தர்பார் (வித் ஸ்பாய்லர்ஸ்)

தர்பார் (வித் ஸ்பாய்லர்ஸ்)
This entry is part 8 of 11 in the series 12 ஜனவரி 2020

ரஜினி படத்தில் லாஜிக் பார்க்கக் கூடாது என்ற அரிச்சுவடியையும் மீறி படம் பார்க்கும்போது மைண்ட் வாய்ஸ் எழுப்பிய குண்டக்க மண்டக்க கேள்விகள்:

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் மணிவண்ணனை கடத்தி வைத்து கோத்தகிரி பெண்டுக்கு வந்து பணத்தை கொடுத்து மீட்டுக்கொள்ளும்படி சொல்லும்போது, அந்த நாய்க்காக அவ்ளோ தூரம்லாம் வரமுடியாதுடா அப்பிடி வேலியோரமா வந்து வாங்கிக்க என்பார் கவுண்டபெல். அது போல இந்த படத்தில் எதற்கு மும்பை? போதைப்பொருள் கடத்தல் மாஃபியா டான் என்றவுடன் மும்பை என்று முடிவு செஞ்சிட்டாங்க போல.. சரி பரவாயில்லை.. ஆனால் அதை அடக்க எதுக்கு டெல்லி போலீஸான ரஜினி போகனும்? அவர் தமிழ்நாட்டு போலீஸா இருந்து போனா வேலைக்காவாதா? தமிழ்நாட்டு போலீஸ் துப்பு கெட்டவைங்களா? வாட் இஸ் திஸ் குறியீடு முருகதாஸ்?

உலகத்தின் அனைத்து பிராந்திய மாஃபியாக்களும் ஒன்று கூடியிருக்கிறார்கள்.அங்கு வீல்சேரில் இருக்கும் மாஃபியா தலைவர் அடுத்த உலக மாஃபியா லீடர் என்று சுனில் ஷெட்டியை எலக்‌ஷன் எதுவும் இல்லாமல் ஏகமனதாக தேர்வு செய்கிறார். அட்லியாக இருந்தால் ஸ்கைஃபால், ஸ்பெக்டரில் வரும் காட்சியை ரீக்ரியேட் செய்து ‘க்ராண்டாக’ எடுத்திருப்பார். முருகதாஸ் என்பதால் ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக காக்கி சட்டையில் சத்யராஜ் தகடு வாங்கும் காட்சி போல எடுத்திருக்கிறார். பரவாயில்லை. ஆனால் அப்பேற்ப்பட்ட உலக மாஃபியா டான் 27 வருடம் கழித்து இந்தியாவின் மேற்கு எல்லையில் இருக்கும் மும்பைக்கு வர தேர்ந்தெடுக்கும் இடம் 3000 கிமீக்கு அப்பால் இருக்கும் கிழக்கு எல்லையான அஸ்ஸாம் [அந்த வேலியில் Electric Fence என்று எழுதியிருக்கும், அதை அடியாட்கள் wire cutter வைத்து வெட்டியிருப்பார்கள்] ரொம்ப கெட்டவன் எல்லாம் அஸ்ஸாம் வழியா இந்தியா உள்ள வர்றான், கேக்குதா?

“நல்ல” போலீஸ் சரமாரியாக ரவுடிகளை கொல்கிறார். ஒரே நாளில் டஜன் கணக்கில் சும்மா ஜஸ்ட் லைக் தட் கொல்கிறார். என்கவுண்டர் என்று கூட இல்லை, மர்டர் என்றே எல்லாரும் பேசுகிறார்கள். மெண்டல் ஆகிட்டார் என்று எல்லாருமே சொல்கிறார்கள். மனித உரிமை கமிஷன் வருகிறது. அவர்களை தன் விக் மயித்துக்கு சமம் என்பது போல இடது கையால் டீல் செய்கிறார் ரஜினி. கமிஷன் பம்முகிறது. அமைச்சராலேயே ரஜினிக்கு ட்ரான்ஸ்பர் தர முடியவில்லை. என்னை மாற்றினால் மும்பை போலீஸ் ஸ்ட்ரைக் செய்யும் என்று சேலஞ்ச் செய்கிறார் ரஜினி. சங்கம் வைக்க முயற்சி செஞ்சி தோத்துப்போன போலீஸ்கார்ஸ், கேக்குதா?

ஏகப்பட்ட பணமும் செல்வாக்கும் இருந்தால் செல்போன் மட்டுமல்ல, குற்றவாளியான சின்னம்மா.. இது.. சின்னப் பையன் போலவே வேற ஒரு ஆளை செட் பண்ணி தண்டனை அனுபவிக்க வைத்துவிட்டு நிஜ குற்றவாளி ஜாலியாக வெளியே இருக்கலாம் என்கிறார்கள். அரசு அலுவலர்கள், நீதிபதிகள் உட்பட ஏகப்பட்ட பேர் அதற்கு ஓப்பனாக துணை போகிறார்கள். அப்படியெல்லாமா ஒரு நாட்டில் நடக்கும் என்று ஆச்சரியமாக இருந்தது.

மீடியாவை கையில் வைத்திருக்கும் ஓனர் ஒரு கேடி. சின்ன வயதிலேயே சீர்திருத்தப் பள்ளிக்குப் போனவன், மாஃபியாக்களின் நெருங்கிய நண்பன், தன் பெர்சனல் அஜெண்டாவுக்கு ஏற்ப உண்மைக்கு புறம்பாகவே செய்தி வெளியிடுவான் என்று யாரோ ஒரு மீடியா ஓனரை முக்கிய வில்லன்களில் ஒருவராக காண்பிக்கிறார்கள். யாரை சொல்கிறார்கள் என்று புரியவில்லை. அது மட்டுமில்லாமல் ஒரு டிவி விவாதத்தை காண்பித்து, காசு கொடுத்தா இவனுங்க என்ன வேணாலும் பேசுவாங்க சார் என்று கருத்து சொல்கிறார்கள். சமூக ஆர்வலர்ஸ் சார்பாக மென்மையான கண்டனங்கள்.

இறுதியில் மனித உரிமை கமிஷன் ஒரு வழியாக பரிந்துரை செய்து ட்ரான்ஸ்பர் ஆர்டர் போட்ட பிறகு உயரதிகாரியை போய் பார்த்து என்னவோ கோர்ட் ஆர்டர் என்று ஒன்றை கொடுப்பார். அதில் 4 நாளில் ஃபிட்னஸ் காண்பித்தால் அங்கேயே சேர்ந்து கொள்ளலாம் என்று இருக்கும். ஒரே குஷ்டம்.. இது கஷ்டமப்பா… சரி என்று ரஜினி எக்சர்சைஸ் செய்ய ஆரம்பிப்பார். அதில் பனியன் இல்லாமல் முதுகை காண்பித்தவாறு வெய்ட் புல்லிங் சீனில் விக் வைத்த தலை அப்நார்மலாக தெரிந்த இடத்தில் மட்டுமே கொஞ்சம் க்ராஃபிக்ஸ் அப்பட்டமாக பல்லிளிக்கிறது. மற்றபடி க்ராஃபிக்ஸ் அற்புதம்.

+++

குடும்பத்தோடு போகலாம் என்ற கருத்தை சில இடங்களில் பார்த்தேன். குடும்பம்னா பெரிய வீடு சின்ன வீடா இல்லை குழந்தைகளா என்று தெரியவில்லை. இதில் வில்லனை கொடூரமானவனாக காட்ட தெலுகு போக்கிரி (அல்லது அத்தடுவில்) வரும் கத்தியை பெரிய சைஸாக்கி காண்பிப்பார்கள். அதை குத்தியவுடன் ஒரு பட்டனை அமுக்கினால் அது உடலின் உள்ளேயே விரியும். ஒரு சுத்து சுத்தி இழுத்தால் மொத்தமாக எல்லாம் உருவிக்கொண்டு வெளியே வரும். அதை விளக்கமாக சேரில் ஒரு டெமோ காண்பித்துவிட்டு பின்பு குத்துவார். வன்முறை, கலவரம், உயிரோடு எரிப்பது, போதை மருந்து உபயோகம், பிஞ்சுக்குழந்தைகளை விபச்சார விடுதிகளில் இருந்து மீட்பது என்று படம் நெடுக காட்சிகள். இதை குடும்பத்தோடு பார்க்கலாம் என்றால் மிச்சம் இருப்பது போர்னோ மட்டும்தான். அதையும் ஓப்பனாக குழந்தைகளுக்கு காண்பித்துவிட்டால் மொத்தமாக வல்லரசாகிவிடலாம்.

Series Navigationரத்ததானம்சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் வெளியீடு பற்றி

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *