என்.சி.பி.எச் என்று தமிழ் வாசகர்களால் அறியப்படும் நியூ சென்ச்சுரி புக் ஹவுஸ் பதிப்பக வெளியீடான ‘வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்’ கவிதைத்தொகுதி மீதான விமர்சனக்கட்டுரை இது.
கவிதைத்தொகுப்பு தலைப்பிலேயே ஈர்த்துவிடுகிறது. அதுவே இத்தொகுப்பின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டிவிடுகிறது. தொகுப்பில் சுமார் எழுபதுக்கும் அதிகமான கவிதைகள் இருக்கின்றன.
ஆசிரியரின் சமூகப்பார்வையை சில கவிதைகள் நச்சென்று சொல்லிவிடுகின்றன. உதாரணமாக, ‘ நாலு பேர்’ என்ற இந்தக் கவிதை.
நாலு பேர்
நாலு விதமா
பேசுவார்கள் என்றனர்…
நால்வரிடமே கேட்டேன்
என்ன தவறு என்று?..
அப்படித்தான்
என்றார் ஒருவர்…
இதெல்லாம் எதற்கு
என்றார் இன்னொருவர்…
தவறில்லை ஆனாலும் வேண்டாம்
என்றார் மூன்றாமவர்…
என்ன கேள்வி கேட்கிறாய்
என்றார் நாலாமவர்…
ஒருவருக்குமே தெரிந்திருக்கவில்லை
என் கேள்விக்கான பதிலையும்…
என்னையும்….
நான்கு விதமாக பேசப்படுவது என்னவென்று எதையும் சொல்லவில்லை. ஆனால், அப்படிச் சொல்பவர்கள் எப்படி கண்மூடித்தனமாக இயங்குகிறார்கள் என்பதை ‘என்னையும்’ என்று கவிதையின் இறுதியில் சேர்ப்பதன் வாயிலாக சுட்டிவிடுகிறார். ‘என் கேள்விக்கான பதிலை’ என்பதோடு முடியாமல், ‘என்னையும்’ என்று தொடர்ந்து, முடியாமல் நீள்கிறது இந்தக் கவிதை.
தொகுப்பிலுள்ள பெரும்பாலான கவிதைகள் உரை நடை வடிவிலமைந்த கவிதைகளே. சில கவிதைகள் குடும்பம் என்னும் அமைப்பில் ஆணும் பெண்ணும் தங்கள் அசலான அடையாளங்களை இழந்து அல்லலுறுவதை படம்பிடிப்பதான கவிதைகள்.
உதாரணமாக, ‘விலை’ என்ற இந்தக் கவிதை.
விலை
எனக்கு வேண்டாதவைகள்
உனக்கு வேண்டியவைகளாயின…
எனக்கு வேண்டியவைகள்
உனக்கு வேண்டாதவைகளாயின…
உனக்கு வேண்டியதை நீயும்
எனக்கு வேண்டியதை நானும்
தேடிப்பெற்றபோது
நான் இருவரும் ஒருவருக்கொருவர்
வேண்டாதவர் ஆகிப் போனோம்…!!
சில கவிதைகள், பாலையில் முளைக்கும் ஒரு சிறிய செடியின் தன்முனைப்பை, இலக்கற்ற ஆற்றலை குறிப்பன.
பொதுவாக பாதிக்கப்பட்டவன் மீதே பரிதாப உணர்வு விஞ்சும். அதுவே வெகு ஜன பார்வையாகவும் இருக்கும். ‘அரவணைப்பு தேவையாயிருப்பது யாருக்கு’ என்ற கேள்வியுடன், பரிதாப உணர்வு கொள்ள வேண்டியது குற்றம் இழைப்பவனுக்கும் பொருந்தும் என்கிறார் பிம்பம் என்ற கவிதைகள்.
பிம்பம்
என்ன காரணம் என்றே தெரியவில்லை
அந்த நாய்க்குட்டியை எனக்கு மிகவும் பிடித்தது
என் கரங்களில் புகுந்த பஞ்சுப்பொதியை
தினம் ரசித்துப் பாதுகாத்தேன்
சிரம பரிகாரங்கள் ராஜ போகமாய் வளர்ந்தது
பாசவலையுள் விழுந்த என்னை
இப்போதெல்லாம் அது ஏறெடுத்தும் பார்ப்பதில்லை
அலட்சியம் செய்வதோடு அல்லாமல்
தன் கோர முகத்தை அவ்வப்போது காட்டி குரைக்கிறது
அரவணைப்பு தேவையாயிருப்பது யாருக்கு என்று
இறுதிவரை புலப்படவில்லை…
ஆர்ப்பரித்தும் சதா அலைவுறும் மனத்தை ‘மனம் நதியானது’ என்ற கவிதையிலும் , துரத்தப்பட்டே பருந்தான ஊர்க்குருவியை ‘வெண்சிறகுகள்’ என்ற கவிதையிலும் காணமுடிகிறது.
காலத்தின் போக்கில் நாம் அறிந்த பலவும் பற்பல அர்த்தங்களின் வழி உருமாறிக்கொண்டே செல்வதை ‘வினா-விடை’ என்ற கவிதை நயம்படச் சொல்கிறது.
இழப்பை, அதை இச்சமூகம், இக்காலகட்டத்தில் எதிர்கொள்ளும் விதத்தை ரத்தினச்சுருக்கமாகச் சொல்கிறது ‘இழப்பு’ என்ற கவிதை.
இந்தத் தொகுப்பினை அடியாகக் கொண்டு தொடர்ந்து மென்மேலும் நூல்கள் வெளியிட்டுச் சிறக்க நூலாசிரியரை வாழ்த்துகிறேன்.
- ராம்பிரசாத்
- கதை அல்ல உரை
- பசுமை வியாபாரம்
- விருதுகள்
- வாழ்க்கை
- வட்டத்துக்குள்
- பெண்கள் பெண்கள் பெண்கள்
- வல்லூறுகளுக்கு மட்டுமா வானம் – கவிதைத்தொகுப்பு நூல்