பிராட்டி
1
கேவிக் கேவி அழ
என் கதாநாயகிகளுக்கு
நேரமில்லை.
அவர்களை நிராகரித்தவர்களை
நிராகரித்து விட்டு
லைனில் காத்திருக்கும்
நண்பர்களைக் காணவே
நேரம் போதவில்லை
அவர்களுக்கு.
2
‘சிரிச்சால் போச்சு’
என்று மிரட்டினார்கள்
ஏதோ பிரளயம்
வந்து விடும் என.
என் பெண்கள் எல்லோரும்
வாய்விட்டுச் சிரிக்கிறார்கள்.
புன்னகை புரிகிறார்கள்.
உலகம் அதுபாட்டிற்கு
நடந்து
போய்க்கொண்டுதான்
இருக்கிறது.
3
பெண்ணைக் காபந்து செய்வதாக
நடிக்கிறார்கள் என்று
நீ நினைக்கும் பிஜேபியை
உனக்குப் பிடிக்கவில்லை என்றால்
எனக்கும்.
ஆண்டாளைச் சாடிய
வைரமுத்துவை நீ திட்டினால்
நானும் உன் உடன்.
உனக்குக் கற்பகாம்பாள்,
மீனாம்பாள், சாரதாம்பாள்,
யோகாம்பாள் அபித
குசலாம்பாள்
ஆகியோரைத்தான் பிடிக்கும்
என்றால்
எனக்கும்.
அதே.
முத்துசாமி, கந்தசாமி
ராமசாமி,
வெங்கடசாமிகளைப்
பிடிக்காதென்கிறாய்.
புரிகிறது.
ஆனால் நான்
பார்க்கும் போதெல்லாம் சுற்றிச் சுற்றி
நாலைந்து பயல்கள்
எப்போதும்
உன்கூட வருவதை நீ
அனுமதிப்பதுதான்
எனக்குப் புரியவில்லை
.
முன்னோர்
நிகனார் பர்ராவைப்
புரியாமல் படித்து
எதற்குக்
கஷ்டப்படணும்?
பெருந்தேவி இருக்கையில்.
ஹெமிங்வேயைப்
பார்க்கப்
போக வேண்டியதில்லை.
அசோகமித்திரனிடம்
செல்.
அருகில்
அல்டஸ் ஹக்ஸ்லியும்
எதிரில்
எலியா காஸனும்
பேச இல்லையே
என்று
கவலைப்படாதே
இ.பா. இருக்கும் வரை.
இவர்களைத் தவிர
உனக்குதவ அசலாய்
எம் வி,வீ யும் கு.ப.ராவும்
தி.ஜா.வும் ஒரு பக்கம்.
க.நா.சுவும், பிரமீளும்
வெங்கட் சாமிநாதனும்
இன்னொரு பக்கம்.
உன் கைக்கெட்டும்
தூரத்தில்.
இன்பமுறு.