ஸிந்துஜா
பல புத்தகங்களை எடுத்து நாம் படிக்கிறோம், அந்த நேரத்தைக் கழிக்கவென்று. சிலசமயம் சுவாரஸ்யம் மேலிட்டும். படித்து முடித்தபின் அவை புத்தக அலமாரிகளில் போய் மீதி வாழ்வைக் கழிக்கின்றன. அல்லது பேப்பர்காரரின் தராசை அடைகின்றன.
ஆனால், சில புத்தகங்கள் ! அவற்றை நாம் மறுபடியும் படிக்கின்றோம். மறுபடியும். மறுபடியும். அவற்றின் அர்த்தம் நிரம்பிய வார்த்தைகளில் நமது தேடல் நிகழும் போது ஒவ்வொரு முறையும் வாசிப்பு அனுபவம் முற்றிலும் புதியதாக, ஆச்சரியத்தை உண்டாக்குவதாக, நேசிக்கத் தக்கதாக மாறி மாறி முகம் காட்டுகின்றது. அப்புத்தகங்களின் உன்னதத்திலிருந்து நாம் வாழும் வாழ்க்கையின் உன்னதங்கள் வெளிப்படுவதைக் காண பிரமிப்பு ஏற்படுகின்றது.
தி. ஜானகிராமனின் எழுத்து மேற்சொன்ன வீர்யத்தைத் தன்னுள்
தொடர்ச்சியாகக் அடக்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்லத் தோன்றுகிறது. அவர் ‘ எழுத்தாளர்களின் எழுத்தாளர் ‘ என்ற தேய்ந்த வழக்கைச் சொல்லி அடையாளம் காண்பிப்பதை விட அவர் எழுத்தாளர்களே பொறாமைப்படும் எழுத்தாளராக இருக்கிறார் என்பதே உண்மை. தேர்ந்த எழுத்தாளர் என்று நாம் நம்பும் ஒருவரிடம் ஜானகிராமன் எழுத்துக்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்ட போது அவர் “அதெப்படி இப்போது சொல்ல முடியும்? ஒரு எழுத்தாளர் மறைந்து ஐம்பது ஆண்டுகளாவது கழிந்தால்தான் அவர் எழுத்தின் மதிப்பைப் பற்றிய கருத்தை உருவாக்கிக் கொள்ள முடியும்” என்றார். ஆனால் அவரே அவரது நண்பருக்கான நாவலைப் பற்றி எழுதும்போது (இருவரும் உயிருடன் இருந்தார்கள் ) ‘தமிழ் நாவல்களில் இது ஒரு மைல்கல்’ என்றார் ! இன்னொரு எழுத்தாளர் “ஜானகிராமன் தளுக்கு எழுத்தாளர்” என்றார். நான் முன்பு குறிப்பிட்ட பொறாமை இம்மாதிரி கருத்துக்களை வெளிப்படையாகச் சுட்டிக்
காட்டுகிறது.
ஜானகிராமனின் நாவல்களில் வரும் பெண்களின் அழகு பெண்களையே கலவரப்படுத்துகிறது ! மோகமுள் நாவலில் வரும் யமுனாவைத் தேடி அவள் வசித்ததாக நாவலில் குறிப்பிடப்படும் துக்காம்பாளையத் தெருவுக்குச் சென்றதாகப் பல ஆண் எழுத்தாளர்களும், (சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, காலச்சுவடு ஆசிரியர் சுகுமாரன், இதை எழுதுபவர் ) பெண் எழுத்தாளர்களும் (இந்துமதி) உணர்ச்சி வசப்பட்டு சொல்லியிருக்கிறார்கள். ஜானகிராமனின் மோகமுள் யமுனா, உயிர்த்தேன் செங்கம்மா, அனுசூயா , மலர்மஞ்சம் பாலி, அன்பே ஆரமுதே டொக்கி , ருக்மிணி, மரப்பசு அம்மிணி செம்பருத்தி புவனா ஆகிய பெண்கள் தத்தம் வாழ்க்கையில் காட்டும் பரஸ்பர அன்பு, மனிதாபிமானம், புத்திசாலித்தனம் நிரம்பிய பேச்சு, பரிவு ஆகியவை ஒரு தேர்ந்த வாசகனின் பார்வையிலிருந்து தப்புவதில்லை. சூழலுக்கு ஏற்ப சில மனிதர்கள் பெருந்தன்மையுடன் வாழ்வது மட்டுமல்ல, வேறு சிலர் , அடிமடியில் கை போடும் அளவுக்கு அயோக்கியத்தனத்தில் புரளுவதும், பற்றிப் பேசி யதார்த்த உலகு இவர்களால் ஆனது என்று அழுத்தமாகக் கூறுகின்றன அவரது நாவல்கள்.
தி.ஜா.வின் கதைமாந்தர்கள் பொதுவாக உண்மைக்குக் கட்டுப்
பட்டவர்களாக இருக்கிறார்கள். மிக அந்தரங்கமானவர்களிடம்
உண்மையைக் கூறி வாழ்வதில் அவர்கள் தயக்கம் காட்டுவதில்லை. இன்றைய வாழ்க்கையில், உண்மையை அறிந்திருந்தாலும் அதை மறைத்து, பொய் சொல்லாமலிருப்பதும் உண்மைதான் என்ற எண்ணம் சமூகத்தில் ஏற்பட்டுவிட்டது. இது வள்ளுவன் கூறிய ‘பொய்மையும் வாய்மையுடைத்து’ என்ற வரிகள் தந்த தைரியத்தினால் இருக்கக்கூடும். ஆனால் அந்தரங்கமான விஷயங்களில் உண்மையைத் தவிர்க்க வேண்டுமென்றால் தவிர்த்துவிடுவதை ஒரு பொருட்டாக மதிக்காமல் செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு , ஜானகிராமனின் மாந்தர்கள் தம்மை மிகவும் வெளிப்படையாகக் காண்பித்து நடமாடும் தருணங்கள் அவர் மனதில் அதிர்ச்சி அலைகளை உருவாக்குகின்றன. பாபுவின் மேல் உயிரையே வைத்திருக்கும் யமுனாவிடம் சென்று பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் தன்னை இழந்து விட்டதை – அவளுக்குத் துரோகம் செய்து விட்ட தவிப்பில் – பாபு வந்து கூறுவது (மோகமுள்), சின்ன அண்ணியின் மீது தனக்கும் அவளுக்குத் தன் மீதும் இருந்த காதலை சட்டநாதன் தன் மனைவி புவனாவிடம் சொல்லி விடுவது, (செம்பருத்தி) கல்யாணமான தன்மீது வெறித்தனமான அன்பு கொண்டு மூன்றாம் மனிதனான பழனி தன்னை அணைத்து விட்டதைத் தன் கணவனிடம் செங்கம்மா வந்து சொல்வது (உயிர்த்தேன்)…
இம்மாதிரி ஆட்களை வாழ்வில் சந்திக்க முடியுமா என்று வாசகனுக்குத் தோன்றக்கூடும். ஆனால் அவர்கள் தமக்குத் தாமே நேர்மையாக இருப்பதுதான் முக்கியம் என்று உறுதி பூண்டவர்களாக வாழ நினைக்கையில் இது சாத்தியம்தான்.
ஜானகிராமனின் தமிழ் மயக்கமூட்டும் வசீகர மொழியாக இருக்கிறது. உவமைகள் வெளிக் கொண்டு வரும் காட்சிகளின் சித்திரம் அவருடைய எழுத்தின் கறார்த்தன்மையைக் காண்பிக்கிறது. உதாரணத்துக்கு:
பாபு பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் தன்னை இழந்து விட்டதாய் யமுனாவிடம் வந்து சொல்கிறான். அதைக்கேட்டதும் “யமுனா தலையைக் குனிந்து கொண்டாள். முகம் சற்றுக் கடுத்தது போலிருந்தது. நிமிர்ந்த போது சர்க்கரை போடாத, நன்றாகக் காய்ச்சாத பால் போல ஒரு புன்னகை தவழ்ந்தது.” (மோகமுள்)
ஆக்ராவைச் சுற்றிக் காண்பிக்க முத்துசாமியிடம் மஜித் என்பவர் வருகிறார். அப்போது ரங்கமணியை முத்துசாமி அறிமுகம் செய்து வைக்கிறார்:
“இவங்க நமக்கு ரொம்ப காலமா குடும்ப சிநேகிதம். நல்லூரு.”
“நல்லூரா …. அதுவும் நம்ம தங்கச்சி ஊரு கிட்டதான். நம்ம தங்கச்சியை பக்கத்திலேதான் கொடுத்திருக்கு. மதுக்குடியிலெ.”
“எல்லாம் பக்கம்தான். இந்த ஊர்லேந்து நம்ம ஊர்களைப் பாரும். எல்லாம் கிட்டக் கிட்டதான் தெரியும். தஞ்சாவூர், திருஷ்ணாப்பள்ளி ரெண்டும் பக்கத்திலே பக்கத்திலே தெரியும். அக்ரகாரம் பள்ளத்தெரு
ரெண்டும் ஒட்டிண்டிருக்காப்பிலே இருக்கும். தூரக்கப் போயிடனும்.
அவ்வளவுதான்.”
……….
“மஜீத்பாய் கோச்சுக்க மாட்டாங்களே.”
“எதுக்கு?
“இல்லே. கேக்கறேன்“
“சொல்லுங்க.”
“நீங்க நாலு கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றாங்களே .”
“இந்த மோட்டார் மணிக்கு நூறு மைல் வேகம் போகலாம்னு இங்க காமிச்சிருக்கு. அந்த மாதிரிதான்.” (நளபாகம் )
தி.ஜா வின் நாவல்களில் வெளிப்படும் கலைத்திறனின் உள்ளொளி அவருடைய இசை மீதான ஆழ்ந்த ஈடுபாட்டிலும் , இயற்கையின் மீது எப்போதும் குவிந்திருக்கும் பித்திலும் வெளிப்படுவதாக நான் நம்புகிறேன். ரங்கண்ணாவுக்குக் காக்காய்க் கத்தல், மாவு மிஷின் கரைதல், தாம்பாள சப்தம், கும்பேச்வரன் கோயில் மணி, வாசலில் போகும் குதிரை வண்டியின் ஹார்ன், சைக்கிள் மணி என்று காதில் விழும் எல்லாவற்றிலும் ‘இது என்னடா ஸ்வரம்?’ என்ற கேள்விதான் எழுகின்றது. செம்பருத்தியின் சட்டநாதன் “வரப்பு ஓரங்களில் நீலமும், மஞ்சளும் வெள்ளையும் சிவப்புமாகப் பல வடிவங்களில் படர்ந்து பூத்திருக்கும் சின்னஞ் சிறு குறும் பூக்களைப் பார்த்துக் கொண்டே நிற்பான். குறும்பூக்கள் அவனுடைய தோழர்களாகிவிட்டார்கள். எத்தனை வடிவம் ! எத்தனை உருவ அமைப்பு ! ஆனால் இவற்றை யார் கவனிக்கிறார்கள்? குனிந்து பார்க்கிறார்கள்?” என்று புலம்புகிறான். அப்புவின் பார்வையில் “அந்தி மயங்கி இருள் கவிந்தது. கடைசியாக ஒரு காக்கைக் கூட்டம் பறக்கிறது. அக்கரை மரங்கள், இக்கரைத் தோப்புகள் எல்லாம் கறுப்புக் கும்பலாக, இருளே எழுந்து விம்மியது போல, நரையில் மைபூசி நிற்கின்றன.”
மனித உருவங்கள் போல இலக்கியச் செயல்பாடுகளும் வித்தியாசங்களை உள்ளடக்கியவாறு இருக்கின்றன. சத்தியத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபடும் ஓர் இலக்கியவாதி, பெரும்
பான்மையான ஜனசமூகத்தின் போக்குகளுக்கும் , நிர்பந்தங்களுக்கும் குடை பிடித்துச் செல்ல மறுக்கிறான். அவனது தரிசனத்தின் தேடலில், அவன் கண்டு கொண்ட உண்மைதான் பிரதானம் வகிக்கும். இது சமூகம் ஏற்படுத்தியிருக்கும் நியதிகளுக்கு, ஒப்புதல்களுக்குக் குனிந்து செல்லும் போக்கை மறுக்கும் வலிமை வாய்ந்தது. ஜானகிராமனின் எழுத்தில் உண்மையின் இத்தகைய நலுங்காத தரிசனத்தை நாம் கண்டடைகிறோம்.
- கிரிக்கெட் வீரன் மரணமும் , மரணத்தில் இருந்து உயிர்த்தெழுந்த எழுத்தாளர்களும்
- அதிசயங்கள்
- மறதி
- ப.ப.பா
- பண்டைத்தமிழரின் விருந்தோம்பல்
- வெகுண்ட உள்ளங்கள் – 5
- பொய்யில் நிச்சயிக்கப்படுகின்றன திருமணங்கள்….
- சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்
- தி. ஜானகிராமனின் நினைவில் … ( 28 ஜூன் 1921- 18 நவம்பர் 1983)
- என்றென்றைக்கும் புரிந்துகொள்ளப்படமுடியாத ஒருத்தி
- விஷ்ணு சித்தரின் விண்ணப்பம் (அப்போதைக்கு இப்போதே)
- ஓடைத் தண்ணீரில் மிதந்து போகும் சருகு (அசோகமித்திரனின் இந்தியா 1944-48 நாவலை முன்வைத்து)
- கார்ப்பரேட் வைரஸ் பறவைகளையும் தாக்கும்
- ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்