யாம் எந்தையும் இலமே:முனைவர் தே ஞானசேகரனின் ” தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் ” நூல்

This entry is part 6 of 20 in the series 2 பெப்ருவரி 2020

சுப்ரபாரதிமணியன்

   காவ்யா இதழில் முனைவர் தே ஞானசேகரன் அவர்கள் சாவிற்கு பின்னாலுள்ள சடங்குகளைப் பற்றி விரிவாக நீண்ட கட்டுரைகளை சென்றாண்டு எழுதியிருந்ததை ஞாபகம் கொண்டு அந்த கட்டுரையின் சடங்கு சார்ந்த விபரங்களும் விவரிப்புகளும் என்னை வெகுவாக கவர்ந்தவை அவரை சந்தித்தபோது சொன்னேன். அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த 1500 பக்க நாவல் “ சிலுவை “ ஆக்கத்தில் சில இடங்களில் அக்குறிப்புகள் பயன்பட்டன.. அவர் அவரின் தந்தையின் மரணத்தை ஒட்டி நடந்த சடங்குகளை ஒருங்கிணைத்து அந்த கட்டுரையை எழுதிய விவரங்களைத் தந்தார். அதேசமயம் அவர் தந்தை இறந்து  ஓராண்டு ஆன நிலையில் அவரின் தந்தை பற்றிய நினைவுக்  குறிப்புகளை “  தந்தை இல்லாத என் வீட்டு முற்றம் ” என்ற தலைப்பில் ஒரு நூல் ஆக்கி  அப்போதுதான் வெளிவந்திருப்பதைச் சுட்டிக்காட்டி அதன் பிரதியை தந்தார்.

தந்தை பற்றிய நினைவுகளை எழுதுவது என்பது பாசப் பிணைப்பில் இணைந்த ஒவ்வொரு மகனுக்கும் இயல்பான விஷயம் .நான் என் முதல் சிறுகதை தொகுப்பை ” அப்பா “ என்ற தலைப்பில் தான் வடிவிட்டிருந்தேன் .அதில் என் அப்பா பற்றிய நினைவுகளும் அவர் சேவல்கட்டு வித்தையில் பெரிய வீரனாக விளங்கியதும் அது குடும்பச் சூழலில் ஏற்படுத்திய பாதிப்புகளும் என்று நான்கைந்து கதைகளை எழுதி இருப்பேன் .அக்கதைகளை எல்லாம் அவர் வாழும் காலத்தில் தான் நான் எழுதினேன் .அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது . நெசவாளி.அந்த கதைகள் அவரை சேர்ந்து இருக்குமா என்று கூட எனக்கு தெரியாது .சமீபத்தில்கூட திரைப்பட கவிஞர் வடிவரசி ஐயா 95 என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார் .அதை கோவை விஜயா பதிப்பகம் வெளியிட்டுள்ளது . அவரின் தந்தை பற்றிய பல்வேறு நினைவுக் குறிப்புகளையும் அவரின் விமானப் பயண ஆசை பற்றிய முத்தாய்ப்பான விஷயங்களையும் ஒரு முழு நூல் ஆகியிருந்தார் .சுதேசமித்திரனில் அவரின் தந்தை குறித்து அப்பா என்றொரு காவியம் படைத்திருக்கிறார். இப்படி அப்பாவைப்பற்றி பலர் எழுதிஇருக்கிறார்கள்

முனைவர் திரு ஞானசேகரன் அவர்கள் இந்த நூலில் அவரின் அப்பா இறந்த பின்னால் ஒரு நாள் அவரின் மன பாரத்தை இறக்கி வைப்பதற்காக ஒரே மூச்சில் எழுதி முடித்த கவிதைகள் பாணியிலான முயற்சியில் தந்தை பற்றிய பல சித்திரங்களை கொடுத்திருக்கிறார் .அவரின் நோய் பற்றி தெரிவித்தபோது சரியாகிவிடும் என்று சொன்னது நிரந்தரமாக விடை பெறுவது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை என்ற கவலையோடு தொடங்குகிறார் .அவரின் நுரையீரல் பழுதான செய்தியை அவர் மறைத்து இருக்கிறார் என்பது கூட ஒரு இடத்தில் குறிப்பாக சொல்கிறார் .குடும்பத்தில் உள்ள மகன்கள் மேல் அவர் கொண்ட பாசம் பற்ரி பல வரிகளில் கண்ணீர் ததும்ப சொல்லியிருக்கிறார் . “ எங்களின் நிழல் கூட வெயில் விழக்கூடாது என்று சூரியனையே வடிகட்டியவன் நீ ” என்ற வார்த்தைகளை அவர் குழந்தைகள் மேல் கொண்டிருந்த பாசத்தை காட்டுகின்றன. “ மருமகளிடம் திட்டுவாங்க மாமனாராக விளங்கி இருக்கிறார் ..நூறாண்டு இருப்பார் என்று கணித்து போற்றியிருக்கிறார்கள். கையில் ஏதாவது ஒரு பத்திரிகை இல்லாமல் அவர் இருந்ததில்லை வேட்டை ராசி என்றபடி உயிரோடு திடீரென காட்சி தருகிறார் மழைக்காலங்களில் மீனோடு வருகிறவர் . ” உங்க அப்பன் வெளிய போய் இருக்கு எதைக்கொண்டு வருமோ என்று ”அம்மா அடிக்கடி சொல்கிறார். ஐந்து வயதில் அண்ணன் தம்பி பத்து வயதில் பங்காளி என்ற பழமொழி அந்த வீட்டில் தோற்றிருக்கிற அதிசயத்தைக்காட்டுகிறார் . அது சரியாக காட்டப்பட்டிருக்கிறது பிறருக்கு கொடுத்து வாழ்வதே வாழ்வின் சிறப்பு என்று வாழ்ந்திருக்கிறார் .அடித்து வாழ்ந்திருந்தால் நாங்கள் இன்னும் சிறப்பாக வளர்ந்திருப்போம் என்று மகன்கள் ஏங்கும் அளவுக்கு அவன் குழந்தைகளை அடித்ததே இல்லை . அவர் வளர்த்த நாய் அவரின் உயிரற்ற உடல் பார்த்து அங்குமிங்கும் அலைந்து திரிந்து இருக்கிறது. இந்த காட்சி மனதை நெகிழ வைக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு நொடி துணிச்சல் வெற்றி.. .வாழ்க்கையில் ..தாமதம் தோல்வி. என்று வாழ்க்கையில் இருந்தவர் .அவர் இறந்த பின்னால் அவரை வழியனுப்பிய விதங்கள் பற்றியும் ஞானசேகரன் காட்சிகளாகத் தருகிறார். அவரவர் விரும்பிய நொடியின் அசைவில் நீ விடைபெற்றது உனது விருப்பத்தேர்வு என்ற ஒரு கேள்வி கூட இவருக்கு இருக்கிறது .கடைசிப் பேரன் தாத்தாவுடன் விளையாட முடியுமா என்று உணர்ச்சிவசப்பட்டு கதறுவதும் ஒரு பக்கத்தில் பதிவாகியிருக்கிறது .அவருடைய குண நலன்கள் என்று வருகிறபோது பலவகை சித்திரங்களை ஒரு சிறுகதை எழுத்தாளன் பாணியில் பகிர்ந்திருக்கிறார் .என் அம்மாவின் பெருங்காதல் நீ வாழ்ந்த வாழ்க்கை பெருவாழ்வு என்று பெருமைப் படுகிறார் .கதை சொல்லியாக குழந்தைகளை மகிழ்வித்திருக்கிறார் .அழகு போட்டியாளர் போன்று உடல் அமைப்பில் கம்பீரமாக கொண்டிருக்கிறார் .நெல் விலை என்ன என்று கேட்டு விளைச்சல் பற்றிய விசனம் தரப்படுகிறது…” நெல் வேளாண்மை செய்தால்தான் அப்பா விவசாயி இல்லை என்றால் வெறும் சாவி : என்ற உழைப்பின் தத்துவத்தை உலகுக்கு உணர்த்தி இருக்கிறார். பாம்பு என்றால் படையும் நடுங்கும் ஆனால் பாம்பு விவசாயிகளின் நண்பன் என்பதை அவர் அனுபவத்தில் காட்டியிருக்கிறார். குழந்தை பிறந்த போது ஆசிரியர் பெரிய அறிவாளியாக வரவேண்டுமென்று டாக்டரை சேனம் போட்ட சொன்னீர்கள் நெகிழ்கிறார் . உணர்ச்சி மிகுந்தவற்றை இந்த கவிதை வரிகளில் பார்க்கிறோம் .தோஷம் என்றும் இறந்து விடுவேன் என்றும் ஊரார் சொல்ல ஆசிரியர் இழந்துவிடாமல் இருக்க ஒரு வயதில் தங்கை மகளை பொம்மைகல்யாணம் செய்து வைத்த ஒரு வினோத சடங்கு பற்றி கூட இந்த நூலில் சொல்லியிருக்கிறார் .அந்த ஊரில் அப்போதைய காலத்தில் ஓயாமல் வெட்டும் குத்தும் சண்டையும் இருந்ததாம் .அந்த கலாச்சாரத்தில் மகனை வளர்க்கப் பிடிக்காமல் அம்மாவின் ஊருக்கு குடியேற்றினார் என்பது ஒரு காட்சி.தொலைதூரப் பார்வையோடான அவரின் பல செயல்களில் இதுவும் ஒன்று.

இந்த நூலின் முக்கிய இடங்களீல் ஒரு நாவலாசிரியர் கதாபாத்திரத்தை விவரிப்பது போல் அவரின் தந்தை பற்றின சித்திரங்கள் இருக்கின்றன .சுருள் சுருளான தலைமுடி இரவில் விளக்கெண்ணை தேய்த்து ஊறவைத்து காலையில் சுருள் ஆக்கி காமிக்கிற வித்தை.. டிராக்டர் ஓட்டும் போது பேண்ட் சட்டை கருப்பு கூலிங்கிளாஸ் விவசாயி திரைப்படத்தில் எம்ஜிஆர் மாதிரி டிராக்டர் ஓட்டும் போது இருந்த அழகை அந்த ஆடை பிரதிபலிக்கிறது .வண்டி ஓட்டும் வித்தை அருமை .நாற்பது ஆண்டுகள் எந்த விபத்தும் ஏற்படாமல் டிராக்டர் வண்டியையும் பிற வண்டிகளையும் பயன்படுத்திய லாவகம் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது. கவுசிகா நதி பற்றிய ஒரு சித்திரம் இந்த நூலிலும் இருக்கிறது. கவுசிகா நதியின் பாதையில் சென்று பார்த்த அனுபவத்தில் அது மறைந்து போன நதியாக மனம் வேதனைப்பட்டது .கண்ணீர் வடித்தேன்.

இந்த கவிதைப் பாணி நினைவுகளில் ஒரு பகுதியில் நாட்டுப்புற பாடல்களில் வடிவில் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பாக இருக்கிறது பக்கம் 14 .

பாகச் செடியிண்டே தே பாதித்சே நானிருந்தேன்

இந்தச் செடி அ றுக்க வந்தப் பலிகாரன் எங்கிருந்தான்.

கோலச்செடியிண்டே கோளாறா வச்சிருந்தேன்.

இந்த கோலச் செடியருக்க வந்த

அந்த கொலைகாரன் எங்கிருந்தான்

என்று ஆரம்பிக்கிற இந்த பகுதி இந்த நூலில் முத்தாய்ப்பாய் இருக்கிறது.

நாட்டுப்புறவியல் சார்ந்த பல நூல்களை எழுதிய ஞானசேகரன் அதன் உணர்வில் சிலபக்கங்களை இந்நூலில் உருவாகியிருக்கிறார் .தன் தந்தை சார்ந்த நினைவுகளை ஒரே மூச்சில் பதிவு செய்திருப்பது ஒரு நூலாக இப்படி வெளிவந்திருக்கிறது .தந்தைகள் பற்றி பல சித்திரங்கள் தமிழ் இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. திரைப்படங்களிலும் காணக்கிடைக்கின்றன அம்மாக்களை போல அவை அதிகம் பேசப்படுவதில்லை .ஆனால் மகன்களின் வளர்ப்பிலும் வாழ்க்கையிலும் முக்கிய பங்கை தந்தைகள் செய்து வந்திருக்கிறார்கள் .அதன் காரணமாக தன் தந்தையை சா தேவராஜ் பற்றிய நினைவுக் குறிப்புகளை வெறுமையின் இடைவெளியை நிரப்புவதற்காக இந்தப் பதிவை அவர் உருவாக்கி இருக்கிறார் .எழுத்து இந்த வகையில் வெறுமையை தகர்த்து மனபாரத்தை இறக்குவதை இந்த நூலின் அடையாளமாக தெரிகிறது .கலை இலக்கியம் சார்ந்த படைப்புகள் இப்படித்தான் வாழ்க்கையில் வெறுமை நிலையில் இருந்து வேறு தளத்திற்கு மனித உணர்வுகளை கொண்டு செல்வதன் அடையாளமாக இந்த நூல் விளங்குகிறது . தந்தை பற்றிய இலக்கியக்குறிப்புகளில் இந்நூலுக்கும் முக்கிய இடம் இருக்கிறது

( வெளியீடு காவ்யா பதிப்பகம், சென்னை ரூபாய் 100 )

Series Navigationகணக்கும் வழக்கும் முன்னுரைமனமென்னும் மாயம்
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *