எஸ்.ஜெயஸ்ரீ
இந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தவுடன், கட்டுரைத் தொகுப்போ என்றே தோன்றும். ஆனால், இது அசோகமித்திரன் 2017ல் எழுதிய நாவல். பொதுவாக, அசோகமித்திரனின் கதைகளின் பாத்திரப் படைப்புகள் எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல், மேல்ப் பூச்சுமில்லாமல், மிகவும் எளிய, அமைதியான மனிதர்களாக இருப்பார்கள். நம்மோடு, தினசரி வாழ்க்கையில் பார்க்கும், பழகும் மனிதர்களின் சாயலில், சாயலில் என்று கூட சொல்ல முடியாது, அப்படியே இருப்பார்கள். நமக்கு அருகிலேயே இருப்பவர் போல அந்தப் பாத்திரங்களை நாம் உணர முடியும். இயல்பாக, சாதாரணமாக, எளிமையாக, எதற்கும் அதிகமான எதிர்வினை புரியாதவர்களாக, வாழ்க்கையை அதன் போக்கிலேயே எடுத்துக் கொள்பவர்களாக இருக்கும் மாந்தர்கள் அவர் கதை மாந்தர்களாக இருப்பதால், வாசகரால் அவருடைய கதைகளோடு ஒன்றி விட முடிகிறது. அப்படி இயல்பாய் ஒரு எளிமையான ஒரு நாவல்தான் இந்த “இந்தியா 1944-48.
இந்த வருடங்களில் நடந்த அரசியல் மாற்றங்களையும் ஆங்காங்கே லேசாகக் காட்டிச் செல்லும் நாவல், ஒரு குடும்பத்தின் கதையையே சொல்கிறது. முதல் பகுதியை தம்பி மணியின் பார்வை, நினைவு வழியாகவும், அடுத்த பகுதியை அண்ணன் சுந்தரத்தின் வழியாகவும் சொல்லி எப்போது இரண்டும் இணைந்தது என்றே தெரியாமல், நாவல், பொதுவாக நகர ஆரம்பிக்கிறது.
சுந்தரி என்கிற அம்மா, சுந்தரம், மணி, சுந்தரத்தின் மனைவி பார்வதி, இவர்கள் நால்வரும் அடங்கிய ஒரு சாதாரணக் குடும்பம், கிராமத்தை விட்டு, சுந்தரத்தின் வேலையை முன்னிட்டு புனேவுக்குச் செல்கிறது இந்தக் குடும்பம். சுந்தரத்தின் சம்மதம் எல்லாம் கேட்காமலேயே மாமா அவர் மகள் பார்வதியை சுந்தரத்திற்குக் கல்யாணம் செய்துவித்தார்.
இந்தக் குடும்பம் புனேயிலிருந்து பம்பாய்க்குச் செல்கிறது. அங்கு அவர்கள் வாழ்க்கை நகர்வதை நாவல் மிக அழகாக அமைதியாக நகர்கிறது.
பெண்கள் வாழ்க்கையை எளிமையாக, அழகாக நகர்த்துவதற்கு காரணியாக இருக்கிறார்கள். அம்மா மருமகளை வழிநடத்தும் ஆசார மாமியார். மருமகளும் எதையுமே தவறாக எடுத்துக் கொள்ளாத, படிக்காத போதும், எல்லாவற்றையும் சரியாக, பக்குவமாகப் புரிந்து கொள்பவள். மணி, கோவிலுக்குப் போகும்போது ஒருவனைச் சந்திக்கிறான். அவன் ஒரு மல்யுத்த வீரன். அவனுக்கு ஒரு தங்கை நிர்மலா. அவர்களின் அப்பா ஒரு வயதானவர். மல்யுத்த வீரன் விநாயக்கும், மணியும் சாதாரணமாக நண்பராகிறார்கள். இந்த நட்பு மிகவும் இயல்பாக நிகழ்கிறது. மணி, விநாயக் வீட்டுக்குப் போகிறான். அங்கு அவனுடைய அப்பாவைப் பார்க்கும்போது அவனுக்கு தன் அப்பாவை நினைத்துக் கொண்டு அழுகை வருகிறது. தன் அப்பாவின் ஒரு படம் கூட தங்கள் வீட்டில் இல்லை என்று நினைவு வருகிறது. அவன் விக்கி விக்கி அழும்போது அவர், மணியைக் கட்டிக் கொள்கிறார். உனக்கு அப்பா இல்லை; இவர்களுக்கு அம்மா இல்லை. இவளை கல்யாணம் செய்து கொண்டு இங்கே வந்து விடு, அல்லது இவர்களை உங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று விடு என்று சொல்கிறார். இப்படி வாழ்க்கையை எளிதாக, இயல்பாக, அன்பால் மட்டுமே கட்டி விட முடியும் எனப்தாக இந்த இடம் மிக அழகாக இருக்கிறது.
விநாயக் குடும்பம் மராத்திக் குடும்பம். மணி குடும்பமோ தமிழ்- பாலக்காட்டுக் குடும்பம். ஆனாலும், அம்மாவும், மன்னியும் அந்த நிர்மலாவை மணி திருமணம் செய்து கொள்ளலாமே என்று சொல்கிறார்கள். இந்த நிர்மலாவின் அப்பாவும், மணியின் அம்மாவும், குலம், மாநிலம், கோத்திரம் எது பற்றியும் நினைக்காமல், பரிவோடு, அன்பால் ஒருவர் வருத்தத்தை மற்றவர் எப்படிப் போக்கிக் கொள்ள முடியும் என்பதைப் பற்றி மட்டும் பேசுவது மிகவும் அழகான இடம். ஆனால், அது நடக்கவில்லை என்பதையும் மணி மிக இயல்பாகச் சொல்வதும் அழகு. நிர்மலாவுக்கும், இந்தக் குடும்பத்திற்கும் ஏற்படும் அன்புப் பிணைப்பைப் பல இடங்களில் அழகாகக் காட்டுகிறார் அசோகமித்திரன். சுந்தரம், வெளிநாடு கிளம்பி, விமானம் ஏறும் சமயத்தில், அம்மா அவன் ஒரு வருடம் நலமோடு இருக்க வேண்டுமே என அழும் சமயத்தில், யாரும் எதிர்பாரா தருணத்தில், நிர்மலா அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, அவளை ஆறுதல்படுத்துகிறாள். அம்மாவை யாருமே தொடப் பயப்படுவார்கள், ஆனால், நிர்மலா இதை சாதாரணமாகச் செய்துவிட்டாளே என்று மணிக்கும் தோன்றுகிறது. இந்த இடமும் அன்பை இயல்பாக வெளிப்படுத்தும் இடம்.
விநாயக், நிர்மலாவின் தந்தை இறந்து போகும்போது, சுந்தரம், மணி குடும்பம் உதவும்போதும், நெஞ்சைத் தொடுகிறது. அன்பு என்பது ஏதோ ஒரு கட்டாயத்திற்காகவோ, எந்தவித எதிர்பார்ப்போடோ இல்லாமல், சக மனிதனுக்கு உதவுவது, அன்பு செய்வது என்பதெல்லாம் வாசிப்பவர் மனதை உண்மையிலேயே பரவசப்படுத்துகிறது.
சுந்தரம், பம்பாயில் ஒரு கார்க் கம்பெனியில் வேலை செய்கிறான். பணி நிமித்தமாக அமெரிக்கா செல்ல வேண்டியதாக இருக்கிறது. செல்லும் இடத்தில் ஒரு கூட்டத்தில் லட்சுமி என்ற பெண் உரை நிகழ்த்துவதாகப் பெயர்ப் பலகையைப் பார்த்தவுடன், தமிழ்ப் பெண் என்று ஆவல் கொண்டு அந்த உரையைக் கேட்க அரங்கத்தினுள் நுழைகிறான். இந்த இடத்தில் அசோகமித்திரன், அவள் லட்சுமி இல்லை, லக்ஷ்மி என்பதைப் புரிந்து கொண்டான் என்று சொல்லி, குஜராத்திக்காரர்களுக்கு இருந்த சிவப்பும், மென்மையும் இருந்தது என்று சொல்கிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியில் வரும்போது சாதாரணமாகத்தான் லக்ஷ்மியும், சுந்தரமும் அறிமுகமாகிப் பேசத் தொடங்குகிறார்கள். அவளுடைய குணாதிசயங்கள் அவனுக்கு ஆச்சர்யமூட்டுகின்றன. அவன் தன் குடும்பம் பற்றியெல்லாம் சொல்கிறான். தன் மனைவி, குழந்தை, அம்மா பற்றிச் சொல்கிறான். அவளும், தான் போர்பந்தரில் பிறந்து வளர்ந்ததாகவும், பத்து வயதிலேயே விதவை ஆகி விட்டதாகவும், அதன் பிறகே அவள் தாயாரின் ஊக்கத்தால் படிப்பில் முழுமையாக இறங்கியதாகவும் எல்லாம் சொல்கிறாள். கொஞ்ச நாட்கள் கழித்து அவளும் அம்மாவும் சேர்ந்து சுந்தரத்திடம் லக்ஷ்மியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அதுவும் எளிமையாக நடந்து விடுகிறது. அப்புறம், சுந்தரம், பம்பாய் வந்து, ஒவ்வொரு படியாக, லக்ஷ்மி பற்றித் தன் குடும்பத்தினர் புரிந்து கொள்ளும் விதமாக தன் நடவடிக்கைகளால் புரிய வைக்கிறான். இதற்கு நடுவே மணியின் கல்யாணம் அம்மா பார்க்கும் வரனுடன் நடக்கிறது. சுந்தரத்தின் பார்வதி இரண்டாவது குழந்தை கருவுறுகிறாள். எல்லாமே அதனதன் இயல்போடு நடக்கிறது.
ஆனால், சுந்தரத்திற்கு மட்டும் அவ்வப்போது, எதுவுமே தான் சரியாகச் செய்யவில்லையோ என்றும், பார்வதியைத் தான் இத்தனை வருடங்கள் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லையோ என்றும் தோன்றுகிறது. அதே சமயத்தில் தான் தானே இந்தக் குடும்பத்தை ஆரம்பத்திலிருந்தே நல்லபடியாகக் கவனிந்து வருகிறோம் என்றும் தோன்றுகிறது. இவனுடைய விருப்பத்தைக் கேளாமலே, மாமாவாக எடுத்த முடிவு, பார்வதியைத் தனக்குத் திருமணம் செய்வித்தது. அதனாலேயே தான் தன்னால் பார்வதியோடு ஒட்ட முடியவில்லை என்றும் அவன் மனம் ஊசலாடுகிறது. லக்ஷ்மியை அமெரிக்காவில் திருமணம் செய்து கொள்ள வாக்குக் கொடுத்த பிறகே அவனுக்குப் பார்வதியின் மேல் ஆசை அதிகமாகிறது. லக்ஷ்மி அமெரிக்காவிலிருந்து வருவதற்குள், அந்த ஒரு வருட இடைவெளியில் பார்வதி இரண்டாவது கருவுறுகிறாள். இவை எல்லாமே எவ்வித ஆர்ப்பாட்டங்களும் இல்லாமல், அமைதியாக நடைபெறுவதுதான் நாவலின் ஆச்சர்யப்பட வைக்கும் விஷயமே.
ஆனாலும், சுந்தரம் தன் குற்றவுணர்வைப் போக்கிக் கொள்ளவே, சாமியாராகி விட்ட மாமாவைத் தேடிப்போய் லக்ஷ்மியைத் திருமணம் செய்து கொள்ளப் போவதைச் சொல்கிறான். கூடவே தன் மனைவி பார்வதியையும் அழைத்துப் போகிறான். அப்போதுதான் அவளுக்கு விஷயமே தெரிய வருகிறது. அவள் ஊருக்குத் திரும்பியவுடன் அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறாள். அவ்வளவே. பார்வதிக்கு எல்லோருடைய விருப்பம் போல, ஆண் குழந்தை பிறக்கிறது. ஆனால், அது பிறந்த இரண்டு வாரங்களுக்குள்ளேயே இறக்கிறது. அப்போது, லக்ஷ்மி வருகிறாள். அம்மாவிடம், “உங்கள் சுக துக்கங்கள் என் சுக துக்கங்கள்’ என்று சொல்கிறாள். அம்மா, லக்ஷ்மியைக் கட்டிப் படித்துக் கொண்டு விக்கி விக்கி அழுகிறாள்.
இப்படித்தான் நாவல் முடிகிறது.
நாவலை நகர்த்திச் செல்பவர்கள் பெண்களாகவே இருக்கிறார்கள். ஆண்கள் விட்டேத்தியாய் எல்லாம் துறந்து தள்ளி நிற்பவர்களாக (மாமா), தன் அலுவல் சார்ந்தும், கடமை மட்டுமே சார்ந்தும் மட்டுமே உலகத்தைத் தெரிந்து கொண்டு, மற்ற உலகியலில் அதிகம் தெரிந்து கொள்ளாதவராக ( சுந்தரம்), பலத்தோடு அன்பு செய்பவராக ( விநாயக்), இயல்பாக, எந்த நேரத்திலும் தடுமாறாமல் இருப்பவராக ( மணி ), இருக்கும் ஆண்களை எல்லாம், தன் பேச்சை மீறாத ( பார்வதி,அம்மா ), தன்னை மீறிப் பேசாதவளாக ( பார்வதி ), தனக்குத் தெரியாததையும் காட்டித் தருபவளாக ( லக்ஷ்மி), தன்னுடைய நோக்கத்தில் உறுதியாக இருப்பவளாக (படிக்க வேண்டும் என்று நிர்மலா) இருக்கும் பெண்களே அவர்கள் அமைதியாக இருப்பதற்குக் காரணமாகிறார்கள். அம்மா என்கின்ற சுந்தரி ஆசாரம் என்கின்ற பிடிவாதத்தின் வடிவமாக இருந்த போதிலும், அன்பு, ஆதரவு என்பதினால் அதையெல்லாம் உடைத்தெறிய முடியும் என்பதாகவே மூன்று காட்சிகள் அமைந்துள்ளன. சுந்தரம் வெளிநாடு செல்லக் கிளம்பும்போது நிர்மலா அம்மாவைக் கட்டிக் கொண்டு சமாதானப்படுத்துவது, சுந்தரம் லக்ஷ்மியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவு தனக்குத் தெரிய வரும்போது பார்வதி அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுவது, பரஸ்பர அன்பிலும், மற்றவருடைய இயலாமையிலும் பிடிவாதம் தன்னைத் தளர்த்திக் கொள்ளும் என்பதான படிமமாகவே இருக்கிறது. இறுதிக் காட்சியில் அம்மா, லக்ஷ்மியைக் கட்டிக் கொண்டு அழுகிறாள். இந்த இடம் மிக அற்புதம். அம்மா சின்ன வயதில் விதவையாகி விட்டவள். லக்ஷ்மியும் அப்படி ஒரு நிலையிலிருப்பவள். ( இனிமேல்தான் அவள் சுந்தரத்தைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறாள்). அந்தப் பாசமோ, தனக்குக் கிடைக்காத ஒன்று ( மறுமணம் ) இவளுக்குக் கிடைக்கப் போகிறதே என்ற ஆற்றாமையோ எதுவோ, அம்மாவை லக்ஷ்மியைக் கட்டிக் கொண்டு அழச் செய்கிறது.
எந்த இடத்திலும், எவ்விதப் பதற்றமோ, ஆரவாரமோ இல்லாமல் இயல்பாக, எதுவுமே கேள்விக்குகுரியது இல்லையே என்பது போல அமைதியாக நகர்ந்து செல்கிறது நாவல். சுந்தரம், மணி இருவரும் அவரவர் பணி இடங்களில் சந்திக்கும் விபத்துகளோ, விநாயக் குடும்பத்துடனான உறவோ, சுந்தரம் –லக்ஷ்மி திருமணச் செய்தியோ, மணி – ஜானகி திருமணமோ எதுவுமே சத்தமேயில்லாமல் வெகு இயல்பாக, ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகென நகர்ந்து செல்வதுதான் நாவல் பற்றிப் பேச வைக்கிறது.
———————
( இந்தியா 1944 – 48 – நாவல் – அசோகமித்திரன் – காலச்சுவடு பதிப்பகம்)
- கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்
- அதிசயங்கள்
- மறதி
- ப.ப.பா
- பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்
- வெகுண்ட உள்ளங்கள் – 5
- பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்
- தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)
- என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி
- விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)
- ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)
- கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்