இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு

author
0 minutes, 9 seconds Read
This entry is part 9 of 10 in the series 15 செப்டம்பர் 2019

அழகர்சாமி சக்திவேல்

ஆண் பெண்ணோடு ஒப்பிடுகையில், மூன்றாம் பாலினத்தின் வாங்கும் திறன் அதிகமாய் இருப்பதற்கு ஒரு முக்கியக்காரணம் குழந்தையின்மையே,ஆகும். ஒரு பெண், ஆணோடு சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறாள். ஒரு ஆண், ஒரு பெண்ணோடு சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்கிறான். ஆக, ஆண், பெண்களின் வாங்கும் பணத்திறன் குறைந்து போகிறது. ஆனால், மூன்றாம் பாலினத்தின் பெரும்பான்மையோர், குழந்தை எடுத்து வளர்ப்பதில்லை. அப்படியே அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு , குழந்தை தத்து எடுத்துக்கொண்டு வாழ நினைத்தாலும், அதை பல நாடுகள், சட்டப்படி அனுமதிப்பது இல்லை. எனவே, தனியே வாழும் மூன்றாம் பாலினத்தின் சேமிப்பும், வாங்கும் திறனும், நிச்சயம் ஆண், பெண் பாலினத்தை விட அதிகமாய் இருப்பது சரிதானே? இந்த அதிகப்படியான வாங்கும் திறனே, இளஞ்சிவப்புப் பணத்தின் அடிப்படை ஆகும். பலநாடுகள், மூன்றாம் பாலினத்தை ஆதரிப்பதில்லை. எனவே, மூன்றாம் பாலினம் எந்த வித ஆபத்தின்றி கூடி மகிழ, அவர்களுக்கென உலகம் முழுவதும், தனி இடம் தேவைப் படுகிறது. இந்தத் தேவையைப் புரிந்து கொண்ட பல நிறுவனங்கள், பல்வேறு விதமான யுத்திகள் மூலம், மூன்றாம் பாலினத்தைக் கவரத் துடிக்கிறது. உதாரணத்திற்கு இந்தியாவின், பெங்களூரு நகரத்தில் இயங்கும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஆன லலித் அசோக் ஹோட்டலைச் சொல்லலாம். இந்த ஹோட்டல், மூன்றாம் பாலினத்திற்கு, முற்றிலும் ஆதரவு தரும் ஒரு ஹோட்டல் ஆகும், மூன்றாம் பாலினத்துக்குத் தேவையான அத்தனை வசதிகளும், இந்த ஹோட்டலில் செய்து தரப்படுகின்றன. இது போன்ற மூன்றாம் பாலின ஆதரவு விடுதிகள், இந்தியப் பெருநகரங்களில், நிறையப் பரவிக்கிடக்கின்றன. உலகம் முழுதும் பரவி இருக்கும் நைட் கிளப் என்று சொல்லக் கூடிய இரவுக் கேளிக்கை இடங்களும், இளஞ்சிவப்புப் பணம் பொதிந்து இருக்கும் ஒரு முக்கியக் இடம் ஆகும். இது போன்ற இடங்களுக்கு மூன்றாம் பாலினத்தைக் கொண்டு சேர்க்க, நிறைய மூன்றாம் பாலினச் சுற்றுலாக்கள் உலகமெங்கும் உருவாக்கப்பட்டு, அவை பல சுற்றுலா முகவர்களால் விளம்பரமும் படுத்தப்படுகின்றன. கப்பல் சுற்றுலா, ரயில்ச் சுற்றுலா என இந்தச் சுற்றுலாக்கள் பல்வேறு வடிவங்களைப் பெற்று, இளஞ்சிவப்புப் பணத்தைக் கவருகிறது. மூன்றாம் பாலினத்துக்கென, இப்போது டாக்ஸி கேப் என்ற வாடகைக்கார் சேவைத்துறையும் இப்போது உலகம் முழுவதும் வந்து விட்டது. இப்போதெல்லாம், வருடா வருடம், மூன்றாம் பாலின ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற விளையாட்டுக்களால் புரளும் இளஞ்சிவப்புப் பணம், கோடிகளில் இருக்கிறது என்பது நிதர்சனம்.

உலகம் முழுவதும், ஆங்காங்கே நடத்தப்படும் திருநங்கை அழகிப்போட்டிகள், ஓர்பால் ஈர்ப்பு அழகன் போட்டிகள் என இன்னொரு வகை இளஞ்சிவப்பு வருமானம் இப்போது பெருகிக் கொண்டு இருக்கிறது. பெண்மை நிறைந்த ஆண்கள் திருநங்கைகளாக மாற அல்லது ஆண்மை நிறைந்த பெண்கள் திருநம்பிகளாக மாற, உலகம் முழுதிலும் எண்ணிறந்த மருத்துவமனைகள் இருக்கின்றன. ஆக, மருத்துவத்தொழிலிலும் இளஞ்சிவப்புப்பணம் ஒரு குறிப்பட்ட இடத்தைப் பெறுகிறது. மூன்றாம் பாலினத்துக்கென மேக்கப் சாமான்கள், உடைகள், நகைகள், காலணிகள் என இளஞ்சிவப்புப் பணம் புரளும் இடங்கள் பலப்பல ஆகும். இதையெல்லாம் தாண்டி, இசை மூலம் கிடைக்கும் மூன்றாம் பாலின வருமானம் பல கோடிகளில் இருக்கிறது. உலகின் தலைசிறந்த பாப் பாடகி மடோனா, லேடி காகா போன்றோரின் மூன்றாம் பாலின இசை வட்டுக்கள், உலகம் முழுதும் மிகப் பிரபலமாகி, நிறைய இளஞ்சிவப்பு வருமானத்தை ஈட்டுகிறது. திரைத்துறையிலும், இப்போதெல்லாம் நிறைய மூன்றாம் பாலினப் படங்கள் வெளிவந்து ஒரு குறிப்பிட்ட இளஞ்சிவப்பு வருமானததை அள்ளிக்கொண்டு போகின்றன. மூன்றாம் பாலினப் புத்தகங்கள், செய்தித்தாள்கள் என இன்னொரு வகை வருமானத்திலும் இளஞ்சிவப்பு நிறம், தனது தனிப்பட்ட முத்திரையைப் பதித்து வருகிறது. சரி, இளஞ்சிவப்புப் பணத்தைக் கவர, உலகின் பல நிறுவனங்கள் என்ன உத்திகளைக் கையாளுகின்றன என நாம் இனி பார்ப்போம்.        

உலகில் உள்ள அத்தனை வங்கிகளும், பில்லியன்களில் இருக்கும் இளஞ்சிவப்புப் பணத்தின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறது என்பது கண்கூடு. அந்தப் பணத்தை, தங்கள் வங்கிகளில் சேமிப்பாய்ப் பெற, பல கவர்ச்சித் திட்டங்களை, இந்த வங்கிகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. மூன்றாம் பாலினம் நடத்தும் பல்வேறு விழாக்களுக்கு, விளம்பர ஆதரவு தருவது, பண ஆதரவு தருவது, தங்கள் வங்கிகளில் மூன்றாம் பாலின மக்களுக்கு வேலை தருவது, தங்கள் வங்கிகளில் வேலை பார்க்கும் மூன்றாம் பாலினம், மற்ற பாலினங்களைப் போல சுயமரியாதையுடன் வேலை பார்க்க வழி செய்வது, தங்கள் வங்கிகளில் வேலை பார்க்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு, மூன்றாம் பாலினம் குறித்த முறையான அறிவைக் கற்றுத்தர திட்டங்கள் தீட்டுவது போன்ற பல வழிகளில், மூன்றாம் பாலினத்தை, வங்கிகள் கவர முயற்சி செய்கின்றன. அமெரிக்கன் வங்கி, கிரடிட் சுவிஸ் வங்கி, JP மார்கன் வங்கி போன்ற பல வங்கிகளை நாம் இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். வங்கிகள் மட்டுமல்ல, வங்கிகளுக்கு சேவை செய்யும் டாடா கன்சல்டன்சி, காக்னிசன் போன்ற இந்திய நிறுவனங்களும், IBM போன்ற உலக நிறுவனங்களும், மூன்றாம் பாலினத்தை சேர்த்துக் கொள்ளும் Gender Inclusive போன்ற பல திட்டங்களை, தத்தம் நிறுவனத்தில் வைத்து இருக்கின்றன. மூன்றாம் பாலினச் சுற்றுலாத் துறையில், பல சுற்றுலா நிறுவனங்கள், இப்போது வர்த்தகம் செய்து கொண்டு இருக்கின்றன. இந்த சுற்றுலா நிறுவனங்கள் அனைத்தும் சேர்ந்து, IGLTA (International Gay and Lesbian Travel Association) என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி, இளஞ்சிவப்பு பணத்தை, பல்வேறு வழிகளில் கவர முயற்சி செய்கின்றன. பல நாடுகளில், பாரம்பரியத்தை மட்டுமே போற்றும் சமூகங்கள், மூன்றாம் பாலினத்தை, இன்னும் முற்றிலும் ஏற்றுக் கொள்ளாததால், சுற்றுலாத் தளங்களில் பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக இன்னும் இருந்துகொண்டுதான் இருக்கிறது. மேலே சொன்ன, IGLTAவின் முக்கிய நோக்கம், இந்தப் பாதுகாப்பைத் தந்து, அதன் மூலம் இளஞ்சிவப்பு பணத்தைக் கவர்வதே.

முகநூல், வாட்சப், ட்விட்டர் போன்ற ஊடகங்கள் இருந்தபோதும், மூன்றாம் பாலின மக்கள் பரஸ்பர உணர்வை பரிமாறிக்கொள்ளும் நோக்கில், பல Apps போன்ற கணினிச் செயலிகள், இப்போது வணிகச் சந்தையில் வந்து இருக்கின்றன. ஆன்லைன் வர்த்தகத்தில், மூன்றாம் பாலினம் சார்ந்த பொருட்களை விற்க, பல வலைத்தளங்கள் இப்போது செயல்பட ஆரம்பித்து விட்டன. கூடவே, மூன்றாம் பாலின மக்கள் விளையாடுவதற்கென, பல ஆன்லைன் விளையாட்டுக்கள் இப்போது உருவாக்கப்பட்டு உள்ளன. கோக் போன்ற பல பானங்களின் லேபல்களில், மூன்றாம் இன ஆதரவு விளம்பர வார்த்தைகள் சேர்த்துக் கொள்வது, இப்படி பலபல வியாபார உத்திகளை நாம் இங்கே பட்டியல் இட்டுக்கொண்டே போகலாம். ஆனால், இது போன்ற நிறுவனங்களின் விளம்பரங்கள், மூன்றாம் பாலினத்துக்கு நன்மை பயக்கின்றனவா என்பதில் பல்வேறு மாறுபட்ட கருத்துக்கள் மூன்றாம் பாலின மக்களிடையே நிலவுகின்றன. சிலர், இது போன்ற விளம்பரங்களை, நிறுவனங்கள், போலியாகக் காட்டும் இளஞ்சிவப்புச் சலவை (Pink Washing) என்று குற்றம் சுமத்துகின்றன. இந்த இளஞ்சிவப்புச் சலவை குறித்தும் இனிமேல் பார்ப்போம்.

இப்போதுதான் மூன்றாம் பாலினத்தை, உலகம் ஓரளவிற்கு ஒத்துக்கொள்ள ஆரம்பித்து இருக்கிறது. அப்படியிருக்க, அந்தப் பாலினத்துக்கென தனி நுகர்வுப் பொருட்கள், அந்தப் பாலினம் மட்டுமே தங்க தனி இடங்கள், தனிச் சுற்றுலாக்கள் என அமைத்துத்தருவதால், அந்த மூன்றாம் பாலினம், ஆண் பெண்ணில் இருந்து தனிமைப்பட்டு விடாதா என்பது, சில சமூக ஆர்வலர்களின் கேள்வி. பல நிறுவனங்கள், தங்கள் பொருட்களை விற்க மட்டுமே மூன்றாம் பாலின மக்களை உபயோகித்துக் கொண்டு, ஆனால் அதே நேரத்தில், அவர்களது உண்மையான முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டாமல் இருப்பதையே, பிங்க் வாஷிங் அல்லது இளஞ்சிவப்புச் சலவை என்று சொல்லப்படுகிறது. இது போன்ற ஏமாற்று வேலைகள், முன்னேறிக் கொண்டிருக்கும் இந்தப் பாலினத்திற்குச் செய்யும் அநீதி எனக் குரல் எழுப்பவர்களும் உண்டு. இந்தக் குறை தீர, நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்? மூன்றாம் பாலினத்தை ஆதரித்து, அதன் மூலம் வருமானம் பெரும் நிறுவனங்கள், அந்தப் பாலினத்துக்கென வேலை வாய்ப்புகள் உருவாக்குவது, மற்ற ஆண் பெண்களோடு இணைந்து பழகும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பது, தற்கொலை, போதைப்பொருள் புழக்கம் போன்ற எதிர்மறையான பழக்கங்களில் இருந்து, மூன்றாம் பாலினம் மீண்டு வர, பல கருத்தரங்குகளை ஏற்று நடத்துவது, AIDS போன்ற பால்வினை நோய்களின் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, கல்வி விளையாட்டு போன்ற துறைகளில் மூன்றாம் பாலினத்தை முன்னேற்றுவது போன்ற பல ஆக்கபூர்வமான விசயங்களில், மேலே சொன்ன நிறுவனங்கள் தங்களை முடிந்தவரை உண்மையாக ஈடுபடுத்திக்கொண்டால், நிறுவனங்களின் பார்வை, இளஞ்சிவப்புச் சலவையாக சமூகம் பார்க்காது. இப்படிச்செய்தால் மூன்றாம் பாலினமும் முன்னேறும், நிறுவனங்கள் அடையும் இளஞ்சிவப்பு லாபத்திலும் ஒரு நியாயம் இருக்கும் என்பது எனது தாழ்மையான எண்ணம்.

வளரட்டும் மென்மேலும் இளஞ்சிவப்புப் பணம்.

அழகர்சாமி சக்திவேல்         

Series Navigationபார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *