அறமற்ற துறையால் மிக மோசமாக நிர்வகிக்கப்படும் தமிழ்நாட்டுக் கோவில்களுக்குள் நான் நுழைவதில்லை என்பதில் பலகாலம் பிடிவாதமாக இருந்திருக்கிறேன். நமது பேராலயங்களின் முக்கியத்துவம் அறியாத, அதன் மதிப்பு குறித்து சிறிதும் அறிவில்லாத மூடர்கள் மட்டுமே தமிழக அறமற்ற துறையில் வேலை செய்கிறார்கள் என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை. பாழடைந்து இடியும் நிலையில் உள்ள நமது பேராலயங்களின் கதியைக் காண்கையில் ரத்தக் கொதிப்பு வந்துவிடுகிறது. மண்டபங்களைக் கார் நிறுத்தும் இடமாகப் பயன்படுத்தும் அறமற்ற துறை அதிகாரிகளை என்ன சொல்வது?
அப்படியே கோவிலுக்குப் போனாலும் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தரிசனம் செய்யவே மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருப்பேன். சுவாமி தரிசனம் என்பது மாட்னி-ஷோவா என்ன? எவன் அப்பன் வீட்டுக் கோவில் இது? சுவாமியை தூரத்தில் இருந்து தரிசித்தால் எனக்கு அவர் அருள்புரிய மாட்டாரா என்ன? அதுபோலவே உண்டியலில் ஐந்து பைசா போடுவதில்லை. உண்டியலில் போடுகிற பணத்தைக் கொண்டு கோவிலில் என்ன முன்னேற்றம் செய்திருக்கிறார்கள் அறமற்ற நிலையத் திருடர்கள்? அதேசமயம், அர்ச்சகர் தட்டில் மட்டும் குறைந்தது நூறு ரூபாயாவது போடுவது என்பதில் மாற்றமில்லை.
நமது பேராலயங்கள் பிராம்மணர்களுக்குச் சொந்தமானவை என்கிறதொரு தவறானதொரு எண்ணத்தை நமது மனதில் திராவிடப் புண்ணாக்கர்களும், மதமாற்றிகளும் விதைத்து வைத்திருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்லப் போகிறேன். தமிழ்நாட்டில் இருக்கும் எந்தக் கோவிலும் பிராம்மணர்களுக்குச் சொந்தமில்லை என்பதுதான் அது. அந்தக் கோவில்களையெல்லாம் கட்டியவர்கள் நமது பாட்டனும், முப்பாட்டனும்தான். அதாகப்பட்டது அந்தக் கோவில்கள் அனைத்தும் நமக்குச் சொந்தமானவை. தமிழ்நாட்டை எத்தனை பிராமணர்கள் ஆண்டிருக்கிறார்கள்? அனேகமாக ஒருவருமில்லை.
பெரும் பொருட்செலவிலும், உடல் உழைப்பிலும் கட்டப்பட்ட நமது பேராலயங்களில் ஆகம விதிகளின்படி பூசை, புனஸ்காரங்கள், இறைவனுக்குச் சேவைகள், நியம அனுஷ்டானங்கள், நைவேத்தியங்கள் போன்றவற்றை சரிவர நடத்துவதற்காக நமது முன்னோர்களால் நியமிக்கப்பட்டவர்களே பிராமணர்களும், பூசாரிகளும் என்பதினை நீங்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். நீங்கள் ஒரு கல்லூரியைக் கட்டி அதனை நிர்வகிக்கத் தகுதியுள்ள ஆட்களை நியமிப்பது போலத்தான் ஆலயங்களில் பிராமணர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தமிழக ஆலயங்கள் வெறும் சாமி கும்பிடும் இடங்கள் மட்டுமில்லை. அவை நமது வரலாறு, கலாச்சாரத்தைப் பறைசாற்றும் பெட்டகங்கள். நமது முன்னோர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதற்கான சாட்சியங்கள் அவை என்பதினை நீங்கள் உணர வேண்டும்.
திரும்பவும் சொல்கிறேன். தமிழ்நாட்டு ஆலயங்கள் எல்லா சாதிக்காரர்களுக்கும் சொந்தமானவை. எல்லா சாதியினரின் கைங்கர்யமும் அந்தக் கோவில்களில் உண்டு. அந்த நினைவு உங்களுக்கு வந்தால்தான் அறமற்ற துறைத் திருடர்கள் நமது கோவில்களில் செய்துவரும் அழிவுவேலைகளைத் தட்டிக்கேட்க எண்ணம் வரும்.
இன்றைக்கு அதுபோன்றதொரு கோவிலை நம்மால் கட்ட இயலுமா என்ன? ஒரு சுவற்றைக் கூடக் கட்ட முடியாது என்பதுதானே உண்மை? உலகில் இத்தனை அற்புதமான, கலைநயம் மிக்க கோவில்கள் வேறெங்கிலும் உண்டா? இந்த ஆலயங்களைப் பாதுகாத்து நம்மிடம் ஒப்படைத்த நமது முன்னோர்களைப் போலவே நாமும் அதனைப் பாதுகாத்து நமது சந்ததிகளிடம் ஒப்படைப்பதுதானே நம் கடமை?
மிகுந்த தயக்கத்துடன் இந்தமுறை மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்குப் போனேன். ஆலய உட்புறம் மெச்சத் தகுந்த வகையில் இல்லாவிட்டாலும் ஓரளவிற்காவது பராமரிக்கப்படுகிறது போலத்தான் எனக்குத் தோன்றியது. இன்னமும் தீயில் எரிந்து இடிந்தபோன மண்டபத்தைச் செப்பனிடாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். காரணம் என்னவென்று தெரியவில்லை. அதனைக் குறித்தான அக்கறை எவனுக்கும் இருப்பதாகவும் தெரியவில்லை.
ஆனால் ஆலயத்திற்கு வரும் வழியில் மதுரை மாநகரம் அங்கிங்கெனாதபடி ஓடும் சாக்கடைகளுடனும், குண்டும் குழியுமான சாலைகளுடனும் மிகக் கேவலமான முறையில் நிர்வகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழர்களின் கலாச்சாரத் தலைநகரமான மதுரையை இப்படியா நிர்வகிப்பது? சந்து பொந்துகளில் புகுந்து மீனாட்சியம்மனின் ஆலயத்தை அடைவதற்குள் போதும், போதும் என்றல்லவா ஆகிவிடுகிறது?
ஊரை இப்படி வைத்திருந்தால் எத்தனை டூரிஸ்ட்டுகள் மதுரைக்கு வருவார்கள்? எனக்கென்னவோ மீனாட்சியம்மனின் ஆலய முக்கியத்துவத்தைக் குறைப்பதற்காகவே வேண்டுமென்றே எவனோ வேலைசெய்து கொண்டிருக்கிறான் எனத் தோன்றுகிறது? தங்களின் ஊர் இருக்கும் இருப்பைக் கண்டு மதுரைக்காரர்கள் நாணித் தலைகுனிய வேண்டும். ஊராய்யா அது?
இன்னும் இரண்டொரு மதுரைக் கோவில்களுக்குப் போகும் வாய்ப்பு கிட்டியது. அதைப்பற்றி பிறிதொரு சமயம் பார்க்கலாம்.
இப்போதைக்கு நான் கேட்டுக் கொள்வதெல்லாம் இதுதான்,
கோவில்களின் சீர்கேட்டைத் தட்டிக் கேளுங்கள். அவை உங்களுக்கும், உங்களின் சந்ததிகளுக்கும் சொந்தமானவை.
ஆலயங்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கும், பூசாரிகளுக்கும் தாராளமாக பணம் அளியுங்கள். அரசாங்கம் தரும் சம்பளத்தை வைத்து அவர்களால் இன்றைக்கு ஜீவனம் நடத்துவது மிகவும் சிரமமானதொரு காரியம். ஏதொவொரு ஏழைப் பிராமணந் கிழிந்த வேட்டியுடனும், அரைப்பட்டினியுடனும் இறைவனுக்குப் பூசை, புனஸ்காரங்கள் செய்வது அந்த இறைவனையே நாம் அவமதிக்கும் செயல் என்பதினை உணருங்கள்.
நண்பர்களே, அர்ச்சகர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை அவர்கள் கேட்காமலேயே செய்யுங்கள் என இருகரம் கூப்பி வேண்டுகிறேன். வறுமையிலும் அர்ப்பணிப்புடன் ஆலய பூசைகளை நிறுத்தாமல் செய்கிற ஏழை பிராமணனுக்கு மதிப்பளியுங்கள். அவர்களை இழந்தால் நமது புராதன பேராலயங்கள் பாழ்பட்டுவிடும் என எச்சரிக்கிறேன்.
ஆலயம் காப்போம்.
- ஆலயம் காப்போம்.
- தங்கத்திருவோடு
- என்.ஆர்.ஐகளுக்கு ஏற்படுகிற கலாச்சார அதிர்ச்சி
- நாசா ஏவப்போகும் 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிமூலவி வசிப்பு தேடி, மனிதர் இயக்கும் பயணத்துக்கு குறிவைக்கும்
- இக்கரைக்கு அக்கரை பச்சை
- ஒரு நாள் ஈரானியன் திரைப்பட விழா
- ரத்ததானம்
- தர்பார் (வித் ஸ்பாய்லர்ஸ்)
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் வெளியீடு பற்றி
- விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை
- விஷக்கோப்பைகளின் வரிசை !