கௌசல்யா ரங்கநாதன்
……….
மூன்று மாதங்களாய், ராத்தூக்கம், பகல் தூக்கம் தொலைத்து, மனத்தளவில் நரக வேதனையை அனுபவித்து வந்த எனக்கு, அன்று காலை முதலே மன பாரம் வெகுவாய் குறைந்தாற் போலிருந்தது..கையில் காபியுடன் வந்த
என் மனைவி ஜானகி “இப்பத்தான் உங்க முகத்தில் கொஞ்சம் தெளிவு பிறந்தாற் போலிருக்கு” என்ற போது கேட்டேன் “ஆனா உன் முகத்தில் இன்னம் பழைய மலர்ச்சி காணப்படலையே, ஏன்?” என்று..
“எப்படிங்க? எப்படி அந்த அவமானகரமான விஷயத்தை மறக்கறதாம்?” என்னால முடியலைங்க, என்ன முயன்றும்…என்ன செய்யறது?”
“மறந்துதான்மா ஆகணும்.”இதுவும் கடந்துபோம்ன்ற” மன நிலையை உருவாக்கிக்கணும்..”ஸ்திதபிரதிக்யனா”
..”ஸ்திதபிரதிக்யன்னா” மகிழ்ச்சி வரப்ப, துள்ளிக் குதிக்காமலும், துன்பம்
வரப்ப துவண்டு போகாமலும் இருக்கிற ஒரு “ஸ்டேடஸ்”..அதாவது அப்படி ஒரு
பாலன்ஸ்ட் மைண்டை
உருவாக்கிக்கிறது ரொம்ப கஷ்டம்தான்..ஆனா வேற
வழியில்லை..வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் ஏற்படற நிகழ்ச்சிகளிலிருந்து நாம்
கத்துக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு..நான் ஒண்ணும் தேவன் இல்லைதான்..என்
மனசுக்குள்ளயும் அந்த தீராத அவமானகரமான நிகழ்ச்சி அப்பப்ப வந்து, வந்து
போகுதுதான்..எல்லாத்தையும் புறம் தள்ளிட்டு,நம்ம வேலையை மட்டும்
பார்த்துக்கிட்டு போகணும்” என்றேன் அவளிடம்.
என் மனம் பின்னோக்கி சென்றது அந்த கருப்பு நாளை நோக்கி..மளமளவென என்னனவோ நடந்து விட்டது, நாங்கள் சற்றும் எதிர்பார்க்காமல்.
“சார்..உங்களுக்கு
புத்தி சொல்ற அளவுக்கு இங்கே யாருக்கும், வயசோ, அனுபவமோ
இல்லை..ஆனாலும்..ஆனாலும்..” என்றவர்களிடம் “நீங்க சொல்றது நூத்துக்கு, நூறு
உண்மை..யானைக்கும் ஆடி சறுக்கும்பாங்கள்ள..அப்படித்தான் ஆயிடுச்சு
எங்க நிலைமை” எனும்போதெல்லாம், அவர்கள் எதுவும் பேசாமல் எங்களை கடந்து போய்
விடுவார்கள்..அவர்கள்தான் வேறென்ன செய்ய முடியும்..”விதி வலிது” என்ற
சொற்றடர்
நினைவுக்கு வந்தது..”வேதனைதான் வாழ்க்கை என்றால்” என்ற பாடல் நெஞ்சில் அலைமோதியது.. மனம் பின்னோக்கி,பின்னோக்கி….
நான்
ஓய்வு பெற்ற அரசு ஊழியன்..வயது 79 கடந்தவன்..மனைவியும் 75 கடந்தவள்..பணி
ஓய்வுக்கு பிறகு, டெல்லியில் அரசுப் பணியில் இருக்கும் மகன், மருமகள்,
பேரக்குழந்தையுடன் அங்கே போய் செட்டிலாகி, அவர்களுக்கு தொந்திரவு கொடுக்க
விரும்பாததால், எங்கள்
எஞ்சிய காலத்தை சென்னையிலேயே கழிக்க எண்ணி, வாடகைக்கு ஒரு ஃபிளாட் பிடித்துக் கொண்டு, வெளியில்கூட அதிகம் போகாமல்
நாட்டு
நடப்புகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள் எல்லாம்
தொலைக்காட்சியில் பார்ப்பதுடன் நிறைய, நிறைய நாள் முழுவதும் எதையாவது
படித்தவாறே இருப்பது என் சுபாவம்..என்னைப் போலவே என் மனைவியும்
வீட்டுக்குள்ளேயே இருந்துகொண்டு
துறுதுறுவென ஏதாவது வேலை செய்து கொண்டே
இருப்பாளேயொழிய, அங்குள்ள 50 ஃபிளாட்வாசிகளிடமும் எதுவும் பேச
மாட்டாள்..அங்குள்ளவர்களும் எங்கள் வயது கருதி, அதிகம் பேச விரும்பாமல்,
“குட் மார்னிங்க்..குட் ஈவினிங் சார்/மாடம் என்று ஒரு புன்னகையுடன்
எங்களை
கடந்து விடுவார்கள்.சில சமயங்களில் ஒருவரையொருவர் எதிர், எதிராய் பார்க்க
நேரும்போது மட்டுமே, “அம்மா நல்லா இருக்கீங்களா? ஐயா,நல்லா இருக்காரா?”
என்று சம்பிரதாய நிமித்தம், ஒரு புன்னகையுடன் கேட்பதுண்டு .. இரண்டு,
மூன்று மாதங்களுக்கொரு முறை
மகன் டெல்லியிலிருந்து வந்து, “ஏன் இப்படி உங்க வயசான காலத்தில் தன்னம்தனியாய், எந்த நாதியுமில்லாமல் இருக்கணும்..பார்க்கிறவங்க
என்னைத்தானே
குத்தம் சொல்வாங்க, வயசான பெற்றோரை தனியா விட்டுட்டு டெல்லியில் நாங்க
ஜாலியாய் இருக்கறதா?” எனும்போதெல்லாம் கூட நான், “சொல்றவங்க, சொல்லிட்டு
போகட்டும்..எங்களுக்கு டெல்லி,அதன் கிளைமேட்,அப்புறம்,அப்புறம் மொழினு
இப்படி
பல விஷயங்கள் ஒத்துக்காது. தவிர இங்கே என்ன குறைச்சல்? காலாகாலமா பழகின ஊரு.பொழுதுபோக்க, பார்க்,சினிமா, சபா கச்சோ¢கள்,
சுற்றுலா
தலங்கள், டாக்டர் வசதி, திருக்கோவில்கள் etc..etc..அது
மட்டுமில்லை..நாங்க ஆரோக்கியமாய்த்தான் இருக்கோம்..இன்னொண்ணு டெல்லி என்ன
சந்திர மண்டலத்திலா இருக்கு?அதைக் கூட இப்ப இருக்கிற விஞ்ஞான உலகத்தில்
சுலபமா கடந்துடலாம்..
ஒரு செல்போன் கால் கொடுத்தா அடுத்த 3/4 மணி நேரத்தில் சென்னைக்கு நீ வந்துட முடியும் மை டியர் சன்” என்பேன்..
“ஒத்துக்கிறேம்பா..ஆனா
இப்ப இருக்கற ஃபிளாட் கலாசாரத்தில், பக்கத்து ஃபிளாட்டில் கூட யார்
இருக்காங்கன்ற விபரமே விளங்காதப்ப, ஒரு அவசரம்னா என்ன பண்ணுவீங்க”?
என்றவனிடம் “ஏன்
இப்படி நெகடிவாவே பேசறே..அட்வெர்ஸா எதுவும் நடக்காது..விடு..இன்னொண்ணுபா..இன்னைய அதிவேக உலகத்தில் அவனவனுக்கு அவனவன் பிரச்சினையே தலைக்கு மேலிருக்கு..டென்ஷன்
நிறைந்த
வாழ்க்கை..அதிகாலை 5 மணிமுதல், இரவு படுக்கப் போற 12/1 மணிவரை செல்போன்,
வாட்ஸபே வாழ்க்கைனு ஆயிருச்சு..நாங்க சீனியர் சிடிசன்ஸ்..இன்றைய
தலைமுறையினருக்கு
எங்க கிட்ட பேச என்ன சுவாரசியாமான விஷயம் இருக்கு
சொல்லு..அப்படி எதையாச்சும் பேச தயக்கம்கூட காரணமாய் இருக்கலாம்..இன்றைய
இளைஞர்கள், நடுத்தர வயதினர்னு எல்லாருமே சுயநலவாதிகள்னு
சொல்லிட முடியாதுன்றதை சமீபத்தில் பெய்த பெருமழை, வெள்ளம் நிரூபிச்சிருக்கு..பொறுப்பில்லாத இளைஞர்கள்னு எண்ணியிருந்த நினைப்பு மாறிப்போச்சு..ஸ்வாமி விவேகானந்தர் சொன்னாராமே,
துடிப்பும்,
இளமையும், நிறைஞ்ச 100 இளைஞர்களை எங்கிட்ட கொடுங்க..நான் இந்த நாட்டின்
தலைவிதியையே மாத்திக் காட்டறேன்னு..அப்படிப்பட்ட ஒரு தலைமுறை
உருவாகிக்கிட்டிருக்குனு எனக்கு தோணுது..இது காலப்போக்கில் சாத்தியமாகலாம்”
என்ற என்னைப் பார்த்து,
“என்னவோ செய்யுங்கப்பா..ஆனாலும் உங்க
மனோதிடம் என்னை, என்னை மட்டுமில்லை, உங்க மருமகளையெல்லாம் வியக்க
வைக்குது..அந்த காலம் முதல் இன்னைய காலம் வரை நீங்க, நீங்கனா,
அம்மாவும்,
நீங்களும்தான் தானுண்டு, தன் வேலையுண்டுனு, யார் வம்பு,தும்புக்கும்
போகாம இருந்தவங்க..இன்னைக்கும் அப்படியே இருக்கறவங்க..எப்பவாவது யாராச்சும்
ஒருவர்,இன்னொருத்தரைப்பத்தி,
வம்பு பேச வீடு தேடி வந்தாக்கூட
சாமர்த்தியமாய், வந்தவங்க முகம் கோணாம, கட் பண்ணி அனுப்பிடுவீங்க..யார்
வீட்டில என்ன நடக்குது, அரசியல் கட்சிகளில் என்ன நடக்குது,உலகம் பூரா என்ன
நடக்குது, தங்கம் விலை ஏன் இப்படி எகிறுது, அப்புறம்
சினிமா/சின்னத்திரை
கிசு,கிசுக்களை ஊதி, பெரு நெருப்பாக்கி, குளிர்காயற, இன்னைய உலகத்தில்
உங்களை போல உள்ளவங்க ஜெம்..ஆமாம்பா..நன்முத்துக்கள்தான்..” என்று புகழாரம் சூட்டினான் மகன்..இது என்னவோ எனக்கும்,என் மனைவிக்கும்
இயற்கையாகவே அமைந்த சுபாவம்..இந்த வளாகத்தில் நாங்கள் குடி வந்த பிறகும் கூட இது தொடர்கிறது..யாராவது எங்களைப் பார்த்து
“நமஸ்தே,
“குட் மார்னிங் சார்”, “வணக்கம் ஐயா” என்றால் நாங்களும் அதையே திருப்பி
சொல்வோம்..வெற்று புன்னகை உதிர்த்தால் நாங்களும் அப்படியே செய்வோம்..இது
தவிர நாங்கள் குடியிருக்கும் எங்களது
வளாகத்தில் உள்ள 50
ஃபிளாட்டுகளிலும் யார், யார் இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? இவ்வளவு
ஏன் அவர்கள் பெயர்களைக்கூட அறிந்து கொள்ள விரும்பவில்லை..”அவரவர்
வாழ்க்கையில்” என்று தொடங்கும் பாடலே நினைவுக்கு வரும் அப்போது..மாதாமாதம்
வளாக நிர்வாகம்
பார்ப்பவர் ஒருவர் வந்து மாத செலவு தொகையை வாங்கி
செல்வார்..தவிர, குழாய் அடைப்பு, தண்ணீர் வரவில்லை என்பது போன்ற வஷயங்களைக்
கூட இன்டர்காம் மூலம் maintenance பார்ப்பவர்களிடம் சொன்னால்
பழுது
பார்க்கப்படும்..சுருக்கமாக சொன்னால் நாங்கள் ஒரு தவ வாழ்க்கையை, வட
மொழியில் சொல்வார்களே “வானப்பிரஸ்தம்” என்று..அப்படி வாழ்ந்து
கொண்டிருக்கிறோம்.இப்படியிருக்கையில்தான், ஒருநாள், எதிர்பாராத சம்பவம் ஒன்று நடந்து நிலைகுலைய வைத்துவிடும் எங்களை,
என்று
நினைத்துக் கூட பார்க்கவில்லை..என்ன செய்வது? “விதி வலிது”.எந்த தவறுமே
நாங்கள் செய்யாத போதும், ஏன் வீண் பழி எங்கள்மீது சுமத்தப்பட்டு, அந்த
வளாகத்தில் இருப்பவர்கள்,
அக்கம், பக்கம் வசிப்பவர்கள், தெருவில்
போவோர், வருவோர் எல்லாம் வேடிக்கை பார்க்குமளவுக்கு கொண்டுபோய் விட்டது
அந்த நிகழ்வு!! அது மட்டுமா? எத்தனை ஏச்சு, பேச்சுக்கள், எங்கள் காதுபடவே,
“இவங்களா, இவங்களா, இப்படி நடந்துக்கிட்டாங்க..நம்பமுடியலையே!
“வயசாயிருச்சு.பொழுது
போகலை.வீட்டில் கண்ட்றோல் பண்ண மகன், மகள்னு யாருமில்லை..வாய் புளிச்சதோ,
மாங்காய் புளிச்சதோனு..ஊம்..அதெல்லாம்கூட இல்லை.. கைநிறைய பென்ஷன்
வருதுல்ல..பத்தாதற்கு பிள்ளையாண்டான் வேற டெல்லியிலியிருந்து அள்ளி
கொட்டறான் பணமாய்..அதான் ஊர் வம்பு எங்கே, எங்கேனு இப்படி கிடந்து
அலையச்சொல்லுதோ இதுங்களை..வயசானாலே புத்தி தடுமாறிடுமோ!இதுங்க
ஏன் மகன் கூட போய் இருக்கக்கூடாது?வயசான காலத்தில் இங்கே ஏன் தனியா இருக்கணும்?பிள்ளை, மருமக கூட ஒத்துக்கலையா?”
“எப்படி ஒத்துக்கும்..ஒத்துக்கும்னேன்..எங்கே
இருந்தாலும் இதுங்க சிண்டு முடிஞ்சு விடும்..யார்தான் வச்சுப்பாங்க
இதுங்களை..நின்னா குத்தம், உட்கார்ந்தா குத்தம்னு டார்ச்சர் பண்ணும்போல
இருக்கு மருமகளை..அப்படியிருந்தா இதுங்களை எந்த மருமகதான் வச்சுக்குவா
அவங்க
வீட்டில்?வயசானாலே புத்தி மழுங்கித்தான் போயிடும்போல இருக்கு..ஆனாலும்,
பிள்ளை பாசமாய் இருக்காப்பலத்தான் தோணுது.அதான் அடிக்கடி
டெல்லியிலிருந்து,தன் வேலையையெல்லாம் விட்டுட்டு இதுங்களை வந்து
பார்த்துட்டு போறாப்பல..”
“ஒ..அதான் இந்த காம்பவுண்ட்ல இருக்கற யாரும் இதுங்க கூட பேசறதில்லையாக்கும்?”என்றபோது,
“ஊம்.இதுங்க ஏன் இன்னொரு குடும்பத்தில பூந்து அவங்க சொந்த விஷயத்தில் தலையிட்டு,பெத்தவங்க,பிள்ளைக்கு நடுவால சிண்டு முடிஞ்சு
விடணும்..எத்தனை
நாட்காளாய் இப்படி நடக்குதோ, அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்….எத்தனை
குடிகளை கெடுத்தாங்களோ இதுவரை..ஆனா இன்னைக்கு வசமாய் மாட்டிக்கிச்சுங்க,
இரண்டும்..அந்த பிள்ளையாண்டான்
அவங்க வீட்டுக்குள்ளாறவே தடாலடியா
நுழைஞ்சு நாக்கப் பிடுங்கிக்கிறாப்பல ஊர் மொத்தமும் கூடியிருக்கிறப்ப
கேள்வி மேல் கேள்வியா கேட்டுட்டான்ல..”ஏன்யா உன் வீட்டை, அங்கே நடந்தை
பார்த்தும் உனக்கு புத்தி வரலையா இன்னமும்?இதையெல்லாம் கொஞ்சமும் நினைச்சு
பார்க்காம, எங்க வீட்டுக்குள்ளாற நுழைஞ்சு எங்களுக்கு புத்தி சொல்றீங்க?உங்களுக்கு வெட்கமாயில்லைனு..தூனு,,துப்பாத குறையா..சே..”
“ஓ!அதான்
சொல்லாம, கொள்ளாம வேற இடத்துக்கு குடி போயிட்டாங்க..வாடகைக்கு
இருக்கிறவங்கதானே..இதுவே சொந்த வீடா இருந்தா, இப்படி போக முடியுமா
என்ன?போயிருக்கிற இடத்திலாச்சும் அடுத்தவன் வீட்டு
விஷயத்தில் தலையிடாம வாயைக்கையை மூடிக்கிட்டு, அமைதியாய் இருந்தா நல்லது..வயசானவங்கன்றதாலஅடிக்காம விட்டாங்க..சே..”
இப்படி
பல,ஏச்சு,பேச்சுக்கள் எங்களைப்பற்றி, சகட்டுமேனிக்கு..எதையுமே தீர, இரண்டு
பக்கங்களிலும் கேட்காமல்..நீதி மன்றத்தில் கூட குற்றவாளி கூண்டில்
நிற்கும் ஒருவன் மேல் சுமத்தப்பட்ட குற்றம்
சாட்சியங்களுடன்
நிரூபிக்கப்பட்ட பின்பும் கூட நீதிபதி கடைசியாய் குற்றவாளியை பார்த்து “நீ
ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?” என்றொரு வாய்ப்பு கொடுப்பது வழக்கம்..ஆனால்
எந்த குற்றமும்
செய்யாத எங்கள் தரப்பு வாதத்தை செவி மடுக்க
சம்பந்தப்பட்டவர்களோ, மற்றவர்களோ தயாராயில்லை..ஏனெனில் நாங்கள்
வயதானவர்கள்..வேலை,வெட்டி இல்லாமல்,பொழுது போகாமல்தான் மற்றவர்
விவகாரங்களில் தலையிடுகிறோம்
என்றதொரு தவறான எண்ணம் எங்கள்மீது..தட்டி கேட்கவும் எங்கள் தரப்பில் யாரும் அருகில் இல்லை..
நினைத்து
பார்க்கிறேன்..நாங்கள் செய்த மிகப்பொ¢ய தவறே அடுத்த வீட்டு பெண்மணி,
இதுநாள் வரை எங்களிடம் ஒரு சில வார்த்தைகள் கூட அவரோ, அவரது கணவரோ
பேசாதவர்கள், அன்று ஏன்
திடீரென எங்கள் ஃபிளாட் கதவை, அதுவும், அவர்கள்
ஒரே பிள்ளையாண்டான் வேலைக்கு சென்ற பிறகு, தட்டி, கதவை நாங்கள் திறந்ததும்
ஹோவென அழ ஆரம்பித்திட, நாங்கள் அவருக்கோ,
அவரது கணவருக்கோ ஏதோ உடல்நல
குறைவு போலும் என்றெண்ணி, மனிதாபிமான அடிப்படையில், “என்னம்மா, என்ன
விஷயம்? ஏன் அழறீங்க?உள்ள வாங்க” என்ற போதுகூட
அவர் விசும்பிக்கொண்டே இருந்தார் வாயிலில் நின்று கொண்டே..
இதற்குள்
ஜானகி வாயிற்பக்கம் வந்து “வாங்கம்மா, உள்ள வாங்க..ஏன் அழறீங்க?
என்னாச்சு, என்ன பிரச்சினை? எதுவாயிருந்தாலும் அழாம சொல்லுங்க..எங்களால்
முடிஞ்சதை நாங்க செய்யறோம்”
என்ற பிறகுதான் அந்த பெண்மணி (அவருக்கே 60+
இருக்கலாம்) எங்கள் வீட்டுக்குள் வந்து தண்ணீர் குடித்து கொஞ்சம்
ஆசுவாசப்படுத்திக்கொண்டு, “நான் என்னத்தனு சொல்வேன்? எங்க
சொந்தக்காரங்க
கிட்ட சொன்னாக்கூட எங்களைத்தான் காறி உமிழ்வாங்க..கிட்டத்தட்ட எங்க
வயசையொத்த, எந்த வம்பு, தும்புக்கும் போகாத உங்களை என் அண்ணன்,அண்ணியா
நினைச்சு
என் மனபாரத்தை கொஞ்சம் இறக்கி வைச்சு ஆறுதல் தேடிக்கலாம்னு”
என்ற அந்த பெண்மணி “உங்களை தொந்திரவு பண்ணிட்டேனோ?” என்ற போது நான் “not at
all ..சொல்லுங்க..உங்களவருக்கு ஏதாச்சும் உதவி தேவைப் படுதா?இல்லை
உடல்நலக் கோளாறா?
டாக்டர்கிட்ட போகணுமா? இல்லை உங்களுக்கு ஏதாச்சும் ஹெல்ப் தேவையா?” என்ற போது சற்றே மௌனம் காத்தார்..
நான்
கூட அதிகப்படியாய் எதையோ கற்பனை பண்ணிக்கொண்டு அந்த அம்மாவிடம் பேசி
விட்டனோ இன்று..அதுவும் இத்தனை நாட்களாய் சில வார்த்தைகள்,அதுவும்
ஃபார்மாலிடீஸ் சேக்கூட, பேசவோ, ஒரு புன்னகையைக்கூட
உதிர்க்காதவர்களிடம்
என்றும் தோன்றியது..அது மட்டுமா? அந்த அம்மாவின் கணவர் பெயர் என்ன? எங்கே
வேலை பார்த்தார்? அரசு உத்தியோகமா? தனியாரா? ஓய்வூதியம் உண்டா?
அல்லது
பிசினஸா? பிள்ளை, குட்டிகள், உண்டா? அவர்கள் எங்கே இருக்கிறார்கள்?
அவர்களுக்கு திருமணமாகி விட்டனவா? இந்த அம்மா பெயர் என்ன? இவர்கள்
இருவருக்கும் உறவினர்கள் உண்டா?
என்றெல்லாம் இதுவரை
கேட்டதில்லை..கேட்கவும் விழையவில்லை.. ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே, இதுதான்
எங்கள் சுபாவம்..யா¡¢டமும் அனாவசியமாய் பேசுவதில்லையென..எங்கள்
இருவர்
உலகமும் தனி..அதிகாலையில் எழுந்து, மனைவிக்கு கூடமாட வேலை செய்து, காபி
குடித்து, தொலைகாட்சியில் ஆன்மீக நிகழ்ச்சிகள் பார்த்த பிறகு, அன்றைய
செய்திதாளை ஒரு இன்ச்
விடாமல் படித்து, காலை 10 மணி சுமாருக்கு
குளித்து, பூஜை செய்து, மதிய உணவுண்டு, சற்றே தலை சாய்த்த பிறகு, மாலை 4
மணி சுமாருக்கு 2 கி,மீ. தொலைவில் உள்ள நூலகம் சென்று நிறைய
படித்தபிறகு
அருகில் உள்ள என் இஷ்ட தேவததை வினாயகப்பெருமானை வணங்கி வீடு திரும்பி இரவு
உணவுண்டு டி.வி. நிகழ்ச்சிகள் பார்த்து 11 மணி சுமாருக்கு படுக்க
செல்வோம்..இது என்
ரொடீன் வாழ்க்கை..என் மனைவியும் துருதுருவென ஏதாவது
செய்தவாறே இருப்பாள்..ஒருபோதும் சோம்பி பார்த்ததில்லை நான்.அவளுக்கும்
யாருடனும் வம்பு பேச பிடிக்காது..ஃபிளாட் கதவை திறந்து கொண்டு வெளியேகூட
வர மாட்டாள்..எப்போதாவது மகன், மருமகள், பேரன் இங்கு வந்தால் மட்டுமே அவர்களுடன் ஹோட்டலுக்கோ, ஷாப்பிங், கோவில்களுக்கோ
செல்வோம்..மற்றபடி,அனாவசியமாய்,வெளியில் சுற்றுவது கூட எங்களுக்கு பிடிக்காது..உடல்நிலையும் வேறு இடம் தரவில்லையென்பதால்..
ஆனால்
அன்றுதான் முதன்முதலாய் அந்த பக்கத்து வீட்டம்மாள் எங்கள் ஃபிளாட்டுக்குள்
வந்து விசும்பிட,விதி விளையாட்டு காட்ட ஆரம்பித்திருக்கிறது எங்களிடம்
என்றுணராமல் “என்னம்மா,ஏன் அழறீங்க?
என்ன பிரச்சினைனு சொல்லுங்க?”
என்றோம்.. அந்தம்மா சொல்ல ஆரம்பித்தபோது ஜானகி என்னையும் உடன் இருக்க
சொன்னாள்..சற்றே தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளட்டும்..பிறகு அந்தம்மாவாக
சொல்லட்டும் என்றிருந்தோம்..
“இந்த காலத்தில் பிள்ளைங்க/பெண்கள் கூட
பெத்தவங்களை பத்தி கவலைப்படாம இருக்கச்சொல்ல நீங்க, எங்களையும்விட
வயசானவங்க எங்களுக்கு ஆறுதல் சொல்ல நினைக்கிறீங்களே,
you are really
great என்றவர் “எனக்கோ, எங்க வீட்டுக்காரருக்கோ எதுவுமில்லை..ஆனா!
ஆனா!..சொல்லவே நா கூசுது..அவமானமாய் இருக்கு..எங்க சொந்தக்காரங்களுக்கு
தொ¢ஞ்சா எங்க முகத்திலகூட
விழிக்க மாட்டாங்க..ஏன்தான் கடவுள் எங்களை, வயசான காலத்தில் இப்படி சோதிக்கிறாறோ, தொ¢யலை.” என்ற போது, நான் ஊடால்
புகுந்து கேட்டேன்”உங்க மகன் கிட்ட சொல்ல வேண்டியதுதானே என்ன பிரச்சினைனு?”என்றபோது,
“பிரச்சினையே
மகனால்..அண்ணா, அண்ணி, எங்களுக்கு ஒரே மகன்..வயசு 30 கிட்டத்தட்ட
ஆகுது..நல்லா படிக்க வச்சோம் எங்க சொற்ப வருமானத்தில்..எங்களவர்..ஊம்..ஒரு இடத்தில்கூட நிலையான வேலையில் இல்லை..எப்பவும்
கஷ்டம்தான்..நான் நாலு வீடுகளில் வேலை செஞ்சு குடும்பத்தை காப்பாத்தினேன்..பிள்ளையையும் நல்லா படிக்க வச்சோம்..நல்ல வேலையும்,
கை
நிறைய சம்பளத்தில் கிடைச்சது..சொந்தத்தில் பெண் கொடுக்க நிறையபேர்கள்
இருக்காங்க..இதுவரை நாங்க கிழிச்ச கோட்டை தாண்டாத, எங்க முன் நின்னு கூட
பேசத்தயங்கற எங்க
பிள்ளையாண்டான் இப்ப..யாரோ ஒரு பெண்ணை
விரும்பறானாம்..அந்தப் பெண்ணோட அப்பா, ஒரு கிராமத்தில்
செல்வாக்கானவர்..நிறைய சொத்து,பத்துக்கள் உண்டு..சாதியும் வேற..
மெல்ல,
மெல்ல இந்த விஷயம் அவங்க காதுகளுக்கு எட்ட, அவங்க தாம்,தூம்னு
குதிக்கிறாங்க..பெண்ணை கிராமத்தில் வீட்டிலயே பூட்டி
வச்சிருக்காங்களாம்..ஆனா எங்க பிள்ளையாண்டானும்,பெண்ணும், செல்போன்ல
பேசிக்கிறாங்களாம்..இது அவங்க காதுகளுக்கு எட்ட,
அவங்க “எங்களை ஏமாத்திட்டு, ஊரை விட்டு ஓடிப்போய், சாதி சனத்தை மதிக்காம நீங்க கலியாணம் பண்ணிக்கிட்டதா மட்டும் எங்க காதில
எட்டிச்சி,
நீங்க இந்தியாவுக்குள்ள எந்த மூலையில் போய் ஓடி, ஒளிஞ்சுக்கிட்டாலும்,
எப்படியாசும் கண்டு பிடிச்சு, உங்க இரண்டு பேர்களையும் கண்ட,துண்டமாய்
வெட்டி பலி போட்டுடுவோம்னு மிரட்டல் விட்டுட்டே இருக்காங்களாம்..
இதையும்கூட
எங்க பிள்ளைதான் எங்க கிட்ட சொல்றான்..எங்க ஈரக்குலையே
நடுங்குது..எங்களுக்கு மட்டும் எங்க சாதியை விட்டுட்டு இன்னொரு
சாதிப்பெண்ணை எங்க மகன் கலியாணம்
பண்ணிக்கிறதில் விருப்பமா என்ன? மகன்
கிட்ட சொல்லி பார்த்துட்டேன்.. “அட போம்மா..இந்த பூச்சாண்டி
காட்டறதுக்கெல்லாம் நான் ஒண்ணும் பயப்பட மாட்டேன்..இதுபத்தி,
தேவைப்பட்டா
போலீசில் புகார் கொடுத்து, அவங்க protection கேட்பேன்..எனக்கு நிறைய
நண்பர்களும், சப்போர்ட்டுக்கு இருக்காங்க? எந்த காலத்தில் இருக்காங்கம்மா
அவங்க, சாதி, மதம்னு சொல்லிக்கிட்டுனு ஒரு அசட்டு துணிச்சலில் இவன்
பேசறானோன்னு தோணுது..
ஆனா, பெத்தவங்களான நாங்க எப்படி நிம்மதியாய்
இருக்க முடியும்?ஏன்தான் பகவான் எங்களை இப்படியெல்லாம் சோதிக்கிறானோ?” என்ற
அந்த பெண்மணி “இப்பத்தான் முதல்,முதலாய்,இந்த மானக்கேடான
விஷயத்தை உங்க இரண்டு பேர்கள்கிட்ட மட்டும் பகிர்ந்துக்கிறேன், அதுவும் கூடப் பிறந்த பிறப்பா பாவிச்சுக்கிட்டு..சாதி,சனத்துக்குள்ளேயே,
பார்த்து,
பார்த்து கலியாணம் பண்ணி வச்சாலே கூட வர மருமக கொஞ்ச நாட்களிலேயே பையனை
தனிக்குடித்தனம் பண்ண அழைச்சுக்கிட்டு போயிடறாங்க..அதுவும் எங்களுக்கு இவன்
ஒருத்தனைவிட்டா வேற நாதியில்லை..எங்க வீட்டுக்காரரும்,
நானும் எங்க மிச்ச, சொச்ச காலத்தை எப்படி கழிக்கிறதாம்?நினைச்சாலே பயமாயிருக்கு”..என்றபோது எங்களுக்கு தோன்றியது..
ஒஹோ..இதுவும் கூட ஒரு காரணமாய் இருக்கலாம்.. ஆனாலும் அவர்கள் அச்சமும் நியாயமானதுதானே! என்றும் தோன்றியது..
“இப்ப,
இது விஷயத்தில் நாங்க என்ன செய்யணும்னு எதிர்பார்க்கிறீங்க?தவிரவும்,
இப்பல்லாம் யாரு சாதி வித்தியாசங்கள்ளாம் பார்க்கிறாங்க? அவனுக்கு
பிடிச்சிருக்கா, நீங்க கௌரவம் பார்க்காம
அந்த பெண் வீட்டுக்கு போய் ஏன் பெண் கேட்கக் கூடாது, அவங்க உங்களை அவமானப்படுத்தினாலும்னாலும்..”
“எப்படிங்க?
இது எப்படி சாத்தியாமாகும்? குலம்,கோத்திரம், படிப்பு, குடும்ப பின்னணினு
பார்த்து, பார்த்து பண்ணி வைக்கிற கலியாணங்களேகூட நாளடைவில் விவாகரத்து
வரை
போயிடுதே..இவங்க சாதி வேற..குடும்ப பின்னணிபத்தி கேட்கலை
யாரண்டயும்..நாங்க ஒத்துக்கிடறதா வச்சுக்கிட்டாலும் அவங்க கொலையே
பண்ணிடுவேன்னு மிரட்டல் விடறப்ப எங்க ஈரக்குலையே நடுங்குது..” என்ற அந்த
அம்மாவிடம் “த பாருங்கம்மா, நீங்க உங்க பையன் கிட்ட கூடியவரை
பேசிப்பாருங்க..அதே சமயம் உங்க சொந்தக்காரங்க, வெல்விஷெர்ஸ் மூலமாவும்
மைல்டா உங்க
பிள்ளையாண்டானுக்கு விளங்க வையுங்க..நாங்க எப்படி இதில்
தலையிட முடியும்”, என்று சொல்லிக் கொண்டிருக்கையிலேயே புயலென அந்தம்மாவின்
பிள்ளை எங்கள் ஃபிளாட் கதவை (அது திறந்தே இருந்தாலும்கூட) மெல்ல தட்டியோ,
அழைப்பு மணியை ஒலிக்கச்செய்தும்,
பிறகும், “May I come in ?” என்று கேட்டல்லவா வீட்டினுள் நுழைந்திருக்கணும்)ஆனால் எங்கள் அருகில் வந்தவன், அழுது கொண்டிருந்த
அவன் அம்மாவைப் பார்த்து, எங்களையும் முறைத்தபடி, “நினைச்சேன்..இப்படித்தான் ஏதாவதாகும்னு..ஏம்மா நம்ம வீட்டு சமாசாரங்களை ஒரு
அன்னிய ஆள்கிட்ட (பிளீஸ் நோட் “நாங்கள் “ஆளாம்”) முறையிடணும்? உங்களுக்கு வெட்கமாயில்லை? சே..உங்களை சொல்லி குற்றமில்லை..
இவங்கள்ள
,” உங்க வீட்டு விஷயங்களை பஞ்சாயத்து பண்ண எங்கிட்ட வராதீங்கனு சொல்லி
அனுப்பியிருக்கணும்..வேலை இல்லை..வம்பு தேடி அலையுதுங்கபோல, வயசான
காலத்தில் துன்னுட்டு மூலையில் முடங்கிக் கிடக்காம, யார் வீட்டில, என்ன
பிரச்சினைனு
காதை தீட்டி வச்சுக்கிட்டு அலையுதுங்க போல” என்று அவன்
எங்களை பேசிய போதுகூட, அந்தம்மாவை அவன் மேலும் வசைபாடக்கூடாதே என்று
நாங்கள் சும்மாயிருக்க, அந்தம்மாவோ திடீர் பல்டி அடித்தாள் நாங்களே
சற்றும்
எதிர்பார்க்காமல்..”நானா ஒண்ணும் இவங்க வீடு தேடி வரலைடா..இவங்கதான் ஏம்மா
கொஞ்ச நாட்களா ஒருமாதி¡¢ இருக்கீங்க? உங்க பிரச்சினை என்னனு கேட்டாங்க”
என்று. ஆடித்தான் போனோம், அந்தம்மா பதிலை கேட்டு..அதுவும் தன்னை
தற்காத்துக் கொள்ள..இது எவ்வளவு பூதாகாராமான விளைவுகளை இன்னொருத்தருக்கு
ஏற்படுத்தப் போகிறது என்றுணராமல்..அவன் எங்களை முறைத்தபடி,அதானே
பார்த்தேன்..ஏன்யா உங்க வேலையுண்டுனு நீங்க உண்டுனு இருக்க வேண்டியதுதானே, அதுவும் உங்க வீட்டுல என்ன நடந்ததுனும், அதை
இன்னையவரை
நீங்க மூடி மறைக்கிதும் எங்களுக்கு…..சே!” என்று அவன் சொல்ல, நாங்களும்
“த பாரப்பா ஒரு நிமிஷம் நாங்க சொல்றதையும் கொஞ்சம் கேட்டுட்டு அப்புறம் எது
வேணுமானாலும் பேசு” என்றோம்..
“என்னத்தையா கேட்கிறது? நாங்க ஒண்ணும்
உங்கம்மாவை இங்கே எங்க வீட்டுக்குள்ள கூப்பிடலை..அவங்களாத்தான் வந்தாங்கனு
பொய் மட்டும் சொல்லாதீங்க..எங்கம்மா வெகுளி..ஊர் வம்பு பேச
மாட்டாங்க”
என்றவன் விருட்டென அங்கிருந்து வெளியேறினான்..ஊரே கூடி நின்று எங்களை
பார்த்து கை கொட்டி சி¡¢த்தது..”ஏன் சார் உங்களுக்கு இந்த வீண்
பஞ்சாயத்தெல்லாம்? என்றனர்..
எங்கள் பிள்ளையாண்டான் வேற்று
சாதிப்பெண்ணை, அதுவும் அவளும், அவனும் ஒரே இடத்தில் வேலை செய்து
கொண்டிருந்த போது பார்த்து, காதல் வயப்பட்டு கலியாணம் செய்து கொள்ளப்
போகிறேன்பா”
என்ற போது “உனக்கு பிடிச்சிருந்தா நாங்க குறுக்கால வரப்போறதில்லை..ஏன்னா
வாழப்போறது நீங்க இரண்டு பேர்களும்தான்..அப்புறம் வெவ்வேற சாதின்றதால
ஆணவக்கொலை,
அது, இதுனு எதுவும் வராம பார்த்துக்குங்க” என்ற போது “நான்
விரும்பற பெண்ணுக்கு சொந்தம்னு யாருமில்லை..அது மட்டுமில்லை..நாங்க
இருக்கிறது டெல்லியில்..எந்த பிரச்சினையும் வர வாய்ப்பில்லையென்று
கேட்டறிந்த பிறகே,நாங்கள், அப்போதும் அரைமனதாய் கலியாணத்துக்கு
சம்மதித்தோம்..இன்றுவரை
அவர்கள் நன்றாய்த்தான் வாழ்கிறார்கள்..இப்படி இருக்கையில்,அந்தம்மாவின்
பிள்ளை எங்களை ஏன் வம்புக்கு இழுக்கணும்?அந்த அம்மாவாவது, நான்தான்பா ஏதோ
ஆற்றாமையால் இவங்ககிட்ட வந்து புலம்பிட்டேன்.இவங்க மேலே எந்த தப்பும் இல்லை
என்றல்லவா தன் பிள்ளையிடம் சொல்லி இருக்க வேண்டும்..எங்களிடமும் தன் மகன்
பேச்சுக்கு மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்?
நாங்கள் ஒன்றும் காதல்
திருமணங்களுக்கு பகையாளி இல்லை.எங்களை பொறுத்தவரை குழந்தைகள் என்பவர்கள்
அவர்கள் பெற்றோர் மூலமாய் இந்த உலகுக்கு வந்தவர்களாய் இருப்பினும், அவர்கள்
வளர்ந்த
பிறகு நம் விருப்பு, வெறுப்புக்களை அவர்கள் மீது திணிக்க கூடாதென
நினைப்பவன்..பல நாட்கள் வரை நாங்கள் பசி, தூக்கம்
தொலைத்திருந்தோம்..வெளியில் தலைகாட்டவில்லை..
ஒரு நிலையில், சொல்லாமல்,
கொள்ளாமல் வீட்டை காலி செய்துகொண்டு வேறு ஒரு இடத்துக்கு குடி
போனோமென்றாலும் மன உளைச்சல் என்னவோ தீர்ந்தபாடாயில்லை..
அப்படியிருக்கையில்
தான் அன்று எனக்கு கொஞ்சம் மனபாரம் குறைந்தாற்போல் உணர்ந்திருந்த போதுதான்
காலை 11 மணியளவில் என்னை கண்டமேனிக்கு விளாசித் தள்ளியவன், எங்களை
மாட்டிவிட்ட
அவனது தாயார், தகப்பனென்று அனைவரும் ஒன்றுசேர எங்கள் வீட்டுக்கு வந்து
எங்கள் கால்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து “எங்களை மன்னிச்சிருங்க..நாங்க
மகத்தான பாவத்தை
பண்ணிட்டோம்தான்..நானாத்தான் உங்க வீட்டு கதவை தட்டி
உங்க கிட்ட எங்க பிள்ளையாண்டானை பத்தி குறைப்பட்டுக்கிட்டப்ப கூட நீங்க
“இது உங்க குடும்ப விவகாரம்..நாங்க தலையிட
முடியாதுனுதான்
சொன்னீங்க..ஆனா நான்தான் அப்ப திடீர்னு அங்கே வந்த எங்க பிள்ளையாண்டானை
பார்த்து பயந்து நீங்களாதான் வலிய எங்களை உங்க வீட்டுக்குள்ளாற அழைச்சு
எங்களைப்பற்றி வம்பு பேசினதா
பொய் சொல்லிட்டேன் என்னை தற்காத்துக்
கொள்ள.. இது பாவம்தான்..அன்னையிலிருந்து நான் ராத்தூக்கம், பகல் தூக்கம்,
சாப்பாடு எல்லாம் தொலைச்சுட்டு நடைப்பிணம் போல வாழ்ந்துக்கிட்டிருக்கோம்
வெளியில் சொல்ல முடியாத வேதனையோட..இப்ப,
நல்லபடியா பெண் வீட்டிலும்
இந்த கலியாணத்துக்கு, அதுவும் நாங்க எங்க ஈகோவை விட்டு போய் பேசினதால்
ஒத்துக்கிட்டாங்க..கலியாண அழைப்பிதழ் கொடுக்கத்தான் உங்களைத்
தேடி
வந்திருக்கோம்..எங்களை மன்னிச்சு நீங்க இரண்டு பேர்களும் அவசியம் எங்க
பையன் கலியாணத்துக்கு வந்திருந்து வாழ்த்தணும்..அப்பத்தான் இவங்க வாழ்க்கை
சீரும், சிறப்புமாய் இருக்கும்”
என்றவர்களை பார்த்து “நாங்க நிச்சயம்
இந்த கலியாணத்துக்கு வந்து வாழ்த்துவோம்” என்ற போது “அங்கிள் இந்த
அரைவேக்காட்டு பையனையும் மன்னிச்சிருங்க” என்றான் அவர்களது மகன், எங்கள்
கால்களில் விழுந்தவாறு..
———
- கவிதை
- முல்லை
- கனவுகளற்ற மனிதர்கள்
- கிலுகிலுப்பைகள்
- இந்திய விண்வெளித் தேடல் வாரியம் ஏவிய சந்திரயான் -2 விக்ரம் தளவுளவி இறுதியில் தகவல் இழந்து நிலவில் சாய்ந்து கிடக்கிறது
- நாவினால் சுட்ட வடு
- நவீன தமிழ்க்கவிதையும் நானாதிநானெனும் நுண் அரசியலும்
- பார்வைக்குறைபாடுடைய வாசகர்களையும் பதிப்பகங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ளவேண்டும்
- இளஞ்சிவப்புப் பணம் – அத்தியாயம் இரண்டு
- மெல்பனில் தமிழ் எழுத்தாளர் விழா 2019