அலகில் மரகத முறிகளும் வயிரமும்
அபரிமிதம் எரி தமனியம் அடையவும்
அரிய தரளமும் அழகிய பவழமும்
அரச அரவின் சிகையவும் மலைகொடு
கலக மறிகடல் புகவிடுவன கதிர்
கவடு விடுவன இவருழை யினுமுள
ககன தருவனம் இவர்களும் எனவரு
கனக வரை அரமகளிர்கள் திறமினோ. [41]
[அலகில்=அளவில்லாத; அபரிதம்=மிகுந்த; எரி=ஒளி; தமனியம்=பொன்; தரளம்=முத்து; அரச அரவு=பாம்பரசன்; சிகை=உச்சி; இவருழை=இவரிடம்; ககனம்=வானம்; தரு=மரம்; ககனம்=பொன்; வரை=மல்லை]
இப்பாடலில் பெண்களின் அழகு புனைந்துரைக்கப்படுகிறது. மரகத நிறத்தில் நரம்புகளும், வைராக்கியம் கொண்ட நெஞ்சும், முத்துப் போன்ற பற்களும், பவழம் போன்ற வாயும், ஆதிசேஷனின் தலையில் உள்ள நாகரத்தினம் போன்ற இடையும், பாற்கடலிலிருந்து வந்த அமிழ்தம் போன்ற மார்பும் கொண்டவர்கள் நீங்கள். இப்படிக் கேட்பதெல்லாம் தரும் கற்பக வனம் போன்ற பெண்களே! கதவைத் திறவுங்கள்.
=====================================================================================
அளகமுகில் இரு படையினும் அதிரவும்
அகரு மணம்மிர்க மதமொடு கமழவும்
அதிகம் இடையிடை சிலகொடி அசையவும்
அமிர்தம் பொதிவன சில குவடசையவும்
இளகு கலவை கொடெழுதமை சமையவும்
எறியும் இருகடையின பிணை அணையவும்
இறைவர் கயிலையில் இறைமகளுடன் வரும்
இமயவரை அரமகளிர்கள் திறமினோ. [42]
[அளகம்=கூந்தல்; அகரு=அருகில்; மிர்கமதம்=மிருக மதம்; கஸ்துரி மானிலிருந்து எடுக்கப்படும் கஸ்தூரி; குவடு=திரட்சி; இளகு=குழைந்த கலவை; எழுதமை=எழுதிய தொய்யில் கொடி]
கருமேகம் போன்ற கூந்தல் இரண்டு பக்கங்களிலும் அசையவும், கஸ்தூரி மணம் கமழவும், கொடியிடை கொண்ட தோழிப் பெண்கள் அருகில் அசைந்து வரவும், அவர்களின் திரட்சியான மார்பகங்கள் அசையவும், இரு தோள்களும் குங்குமக்கலவையால் தொய்யில் கொடி வரையப்பட்டிருக்கவும், மருளும் பார்வையினால் இவர்கள் தம் இனம் எனக் கருதிய பெண்மான்கள் அருகில் வரவும், சிவபெருமான் கயிலையிலிருந்து உமையவளுடன் எழுந்தருளும் போதெல்லாம் உடன் வருகை தரும் இமயமலைப் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
===================================================================================
எமது மலைஇறை இகல்பொரு சிலைமலை
ரவியும் மதியமும் உடன்வலம் வருமலை
இருளும் இருள்கெட எரிதமனிய மலை
ரசதமலை இம்மலையிலோர் சிறுகுவடு.
உமது மலைஎன உயர்கயிலையை இகழ்
உரிமை உடைவடை வரை அரமகளிரை
உலகு வெயில்கெட இளநிலவெழ நகும்
உதயவரை அரமகளிர்கள் திறமினோ [43]
[இகல்=பகை; பொரு=போரிட; சிலை=வில்; ரவி=சூரியன்; தமனியம்=பொன்; ரசதம்=வெள்ளி; குவடு=உச்சி; நகும்=சிரிக்கும்]
எங்கள் மலை சிவபெருமான் திரிபுரர்களை அழிக்க வில்லாக எடுத்த மலை; சூரியனும், சந்திரனும் நாள்தோறும் வலம்வரும் மலை; கண்களை மறைக்கும் அளவிற்கு ஒளி வீசும் பொன்மயமான் மலை; உங்கள் வெள்ளிப்பனி மலையோ எம் இமயமலையின் உச்சிகளில் ஒன்றாகும் என கயிலைமலைப் பெண்களை இகழ்ந்து பேசக்கூடிய வெயில் மறைய, இளநிலவு எழுவதைப் போலச் சிரிக்கும் உதயகிரிப் பெண்களே! கதவைத் திறவுங்கள்.
=====================================================================================
மயிலாய் இறக்கின் அயிர்ப்பிக்கும்
வறுங்கண் என்று வாசவனார்
குயிலாய் இருந்த கதைபாடக்
கோலக் கபாடம் திறமினோ. [44]
[இறக்கின்=நிலைமாறின்; அயிர்ப்பிக்கும்=வருத்தும்; வறுங்கண்=வேடம்; வாசவன்=இந்திரன்; ஆர்=பொருளற்ற விகுதி; கபாடம்=கதவு]
சிவனை அவமதிக்க எண்ணித் தக்கன் யாகம் செய்ய, அதை அழிக்க வீரபத்திரர் வருகிறார். அவரைக் கண்டு அஞ்சிய இந்திரன் நடுங்கி தான் மயிலாக நிலை மாறிச் சென்றால் அதை ஆயிரம் கண்கள் உடலெல்லாம் கொண்ட இந்திரன் எனக் கண்டறிந்து விடுவாரென அவன் குயில் உருவம் கொண்டு ஓடிய கதையைப் பாட உங்கள் இல்லத்தின் அழகிய கதவுகளைத் திறவுங்கள்.
===============================================================================
விண்ணில் பகனார் தாம் துரக்கும்
எல்லா இருதளும் மீண்டும்தம்
கண்ணில் புகுந்த கதைபாடக்
கனபொற் கபாடம் திறமினோ. [45]
[பகன்=சூரியன்; துரக்கும்=போக்கும்; கன=பெரியதான; பொற்கபாடம்=பொற்கதவம்]
தக்கன் செய்த யாகத்தில் சூரியன் சிவபிரானை மதிக்காததால் சூரியனின் கண்களை வீரபத்திரர் குருடாக்கி இருள் வந்து சேரச் செய்தார். அதைச் சொல்லும் பாடல் இது.
வானத்தின் சூரியன் முன்பு விரட்டி அடித்த இருள் எல்லாம் மீண்டும் அதே கண்களில் வந்து புகுந்து கொண்ட கதையைப் பாடப் பெண்களே! பொன்னாலான உங்கள் வாசற்கதவுகளைத் திறவுங்கள்.
==================================================================================
புக்கு ஆவுதிகள் பல ஏற்றும்
போரில் ஏற்றும் சிரம்ஒருவர்
முக்கால் இழந்த கதைபாட
மூரிக் கபாடம் திறமினோ. [46]
[ஆவுதி=யாகத்தில் இடப்படும் அவியுணவு; சிரம்=தலை; மூரி=பெருமை உடைய]
சிவபிரானை மதியாது தக்கன் செய்த யாகத்தில் கலந்து கொண்ட திருமால் வீரபத்திரரால் மூன்று முறை தலை வெட்டப்பட்டு முளைக்கப் பெற்றார். அச்செய்தியை கூறும் பாடல் இது.
சிவனுக்குரிய ஆகுதிகள் எல்லாம் ஏற்றதால் வீரபத்திரருடன் நடந்த போரில் மூன்று முறை வீரபத்திரரால் தலைவெட்டப்பட்ட திருமாலின் கதை பாடப் பெண்களே! உங்கள் வாசற் கதவுகளைத் திறவுங்கள்.
ஊத்தைத் தலை நீத்து உய்ந்தொழிந்த
ஒரு மாமடிகள் ஒருமுருட்டு
மோத்தைத் தலை பெற்றமை பாட
மூரிக் கபாடம் திறமினோ [47]
[ஊத்தி=அழுக்கு; மாமடி=மாமன்; மோத்தை=ஆட்டுக்கிடா]
வீரபத்திரர் நிகழ்த்திய போரில் தலை வெட்டப்பட்ட தக்கன் மீண்டும் ஓர் ஆட்டிக்கிடாவின் தலை பொருத்தப்பட்ட வரலாறு இப்பாடலில் பேசப்படுகிறது.
அழுக்கான குற்றம் நிறைந்த தலையை நீத்த மாமனான தக்கன் ஒரு முரட்டு ஆட்டுக்கிடாவின் தலைபெற்று உயிர் பெற்ற கதை பாடப் பெண்களே! உங்கள் வாசலின் பெரிய கதவுகளைத் திறவுங்கள்.
=========================கடைதிறப்பு முற்றியது=====================================
காடு பாடியது
பரணி இலக்கியங்களில் காடு என்றால் பாலை நிலத்தைத்தான் குறிக்கும். பாலை நிலத்துக்குரிய தெய்வம் கொற்றவை ஆவார். கடை திறப்புப் பகுதி வாசல் கதவைத் திறக்க வேண்டிப் பாடப்பட்டது. வாசல் கதவைத் திறந்து பெண்கள் வெளியே வந்தனர். இப்பொழுது எல்லாரும் ஒன்று சேர்ந்து பாலை நிலத்துக்குரிய கடவுளான கொற்றவை குடியிருக்கும் பாலை நிலம் பற்றிப் பாடுகிறார்கள்.
நெடுங் குன்றுஏழும் பிலம் ஏழும்
நேமிக் கிரியும் கடல் ஏழும்
ஒடுங்கும் பாகத்து உறைமோடி
உறையும் காடு பாடுவோம். [48]
[ஏழுமலைகள்=கைலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், கந்தமாதனம்; பிலம்=பாதாளம்; ஏழு பாதாளம்=அதல,விதல,சுதல, தராதல,ரசாதல,மகாதல,பாதலம்; நேமிக்கிரி=சக்கரவாள மலை; ஏழு கடல்=உப்புக் கடல், நன்னீர்க் கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக்கடல், தேன்கடல்; பாகம்=இடை;உறையும்=இருக்கும், மோடி=துர்க்கை]
ஏழு மலைகளும், ஏழு பாதாள உலகங்களும், சக்கரவாளக்கிரி மலையும், ஏழு கடல்களும், ஊழியின் இறுதியில் சென்று அடங்கும் சிவபெருமானின் இடப்பாகத்தில் இடங்கொண்டிருக்கும் துர்க்கை குடிகொண்டுள்ள பாலையைப் பற்றிப் பாடுவோம்.
====================================================================================
பால் வறந்து கீழ்நின்ற கள்ளியும்
பசை வறந்துபோய் மீமிசைச்
சூல் வறந்துபோய் மாக மேகமும்
சுண்ட ஈமஎரி மண்டவே. [49]
[வறந்து=வறண்டு; பசை=ஈரம்; மிசை=மேலே; மாகமேகம்=வானத்து மேகம்; சுண்ட=வற்ற; ஈம எரி= சுடுகாட்டுத் தீ; மண்டவே=சூழ்ந்தவே]
தரையில் முளைத்திருந்த கள்ளிச்செடிகள் ஈரப்பசையின்றி வறண்டுபோய் உலர்ந்துவிட்டன. வானத்தின் மேகங்களும் ஈரப்பதம் இல்லாததால் மழைநீர் சுரப்பை இழந்து வறண்டு போயின. ஆதலால் சுடுகாடு நெருப்புப் பற்றி எரியலாயிற்று.
======================================================
பிணம் சுடுங்கனலும் இன்றி வெந்து நில
வாய் நிமிர்ந்து பிலவாய் பேய்
நிணம் கரைந்துருகு நெய்யை நீர் என
நினைத்து நாவினை நனைக்குமே. [50]
[நிலவாய்=தரை; நிணம்=சதைக் கொழுப்பு; பிலம்=பெரிய துளை; நெய்=ஊன் நீர்]
சுடுகாட்டுக்குப் பிணங்களைக் கொண்டு வருபவர்கள் அவற்றை எரிக்க நீர் கொண்டு வருவதில்லை. அப்பிணங்கள் பாலையின் வெப்பத்திலேயே பற்றி எரிந்து வெந்து போகின்றன. அப்படி எரியும்போது அவற்றின் சதைக் கொழுப்பிலிருந்து வடியும் நீரைப் பெரிய துளைகள் போன்ற வாயைக் கொண்டிருக்கும் பேய்கள் தண்ணீராகக் குடித்து, நாவினை நனைத்துத் தம் தாகத்தைப் போக்கிக் கொள்கின்றன.
- கைகொடுக்கும் கை
- புலி வந்திருச்சி !
- பிள்ளை யார்?
- மாயாறு- மருத்துவர் .ஜெயமோகன் மரணம்
- பெற்றோர்கள் செய்ய வேண்டியது
- உன்னாலான உலகம்
- புலம்பெயர் ஈழத்து படைப்பாளர்களின் விபரத்திரட்டு
- கேட்காமலே சொல் பூத்தது : முகக்கவசம்
- அறியாமை அறியப்படும் வரை….
- தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
- நான் தனிமையில் இருக்கிறேன்
- எழுத்தாளனும் காய்கறியும்
- எனக்கு எதிர்கவிதை முகம்
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்
- அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்
- தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?
- அப்பால்…..
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
- நாடு கேட்கிறது
- ஜீவ அம்சம்
- மொழிவது சுகம் ஏப்ரம் 19…2020
- பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு