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *